ஸ்வீட் சிக்ஸ்டி 17 - அன்னை - ச சுந்தரதாஸ்


.

தமிழ்ப் படங்கள் பெரும்பாலும் கதாநாயகனையோ,கதாநாயகியையோ,அல்லது வில்லன்,வில்லியை பிரதானப்படுத்தியேதான் உருவாகியுள்ளன.அந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களே படத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுமும் உள்ளனர். ஆனால் 1962ல் வெளிவந்த அன்னை படம் பி பானுமதி என்ற அஷ்டாவதானியை மட்டுமே முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்தது எனலாம்.காரணம் இப் படத்தின் கதாநாயகி,கதாநாயகன்,ஏன் வில்லி கூட இவர்தான்.

பானுமதியின் நடிப்பாற்றலை நன்கு உணர்ந்த ஏவி எம் ப்ரொடக்ஷன்ஸ் அதிபர் ஏவி வி மெய்யப்பன் செட்டியார் அன்னை படத்தை பானுமதியின் நடிப்பில் தயாரித்திருந்தார்.படத்தின் முழுக்க கதையும் பானுமதியை சுற்றியே அமைந்திருந்தது.இதனால் மற்றைய நடிகர்கள் எல்லோரும் அடக்கியே வாசித்தார்கள் எனலாம்.

தனக்கு குழந்தை பிறக்காது என்பதை மருத்துவர் மூலம் அறிந்த சாவித்ரி தன்னுடைய தங்கை சீதாவின் ஒரே குழந்தையை சுவீகாரம் எடுத்துக் கொள்கிறாள்.சீதா தன் கணவனுடன் பிழைப்புக்காக பர்மா போகிறாள்.சாவித்ரி மகன் மீது பாசத்தைக் கொட்டி வளர்கிறாள். அவனுக்காக தன் உயிரையும் விட சித்தமாகிறாள்.ஆனால் தத்து கொடுத்த சீதா மீண்டும் சாவித்ரியைத் தேடி பல ஆண்டுகள் கழித்து வந்ததும்,எங்கே அவள் மகனை கேட்டு விடுவாளோ என்று எண்ணி சித்தம் தடுமாறுகிறாள்.தாயையும் மகனையும் சேர விடாமல் தடுக்கிறாள்.சீதாவோ மகனின் அரவணைப்புக்காக ஏங்கி தவிக்கிறாள்.


இவ்வாறு அமைந்த கதையில் சாவித்ரியாக நடித்த பானுமதி பாத்திரமாகவே மாறி விட்டார் எனலாம்.பாசம்,தாபம்,பயம்,கோபம் என்று எல்லா உணர்ச்சிகளையும் காட்டி நடித்திருந்தார் அவர்.சௌகார் ஜானகியுடன் அவர் தோன்றும் ஒரு காட்சியில் தன்னுடைய பாத்திரத்தின் தன்மை அடிப்பட்டு போகக் கூடாதென்று படப்பிடிப்பில் இடையூறு செய்தார் என்றும் சொல்லப்பட்டது. அந்தளவுக்கு பாத்திரத்துடன் ஒன்றியிருந்தார் அவர்.சீதாவாக வரும் சௌகார் ஜானகி அளவுடன் அருமையாக நடித்திருந்தார்.சாவித்ரியின் கணவனாக வரும் எஸ் வி ரங்காராவ் இவர்களுக்கு ஈடு கொடுத்து சாந்த சொரூபியாக காட்சியளித்தார்.

சாவித்ரி,சீதா இருவரின் மகனாக நடித்தவர் பி.ராஜா.தமிழில் ஓன்டிரண்டு படங்களில் மட்டும் நடித்த இவர் எட்டாண்டுகள் கழித்து சிவாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.இவருக்கு ஜோடியாக நடித்தவர் சச்சு.இந்தப் படத்துடன் கதாநாயகியாக நடிக்கும் ஆசையை ஒதுக்கி விட்டு நகைச்சுவை நடிகையாக தன்னை மாற்றிக்கொண்டார் அவர்.ஆனாலும் படத்தில் அழகாக காட்சியளித்தார் சச்சு!ஜே பி சந்திரபாபு படத்தில் நகைச்சுவைக்கு ஏக உரிமை கொண்டாடினார் ! படத்தில் சிரிக்க வாய்த்த அவர் புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை பாடலை பாடி சிந்திக்கவும் வைத்தார்.அவருடன் ஒரு காட்சியில் வரும் நாகேஷ் லைலா மஜ்னு நாடகத்தில் பெண்வேடம் ஏற்று வருவதோடு சந்திரபாபுவுடன் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு லைலா ஒரே ஒரூ லைலாவுக்கு ஒரே ஒரு மஜ்னு பாடலிலும் தோன்றினார். படத்தில் இவர்களுடன் டி எஸ் முத்தையா, சந்தியா , எஸ் எல் நாராயணன் ஆகியோரும் நடித்திருந்தனர்.உணர்ச்சிகரமான கதையும்,காட்சிகளையும் கொண்ட படத்தின் வசனங்களை கே எஸ் கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தார். “பெற்ற பிள்ளையை இருபது வருஷம் பிரிந்திருக்க உன்னாலே முடிந்தது,ஆனால் வளர்த்த தாயால் இருபது மணித்தியாலம் இருக்க முடியலையே,ராமனை பிரிந்து சீதாவால் இருக்க முடிந்தது,ஆனால் தன் கணவனின் உயிரை மீட்க எமனிடம் போராடிய சாவித்ரிதான் மேல் ,மண்ணில் இருந்துதான் தங்கம் கிடைக்குது ஆனால் தங்கத்தோட சேர்ந்து மண் ஆபரணம் ஆகிறது இல்லை” போன்ற வசனங்கள் பளிச்சென்று பதிந்தன. வசனங்களில் அவர் திறமை பளிச்சிட்டது.அனுபவசாலியான எஸ் மருதிராவ் படத்தை ஒளிப்பதிவு செய்தார்.இசை ஏவி எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்.இவரின் இசையில் கண்ணதாசனின் வரிகளில் பூவாகி காயாகி கனிந்த மனம் ஒன்று,அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள், ஓ பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பாடல்கள் சுவையாக அமைந்தன.

பிரபல இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு இருவரும் படத்தை இயக்கி இருந்தார்கள்.அனுபவமிக்க டைரக்டர்கள் என்பதை படத்தில் பல காட்சிகளில் நிரூபித்திருந்தார்கள்.படமும் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
No comments: