வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா… ! அவதானி


இலங்கை வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத காலத்திற்கு மக்கள் வந்திருக்கின்றார்கள்.  எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு,  விலைவாசியேற்றம், மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு, அனைத்தும் ஒன்றாக வந்து பஞ்சம் தலைவிரித்தாடப்போகிறது என்ற அபாயச்சங்கு ஊதப்படுகிறது.

காலிமுகத்திடலில் அரசுக்கும் அதிபருக்கும் எதிரான ஆர்ப்பாட்டப் போராட்டம் இரண்டு மாதங்களை நெருங்கிவிட்டது.

எனினும் அரசதரப்பில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் வந்தபோதிலும் அதிபரோ,  தனது பதவிக்காலம் வரையில் அந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

போராட்டக்காரர்களோ, பிரதமர் மாறினால் மாத்திரம் போதாது,


அதிபரும் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்தும்  குரல் எழுப்பிவருகின்றனர்.

மீண்டும் ஒரு அதிபர் தேர்தல் நடக்கும்போது இன்றைய அதிபருக்கு போட்டியிடுவதற்கு மற்றும்  ஒரு சந்தர்ப்பம் கிட்டும்.  அவரை கடந்த தேர்தலில் பதவியில் அமர்த்திய 69 இலட்சம் வாக்காளர்களும் மீண்டும் அவரை ஆதரிப்பார்கள் என்று  அவர் கனவிலும் இனி நினைக்கமாட்டார்.

அதனால்தான், அந்த வாக்காளர்கள் தனக்கு தந்த ஆணையை இறுதிவரையில் ஏற்று, தோல்வி கண்ட ஜனாதிபதியாகச்செல்ல மாட்டேன்.  தனது பதவிக்காலம் வரையில் இருந்துவிட்டுத்தான் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இவரது பதவிக்காலத்தில் இவருடைய குடும்பத்தினர் வாரிச்சுருட்டிய கோடிக்கணக்கான டொலர்கள் பற்றிய செய்திகள் சமகால எண்ணிம ஊடகங்களில் விரைந்து பரவியிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளுடன் நின்றுவிடாமல்,  அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரச ஆதரவாளர்களது சொத்துக்களை சேதமிட்டு தகனமாக்கியிருக்கின்றர்.

அமைதியாக தங்கள் எதிர்ப்பினை  காண்பித்து வந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்க்ஷவின் தீவிர ஆதரவாளர்கள் வன்முறையை ஏவிவிட்டதன் விளைவுதான் அவை.

மக்கள் எழுச்சி தெடர்ந்தும் சுவாலை விட்டு எரிந்திருந்தால்,  அமைச்சர்கள் எவரும் வெளியே சுதந்திரமாக நடமாட முடியாத நிலைதான் தோன்றியிருக்கும். 

தங்களுக்கு  உரிய பாதுகாப்பினை தருமாறு அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டதையடுத்து,  இராணுவத்தினர் அவர்களுக்கு மட்டுமன்றி எதிரணி உறுப்பினர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பு அளித்துவருகின்றர்.

இந்தப்பின்னணியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர்  எம். ஏ. சுமந்திரன் வீட்டுக்கு அருகாமையில் பாதுகாவல் கடமையில் ஈடுபட்ட ஒரு இராணுவ சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கு முன்னர் அலரி மாளிகையின் முன்பாக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட மற்றும் ஒரு இராணுவ சிப்பாயும் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம்.

ராஜபக்‌ஷவினர் பதவிக்கு வந்தபின்னர் மக்களும் பாதுகாப்பு படையினரும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியே வருகின்றனர். 

எனினும்,   தொடர் ஆர்ப்பாட்டம் செய்துவரும் மக்களுடன், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், மற்றும் உலக நாடுகளும் அரசிற்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

புதிய பிரதமரும் இலங்கை மத்திய வங்கி ஆளுனரும் அடிக்கடி ஊடகங்களின் வாயிலாக அபாயச்சங்கு ஊதிவருகின்றனர்.

இதனால், மக்கள் சிக்கனமாக வாழவேண்டும் எனவும்,  அநாவசியமாக வெளிப்போக்குவரத்துகளில் ஈடுபட வேண்டாம் எனவும்,  தமது வசிப்பிடங்களில் வீட்டுத்தோட்டங்களை உருவாக்கிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கடமைக்கு வராமல் வீடுகளிலிருந்து வீட்டுத்தோட்டங்களை செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஜனநெரிசலும் கட்டிடங்களும் பெருகியிருக்கும் தலைநகரத்தில்  வெற்று நிலங்கள் காணப்படுமாயின் அங்கெல்லாம் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இத்தகைய அறிவுறுத்தல்களை விடுக்கும் புதிய பிரதமர் அமைச்சர்களின் செலவீனங்களை கட்டுப்படுத்த அல்லது குறைப்பதற்கு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பது தெரியவில்லை.

இப்போதும் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது. இது யாரை திருப்திப்படுத்துவதற்கு…?

1970 களில் பதவிக்கு வந்த ஶ்ரீமா – என். எம். – பீட்டர் கூட்டரசாங்க காலத்தில்  அரசி, சீனி, மாவு முதலான உணவுப்பொருட்களுக்கு பெருந்தட்டுப்பாடு வந்தபோது, மக்கள் கித்துல், பனம் கருப்பட்டிகளுடன் தேநீர் அருந்தினார்கள்.

வீட்டுக்காணிகளில் மரவள்ளி வளர்த்தார்கள்.  வடக்கில்  விவசாயிகள் வெங்காயம், மிளகாய்,  பயறு, உழுந்து, கடலை  பயிர்ச்செய்கையில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

நகரப்புறங்களில் வாழ்ந்த மக்கள் அதிகாலையே எழுந்து பாண் வெதுப்பகங்களின் ( பேக்கரிகள் ) முன்னால் வரிசையில் காத்திருந்து பாண் வாங்கிச்சென்றனர்.

அந்தக்காட்சிகளை விமர்சித்தே 1977 இல் ஜே. ஆரும், பிரேமதாசவும் நாடெங்கும் பிரசாரம் செய்து அன்றைய அரசை தோல்வி காணச்செய்து, நாட்டின் பொருளாதாரக் கொள்கையை முற்றாக மாற்றியமைத்து திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினர்.

அதன் விளைவின் வினையை இன்று மக்கள் அனுபவித்து வருகின்றனர். அத்துடன் முன்னைய ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்திலும் ரணில் – மைத்திரி நல்லிணக்க ஆட்சிக்காலத்திலும், தற்போதைய கோத்தபாய ராஜபக்‌ஷவின் பதவிக்காலத்திலும் நடந்த முறைகேடுகள், ஊழல் மோசடிகளினாலும்,  மீண்டும் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

கண்கெட்ட பின்னர்தான் ஆட்சியாளர்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள்.

இங்குதான்  1967 ஆம் ஆண்டில் வெளியான கே. பாலச்சந்தரின் பாமா விஜயம் திரைப்படத்தில் ஒலித்த வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் ரெண்டணா, கடைசியில் துந்தனா என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.  அதில் இடம்பெறும் இந்த வரிகளையும் கவனிக்கவும்:

 “ நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது.   “

இன்றைய  இலங்கை அரசுக்கு நேர்ந்திருப்பதும் இதுதான்.  இருப்பவற்றையாவது நிலைத்து வைத்திருப்பதற்காகத்தான் பல்வேறு பிராயச்சித்தங்களை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா மேற்கொண்டுவருகின்றார்.

எனினும் அவராலும் நாட்டை மீட்க முடியாது, அவர் ராஜபக்‌ஷவினரை மீட்கவே வந்துள்ளார் என்ற விமர்சனங்களும் வருகின்றன.

அத்தகைய எதிர்வினைகளுக்கு மத்தியில்தான் உள்நாட்டு உற்பத்திகளை பெருக்குவதற்காக அவர் பல்வேறு பிரயத்தனங்களில் ஈடுபடுகிறார்.

ஆனால், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பிர்களுக்காக அரசு  செலவிடும் நிதியை குறைக்கவோ,  அல்லது அவர்கள் பெற்றுவரும் வரப்பிரசாதங்களை கட்டுப்படுத்தவோ அவர் இன்னமும் தயார் இல்லை.

இவர்கள் தரப்பில் செலவிடப்படும் நிதி குறித்து ஆய்வுசெய்யப்படவேண்டும். இவர்களிடமிருக்கும் வாகனங்கள், வீடுகள், சொத்துக்கள் குறித்த விளக்கம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவேண்டும்.

இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது, வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஆறுகோடியே நாற்பது இலட்சம் ரூபா கப்பம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டுவருட கடுழியச்சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

இவ்வாறு வெளிவராத செய்திகள் இன்னும் எத்தனை இருக்கிறதோ தெரியவில்லை.

நாடு எதிர்நோக்கியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மீட்பர்கள் தேவை.  மீட்கலாம் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ள ரணில் விக்கிரமசிங்கா, மக்களைப்பார்த்து சிக்கனம் பற்றியும் வீட்டுத்தோட்டம் பற்றியும் சொல்கின்ற அதேவேளை தனது அமைச்சர்களிடத்திலும் அவ்வாறான பணிப்புரைகளை விடுத்தல் வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில் ஒரு வரலாற்றுச்செய்தியை இங்கே நினைவு படுத்தலாம்.  கியூபாவுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தபோது அமைச்சராகவிருந்த தோழர் ஏர்ணஸ்ட் சேகுவேரா,  ஒரு சீனித் தொழிற்சாலையில் கரும்பு ஏற்றும் கைவண்டில் இழுத்தார்.  

இலங்கை அமைச்சர்களும் தங்கள் அமைச்சகத்தை விட்டு வெளியே வந்து மக்களுடன் இணைந்து உணவு உற்பத்தியில் ஈடுபடும் காலம் வரவேண்டும்.

---0----

No comments: