இந்தியாவிடமிருந்து 65,000 மெ.தொன் யூரியா; 5.5 கோடி டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து
இரட்டை குடியுரிமை பிரச்சினைகள் எழுவதற்கு முன்னரே பதவி விலகல்
அறிவார்ந்த தலைமுறையினர் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் தினமும் குவியும் மக்கள்
இந்தியாவிடமிருந்து 65,000 மெ.தொன் யூரியா; 5.5 கோடி டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து
இன்று (10) இந்திய EXIM வங்கியிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் எம். சிறிவர்தன மற்றும் EXIM வங்கியின் பொது முகாமையாளர் நிர்மித் நரேந்திர வெத் ஆகியோரிடையே இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சிறுபோக செய்கைக்காக 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு இந்திய அரசாங்கத்திடம் குறித்த கடன் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.
இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் (5.5 கோடி) அமெரிக்க டொலர்கள் கடனை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது.
குறித்த கடன் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்றையதின் (10) பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது முன்னுரிமை என்று பிரதமர் இதற்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதற்கமைய, இந்த கடன் வசதியானது எதிர்வரும் சிறுபோக செய்கைக்கு யூரியா கிடைப்பதை உறுதி செய்ய உதவும் என, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
இரட்டை குடியுரிமை பிரச்சினைகள் எழுவதற்கு முன்னரே பதவி விலகல்
- 21 ஆவது திருத்தத்துக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை
தனிப்பட்ட முறையில் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தான் விரும்பாத போதிலும், இரட்டை குடியுரிமை பிரச்சினைகள் எழுவதற்கு முன்னரே தான் பதவி விலகுவதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, நேற்று (09) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் விலகினாலும் தனது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லையென்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜனாமா செய்வதற்கான கடிதத்தை பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் நேற்று கையளித்த பின்னரே ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார்.பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட்டமையும், மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் வெற்றி பெறச் செய்தமையும் இரண்டு எதிர்பார்ப்புகளும் தற்போது நிறைவேறியுள்ளதாகத் தெரிவித்த பசில் ராஜபக்ஷ, விரக்தியினாலோ அழுத்தங்களினாலோ தான் பதவி விலகவில்லை என்றும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பசில் ராஜபக்ஷ, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தம்மைக் குறை கூறுவதற்கு சிலர் முயற்சித்தாலும், அதற்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்றும் தெரிவித்தார்.
தான் இந்தியாவுக்குச் சென்று நடத்திய கலந்துரையாடலின் பிரதிபலனாகவே இன்று நாட்டுக்கு எண்ணெய், உரம், மா என்பன வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நம்பியிருக்க முடியாதென தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுற்றுலாத்துறை, பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதே அதற்கான ஒரே வழி எனவும் வலியுறுத்தினார். நன்றி தினகரன்
அறிவார்ந்த தலைமுறையினர் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கவலை
இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
விமான சேவைகள் நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை மாலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் இன்று வாழ்வதற்கான உரிமையைக்கூட இழந்துள்ளனர். பெருமளவான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நமது நாட்டின் அறிவார்ந்த இளைய தலைமுறை நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக புத்திசாலிகள் குறைந்த சமூகமொன்று விரைவில் உருவாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் அது சார்ந்த செயல்பாட்டு வரைபடம் உரிய கால எல்லையுடன் நடைமுறைப்படுத்தப்படும் வரை, எமது நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
அதற்கு புதிய மக்கள் ஆணையுடன் நிலையான அரசாங்கமொன்று தேவை. அவ்வாறு செய்யாமல் மக்களை ஏமாற்றிய வண்ணம் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் தினமும் குவியும் மக்கள்
கட்டுப்படுத்த முடியாது அதிகாரிகள் அவதி
இலங்கையில் கடவுச்சீட்டுகளின் தேவை பாரியளவு அதிகரித்து, பிராந்திய அலுவலகங்களில் நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் சராசரி எண்ணிக்கை 2500 ஆகும். எனினும் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து நிலவும் அசாதாரண தேவையினால் இந்த சேவையை வழங்க முடியாதுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குவதற்காக திணைக்களம் தனது சேவைகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
சேவை காலத்தை அதிகரித்த போதிலும் பிராந்திய அலுவலகங்களில் நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெளிநாட்டு பயணச் சேவைகளுடன் தொடர்புடைய புகைப்படக் கலைஞர்களும் வழக்கத்திற்கு மாறான தேவை மற்றும் தொழில்நுட்ப பலவீனங்கள் காரணமாக சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment