சைகை மொழியும் முக மொழியும் (கன்பரா யோகன்)

அண்மையில் சிங்கப்பூரில் அவுஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சரும், சீன பாதுகாப்பு அமைச்சரும் சந்திக்க நேர்ந்த போது அது ஒரு கைகுலுக்கல் சந்திப்பு மட்டுமே என்று அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்திருந்தார். 2020 இல் கோவிட் பரவியபோது சீனாவில் ஒரு விசாரணை நடத்தப்படவேண்டுமென்று அவுஸ்திரேலியா வலியுறுத்தியத்திலிருந்து முறுகல் நிலை இரு நாடுகளுக்குமிடையில் தொடர்வது பலரும் அறிந்ததே. அந்த வகையில் இது ஒரு புதிய ஆரம்பமாகவிருக்கக் கூடும்.  

கோவிட் தொற்று காலத்தில் அரசுத் தலைவர்கள் கைகுலுக்குவதற்குப் பதில் முழங்கையால் இடித்து சந்திப்பை ஆரம்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பேசுவதற்குப் பதிலாக காட்டும் சைகை மொழி, முக மொழிகள் தவிர இப்போது எழுதுவதற்குப் பதிலாக அவற்றைக் காட்டுவதற்கும் வழிகள் வந்தன.

இமோஜி(emoji) என்ற பெயரில் முக பாவங்களில் காட்டும் சமிக்ஞைகள், ஜாடைகள், சைகை மொழிக் குறியீடுகள் என்று எல்லாவற்றுக்கும் கைத்தொலைபேசிக் குறுஞ் செய்தியில் இடமுண்டு.

சாதாரண புன் முறுவலைக் காட்டும் ஒரு முகம் ‘அறிந்தது சந்தோசம்’ என்று எழுத்துவதைச் சுருக்கி விடுகிறது.  இதை விட ஒரு பகிடியைப் பதிவிலிட்டால் வாயை பிளந்து சிரிக்கும் முகங்களும், பெரும் பகிடியொன்றைக் காட்ட கண்ணீர் வர சிரிக்கும் முகங்களும் உண்டு.  முன்பு நண்பரொருவர் எல்லோருக்கும் நன்கு அறிந்த பழைய  பகிடியொன்றைச் சொல்லப் போக அதைச் சொல்லி முடித்ததும் இன்னொரு  நண்பர் இது 'பழம் பெரும் பகிடி' என்று கிண்டலாக சொல்லி சொன்னவரின் வாயை அடைத்தது நினைவுக்கு வருகிறது. பழம் பெரும் பகிடிகளுக்கு  இமோஜி  இருப்பதாக தெரியவில்லை.

கறுத்த கூலிங் கிளாஸ் அணிந்த முகத்துக்கு கூல் ஆக இருப்பதன் அர்த்தம் தொனிக்கிறது.

கோபத்தை காட்டவும், துயரத்தை காட்டவும் முகங்கள் ஏராளம் இருக்கின்றன.

கைதட்டி பாராட்டும் கைகளும், கரங்கூப்பி வணக்கமும் நன்றியும் சொல்லும் கரங்களும் சுருக்கமாகவே செய்தியைச் சொல்லி விடுகின்றன.

இதை விட இரண்டு முக்கியமான கரங்கள் உள்ளன. முதலாவது தம்ப்ஸ்அப் என்று கட்டை விரலை உயர்த்திச்  சொல்லும் எல்லாம் ஓகே என்று சொல்ல விளைவது, மற்றையது ஒன்றும் சரியில்லை என்று சொல்லும்  தம்ப்ஸ் டௌன், கட்டை விரல் கீழே கொண்ட கை.

எல்லாம் ஓகே என்றால் செட் அப் என்றும் அதற்கு எதிராக எல்லாம் தலை கீழ் என்றால் அப் செட் என்றும் சொல்லிக்கொள்வார்கள். இரண்டு ஆங்கிலச் சொற்களும் தலைகீழாகி பொருத்தமான அர்த்தம் தருகின்றன. 

எனது அனுபவத்தில் தம்ஸ் அப் மற்றும் தம்ஸ் டௌன் பற்றிய ஒரு கசப்பான அனுபவம் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே நிகழ்ந்து விட்டது.  அப்போது குறுஞ் செய்திகள் அனுப்பும் வழக்கமில்லாத காலம் என்றாலும் கூட அந்த சைகை மொழியை பாவிக்க வேண்டியிருந்தது.

குயீன்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கேன்ஸ் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் கடலுக்கடியிலுள்ள பவளப் பாறைகளை காண்பதற்காக சென்ற கூட்டமொன்றில் நானும் இருந்தேன். அதில் ஒரு பகுதி கடலில் பத்து மீட்டர் ஆழத்துக்கு இறங்கிக் கடற் படுக்கையில் நடந்து பவளப் பாறைகளையும், பல வர்ண மீன்களையும் பார்ப்பது, இதை ஸ்கூபா டைவிங் என்று அழைக்கிறார்கள்.

அப்போது இதில் இருந்த சிக்கல் என்னவென்றால் கடலுக்கடியில் சுவாசிப்பதற்கு ஒக்ஸிஜின் சிலிண்டரை முதுகில் சுமந்தபடி மூக்கை மூடி ஒரு கவசம் அணிந்து கொண்டு, மூக்கினால் சுவாசிக்காது வாயில் பொருத்திய குழாயொன்றினால் சுவாசிப்பதுதான்.     

பயத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு குருட்டுத் துணிச்சலுடன் கடலுக்குள் இறங்கியாயிற்று. எமது குழுவில் ஒரு பயிற்றுவிப்பாளரும் வந்தார்.  ஏதாவது சிக்கலென்றால் அவரிடம் தெரிவிக்க விடும்.  தம்ஸ் அப்பும், தம்ஸ் டௌனும் பயன்படுத்தும் தேவையை பயிற்றுவிப்பாளர் எம்மிடம்  கடலுக்குள் இறங்க முன்னரே சொல்லி விட்டார்.  தண்ணீருக்குள் பேச்சும், மூச்சும் சிரமம்தான். 

கடற்படுக்கையில் நடந்து  மீன்களை பார்த்துக் கொண்டிருந்த போது என் மூக்குக் கவசத்தினூடாகத் தண்ணீர் உள்ளே போகத் தொடங்கியது. நிலைமை மோசமாவதற்கிடையில் நான் காட்டிய தம்ஸ் டௌன் சைகையைப்  சற்றுத் தூரத்திலிருந்து புரிந்து கொண்ட அந்த பயிற்றுவிப்பாளர் உடனேயே என்னை கடலிலிருந்து வெளியேற்றி விட்டார். 

கடலில் நிகழவிருந்த ஒரு ஆபத்து சைகைப் பரிமாற்றத்தினால்  தடுக்கப்பட்டு விட்டது. தண்ணீரில் தத்து என்று என் சாத்திரத்தில் இருந்ததோ அறியேன்.

No comments: