நூல் அறிமுகம்: அத்தி பூத்தாற் போன்று அவதரிக்கும் மெல்பன் கிருஷ்ணமூர்த்தியின் இரண்டு நூல்கள் ! முருகபூபதி


அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் வதியும் எஸ். கிருஷ்ணமூர்த்தி,  சிறுகதை, கட்டுரை, சினிமா விமர்சனம், பத்தி எழுத்துக்கள் என அவ்வப்போது எழுதிவருபவர்.

ஆனால், தொடர்ச்சியாக எழுதமாட்டார். அவ்வாறு எழுதாத காலங்களில் நிறைய வாசிப்பார். அல்லது திரைப்படங்களை தேர்வுசெய்து பார்த்து ரசிப்பார்.

படித்த நூல்களை,  பார்த்த சினிமாவைப்பற்றி எழுதவேண்டும் என நினைப்பார். ஆனால், அந்த நினைப்பு, நினைப்பாகவே கடந்துவிடும்.

திடீரென எழுதவேண்டும் என்ற யோசனை பிறந்தால், எழுதிவிடுவார்.

மெல்பனில் நடேசன் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டு வந்த


உதயம் ( ஆங்கில – தமிழ் ) இருமொழிப்பத்திரிகையில் கிருஷ்ணமூர்த்தி தான் பார்த்த சினிமாக்கள் பற்றிய விமர்சனங்களை எழுதிவந்தவர்.  உதயம் நின்றதும், அத்தகைய எழுத்துக்களையும் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியாமலிருந்தது.

எப்போதாவது சிறுகதையும் எழுதுவார்.  அவுஸ்திரேலியா தேசிய வானொலியான S B S தமிழ் ஒலிபரப்பிலும் இவரது கதை ஒலிபரப்பானது.  கதையும் கதையாளரும் என்ற அந்த நிகழ்ச்சியை S B S ஊடகவியலாளர் ரெய்செல் சிறிது காலம் திறம்பட நடத்தினார்.

அவ்வாறு ஒலிபரப்பப்பட்ட பசி என்ற கதையும் இடம்பெற்றுள்ள தொகுப்பினை நோபோல் என்ற பெயரில் கிருஷ்ணமூர்த்தி தற்போது வரவாக்கியிருக்கிறார்.

குறிப்பிட்ட பசி சிறுகதை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட உயிர்ப்பு தொகுப்பிலும் இடம்பெற்றது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2011 ஆம் ஆண்டு  கொழும்பில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கில் வெளியிடப்பட்ட Being alive நூலிலும் இடம்பெற்றது.

கிருஷ்ணமூர்த்தி அத்திபூத்தாற்போன்று எப்போதாவதுதான் எழுதுவார்.  2013 இல் மறுவளம் என்ற கட்டுரைத் தொகுப்பினை வரவாக்கியவர்.  தற்போது நோபோல் (NO BALL ) என்ற 56 பக்கங்களில்  எட்டுச் சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பினையும், 76 பக்கத்தில் திரைக்கண் ( சில படங்கள் சில  பார்வைகள் ) என்ற சினிமா விமர்சன நூலையும் வரவாக்கியுள்ளார்.

இந்நூல்களை கிளிநொச்சி மகிழ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

கிருஷ்ணமூர்த்தி குறைவாக எழுதினாலும்,  கவனத்திற்குரிய எழுத்தாளர்.

இத்தொகுப்பின் அனைத்துச்  சிறுகதைகளும்  எமது தமிழர்களின் புகலிட வாழ்வுக்கோலங்களை சித்திரித்திருந்தாலும், உயிர் என்ற கதை மாத்திரம் தாயகத்தில் யாழ்ப்பாணத்தையும், புகலிடத்தில் அவுஸ்திரேலியா மெல்பனையும்  இணைக்கின்றது. அத்துடன் அதிர்வையும் ஏற்படுத்தும் கதை.

இக்கதையில் வரும்  யாழ்ப்பாணம் டொக்டர் கந்தசாமியும் போர்க்காலத்தில் இயக்கத்தின் ஏரியா பொறுப்பாளர் தமிழ் அழகனும் புகலிடத்தில் சந்தர்ப்பவசமாக சந்திக்கும் புள்ளியே அந்த அதிர்வு.  இதனை இத்தொகுப்பின் மகுடக்கதை எனவும் எனது பார்வையில் சொல்லலாம்.

புகலிடத்தில் இரண்டக வாழ்வுடன் போராடிக்கொண்டிருப்பவர்கள் பலரை கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகளில் அவதானிக்க முடிகிறது.

 நோபோல் என்ற சிறுகதை சுழல் பந்து வீச்சு சாதனையாளர் முத்தையா முரளீதரனைப்பற்றியும் பேசுகிறது. அவர் நாம் வாழும் நாட்டில் முன்னைய பிரதமரால் கூட எள்ளி நகையாடப்பட்டவர்தான். அவர் வீசும் ஒவ்வொரு பந்தும் விமர்சிக்கப்பட்டது. இக்கதையின் தொடக்கத்தில் வரும் மேற்கோள் குறிப்பு இது :   “ நீங்கள் எங்கு நிராகரிக்கப்பட்டீர்களோ, எங்கு அவமானம் செய்யப்பட்டீர்களோ, அதே இடத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பதுதான் உண்மையான வெற்றி. 

சாப்பாட்டு ராமன் என்று பெரெடுத்து, பல்தேசிய கலாசார உணவு வகைளையெல்லாம் தயாரிக்கத் தெரிந்த ஒருவருக்கு மனைவி தரும் உணவு நீரிழிவு, கொலஸ்ரோல்,  பிறஷர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு. 

இவ்வாறு நகைமுரண்கொண்ட கதைகளை நறுக்குத் தெறித்தாற்போல் சொல்கிறார் இந்த கதை சொல்லி.

திரைக்கண்


தரமான திரைப்படங்களை பார்ப்பதும், தனது அவதானிப்பை விமர்சனக்குறிப்புகளாக எழுதுவதும் கிருஷ்ண மூர்த்தியின் வழக்கம். கடந்த காலங்களில் அவர் பார்த்த, ஏன் நாமும் பார்த்து ரசித்த சில தமிழ்த்திரைப்படங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்.

தனது இளமைக்காலத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு அனுமதியளித்த தனது பெற்றோருக்கும் யாழ்நகரில் தற்போது காணாமல்போய்விட்ட திரையரங்குகளுக்குமே இந்த திரைக்கண் நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.

திரையரங்குகள் கட்சி அலுவலகமாகவும், களஞ்சியச் சாலைகளாகவும் திருமண மண்டபங்களாகவும் மாறியிருக்கும் சூழலில்,  நாம் எமது கைத் தொலைபேசியிலும் திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இக்காலத்தில் எந்தப் பிள்ளையும் பெற்றோரிடம் அனுமதி கேட்காமலேயே கைத்தொலைபேசியில் பார்க்க முடியும் என்பதையும் சுட்டிக்காணப்பிப்பதற்காக,  கிருஷ்ணமூர்த்தி அங்கதமாக இந்த சமர்ப்பணத்தை எழுதினாரோ தெரியவில்லை.

மொத்தம் பத்தொன்பது தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய அவரது அவதானக்குறிப்புகள்தான் இந்த நூல். 

பிறமொழிப்படங்கள் பற்றியும் கிருஷ்ணமூர்த்தி எதிர்காலத்தில்  எழுதவேண்டும்.

----0---

 

 

 

 

 

No comments: