உக்ரைனுக்காக போர் புரிந்த 3 வெளிநாட்டினருக்கு தூக்கு
குரங்கம்மை அச்சுறுத்தல் பற்றி சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இங்கிலாந்தில் 4 நாள் வேலை வாரம் அமுல்
பாகிஸ்தான் நீர் பற்றாக்குறை தொடர்பில் எச்சரிக்கை
ஆப்கானியத் துருப்புகளை இந்தியா அனுப்ப விருப்பம்
உக்ரைனுக்காக போர் புரிந்த 3 வெளிநாட்டினருக்கு தூக்கு
உக்ரேனுக்காகப் போரில் சண்டையிட்டுப் பிடிபட்ட வெளிநாட்டவர் மூவருக்கு கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யா சார்பான நீதிமன்றம் ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த இருவரும் மொரோக்கோவைச் சேர்ந்த ஒருவரும் கூலிப்படையினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. உக்ரைனியத் தலைநகர் கீயேவைத் தற்காத்துச் சண்டையிட்டபோது ரஷ்யாவுக்கு ஆதரவான கிளச்சியாளர்கள் அவர்களைப் பிடித்தனர்.
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைச் சாடிய பிரிட்டன் ரஷ்ய நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது என்று கூறியது.
சர்வதேச சட்டம் மீறப்பட்டதாகவும் பிடிபட்ட நபர்கள் உடடினயாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் பூசல் ஆரம்பித்ததில் இருந்து வெளிநாட்டுப் போராளிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
இந்த தண்டனைக்கு எதிராக மூவரும் மேன்முறையீடு செய்யப்போவதாக அவர்களின் வழக்கறிஞர் ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
குரங்கம்மை அச்சுறுத்தல் பற்றி சுகாதார அமைப்பு எச்சரிக்கை
குரங்கம்மை நிரந்தர நோயாகக் கருதப்படாத நாடுகளில், அது அதிக அளவில் பரவும் அபாயம் உண்மையானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை அத்தகைய 29 நாடுகளில் சுமார் 1,000 குரங்கம்மைச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஆனால் குரங்கம்மைத் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்போவதில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை பணிப்பாளர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் கூறினார்.
அந்த 29 நாடுகளில் குரங்கம்மையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
குரங்கம்மை குறிப்பிட்ட காலத்துக்குக் கண்டறியப்படாமலேயே பரவியிருந்திருக்க வேண்டும். ஆனால் அது எவ்வளவு காலத்திற்கு அவ்வாறு பரவியிருக்கும் என்பது தெரியவில்லை என்று டெட்ரோஸ் கூறினார்.
மற்ற நாடுகளில் குரங்கம்மை பரவுவது அக்கறைக்குரிய ஒன்றாக இருந்தாலும், ஆபிரிக்க நாடுகளில் அது பல ஆண்டுகளாகப் பரவிவருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு மட்டும் அங்கு 66 பேர் குரங்கம்மைத் தொற்றால் உயிரிழந்திருப்பதாக அவர் கூறினார்.
அங்கு சுமார் 1,400 குரங்கம்மைச் சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
குரங்கம்மைத் தொற்றுடன் தினமும் வாழும் சமூகங்களுக்கும் அதே அளவு அக்கறையும், அவர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வளங்களும் வழங்கப்பட வேண்டும் என்றார் டெட்ரோஸ். நன்றி தினகரன்
இங்கிலாந்தில் 4 நாள் வேலை வாரம் அமுல்
நான்கு நாட்கள் வேலை வாரம் திட்டத்தை சோதனை அடிப்படையில் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தியுள்ளது.70 நிறுவனங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்து 300 தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலை வாரத் திட்ட சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், மன அழுத்தம், சோர்வு, வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் திருப்தி உள்ளிட்டவைகளை கூடுதல் நாள் விடுமுறை மூலம் பணியாளர்கள் கையாள்வதை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நன்றி தினகரன்
பாகிஸ்தான் நீர் பற்றாக்குறை தொடர்பில் எச்சரிக்கை
தற்போது நிலவிவரும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையை பற்றி கவலை வெளியிட்ட பாகிஸ்தான் பருவநிலைத் துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான், உடனடி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நீர் பற்றாக்குறை உள்ள முதல் ஐந்து நாடுகளில் பாகிஸ்தானும் இடம்பெறக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஜெர்மனி கண்காணிப்பு நிறுவனத்தின் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கக் கூடிய முன்னணி நாடுகளில் பாகிஸ்தானும் உள்ளடக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. “பாகிஸ்தான் குறிப்பாக பாதிக்கப்பட்டிருப்பதோடு காலநிலை மாற்றத்தின் நெருக்கடியை மேலும் வலியுறுத்தத் தேவையில்லை” என்று டோன் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார். நன்றி தினகரன்
ஆப்கானியத் துருப்புகளை இந்தியா அனுப்ப விருப்பம்
ஆப்கான் இராணுவத்தை பயிற்சிக்காக இந்தியா அனுப்புவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஆப்கான் பாதுகாப்பு அமைச்சரும் தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மகனுமான முல்லா யாகூப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நியுஸ் 18 தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஆப்கான்–இந்திய உறவு வலுப்பெற்றிருப்பதோடு அதற்கான அடித்தளம் அமைக்கப்படும்” என்று கூறினார்.
சிறந்த அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகளை பேணும்போதே பாதுகாப்பு உறுதிக்காக நாம் தயாராக இருப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment