எரியும் பிரச்சினையாக மாறியுள்ள எரிபொருள் ! தெரியாமல் மறைந்துள்ள அநாவசிய செலவீனங்கள் !! அவதானி


இலங்கை ஜனாதிபதி  பதவியேற்ற காலத்திலிருந்து,  நாட்டில் ஏற்பட்ட மிக மிக முக்கிய மாற்றம், அவர் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும் அமைச்சரவைதான்.  தனது சகோதரர் பஸில் ராஜபக்‌ஷவை அமெரிக்காவிலிருந்து அழைத்து நிதியமைச்சர் பதவியை வழங்கினால், அவர் எதிர்நோக்கப்பட்ட  பொருளாதார பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு கண்டுவிடுவார் என நம்பினார்.

அவர் வந்தும் இறுதியில் என்ன நடந்தது என்பது பற்றி இங்கே


விபரிக்கவேண்டிய அவசியம் இல்லை.  புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அமைச்சரவையிலிருக்கும் அமைச்சர்கள் ஏற்கனவே வேறு ஒரு துறையில் அமைச்சராகவிருந்திருப்பார். சதுரங்க விளையாட்டில் காய் நகர்த்துவது போன்று இந்த அமைச்சர்களும் ஜனாதிபதி இழுக்கும் திசைக்கெல்லாம் சென்று திரும்பி வருகின்றனர்.


எனினும்,  நாட்டின் எதிர்காலம் குறித்து எந்தவொரு ஆக்கபூர்வமான அறிகுறியையும் இந்த அமைச்சர்கள் காண்பிக்கவில்லை. ஆனால், தொடர்ந்தும் அபாயச் சங்கினைத்தான் ஊதிவருகின்றனர்.

சுருக்கமாகச் சொல்வதாயின் இந்த அமைச்சர்கள் கையாலாகதவர்களாகவே தென்படுகின்றனர். கடந்த வாரம் 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை  அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே  எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளதாகவும், அதனால், சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் எனவும்  தற்போதைய  போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனா தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடும் அத்தியாவசியத்தில் கல்வி காணாமல் போய்விட்டது. இத்தனைக்கும் பந்துல குணவர்தனா முன்னர் கல்வி அமைச்சராகவுமிருந்தவர்.

கல்லூரிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு கடமைக்கு வரும் ஆசிரியர்கள், இதுவரை காலமும் நடைபயிற்சியில்தான் வருகை தந்தார்களா..? அல்லது மாட்டு வண்டிலில் வந்தார்களா..? ஒரு நாட்டின் எரிபொருள் என்பது அத்தியாவசியமானது.  அதற்கு தட்டுப்பாடோ, பற்றாக்குறையோ ஏற்படுமானால், அதன் பாதிப்பு சங்கிலித் தொடராக பரவிக்கொண்டேயிருக்கும்.  இன்று இலங்கைக்கும் அதுதான் நேர்ந்துள்ளது.

மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, அல்லது பற்றாக்குறை ஏற்படும்போது, பதுக்கல் வியாபாரிகள் கச்சிதமாக தங்கள் காரியங்களை மேற்கொள்வது வழக்கம்.  இன்று எரிபொருளிலும் இதுதான் நடந்திருக்கிறது.

எரிவாயு நிரப்பிய சிலிண்டர்களை,  பெற்றோலை,  மண்ணெண்ணையை டீசலை பதுக்கிய பலர் தினமும் கைது செய்யப்படும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.  இந்த நெருக்கடிகளுக்கு மூலகாரணமாக இருப்பது இலங்கையில் டொலர் பற்றாக்குறைதான் எனவும் சொல்லப்படுகிறது.  அரசிடம் போதியளவு டொலர் இல்லாதமையினால், உரிய நேரத்தில் வந்திறங்கவேண்டிய எரிவாயு மற்றும் பெற்றோல் கப்பல்கள் துறைமுகத்தை வந்தடையவில்லை.

பண்டமாற்று ரீதியாக உள்நாட்டிலிருந்து எதனையும் கொடுத்து வாங்கலாம் என்றால், அதற்கும் வழியில்லை. திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியிலும் மண் அள்ளிப்போட்டவர்கள்தான் ஆட்சியாளர்கள். இந்தப்பின்னணியில் எரிபொருள் பதுக்கல்காரர்களை தேடுகின்ற அதே சமயம் டொலர்களை பதுக்கி வைத்திருப்பவர்களையும் அரசு தேடிக்கண்டு பிடிக்கமாட்டாதா? என்று ஶ்ரீமான் பொதுஜனன் கேட்கின்றார்.

சில வாரங்களுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமாயின் மேலும் இலங்கை நாணயத் தாள்களைத்தான் அச்சிடவேண்டிய நிலையேற்படும் என்று புதிய பிரதமர் ரணில் சொன்ன வார்த்தைகளை மறந்துவிட முடியாது.

தொடர்ந்தும் ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டால், பணவீக்கம் வரும் என்பது அவருக்குத் தெரியாதா…?

இது இவ்விதமிருக்க, மத்திய வங்கி மற்றும் ஒரு அபாயச்சங்கினை இந்த டொலர் பதுக்கல்காரர்களுக்கு ஊதியிருக்கிறது. இலங்கையர் எவரேனும் பதினைந்தாயிரம் டொலர்களுக்கு மேல் தம் வசம் வைத்திருந்தால், அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய வங்கியின் வசம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

இத்தருணத்தில் 1970 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமாஜ மற்றும் கம்யூனிஸட் கட்சிகளின் கூட்டரசாங்கத்தில் நிதியமைச்சராகவிருந்த இரட்டைக் கலாநிதி எனப்பெயர் பெற்ற என். எம். பெரேரா திடீரென ஒரு அறிவித்தலை வர்த்தமானி மூலம் வெளியிட்டார்.

அதாவது நாட்டில் புழக்கத்திலிருந்த ஐம்பது ரூபா, நூறு ரூபா நாணயத்தாள்கள் ஒரு நள்ளிரவு முதல்  செல்லுபடியாகாது, எனவே மக்கள் அருகிலிருக்கும் வங்கிகளில் அவற்றை வழங்கி அதற்குப்பதிலாக புதிய நாணயத் தாள்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தல் அன்று வெளியானதையடுத்து மக்கள் அதிகாலையே வங்கிகளுக்கு முன்னால் வரிசையில் நின்றார்கள்.

அவ்வாறு மாற்றப்பட்ட ரூபாய் தாள்களுக்கும் வரையறை இருந்தது.  குறிப்பிட்ட தொகைக்கு மேலதிகமாக இருந்தால், அதனை வங்கியில் கணக்குத் திறந்து வைப்புச் செய்யவேண்டும்.

இதனால், பணத்தை பதுக்கிவைத்திருந்த கோடீஸ்வரர்கள் பெரும் கலக்கத்திற்கு ஆளானார்கள். அவர்களால் அந்த கறுப்பு பணத்தை தொடர்ந்தும் வைத்திருக்கவும் முடியவில்லை, வங்கியில் வைப்பிலடவும் இயலவில்லை. அந்த நிதியமைச்சரின் அதிரடி உத்தரவினால் சாதாரண பொதுமக்கள் அசௌகரியங்களை சந்திக்க நேர்ந்தாலும், அன்றிருந்த பல செல்வந்தர்கள், தாங்கள் பதுக்கிய பணத்தை எரியூட்டி சாம்பலாக்கவும் தயாரானார்கள்.

இந்தச்  செய்திகள் தற்போது காலிமுகத்திடலில் கோத்தா கோ கம போரட்டத்தில் ஈடுபடுபவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்…?  அந்த அதிரடிச்சம்பவம் நடந்து அரைநூற்றாண்டு காலமாகிவிட்டது.

இந்தப்பின்னணிகளுடன் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இயங்கவைத்துக்கொண்டிருக்கும் துணைத்தூதரங்கள் குறித்தும் நாம் பேசவேண்டியிருக்கிறது.

சில நாடுகளில் இலங்கைத் தூதரகம் மட்டுமன்றி அந்த நாடுகளின் ஒவ்வொரு மாநிலத்திலும் துணைத் தூதரகங்களையும்  நிருவகிக்கின்றது. அதற்கான செலவுகள் டொலரில்தான் சமாளிக்கப்படுகிறது.

துணைத் தூதரகங்கள் அமைந்திருக்கும் கட்டிடத்தின் வாடகைப் பணம், அங்கு பணியாற்றுகின்றவர்களுக்கான சம்பளம் மற்றும் இதர செலவுகள்  அனைத்தும் டொலர்களிலேயே தரவேண்டியிருக்கிறது.

இவ்வாறு எத்தனை இலங்கையின் துணைத் தூதரகங்கள் வெளிநாடுகளில் வெள்ளை யானைபோன்று ஆடாமல், அசையாமல் அநாவசியமாக டொலர்களை தின்றுகொண்டிருக்கின்றன என்பது இலங்கை வெளிவிவகார அமைச்சருக்குத் தெரியாதா..?

இலங்கை தற்போது அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நிற்கிறது.  சிம்பாப்வே முதலிடத்திலும், துருக்கி மூன்றாவது இடத்திலும் நிற்கின்றன.

கோத்தபாய ராஜபக்‌ஷ யார் யாரையோ கேட்டு, இறுதியில் அழைத்து வந்து பிரதமர் பதவி கொடுத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கா,  எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு  ரூபாய் நோட்டுக்களை அச்சிட வேண்டியும் வரலாம் என்று சில வாரங்களுக்கு முன்னர் சொன்னார்.

அவ்வாறாயின் இவர்கள் பணவீக்க ஓட்டப் பந்தயத்தில் சிம்பாப்வேயை முந்திவிடுவார்களோ தெரியவில்லை.

இந்த இலட்சணத்தில்,  “ தான் ஒன்றும் ராஜபக்ஷக்களைப்போன்று பொய் வாக்குறுதிகள் வழங்கும் முட்டாள் அல்ல  “ என்றும் தனது புத்திசாலித்தனத்தை சொல்லியிருக்கிறார்.

ஆளையாள் முட்டாள் பட்டம் கட்டாமல்,  சரியான தீர்வை நோக்கி ஜனாதிபதியும் பிரதமரும் நகரவேண்டும். வெளிநாடுகளில் இலங்கை அரசு, துணைத் தூதரகங்கள் மூலம்  விரையமாக்கிக்கொண்டிருக்கும்  டொலரையாவது காப்பற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

----0----

 

No comments: