உலகச் செய்திகள்

உக்ரைனின் ஹெர்சன் நகர் ரஷ்யாவுடன் சேர விருப்பம்

வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை

தாய்வான் குறித்து மாவோவின் கருத்து

ஜூலை இறுதியில் எல்லையை திறப்பதற்கு நியுசிலாந்து முடிவு

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அமோக வெற்றி


உக்ரைனின் ஹெர்சன் நகர் ரஷ்யாவுடன் சேர விருப்பம்

உக்ரைனின் தெற்கில் உள்ள ஹெர்சன் நகரம் ரஷ்யாவுடன் இணைய விரும்புவதாக அதன் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அந்நகரை இணைத்துக்கொள்ளும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கேட்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். 

அந்த யோசனையை ரஷ்யா வரவேற்கிறது. ஹெர்சன் நகரின் எதிர்காலத்தை அந்நகரமே முடிவு செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியது.

அப்பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தும் சாத்தியம் உள்ளது. அது ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஒருவகையான சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கும் வகையில் அமையும். 

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமான உக்ரைனியப் படையெடுப்பில் ரஷ்யாவிடம் வீழ்ந்த முதல் நகரம் ஹெர்சன் ஆகும். 

ஆண்டு இறுதிக்குள் அந்நகரம் முழுமையாக ரஷ்யாவின் சட்டத்துக்கு உட்பட்டுவிடும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹெர்சன் நகரம் 2014 ஆம் ஆண்டில் ரஷ்யா கைப்பற்றிய உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தின் வடக்கில் அமைந்துள்ளது. தீபகற்பத்திற்கான குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு இந்த நகர் அவசியமானதாக உள்ளது.   நன்றி தினகரன் 
வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை

வட கொரியா, அதன் கிழக்குக் கரையோரத்திலிருந்து புவியீர்ப்பு ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்துள்ளது.

ஜப்பான் கடலை நோக்கி வட கொரியா 3 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகத் தென் கொரிய இராணுவம் தெரிவித்தது. அவை குறுந்தொலைவு ஏவுகணைகள் என்று கூறப்பட்டது.

அதில் ஒன்று, அதன் சிறப்புப் பொருளாதார வட்டாரத்திற்கு வெளியே விழுந்ததாக ஜப்பான் கரையோரக் காவற்படை தெரிவித்தது.

வட கொரியா இவ்வாண்டில் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஏவுகணைச் சோதனைகளை நடத்தியுள்ளது.

வட கொரியா 2017 ஆம் ஆண்டு இடை நிறுத்திய அணு ஆயுத சோதனையை மீண்டும் ஆரம்பிப்பது பற்றிய சந்தேகங்களுக்கு மத்தியிலேயே இந்த புதிய ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது. வட கொரியாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டதன் மத்தியில், இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

தாய்வான் குறித்து மாவோவின் கருத்து

சீன கம்யூனிச கட்சியின் தலைவர் மாவோ சேதுங் தாய்வான் மீது உரிமை கோருவதை மறுத்தார் என்று நெதர்லாந்து முன்னாள் இராஜதந்திரி ஒருவரான கெரிட் வான் டெர் வீஸ் தெரிவித்துள்ளார்.

தாய்வான் நிலை குறித்து காலப்போக்கில் சீனாவின் நிலைப்பாட்டில் வெளிப்படையான வரலாற்று முரண்பாடு ஏற்பட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1937 இல் அமெரிக்க ஊடகவியலாளர் எட்கர் ஸ்சோவுக்கு அளித்த பேட்டியில் மாவோ சேதுங் கூறியதாவது, ‘அவர்களின் (கொரியர்கள்) சுதந்திரப் போராட்டத்திற்கு உதவுவதில் நாம் உற்சாகமடைகிறோம். தாய்வானுக்கும் அதே நிலை பொருந்தும்’ என்று அவர் கூறியிருந்தார் என்பதை டெர் வீஸ் குறிப்பிட்டு கூறியுள்ளார்.     நன்றி தினகரன்

ஜூலை இறுதியில் எல்லையை திறப்பதற்கு நியுசிலாந்து முடிவு

நியுசிலாந்து அதன் சர்வதேச எல்லைகளை ஜூலை மாத இறுதியில் மீண்டும் முழுமையாகத் திறக்கவுள்ளது.

அதே நாளில் சொகுசுக் கப்பல் சேவைகளும் ஆரம்பிக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக வரும் செப்டம்பர் மாத இறுதியிலேயே நியுசிலாந்தின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்குத்  திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை முன்கூட்டியே திறக்க தற்போது அறிவிப்பு வந்துள்ளது.

விசா அனுமதி பெறத் தேவைப்படுவோர் அங்கு மீண்டும் செல்லலாம்.

எல்லைகளை மீண்டும் திறப்பதால் உடனடித் திறன்களுக்கான பற்றாக்குறைகள் தீரும் என்று ஆர்டன் கூறினார்.

ஒக்லாந்தில் வர்த்தகச் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அவர் அவ்வாறு தெரிவித்தார்.

நியுசிலாந்தின் சுற்றுப்பயணத்துறைக்குப் புத்துயிரூட்டுவதோடு, குடியேறிகளின் விவகாரத்தையும் வலுப்படுத்த முடியும் என்றார் ஆர்டன்.

நாட்டில் பொருளாதார எதிர்காலத்தை உறுதிசெய்ய, ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.      நன்றி தினகரன்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அமோக வெற்றி

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பெர்டினன்ட் ‘பொங்பொங்’ மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி தற்போது செனட்டராக இருக்கும் மார்கோஸ் 55.8 வீத வாக்குகளை வென்றிருப்பதோடு அவரது போட்டியாளரான லெனி ரொப்ரேடோ 28 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் பிலிப்பைன்ஸில் மீண்டும் மார்கோஸ் குடும்பம் ஆட்சிக்கு வந்துள்ளது.

முன்னர் அவரது குடும்பம் ஆட்சியில் இருந்தபோது பெரும் ஊழல் இடம்பெற்றதாகக் கூறுகின்றபோதும், அவரது ஆதரவாளர்கள் அதனை ஒரு பொற்காலமாக குறிப்பிடுகின்றனர்.

அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸ், அவரது கொடிய ஆட்சியால் தொடர்ந்து நினைவுகூரப்படுபவராக உள்ளார். மார்கோஸ் மற்றும் அவரது மனைவி இமெல்டா பொது நிதியில் இருந்து 10 பில்லியன் டொலர்களை கொள்ளையடித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அவர் 1986 இல் மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.

அவரது காலப்பகுதியில் பிலிப்பைன்ஸ் பெரும் கடன் பிரச்சினைக்கு முகம்கொடுத்ததோடு சாதாரண மக்கள் நெருக்கடியை சந்தித்தனர்.

64 வயதான மார்கோஸ் ஜூனியர் அரசியலுக்கு புதியவரல்ல. கடந்த பல ஆண்டுகளில் தேர்தல்களில் வெற்றியீட்டி பல பதவிகளை வகித்துள்ளார். எனினும் 2016 ஆம் ஆண்டில் துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் ரொப்ரேடோவிடம் தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் தமது குடும்பத்தின் உண்மை பற்றி இணையத்தில் போலியான தகவல்களை பரப்பி, சுயாதீன விசாரணைகளுக்கு முகம்கொடுப்பதை தவிர்க்கும் வகையில் விவாதங்கள் மற்றும் ஏனைய விடயங்களை தவிர்த்ததாக போட்டியாளர்கள் விமர்சித்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் மார்கோஸ் ஜூனியர் கருத்துக் கணிப்புகளிலும் முன்னிலை பெற்றிருந்தார்.

இந்நிலையில் நாட்டின் கடும்போக்கான தலைவர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டேவுக்கு பதில் புதிய தலைராக அவர் பதவி ஏற்கவுள்ளார்.

டுடெர்டேவின் போதைக் கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான கடும் நடவடிக்கை சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. அவரது இந்த நடவடிக்கையால் பொலிஸ் விசாரணைகள் இன்றி ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவரது மகள் சாரா டுடெர்டே, இந்தத் தேர்தலில் மக்ரோஸ் ஜூனியருடன் சேர்ந்து துணை ஜனாதிபதிக்காக போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருப்பதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.     நன்றி தினகரன்No comments: