தோழர் லீனஸ் ஜயதிலக்க ( 1942 – 2022 ) நினைவுகள் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுத்தவரின் குரல் ஓய்ந்தது ! முருகபூபதி


தனது வாழ்நாளில் பெருவாரியான நேரத்தை உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும்,  முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதற்காகவும் செலவிட்ட தோழர் லீனஸ் ஜயதிலக்க மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தபோது, அவர் குறித்த நினைவுகளே மனதில் தோன்றின.  

லீனஸ்  தொடக்கத்தில் கத்தோலிக்க மதத்தில் அருட். சகோதரராக தனது மறை சார்ந்த  இறைபணியில்  ஈடுபட்டவர். பின்னர்  மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசுகள் ஈடுபடத் தொடங்கியதும், மறை சார்ந்த திருப்பணிகளை விட்டுவிட்டு,  மனித உரிமை சார்ந்த பணிகளுக்காக தெருவில் இறங்கியவர்.

அவரை 1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதல் முதலில் சந்தித்தபோது,  மனித உரிமைப் போராளியாகத்தான் அறிமுகமானார்.

லங்கா சமசமாஜக்கட்சியின் ஆதரவாளராக அவரை எங்கள்


நீர்கொழும்பூரில் அதன் கிளைக் காரியாலயத்தில்தான் சந்தித்தேன்.  வாசுதேவ நாணயக்காரவும், விக்கிரமபாகு கருணாரத்தினவும் அக்கட்சியிலிருந்து வெளியேறி, நவசமசமாஜக்கட்சியை உருவாக்கியபோது, லீனஸ் ஜயதிலக்கவும் அதில் இணைந்தார்.

1971  ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் மக்கள் விடுதலை முன்னணி தொடங்கிய கிளர்ச்சியினால் அதன் முன்னணித் தலைவர்களான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே,  உபதிஸ்ஸ கமநாயக்க, உட்பட நூற்றுக்கணக்கான தோழர்கள்  கைதாகி சிறையிலிருந்தனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு குற்றவியல் ஆணைக்குழுவின் சார்பாக நீதியரசர் அலஸ் முன்னிலையில் பல மாதங்கள் நடந்தன. அதனைப் பார்ப்பதற்கு தொடர்ச்சியாக வந்தவர்கள் இருவர். அதில் ஒருவர் ரணசிங்க பிரேமதாச, மற்றவர்தான் லீனஸ் ஜயதிலக்க.

கதிர்காமத்தில் குறிப்பிட்ட 1971 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பிரேமவதி மனம்பேரி தொடர்பாக பல செய்திகளை உள்வாங்கிக்கொண்ட பிரேமதாச, 1977 பொதுத் தேர்தல் மேடைகளில்  மனம்பேரி காவியம் பேசிப் பேசியே தனக்கும் தனது ஐக்கிய தேசியக்கட்சிக்கும் வாக்கு வங்கியை பெருக்கிக்கொண்டார்.

ஒரு பெண் ( ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா ) பதவியிலிருந்தபோது புனித நகரமான கதிர்காமத்தில் மற்றும் ஒரு பெண்ணுக்கு ( மனம்பேரி ) நடந்த கொடுமை பற்றியே பிரேமதாச ஊர்கள் தோறும் சென்று பிரசாரம் செய்து பெண்களின் வாக்குகளை சேகரித்தார்.

ஆனால், அக்காலப்பகுதியில் சிறைகளில் வாடிய அரசியல் கைதிகளுக்காக அவர் குரல் கொடுக்கவில்லை.


தோழர் லீனஸ் ஜயதிலக்க அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்ற இயக்கத்தை  1976 இல் ஆரம்பித்தார்.

1970 இல்  பதவிக்கு வந்த  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின்  தலைமையில் அமைந்த  ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சி,  சமசமாஜக்கட்சி,  கம்யூனிஸ்ட் கட்சி  கூட்டரசாங்கத்தின் தேன்நிலவுக்காலம்  அதே 1976  ஆம் ஆண்டில்  அஸ்தமித்துக்கொண்டிருந்தது. அதற்குப்பல  காரணங்கள் இருந்தன. 

தொழிற்  சங்கங்களின்  வேலை நிறுத்தப்போராட்டத்தில் இன்றும் முன்னணியில் திகழும்  இலங்கை ஆசிரியர் சங்கமும் குதித்தது.  அத்துடன் 1971 இல்  நடந்த  ஏப்ரில் கிளர்ச்சியில்  பங்கேற்று  குற்றவியல் நீதி ஆணைக்குழுவின்  தீர்ப்பின் பிரகாரம்  சிறைகளில்                        தண்டனை  அனுபவித்துக்கொண்டிருந்த ரோகண  விஜேவீரா, லயனல்போப்பகே   உட்பட நூற்றுக்கணக்கான  இளைஞர்களை  விடுதலை  செய்யக்    கோரும்  ஆர்ப்பாட்டங்களும்  கையொப்பங்கள்  திரட்டும்          இயக்கமும்   தொடங்கியது.  அதனை முன்னின்று ஒழுங்கமைத்தவர்  தோழர் லீனஸ் ஜயதிலக்க.

இலங்கை ஆசிரியர் சங்கம் அப்போது கொழும்பு – கொம்பனித்தெரு


மலே வீதியில் கல்வி அமைச்சிற்கும் பரீட்சைத் திணைக்களத்திற்கும் அருகில் இயங்கியது.  அந்த வீதியில்தான் அக்காலப்பகுதியில் சில இடதுசாரி தொழிற்சங்கங்களும் இயங்கின.

இலங்கை ஆசிரியர் சங்கப்பணிமனையில் காலை முதல் மாலை வரையில் இருந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரும் பிரசுரங்களை தயார் செய்தல், சுவரொட்டிகளை எழுதுதல் முதலான பணிகளை தோழர் லீனஸ் அர்ப்பணிப்புடன் மேற்கொள்வார்.

அவர் தயாரித்த பிரசுரத்தில்  கையொப்பம் இட்டவர்களின் கூட்டம்  ஆசிரியர் சங்க பணிமனைக்கு அருகில் ஒரு கட்டிடத்தில் நடந்தது.

அந்த ஆண்டு ( 1977 ) ஏப்ரில் மாதம் 27 ஆம் திகதி   மாலை கொழும்பு ஹயிற்பார்க்கில்   மாபெரும் கூட்டம் ஏற்பாடு செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் அது.

அதில் கலந்துகொண்டவர்கள்:

குமாரி ஜயவர்தனா, என். சண்முகதாசன், பிரின்ஸ் குணசேகரா, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தனா, இந்திகா குணவர்தனா, நந்தா எல்லாவல,  மகிந்த விஜேசேகர, விக்கிரமபாகு


கருணாரத்ன, ரெஜி ஶ்ரீவர்தன, கார்லோ பொன்சேக்கா, டீ. ஐ. ஜி. தர்மசேகர, சுனிலா அபேசேகர, உட்பட பலர்.  அதில் கலந்துகொண்டு நானும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கையொப்பம் இட்டேன்.

எம்மையெல்லாம் அன்று அழைத்த ஒருங்கிணைப்பாளர்தான் தோழர் லீனஸ் ஜயதிலக்க.

அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அப்போது அங்கம் வகித்திருந்தனர்.

கொழும்பு ஹயிற்பார்க்  கூட்டத்தை தொடர்ந்து தென்னிலங்கையெங்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கூட்டங்கள் நடத்தினோம்.  கையொப்பம் சேகரித்தோம்.

எமது நீர்கொழும்பு கூட்டத்திற்கு தோழர்கள் சண்முகதாசன்,  லெஸ்லி குணவர்தனா, வாசுதேவ நாணயக்கார ஆகியோரையும்  லீனஸ் அழைத்திருந்தார்.

நாடாளுமன்றத்தில்  பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவை  கலாநிதி என். எம். பெரேரா  ‘சாத்தான்’  என்று விமர்சிக்கும் அளவுக்கு  முரண்பாடுகள்  முற்றியதன்       எதிரொலியே   அந்த                 கூட்டரசாங்கத்தின் வீழ்ச்சி.  1977 பொதுத்தேர்தலில்  இடதுசாரிகள்  ஐக்கிய  முன்னணி                  அமைத்து தேர்தல் களத்தில் இறங்கினார்கள். லீனஸ் ஜயதிலக்கவும் இந்த முன்னணிக்காக களத்தில் இறங்கினார்.

எனினும் 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில்  அனைத்து இடது சாரிகளும் தோல்வி கண்டனர். அதனால் தோழர் லீனஸ் துவண்டுவிடவில்லை. தொடர்ந்தும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற அறப்போராட்டத்தில் முன்னின்று குரல் எழுப்பிக்கொண்டேயிருந்தார்.

ஜே. ஆர். ஜயவர்தனா  தலைமையில் அறுதிப்பெரும்பான்மை  பெற்ற  ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைத்தது.  அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானார். 1977 இல் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக குற்றவியல் நீதி ஆணைக்குழுவை                       ( Criminal Justice  Commission  )  இரத்துச்செய்த    ஜே.ஆர்.,  சிறையிலிருந்த அனைத்து அரசியல் கைதிகளையும்  விடுதலை  செய்தார்.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனா, தன்னிடமிருந்த நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகித்து அன்று அதனைச்செய்தார்.

அன்று 1977 இல் சிறையிலிருந்த சிங்கள அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரும் மனுவில் தமது கையொப்பங்களை இட்ட சிலர், பின்னர்  வந்த அரசுகளில் அமைச்சர்களானார்கள்.

ஆனால்,  எந்த அரசுப் பதவிகளுக்கும் செல்லாமல் இறுதிவரையில்  தொழிற்சங்கங்களிலும் மனித உரிமை அமைப்புகளிலுமிருந்து  குரலற்றவர்களுக்காக குரல் கொடுத்தவர்தான் தோழர் லீனஸ் ஜயதிலக்க.

1978 இல்  ஜே.ஆரின் ஆட்சியில் சிங்கள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.  1983 நடுப்பகுதியில் அதே  ஜே.ஆரின் ஆட்சியில்தான் வெலிக்கடை சிறையிலிருந்த  ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த அவலங்களையும்  பார்த்து கடந்துசென்றவர்தான் லீனஸ் ஜயதிலக்க.  பழகுவதற்கு எளிமையானவர்.  இனிய சுபாவங்களை கொண்டிருந்தவர்.  மூவின தொழிற்சங்கவாதிகளினாலும் தொழிலாள வர்க்கத்தினாலும்  நேசிக்கப்பட்டவர்.

இறுதிவரையில் அரசியலில் சோரம் போகாமல்  மனித உரிமை செயற்பாட்டாளராகவே இயங்கி மறைந்திருக்கும் அவருக்கு எமது இதய அஞ்சலி.

---0--

No comments: