தாயே உனை மறவேனே! கவிஞர் த. நந்திவர்மன்


(தரவு கொச்சகக் கலிப்பா)

மூன்றாண்டு முடிந்தாலும் முடியாது உன்நினைவு

சான்றாண்மை தவறாத சற்குணத்தைத் தந்தாயே

ஆன்றோரின் வழிநடக்கும் அருங்குணமும் பதித்தாயே

ஈன்றாளே  இவையெல்லாம் என்றைக்கும் மறவேனே!                           1


உன்னுடைய சுகத்துக்காய் உலகத்தில் எதைச்செய்தாய்?

என்னுடைய நலங்காக்க எத்தனையோ செய்தாயே

பின்னடைவு வாராது பிறர்போற்ற நான்வாழ

நன்னெறியில் செல்லவைத்த நன்மையெலாம் மறவேனே!                   2


தமிழன்னை மீதினிலே தாளாத பற்றினையும்

அமிழ்தீந்த  அம்பலவன் அடிசேரும் ஆசையையும்

நிமிர்ந்தேறி நினைத்ததெலாம் நிறைவேற்றும் நெஞ்சினையும்

தமியேனில் பதித்திட்ட தண்ணளியும் மறவேனே!                                    3


கடலுக்கு அடியினிலே கண்டெடுத்த முத்தானாய்

உடலுக்கு உரமளித்தாய் உயிருக்கு உணர்வளித்தாய்

கடமைக்குக் கண்ணளிக்கும் கண்ணியமும் எனக்களித்தாய்

மடலுக்கு மொழிதந்தாய் மனதன்பை மறவேனே!                                    4


நேரத்தைப் பொன்னென்னும் நிலைப்பாட்டைத் தந்தாயே

வீரத்தை நெஞ்சினிலே விதைத்தாயே பலநூலின்

சாரத்தை தந்தென்னைத் தலைதூக்க வைத்தாயே

ஈரத்தை இதயத்தில் இழைத்ததுவும் மறவேனே!                                       5


நான்செய்த தவப்பயனால் நற்றாயாய் வந்தாயே

வான்செய்த கற்பகமாய் வாழ்வெனக்குத் தந்தாயே

தேன்செய்த சுவையனைய தீந்தமிழைத் தந்தாயே

கான்செய்த முல்லையெனக் கவிபாட வைத்தாயே!                                6


நேற்று என் அன்னை மறைந்த மூன்றாவது ஆண்டு நினைவு தினம்.

அவர் நினைவாகப் பூத்த கவிதை இது.

No comments: