ஆடிய ஆட்டம் என்ன…? பேசிய வார்த்தை என்ன…? தேடிய செல்வம் என்ன…? அவதானி

இலங்கைப்  பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ திரிசங்கு சொர்க்கத்தில்


நிற்கிறார் என்று கடந்த வாரம் எழுதியிருந்தோம்.

தற்போது முன்னாள் பிரதமர் என்ற அடைமொழியோடு அவர் எங்கே நிற்கிறார்..? என்பதை நாம் சொல்லித்தான் வாசகர்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்பதில்லை.

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் மிக்க ஒருவரின் இன்றைய நிலை குறித்து அவரது நிழலும் வெட்கித் தலைகுனியும்.


தற்போது அவர் தனது நிழலுக்கு அஞ்சியும் நடமாடவேண்டிய பரிதாபத்திற்குரியவராகியிருக்கிறார்.  இரண்டு முறை ஜனாதிபதியாகவும் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் பிரதமராகவும் பதவி வகித்த அவர், பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறிய தருணமானது  – அதாவது கடந்த 09 ஆம் திகதி திங்கட்கிழமை நடந்திருக்கும் சம்பவங்கள் இலங்கை அரசியல் வரலாற்றில்  நீங்காத கறையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.

தனக்கு நெருக்காமான ஆதரவாளர்களை அங்கே அழைத்து மந்திராலோசனை நடத்திய அவருக்கு அதற்கான தகுதியிருந்தது. ஆனால், அதன்பின்னர் அவர்கள் அத்துமீறி வெளியே மேற்கொண்ட அடாவடித்தனங்கள் அவருடைய மரியாதையை போக்கிவிட்டது.

காலமுகத்திடலில் கடந்த 30 நாட்களுக்கும் மேல் மக்கள் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டங்களை அமைதியாகத்தான் நடத்திக்கொண்டிருந்தனர்.  அவர்கள், ஜனாதிபதியையும் பிரதமரையும் இவர்களின் அமைச்சர்களையும்தான் வீட்டுக்கு திரும்பிச்சென்று தத்தம் குடும்பத்தை கவனிக்குமாறுதான் சொன்னார்கள்.  அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினாலும் ஊழல், மோசடி, நிருவாகக் குளறுபடிகளினாலும் தேசம் வங்குரோத்தாகியிருந்த வேளையில், தங்கள் வயிற்றில் அடிவிழுந்த பின்னர்தான் அவர்கள் வீதிக்கு இறங்கியிருந்தார்கள்.

ஒரு குழந்தை பசித்தால் அழும். அதன் அழுகையை யாரும்


தூண்டிவிடத்தேவையில்லை.  அவ்வாறுதான் முழுத்தேசமும் பசியால் அழுதது.  அதனைப் போக்கவேண்டிய கடமை அவர்களின் வாக்குப் பிச்சையில்  ஆட்சிக்கு வந்தவர்களைச் சார்ந்தது.

அதனைவிடுத்து,  பதவி சுகத்திலும், அதிகாரம் தமது வசம் இருக்கிறது, பிரச்சினை வந்துவிட்டால், அதனை அடக்கி ஒடுக்குவதற்கு பொலிஸும், முப்படைகளும் இருக்கின்றன, அத்துடன்  தம்மைப் பாதுகாக்கவென அடிதடிக்கென்று ரவுடிக்கும்பலும் கைவசம் இருக்கிறது என்று நம்பிக்கொண்டு ஆட்சியை தொடர்ந்தால் என்ன நடக்கும் என்பது தெரியாதவர்களா இந்த  உடன் பிறந்த சகோதரர்களான ஜனாதிபதியும் பிரதமரும்..?

1945 ஆம் ஆண்டு அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து


பிறந்திருக்கும் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஏழுவயதாகவிருக்கும்போதுதான் 1952 ஆம் ஆண்டு பதவியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி,  அரசியின் விலையை உயர்த்தியதையடுத்து  மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  அக்காலப்பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்களப்பெண்மணி தனது எதிர்ப்பைக் காண்பிக்கும் முகமாக தனது தலைமயிரை கத்தரித்து பொதி செய்து அன்றைய அமைச்சரவைக்கு அனுப்பிவைத்தார். 

அரசும் அமைச்சர்களும் நாட்டை மொட்டையடிக்கப்போகிறார்கள் என்பதை அந்தப்பெண் குறியீட்டின் மூலம் அன்று உணர்த்தினார்.  ஒரு சிங்கள குடும்பத் தலைவர் தனது குழந்தைகளின் பசியை தன்னால் போக்க முடியவில்லை என்று கிருமி நாசினி அருந்தி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். 

இந்தச் செய்திகளினால் கலவரமடைந்த அன்றைய பிரதமர் டட்லி


சேனநாயக்கா, நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தாமல் தாமாகவே பதவி விலகி ஒதுங்கினார்.  அதே டட்லி சேனநாயக்காதான் 1965 மீண்டும் பிரதமராகி, உள்நாட்டில் அரிசி உற்பத்தியை பெருக்குவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக விவசாய மன்னர்களையும் தெரிவுசெய்து விருது வழங்கிப்பாராட்டினார்.

 நாடாளுமன்ற உறுப்பினராகவே 1973 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் இயற்கை எய்திய அவர் , முழு நாடும் சோகத்தில் ஆழ்ந்திருக்க மரியாதையோடு விடைபெற்றார்.

அவரது பிரதமர் பதவிக்காலத்தில், குறிப்பிட்ட 1952 ஆம் ஆண்டு நடந்த அந்த தன்னெழுச்சியான  ஹர்த்தால் போராட்டம் எவ்வாறு படிப்படியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்பது சட்டம் படித்த  மேதையான மகிந்த ராஜபக்‌ஷவுக்கு தெரியாதா..?  அந்த வரலாற்றை அவர் படித்திருக்கவில்லையா..? அல்லது அவரைச் சுற்றியிருந்து ஜால்ரா அடிக்கும் மதியுரைஞர்களாவது நினைவுபடுத்தவில்லையா..?

பிரதமர் பதவி விலகப்போகிறார், தேசிய அரசாங்கம் அமையப்போகிறது.  கரு ஜயசூரியா பிரதமராவார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த பின்னணியில், மகிந்த ராஜபக்‌ஷ  அலரி மாளிகையில் தமது தீவிர ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு எதற்காக மந்திராலோசனை நடத்தினார்…?


தம்பியான ஜனாதிபதி கோத்தபாயவை அரசியலுக்கு அழைத்து வந்ததும் தான்தான் ! மற்றும் சகோதரர்கள் பஸில், ஷமால், புத்திரன் நாமல் ஆகியோரையும் அரசியலுக்கு இழுத்துவந்து பதவி சுகம் தந்ததும் தான்தான் என்று,  அன்றையதினம்  09 ஆம் திகதி  கூடிக்கும்மாளம் அடித்த அடிவருடிகள் மூலம் சொல்லவைத்து,  தனக்குத்தானே கொம்பு சீவிக்கொண்டாரா..? அல்லது தனக்குத்தானே சூனியம் செய்துகொண்டாரா..?

இறுதியில் என்ன நடந்தது.  அலரிமாளிகையிலிருந்தும் வெளியே பஸ்களிலும் அழைத்துவரப்பட்ட ரவுடிக்கும்பல்களின் தாக்குதல்களுக்கு தன்னெழுச்சியான போராட்டம் நடத்தியவர்கள் இலக்கானார்கள்.  அம்மக்கள் பல நாட்களாக தங்கியிருந்து குரல் எழுப்பிய கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டன.

பலர் காயமடைந்தனர்.  விளைவு…?

அந்த கும்பலை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து விரட்டும் நிலை தோன்றியது. அவர்களின் மேலாடைகள் உருவி எடுக்கப்பட்டன. அருகிலிருந்த பேறை ஆற்றில் தள்ளி வீழ்த்தப்பட்டனர்.  மகிந்தரின் குடும்பத்தின் பூர்வீக வீடும் அவரது தந்தையாரின் நினைவுத்தூபியும் அடித்து நொருக்கப்பட்டு எரிக்கப்பட்டன. அத்துடன் பல முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், அரசு ஆதரவு எம்.பி.க்கள், மாகாண சபை உறுப்பினர்களின் வீடுகளும் எரியூட்டப்பட்டன.

தன்னைச்சுற்றி நரகத்தை தாமே அழைத்துவந்து அந்த நரகத்திலிருந்த முட்களினாலேயே குத்தப்பட்டுள்ளார் ஐம்பது ஆண்டு கால அரசியல் அனுபவம் பெற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி – முன்னாள் பிரதமர்.

இதனைத்தான் சமூகம் நரகத்து முள்ளு என்று வர்ணிக்கிறதோ..?

குறிப்பிட்ட பேறை ஆற்றில் அந்த ரவுடிக்கும்பலை தள்ளிவிழுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள், அவர்களை நோக்கி அப்படியே அம்பாந்தோட்டைக்கு நீந்திச்சென்று கரையேறி தப்பிச்செல்லுங்கள் எனவும் சொல்லும் காட்சிகளும்  காணொளிகள் மூலம்  பதிவாகி உலகெங்கும் வைராலாக பரவியிருக்கிறது.

அவ்வாறு தூண்டப்பட்ட குழப்பகாரர்களில் சிலர் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட கைதிகள் என்ற செய்தியும் கசிந்துள்ளது.

சிறைக்கைதிகள் நீதியான முறையில் நடத்தப்படவேண்டும் என்பதும் நீதிமன்றங்களின் கட்டளை என்பது கூட சட்டம் படித்தவருக்கு தெரியாதா..?

1983 கலவரத்தின்போது  வெலிக்கடைச்சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதிகள்,  கொடிய குற்றங்களுக்காக கைதாகி சிறை வைக்கப்பட்ட சிங்களக் கைதிகளினால் தாக்கிக் கொல்லப்பட்ட கறை படிந்த வரலாறு, தற்போது அதே திசையில் அதே சமூகத்திற்கு எதிராக திரும்பியிருக்கிறது.

அரைநூற்றாண்டு கால அரசியல் அனுபவம் மிக்க மகிந்த ராஜபக்‌ஷ,   தனது பிரதமர் பதவியை பிழையான முன்னுதாரணங்களின் மூலம்  இழந்து செல்கின்றார்.

அவரது அரசியல் வாழ்க்கை, இதர அரசியல் தலைவர்களுக்கும் பாடமாகத்திகழும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் அவமானத்துடன் பதவி விலகிச்செல்லும் ஒரு தலைவராகவும் அவர் திகழ்ந்திருக்கிறார்.

நெருக்கடிகள் தொடங்கியதும், அவரும் அவரது பாரியாரும் பெளத்த ஆலயங்கள் சென்று வழிபட்டு பிராயச்சித்தமும் தேடினார்கள்.

அதே அலரிமாளிகையின் முன்பாகத்தான் மகிந்தரின்  அரசினால் காணாமலாக்கப்பட்ட சிங்கள ஊடகவியாளர் பிரகீத் எக்னெலிகொடவின்  மனைவி சந்தியா எக்னலிகொட  கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து சாபமிட்டார்.

அதன்பின்னர் மகிந்தர் பதவிக்கு வந்தகாலத்தில் அங்கே தங்குவதை நிறுத்தியிருந்தார் என்பது பரகசியம்.  அந்த மாளிகையில் காவல் கடமைக்கு நின்ற ஒரு இராணுவ சிப்பாயும் தனக்குத்தானே சுட்டு தற்கொலையும் செய்துகொண்டார் என்பது பழைய செய்தி.

அத்தகைய  “ சிறப்புகளை “  பெற்றிருந்த மாளிகையிலிருந்து மகிந்த ராஜபக்‌ஷ வெளியேறியிருக்கிறார்.

ஆடிய ஆட்டம் என்ன…?  பேசிய வார்த்தை என்ன….?
தேடிய செல்வம் என்ன…?  திரண்டதோர் சுற்றம் என்ன…?

---0---

No comments: