சொத்தெனச் சைவத்தைக் கருத்தினில் இருத்தினார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா



அழுதகுரல் கேட்டு அம்மையே வந்தாள்
ஆலவாய் அரசு அமைதியாய் இருந்தார்
உண்ணா முலையாள் உயர்ஞானப் பாலை
உண்ட பிள்ளையை உலகமே வியந்தது 

உணர்வெலாம் ஞானம் ஊறிய பிள்ளை 
தோடுடை செவியனாய் கண்டனர் இறையை
பாடினார் பரமனை பரவசம் ஆகியே
நாடினார் திருவருள் கடலினுள் மூழ்கினார் 

திருவருள் செல்வராய் மலந்தனர் அவருமே
திருஞான சம்பந்தர் பெயரதாய்  வாய்த்தது
பக்தியைப் பரப்பிட பரமனைப் பற்றினார்
சொத்தெனச் சைவத்தைக் கருத்தினில் இருத்தினார் 

குழந்தையாய் இருந்தவர் குமரனாய் வளர்ந்தனர்
குவலயம் சிறந்திட ஞானத்தைக் கொடுத்தனர் 
கோவிலை மையமாய் கொண்டுமே சேவையை
வாழ்வினில் இருத்தியே மகிழ்ந்திட்டார் சம்பந்தர் 

இளமையில் ஞானியாய் எழுந்தனர் சம்பந்தர்
இன்தமிழ் மொழியினை ஏந்தினார் நாளுமே
பக்தியைப் பரப்பிட பைந்தமிழ் மொழியினை
சித்தத்தில் இருத்தியே செப்பினார் தத்துவம் 

முத்தாய் வைரமாய் பவளமாய் குவிந்தன

முத்திக்கு வித்தாக கருத்துகள் பொலிந்தன
அனுதினம் அடியவர் சூழ்ந்திடச் சம்பந்தர் 
ஆலய மெங்கணும் அரன்புகழ் பரப்பினார் 

மந்திரமும் நீறென்றார் தந்திரமும் நீறென்றார்
வானவர் மேலேயும் நீறென்றார் சம்பந்தர் 
சுந்தரமும் நீறென்றார் சுகமுமே நீறென்றார்
நந்துயரைப் போக்குவது நாளுமே நீறென்றார் 

முத்தியைச் சத்தியத்தை முழுமையாய் தருமென்றார்
பக்தியினை பக்குவத்தை பாங்குடனே தருமென்றார்
சித்தியைத் தருமென்றார் சீலத்தைத் தருமென்றார்
நித்தமுமே நீறதனை நெஞ்சிருத்த வேண்டுமென்றார்

பூசவினியது என்றார் பேசவினியது என்றார்
ஆசையறுப்பது என்றார் அகந்தை ஒழிப்பது என்றார்
தேசம்புகழ்வது என்றார் திருவாய் பொலிவதும் என்றார்
வாழநினைப் பார்க்கெல்லாம் மருந்தாகும் நீறென்றார் 

புனைந்தார் பலபாடல் அணைந்தார் அரனடியை
இணைந்தார் திருக்கூட்டம் எடுத்தார் தமிழ்மொழியை 

கொடுத்தார் பலகருத்தை குழந்தைஞானி சம்பந்தர்
தடுத்தார் சமண்புயலை சைவத்தின் தலைமகனாய் 

அப்பரொடு சேர்ந்தார் ஆன்மீக வழிநடந்தார்
அரனாரின் திருவருளால் அமைத்திட்டார் சத்சங்கம்
அனைவருமே அகிலத்தில் நல்லவண்ணம் வாழலாம் 
எனுங்கருத்தை விதைத்திட்டு ஏற்றமுற்றார்  சம்பந்தர் 

No comments: