எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு 1988 – 1989 இல் மெல்பனில் தொடங்கிய கையொப்பம் திரட்டும் இயக்கம் அங்கம் - 13 முருகபூபதி


குடும்பங்களில் சமூகங்களில் நாட்டில், நாடுகளில் ஒற்றுமை குலைந்தால் அதனால் பாதிப்பு அனைவருக்கும்தான். அதனால்தான் எமது முன்னோர்கள்,   “  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு  “ எனச் சொல்லிவைத்தார்கள்.

முரண்படுகின்ற அனைவரையும் ஒற்றுமைப்படுத்துவது கடினம்தான். ஆனால், ஒற்றுமைப்படக்கூடிய சந்தர்ப்பங்களை சரியாகப்  பயன்படுத்திக்கொண்டு, அந்த சந்தியிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி ஆரோக்கியமாக பயணிக்கலாம்.

அன்று 1988 இறுதியில் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு


காணாமலாக்கப்பட்ட  தமிழ் அகதிகள் புனர் வாழ்வுக் கழகத்தின் நிறுவனர் சட்டத்தரணி கே. கந்தசாமிக்கான நினைவுக்கூட்டம் முடிந்தவுடன் இலங்கையில் ஆயுதம் ஏந்தி போராடப் புறப்பட்ட அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் அனுப்பும் பகிரங்க மடலை தயார் செய்து ஊடகங்களுக்கு அனுப்பினேன்.

அதனை மெல்பனில் 3 E A  வானொலியில் ஒலிபரப்புவதற்காக  ‘சோமா’  சோமசுந்தரம் அண்ணனுக்கும் அனுப்பினேன். ஆனால், அவர் அதனை ஒலிபரப்பவில்லை. அவர் அச்சமயம் சூழ்நிலையின் கைதியாகவே விளங்கினார்.

எனினும்,  வீரகேசரி நாளிதழ் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி, அதன் 10 ஆவது பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

அதற்கு வீரகேசரி இட்டிருந்த தலைப்பும் – உப தலைப்பும்:

 “ தமிழ் இயக்கங்கள் ஒன்றையொன்று அழிப்பதை நிறுத்தவேண்டும்.  

மெல்போர்ன் கையெழுத்து சேகரிப்பு இயக்கம் கோரிக்கை

இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய தமிழ் இயக்கங்கள் திசை தவறிய வழியில் சென்று ஒன்றையொன்று அழிப்பதிலேயே சிரத்தை காட்டுவதை கண்டித்து, மேற்படி இயக்கங்களின் மத்தியில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் வலியுறுத்துமுகமாக சகல இயக்கங்களையும் கோரும் அறிக்கையில் தமிழ்பொது மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கும் இயக்கம் ஒன்று அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகியுள்ளது.


அவுஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தின் தலைநகரமான மெல்போர்ன் நகரில் ஆரம்பமான இந்த இயக்கம், ஏனைய மாநிலங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள இலங்கைத் தமிழர்களான டாக்டர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட பொதுமக்கள் மத்தியில் இந்த கையொப்பம் சேகரிக்கும் இயக்கம் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் மாகாணங்களில் மக்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ மாகாணசபை அமைப்பு முறை நிருவாகம் தோன்றக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கும் அதேசமயம், தமிழ்மக்களின் விடிவுக்காக இதுகாலவரையில் போராடி உயிர்த்தியாகங்கள் புரிந்த தமிழ் இயக்கங்கள், தமது குறுகிய அரசியல் நோக்கங்களை ஈடேற்றுவதற்காக தொடர்ந்தும் அழிவுவாதப்பாதையில் செல்வது கண்டிக்கத்தக்கது. என்று குறிப்பிடப்பட்டுள்ள அவ்வறிக்கை பத்திரிகைகளின் ஊடாக சகல தமிழ் இயக்கங்களின் கவனத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கையொப்பம் சேகரிக்கும் இயக்கம் முடிவடைந்ததும் குறிப்பிட்ட கையொப்பங்களுடன் இந்த அறிக்கை தமிழ் ஈழவிடுதலைப்புலி இயக்கத்தலைவர் திரு. பிரபாகரன், ஈ.பி.ஆர், எல். எஃப் . இயக்கத்தலைவர் திரு. பத்மநாபா, ஈரோஸ் இயக்கத்தலைவர் பாலகுமார், டெலோ இயக்கத்தலைவர் திரு. செல்வம், புளட் இயக்கத்தலைவர் திரு. உமா மகேஸ்வரன்,          ஈ. என். டி.  எல். எஃப். இயக்கத்தலைவர் திரு. மு. கனகராஜன் உட்பட சகல இயக்கத்தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

ஆறு அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகள் அடங்கிய இவ்வறிக்கையில் மேலும் சொல்லப்பட்டிருப்பதாவது:

01.  தமிழ் இயக்கங்கள் ஓரணியில் திரளுங்கள்.

02.  பழிவாங்கும் செயல்களை நிறுத்துங்கள்

03. பொது எதிரியை இனம்கண்டு, ஒற்றுமையை பேணுங்கள்.

04. தமிழர் பிரதேசங்களில் புனரமைப்புக்கு வழிகோலுங்கள்.

05.  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வு வழங்குங்கள்.

06. கடத்தல், படுகொலைகளை நிறுத்தி மரணபயத்தை நீக்குங்கள்.

 

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்துள்ள


வேளையில்  தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் குறைந்தபட்ச உரிமையுடனாவது தமிழினம் நிம்மதியாக வாழ வழிவகுக்கத்தக்க விதத்தில் இடைக்காலத்தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாணசபை அமைப்பு முறை அமுல்படுத்தப்பட்டபோதிலும் இன்னமும் தமிழ் மக்கள் மரணபீதியுடனேயே வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதையிட்டு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.

 

வேடிக்கை பார்க்கத்தயாரில்லை

 

பெறுமதியான உயிர் அழிவுகள் முற்றுப்பெறாமல் இயக்க மோதல்களினால், எதிர்நோக்கப்படும் பேராபத்தை கண்டு, மௌனமாக வேடிக்கை பார்ப்பதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத்தமிழர்கள் தயாரில்லை.


தமிழ் மாகாணங்களில் மக்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ மாகாண சபை அமைப்பு முறை நிருவாகம் தோன்றக்கூடிய சூழ்நிலை உருவாகியிருப்பதை கவனத்தில்கொள்ளும் அதே வேளையில், தமிழ் மக்களின் விடிவுக்காக இதுகாலைவரையில் போராடி உயிர்த்தியாகங்கள் புரிந்த தமிழ் இயக்கங்கள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை ஈடேற்றுவதற்காக தொடர்ந்தும் அழிவுவாதப்பாதையில் செல்வது கண்டிக்கத்தக்கது.

உரிமைக்காக போராடி ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து பரிதவிக்கும் தமிழினம் இப்பொழுது நிம்மதி பெருமூச்சுக்காக காத்திருக்கிறது.

பொது எதிரி யார்..? என்பதை இனம்காணாமல், ஒரு மண்ணில் பிறந்த சகோதரர்கள் இளம் தளிர்கள் குரோத உணர்வுகளுடன் ஆட்கடத்தல் , பணயம் படுகொலை உட்பட பல இனவிரோத செயல்களில் ஈடுபட்டு மக்களை தொடர்ந்தும் மரணபீதிக்கு ஆளாக்க வழிவகுப்பது புத்திபூர்வமான செயல் அல்ல.

காலத்தின் தேவை 

இதுவரையில் நிகழ்ந்தவற்றின் பெறுபேறுகளை தமிழ் இயக்கங்கள் கவனத்தில்கொள்வது காலத்தின் அவசியத் தேவையாகவுள்ளது.

நடந்தவைகள் நடந்தவைகளாகவும் இனி நடக்கவிருப்பவை நல்லவைகளாகவும் அமையவேண்டும் எனவும் தமிழினம் எதிர்பார்க்கிறது.  

குறிப்பிட்ட இந்த அறிக்கையை கையால் எழுதி பல பிரதிகள் எடுத்து


நான் செல்லும் இடம் எங்கும் காண்பித்தும் வாசித்துக்காட்டியும் கையொப்பங்கள் சேகரித்தேன்.

நண்பர்கள்   திவ்வியநாதன்,  தருமகுலராஜா, நடராசா ஶ்ரீஸ்கந்தராசா ஆகியோர்  அன்றைய கோடைகாலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிக்கட் விளையாட்டுகளை ஒழுங்கு செய்வார்கள். அங்கெல்லாம் சென்று மைதானத்தில் கையொப்பம் திரட்டினேன்.  சிட்னிக்கும் சென்று ஒப்பங்கள் பெற்றேன்.

அதில் கையொப்பம் வைத்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களின் சில பெயர்கள் : பேராசிரியர் எலியேஸர், திருமதி ராணி எலியேஸர், சட்டத்தரணி செ. ரவீந்திரன், துரைராஜா ஸ்கந்தகுமார்,  எழுத்தாளர்கள் எஸ். பொன்னுத்துரை, நடேசன், ரேணுகா தனஸ்கந்தா, அருண். விஜயராணி, கணக்காளர் எஸ்.  துரைசிங்கம், மருத்துவர் இராசநாயகம். பலரதும் கையொப்பங்களுடன்  அந்த அறிக்கையை  இலங்கை, இந்திய ஊடகங்களுக்கும் அனுப்பியிருந்தேன்.  அனைத்திந்திய ( All India radio ) வானொலியும்  அதனை ஒலிபரப்பியதாக செவிமடுத்தவர்கள் சொன்னார்கள். 

ஆனால், என்ன பலன் கிட்டியது..?

ஏற்கனவே தமிழ்நாட்டில் பிரபாகரனும் பத்மநாபாவும் ஶ்ரீசபாரத்தினமும் பாலகுமாரும் கைகோர்த்து நின்றவர்கள்தான். அதில் உமா மகேஸ்வரன் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

கொலைகள் தொடர்ந்தன.  மாறி மாறி சகோதரப் படுகொலைகள்


நடந்தன. பொது எதிரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உமா மகேஸ்வரன் அதே ஆண்டு அதே மாதம் 16 ஆம் திகதி கொழும்பில் புறநகரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பத்மநாபா 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி சென்னை கோடம்பாக்கத்தில் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மேலும் சிலரும் கொல்லப்பட்டனர். இதில் பெண்களும் அடங்குவர்.

பிரபாகரன் 2009 மே மாதம் இறுதிப்போரில் கொல்லப்பட்டார்.

வே. பாலகுமார் அதே மாதம் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போனார்.

சி. புஸ்பராசாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்,            சி. புஸ்பராணியின் அகாலம், கணேசன் ஐயர் எழுதிய ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள், நடேசனின் எக்ஸைல், கோவிந்தனின் புதியதோர் உலகம், சாத்திரியின் ஆயுத எழுத்து,  சபாலிங்கம் நண்பர்கள் வட்டம் வெளியிட்ட தோற்றுத்தான் போவோமா…?  ரகுமான் ஜான் தொகுத்திருக்கும்  ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சினைகள், தோழர் விசுவானந்த தேவன்                     ( 1952 – 1986 )   முதலான  பல நூல்கள் 1988 இற்குப்பின்னர் இற்றை வரையில்  வௌியாகிக்கொண்டிருக்கின்றன.

இவற்றிலிருந்தும்  தமிழின விடுதலைக்காக புறப்பட்டவர்களினால் நடத்தப்பட்ட சகோதரப்படுகொலைகளை ஈழத்தமிழ் மக்களும் புகலிடத்தில் வாழும் தமிழர்களும்  தெரிந்துகொள்ளமுடியும்.

1987 முதல் 1989 வரையில் புகலிட நாட்டில் மனவிரக்தியோடு அந்தக்கொடுமைகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுத்தான்,  எனக்குள் ஒரு முடிவுக்கு வந்தேன்.

எங்கள் ஊரில் ஒரு பெரியவர் அடிக்கடி சொல்லும் வசனம் நினைவுக்கு வந்தது.  அவர் இறுதிக்காலத்தில் சித்தன்போன்று பிதற்றிக்கொண்டு நடமாடினார். அவர் பற்றி சித்தன் என்ற தலைப்பில் ஒரு புனைவுசாரா பத்தி எழுத்தும் பின்னாட்களில் எழுதியிருக்கின்றேன்.

அவர் அடிக்கடி சொல்லும் வசனம் :  “ ஆணவம் மிஞ்சினால், கோவணமும் மிஞ்சாது. 

எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் !

ஒரு கட்டத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அரசியல் தேவை கருதி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை உருவாக்கினார். அது அவர் உயிரோடு இருக்கும் வரையில் நன்றாகத்தான் இருந்தது.

அவர் மறைந்தபின்னர் தற்போதிருக்கும் கூட்டமைப்பின் இலட்சணம் பற்றி இங்கே புதிதாக எதுவும் சொல்லத்தேவையில்லை.  

விதி வலியது. விதி எமது தமிழினத்தில் இந்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களிடையே புகுந்து இறுதியில்  நட்டாற்றில் கைவிட்டது.

விரக்தியின் எல்லைக்குச்சென்றால், என்ன நடக்கும் என்பது தெரிந்தமையால்,  எனது கவனத்தை திசைதிருப்பினேன். அவ்வாறு திருப்பிய திசைதான்  1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியம்.

மக்கள் குரல் கையெழுத்துப்பிரதி வெளியாகிக்கொண்டிருந்தது. அதற்கும் எழுதியவாறு,  இலங்கையில் வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளுக்கும் மல்லிகை இதழுக்கும் தொடர்ந்து எழுதினேன்.  அவ்வாறு எழுதப்பட்டவற்றில் சில சிறுகதைகளும் அடக்கம்.

பத்துக்கதைகளை தொகுத்து தமிழ்நாடு தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்திற்கு அனுப்பினேன். 1985 இல் பயணித்த சோவியத் நாடு பற்றிய பயணக்கதையை ( முன்னர் வீரகேசரி வாரவெளியீட்டில் தொடராக வந்தது ) மீண்டும் செம்மைப்படுத்தி எழுதி கொழும்பிலிருந்த நண்பர் எழுத்தாளர் ராஜஶ்ரீகாந்தனுக்கு அனுப்பினேன்.

இரண்டு நூல்களும் வெளிவந்தன.  அவற்றுக்கு கொழும்பிலும் மெல்பனிலும் வெளியீட்டு விழாக்கள் நடந்தன.

சமாந்தரங்கள் தொகுப்பில்,  சமாந்தரங்கள் – வேகம் - அந்நியமற்ற உறவுகள் -  தேர்முட்டி -  மனப்புண்கள் – திருப்பம் – தவிப்பு -  மொழி – ஆண்மை -  புதர்க்காடுகளில்.… முதலான சிறுகதைகள் இடம்பெற்றன. இவற்றில் சில கதைகள் மெல்பன், குவின்ஸ்லாந்து தமிழ் வானொலிகளிலும் ஒலிபரப்பாகியிருந்தன.

செங்கை ஆழியான், எஸ். பொன்னுத்துரை, ரேணுகா தனஸ்கந்தா,  அருண். விஜயராணி, அந்தனி ஜீவா ஆகியோர் இந்நூல்கள் பற்றிய தமது விமர்சனங்களை ஊடகங்களில் எழுதினர்.

சிறுகதைகளை  ஒலிபரப்பிய பேராசிரியர் எலியேஸர், சண்முகநாதன் வாசுதேவன், சமதர்ப்பூங்காவை வெளியிட்டுவைத்த ராஜஶ்ரீகாந்தன், மல்லிகை ஜீவா, செங்கை ஆழியான், எஸ். பொன்னுத்துரை, அருண். விஜயராணி ஆகியோர் மறைந்துவிட்டனர். அவர்களையும்  நினைத்துக்கொண்டே இந்தப்பதிவையும் எழுதுகின்றேன்.

தமிழின விடுதலை இயக்கங்களை ஒன்றிணைக்க மேற்கொண்ட முயற்சியில் தோல்வி கண்டதையடுத்து, படைப்பிலக்கியத்திலும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பிலும் விக்ரோரியா தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் முதலானவற்றின்  செயற்பாடுகளிலும் எனது கவனத்தை செலுத்தினேன்.

( தொடரும் )

 

 

 

No comments: