எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 17 மெல்பனுக்கு வந்த முதலாவது ஏயார் லங்கா ! தமிழ் அகதிகள் கழகத்தின் முன்கதைச்சுருக்கம் !! முருகபூபதி


கவலை இல்லாத மனிதர்கள் இந்த உலகில் எவருமில்லை.  ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வின் அனுபவங்கள்தான் புத்திக்கொள்முதல். முற்றிலும் வேறுபட்ட சமூகச் சூழலில் வாழ முற்படும்போது, அதற்கேற்ப எம்மை வசப்படுத்திக்கொள்ளத் தவறினால் தோற்றுப்போவோம்.

மெல்பனுக்கு நான் வந்த காலப்பகுதியில் இங்கே எனக்கு உறவினர்கள் எனச்சொல்லிக்கொள்வதற்கு எவருமில்லை.  இங்கு அறிமுகமான நண்பர்களும் அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும்தான்  உறவினர்களானார்.

வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம் அதிகாலை 4-00


மணியாகவிருக்கும். பத்து மணிநேர வேலை.  அதன்பின்னர் உறங்கி மதியம் எழும்போது,  ஊர் யோசனை வந்துவிடும்.  கட்டிலை விட்டு எழாமலேயே குடும்பத்தை , குழந்தைகளை நினைத்துக்கொண்டிருப்பேன்.  எனக்கு 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி மகன் முகுந்தன் பிறந்தான்.  அது கவியரசு கண்ணதாசனின் பிறந்த தினம்.  அவனது அழுகுரலை ஊரிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த கோமஸ் அன்ரியின் வீட்டு தொலைபேசியில்தான் கேட்பேன்.

அக்காலப்பகுதியில் கமல் – ராதிகா நடிப்பில் வெளியானது  சிப்பிக்குள்முத்து திரைப்படம்.  இதனை இயக்கிய                             கே. விஸ்வநாத், முதலில் சுவாதி முத்யம் என்ற பெயரில் தெலுங்கில் எடுத்தார். அதன் வெற்றியையடுத்து, தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் வெளியானது. கன்னடம் – இந்தி மொழிகளிலும் வெளியான சிறந்த படம்.

சிப்பிக்குள் முத்து படப்பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

லாலி லாலி லாலி லாலி 

லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி


வீட்டு யோசனை வரும்போதெல்லாம்  இந்தப்பாடலை கேட்பேன்.

மெல்பன் 3 EA , பிறிஸ்பேர்ண் தமிழ் ஒலி முதலான வானொலிகளில் ஒலிபரப்பான எனது கதைகள், கட்டுரைகளை ஒலிநாடாவில் பதிவு செய்து வைத்திருந்தேன். அந்தப்பதிவுகளுக்கு முன்னோட்டமாக எனது குரலுடன் இந்தப்பாடலையும்  பதிவேற்றி,  கொழும்பிலிருந்த நண்பர் ராஜஶ்ரீகாந்தனுக்கு அனுப்பினேன்.

அவர் அதனை பிரதி எடுத்து எனது இலக்கிய நண்பர்கள் பிரேம்ஜி ஞானசுந்தரன், தெணியான், இளங்கீரன், மல்லிகை ஜீவா ஆகியோருக்கு கொடுத்தார்.   தற்போது இவர்கள் அனைவரும் மட்டுமல்ல,  பேராசிரியர் எலியேசரும், பிறிஸ்பேர்ண் வாசுதேவனும் இல்லை. ஆனால், அந்த ஒலிப்பதிவு நாடா இன்னமும் எனது வசம் இருக்கிறது. 

எனது அகதி விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதில் தாமதங்கள் நீடித்தது. நான் வடக்கு – கிழக்கிற்கு வெளியே வாழ்ந்தமையும் அதற்கு முக்கிய காரணம். போர் நெருக்கடி அச்சுறுத்தல்களினால் வந்தவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது புரிந்துகொள்ளத்தக்கது.

எனக்கு வதிவிட உரிமை கிடைக்குமா..? என்ற கேள்விக்குறியுடன்தான்  இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற


தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் தொடக்கியிருந்தேன்.

இலங்கை – இந்திய  ஒப்பந்தம்  நடந்தபோது, வீரகேசரி பொதுமுகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் சுகவீனமுற்றிருந்தார்.  அவரைத் தொடர்புகொண்டு சுகநலன் விசாரித்தேன்.

என்னைப்பற்றிக்  கேட்டறிந்தார்.

எனக்கிருக்கும் Home Sick பற்றிச்சொன்னேன்.  எனது மகனை இன்னமும் பார்க்கக்  கிடைக்கவில்லை என்றேன்.

 “ தற்போது இலங்கையில் அமைதி திரும்பியிருப்பதற்கான அறிகுறி தென்படுகிறது.   இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுமானால்  நிலைமை சீரடையும் . புறப்பட்டு வாரும்.  மீண்டும் உமக்கு வீரகேசரியில் துணை ஆசிரியர் வேலையை தருகின்றேன்.  “ என்றார்.

 “ நான் இங்கு ஆரம்பித்திருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு வருவேன் சேர்.  அதற்கு சில மாதங்கள் செல்லும்.    என்றேன். 

 “ வீரகேசரிக்கு சர்வதேச பதிப்பு வெளியிடும் எண்ணம் இருக்கிறது.  இதுபற்றி எமது விளம்பர – விநியோகப்பிரிவு முகாமையாளர் சிவப்பிரகாசம் உமக்கு விரிவாக எழுதுவார். அதற்கான உமது ஆலோசனைகளை எழுதி அனுப்பிவைக்கவும்.    என்றார்.


அவருக்கு சுகவீனம் என்றறிந்ததும் நான் தொடர்புகொண்டதனால் அவர் நெகிழ்ந்துவிட்டார்.  வீரகேசரியிலிருந்து நான் வெளியேறிய பின்னரும் அங்கிருந்த பலருடன் நான் தொடர்பிலிருந்தேன்.

எனது இலக்கிய நண்பர்களிடமிருந்து எனக்கு தேறுதல் கடிதங்கள் வந்தன.  அவற்றில் பல இன்னமும் எனது வசம் பத்திரமாக இருக்கின்றன. சிலவற்றை தொகுத்து கடிதங்கள்               ( 2001 ) என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளேன்.

வீரகேசரியிலிருந்து 10-11- 1989 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதம் வந்தது. அதனை விளம்பர – விநியோக முகாமையாளர்                      து. சிவப்பிரகாசம் எழுதியிருந்தார். அது தட்டச்சு செய்யப்பட்ட கடிதம்.

அதிலிருந்து சில வரிகள்:

வாராந்த அடிப்படையில் எமது ஸ்தாபனம் ஒரு சஞ்சிகையை வெளியிட எண்ணியுள்ளது. தற்போது குறிப்பிட்ட அளவு வீரகேசரி பத்திரிகைகளை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம். நேரத்துடன் போராடும் வெளிநாட்டு தமிழ் அன்பர்கள் தினமும் வீரகேசரி பத்திரிகையை படிப்பதற்கு கால அவகாசம் கிடைக்குமா என்பது சந்தேகம். அத்துடன் தினமும் பத்திரிகை பெறுவதற்கு அதிக தபாற் கட்டணத்தின் காரணமாக செலவு பற்றி யோசிப்பார்கள். ஆதலால் வீரகேசரி சர்வதேசப்பதிப்பு என்ற அடிப்படையில் கிழமைக்கு ஒருமுறை வெளிநாட்டு தமிழ் அன்பர்கள் விரும்பக்கூடிய ஏற்கனவே வெளிவந்த செய்திகள், கட்டுரைகள் என்பவற்றைச் சுருக்கி பிரசுரிக்கலாமென ஆலோசித்து வருகின்றோம்.  இதுபற்றிய தங்களின் கருத்தை அறிய விரும்புகின்றேன். எவ்வித செய்திகள், கட்டுரைகளை உவ்விட வாசகர்கள் விரும்புவார்கள் என்பதையும், கீழ்வரும் விடயங்கள் பற்றிய உங்களது அபிப்பிராயத்தையும் தெரிவிக்கவும்.

1.    குறிப்பிட்ட எந்த நாளில் இவ்வாராந்த பத்திரிகை அங்கு கிடைக்கவேண்டும்.

2.    வாராந்த பத்திரிகை தமிழில் மட்டும் இருக்கவேண்டுமா அல்லது


ஆங்கிலத்தில் பழக்கப்பட்ட சில அன்பர்களின் நலன் கருதி ஒரு சில பக்கங்களை ஆங்கிலத்தில் பிரசுரிக்க வேண்டுமா..?

3.    உவ்விடமுள்ள தமிழ் அன்பர்கள் திருமண வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து விளம்பரங்களை பத்திரிகையில் பிரசுரிக்க விரும்புவார்களா..?

மேற்குறிப்பிட்டவற்றை தங்களது சக நண்பர்களுடன் ஆலோசித்து விரிவான பதிலை தெரிவிக்கவும். 

எமது பத்திரிகை நிறுவனத்தில் கடமையாற்றி, பத்திரிகைத்துறையிலும் எழுத்து துறையிலும் பற்றும் ஆவலுமுள்ள நீங்கள் இக்கடிதத்தில் எழுதப்பட்ட விடயங்களுக்கு விரிவான பதிலை தருவீர் என நம்புகின்றேன்.

அவரது கடிதத்திற்கு தாமதிக்காமலே ஐந்து பக்கங்களில் விரிவான கடிதம் எழுதி அனுப்பினேன்.  அவரும் எனது கடிதம் கிடைத்திருப்பதாக 19-12-1989 ஆம் திகதி தந்தி மூலம் தெரிவித்திருந்தார்.

அன்பர் து. சிவப்பிரகாசம் என்னுடன் அடிக்கடி கடிதத் தொடர்பிலுமிருந்தார்.  1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கொழும்பிலிருந்து முதலாவது ஏயார் லங்கா விமானம் மெல்பனுக்கு வந்தது.

அதனை ஊடகங்களில் பிரபல்யப்படுத்தவேண்டிய தேவை ஏயார் லங்கா நிறுவனத்திற்கு வந்தது.  பலருக்கு அந்த முதல் விமானத்தில் இலவசமாக பயணிப்பதற்கு வாய்ப்பும் கிடைத்தது. சுமார் இரண்டு வாரங்கள் அந்தப்பயணிகள் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு தூதரகம் விசா அனுமதியும் வழங்கியிருந்தது.

சிவப்பிரகாசம் அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் எனக்கு தகவல் தந்தார்.  அவர் வந்து தங்கியிருந்த மெல்பன்  The Hotel Windsor இற்குச்சென்று சந்தித்து எனது குடியிருப்புக்கு அழைத்து வந்து உபசரித்தேன்.

இலங்கை நிலைமைகளை அவர் விபரித்தார்.  நாடு திரும்பும் யோசனையை கைவிடுமாறும் சொன்னார்.

எனது வீட்டு யோசனையை கரிசனையுடன் அவதானித்த சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணர் 1990 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம்,    எனக்கு சென்னை சென்று திரும்பி வருவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் அனுமதி பெற்றுத்தந்தார்.

அக்காலப்பகுதியில் மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் வெளியாகியிருந்தது. அத்துடன் சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  சோவியத் கலாசார நிலையத்தில் தனது மகாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சர்வதேச செயலாளர் ராஜஶ்ரீகாந்தன்,  அந்த மாநாட்டுக்கு செல்லுமாறு அழைப்பிதழ் கடிதம் அனுப்பியிருந்தார்.  நான் அவரையும் மல்லிகை ஜீவாவையும்  வருமாறு அழைத்தேன்.  எனது குடும்பத்தினரையும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்த நண்பருக்கு,  இறுதி நேரத்தில் அவர் பணியாற்றிய சோவியத் தூதரக தகவல் பிரிவில் லீவு அனுமதி கிடைக்கவில்லை.

நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் அக்காலப்பகுதியில் Brunswick  இல் விமானப்பயண முகவர் நிலையம் ஒன்றை நடத்திவந்தார்.  அவரே விமானப்பயணத்திற்கான அனுமதிச்சீட்டையும்  ஏற்பாடு  செய்து  தந்திருந்தார்.

அந்தப்பயணம் தொடர்பாக மேலும் சொல்லவேண்டிய தகவல்கள் குறித்து இனிவரும் அங்கத்தில் எழுதுவேன்.

எனது தமிழகப்பயணம் குறித்து எழுதப்பட்ட பயண இலக்கியத் தொடர் தினகரன் வாரமஞ்சரியில் வெளியாகியது.  வீரகேசரி விளம்பர – விநியோக முகாமையாளர் சிவப்பிரகாசமும் அந்தத் தொடரை படித்துவந்தவர். அது பற்றிய தனது கருத்துக்களையும் அவர் எனக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருந்தார்.

1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முதலாவது ஏயார்லங்கா விமானத்தில் வந்திருந்த அவர்,  நாட்டு நிலைமை பற்றி மிகுந்த கவலையுடன் சொன்னதுடன்,  எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை பெருகுமே தவிர குறையப்போவதில்லை.  

சென்னை பயணத்தில் உமது அம்மாவையும் பிள்ளைகளையும் குடும்பத்தையும் பார்த்துவிட்டீர்.  இனி அவர்களை இங்கே அழைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வழியை பாரும்.  நீர் தொடங்கியிருக்கும் கல்வி சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு இனித்தான் வேலை அதிகமாக இருக்கும்  “ என்றார்.

அவர் அந்தப்பயணத்தில்  மெல்பனில் வசித்த வீரகேசரி விநியோகப்பிரிவில் பணியாற்றிய நண்பர் சஞ்சையனையும் சந்தித்தார்.

இந்திய அமைதிப்படை வந்த பின்னர் அங்கே நிலைமைகள் மோசமடைந்தன.  அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களிடமிருந்து கடிதங்கள் வரவில்லை.  நான் அனுப்பிய கடிதங்களும் அவர்களுக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை.

தினமும் ஒரு கடிதம் என்ற ரீதியில் மாதம் முப்பது கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தேன்.  அப்போது மெல்பனில் தபால் தரம்பிரிக்கும் பகுதியில் ஒரு பிரபலமான அன்பர் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

நான் அனுப்பிய மற்றும் எனக்கு வந்த கடிதங்களின் மூலம் யார் இந்த முருகபூபதி என்றும்  யோசித்துவிட்டு, நண்பர் திவ்வியநாதனிடம் கேட்டுள்ளார்.  அவர் மூலம் என்னை அறிந்து கொண்டு நட்பு பூண்ட அந்தத்  தமிழ் அன்பர்தான் பொப்பிசைக்  கலைஞர் நித்தி கனகரத்தினம்.

ஒருநாள் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. முகவரி சரியாக எழுதப்பட்டிருக்கவில்லை.  ஆங்கிலத்தில் L. Murugapoopathy, Victoria 3056. Australia .  என்று மாத்திரம் இருந்தது.

அனுப்பியிருந்தவர் அங்கு பதிவாளராக பணியாற்றிய மூத்த கவிஞர் இ. முருகையன்.   அந்த முகவரி தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.

முருகையன் நிச்சயமாக அவ்வாறு தட்டச்சு செய்திருக்க மாட்டார்.  அவரது உதவியாளர்தான் அவ்வாறு தட்டச்சு செய்திருக்கவேண்டும்.

ஆனால், அக்கடிதம் எனது முகவரிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தது.

அதன் ரிஷிமூலம் நித்தி கனகரத்தினம்தான். 

எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணர் அவர்களின் இல்லத்தில் இங்கு குடியேறிய தமிழ் அகதிகளுக்கான சந்திப்பு பற்றி எழுதியிருந்தேன். அந்த சந்திப்பு விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்துக்கொடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அகதிகளிடம் முன்னெடுக்கப்பட்டதே தவிர, ஆக்கபூர்வமான நோக்கத்தை முன்னெடுப்பதாக அமையவில்லை.

இதுபற்றி எமது மக்கள் குரல் ஆசிரிய பீடத்தினருடன் கலந்துரையாடினேன்.  அந்தக் குழுவில் நான் மாத்திரமே அகதி. ஏனையோர் இங்கு நிரந்தர வதிவிட அனுமதியும் பெற்று குடியுரிமையும் பெற்றவர்கள்.

விக்ரோரியா இலங்கைத்  தமிழ்ச்சங்கம் அகதிகளை அங்கத்தவர்களாக்குவதற்கு தயங்கிய காலம் அது.  சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணர் அவர்களும் சங்கத்தின் துணைத்தலைவராகவிருந்தும்  சங்கத்தின் போக்குப்பிடிக்காமல் சகிப்புடன் பொறுமை காத்தார்.  அவர் தனது நிலைப்பாட்டினை விளக்குவதற்காக சில நண்பர்களை அழைத்து மெல்பன் வை. டபிள்யூ. சீ. ஏ . மண்பத்தில் ஒரு சந்திப்பை ஒரு மாலை நேரம் ஒழுங்கு செய்திருந்தார்.

அதற்கு சிவநாதன், திவ்வியநாதன், நல்லையா சூரிய குமாரன், அந்தோனிப்பிள்ளை, கொர்னேலியஸ்,  பொறியியலாளர் தணிகாசலம், சற்குணலிங்கம் ஆகியோர் வந்தனர்.  அங்கும் அகதிகள் பற்றிய குரல் எழுந்தது.

தணிகாசலம் அகதிகள் தங்களுக்குள் ஒரு அமைப்பினை உருவாக்கிச்  செயற்படவேண்டும் என்றார்.

அன்று அவர் வழங்கிய யோசனையை கவனத்தில் நாம் எடுத்தமையால்,  மற்றும் ஒரு நாள் மெல்பனில் வதியும் தமிழ் அகதிகள் பலருக்கும் அழைப்பு விடுத்தோம்.  அதற்காக ரவீந்திரன் அண்ணரே எமக்கு மண்டபமும் ஒழுங்கு செய்து தந்தார்.

அந்தக்கூட்டத்தில்  நாம் ஒரு Lobby Group உருவாக்கினோம்.  நடேசன், சிவநாதன், தருமகுலராஜா ஆகியோர்  அகதிகளின் நலன்களுக்காக குரல் கொடுத்தனர்.  அகதிகள் இங்கே எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றிய  இந்நாட்டின் சட்ட திட்டங்களை எடுத்துரைத்தார்.

குறிப்பிட்ட Lobby Group இல்  சூரியகுமாரன் தலைவராகவும் நான் செயலாளராகவும் திலகராஜன், கொர்ணேலியஸ்,  முருகேசு ஆகியோர் குழு உறுப்பினர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டோம்.

இந்தச்செய்தி வெளியே கசிந்தவுடன், தமிழ்ச்சங்கத்தலைவர் சோமா சோமசுந்தரம் வெகுண்டார்.  அவரது சங்கத்திற்கு எதிராக ரவீந்திரன் மற்றும் ஒரு அமைப்பினை உருவாக்குகிறார் என்ற எண்ணம் அவரிடம்  தோன்றிவிட்டது.

அவரும் காலம் தாழ்த்தாமல் மற்றும் ஒரு கூட்டத்தை அதே வை. டபிள்யூ. சி, ஏ. மண்டபத்தில் நடத்தினார்.  அக்கூட்டம் காரசாரமாக நடந்தது.

நாம், எம்மை சங்கத்தில் அங்கத்தவர்களாக்குமாறு வலியுறுத்தினோம்.   எமது கோரிக்கை ஏற்கப்பட்டது.  அதன்பின்னர்  சங்கத்தின் விண்ணப்ப படிவம் பெற்று வீடு வீடாகச்சென்று அகதிகளிடம் வழங்கி பூரணப்படுத்தி சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்த Doncaster மகேஸ்வரன், துரைராஜா ஸ்கந்தகுமார், ஜெகநாதன்  ஆகியோரிடம் சந்தாப் பணத்துடன் வழங்கினோம்.

எமது Lobby Group முதலில் பேராசிரியர் எலியேசரை சந்திக்கச்சென்றது.  அவரும் தலைவர் சோமசுந்தரத்தையும் அழைத்திருந்தார்.

இந்தக்  குழுவுக்கு பின்னாலிருப்பது மக்கள் குரல்தான் என்று சோமா அண்ணர்  கற்பனை செய்திருக்கவேண்டும்.  அந்தளவுக்கு மக்கள் குரல் மெல்பன்  தமிழ் சமூகத்தில் மாற்றுச்சிந்தனையின் குரலாக அப்போது ஒலித்தது.

சோமா அண்ணர், என்னைப்பார்த்துவிட்டு,     ஓ… நீரும் இதில் இருக்கிறீரா..?  அங்கே எமது சங்கம் பற்றி எழுதிவிட்டு, இங்கே வருகிறீரா..? “  என்றார்.

திருமதி ராணி எலியேசர்,  “ எமது சங்கம் பற்றி எவரேனும் எழுதினால் தனது வீட்டில் கோப்பி தண்ணீரும் தரமாட்டேன்  “ என்றார் கோபத்துடன்.

அவர்களை பேராசிரியர் எலியேசர் அமைதிப்படுத்தினார். இத்தனை பின்னணி கதைகளுடன்தான் பின்னர் விக்ரோரியா தமிழ் அகதிகள் கழகம் உருவானது. அது பின்னர் பல நற்செயல்களையும் செய்து பல கோலங்கள் பூண்டு  இறுதியில் காணாமலே   போனது.    அதற்கு  மூலகாரணமாகத் திகழ்ந்தவர்களுக்கு ஞாபகசக்தி இருக்குமானால், திரும்பிப் பார்த்து தங்கள் மனச்சாட்சியுடன் பேசலாம். !

என்மீது அன்று கோபித்த சோமா அண்ணர் சில வாரங்களிலேயே என்னைத் தேடி வந்தார் என்பதும் சுவாரசியமான சம்பவம்.  அதுவும் மக்கள் குரல் சம்பந்தப்பட்டதுதான்.  அது பற்றி அடுத்த அங்கத்தில் விபரிப்பேன்.

பேராசிரியர் எலியேசர்,  சோமா அண்ணர், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத்   தலைவர் தில்லை ஜெயக்குமார்,  துரைராஜா ஸ்கந்தகுமார், திருமதி ராணி எலியேசர் ஆகியோர்  மறைந்தபோது அவர்கள் பற்றிய   அஞ்சலிக் கட்டுரைகளை இலங்கை – அவுஸ்திரேலிய தமிழ் ஊடகங்களில் எழுதினேன்.  இவர்களின் இறுதி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டேன்.

திருமதி ராணி எலியேசருக்கு எண்பது வயது பிறந்ததும் நானும் மனைவி மாலதியும் ரவிந்திரன் அண்ணரும் ஜெஸி அண்ணியும்  நடேசனும் சியாமளாவும் அவரது வீடு சென்று பொன்னாடை போர்த்தி அவரை கௌரவித்தோம். பரிசுப்பொருட்கள் வழங்கினோம்.

மறைந்தவர்கள் பற்றி எழுதும்போது வரலாறும் எழுதப்படவேண்டும்.  அங்கே தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடமிருக்கலாகாது. இது  எழுத்தூழியத்தில் நான் கற்றுக்கொண்ட பால பாடம்.

 

( தொடரும் )

 

 

 

 

No comments: