ஸ்வீட் சிக்ஸ்டி 14 - படித்தால் மட்டும் போதுமா - ச சுந்தரதாஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,இயக்குனர் பீம்சிங் கூட்டில் 1962ம் ஆண்டு நான்கு திரைப் படங்கள் வெளிவந்தன.அவ்வாறு வெளிவந்த படங்களுள் மூன்று வெற்றி கண்டன.அதில் ஒன்றுதான் படித்தால் மட்டும் போதுமா .


சிவாஜியின் ஆடை அமைப்பாளராக பணியாற்றியவர் பி ராமகிருஷ்ணன்.இவருக்கு படத் தயாரிப்பாளர் ஆகும் அதிர்ஷ்ட்டம் சிவாஜி மூலம் கிட்டியது.சிவாஜியின் நிதியுதவி மூலம் உருவான இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு பீம்சிங்கிற்கு கிடைத்தது.பொதுவாகவே இவர் இயக்கும் படங்களில் இரண்டு கதாநாயகர்கள் காணப்படுவார்கள்.பெரும்பாலும் அது சிவாஜி,ஜெமினியாகவே அமையும்.அந்த அடிப்படையில் இந்தப் படத்துக்கும் சிவாஜியுடன் நடிப்பதற்கு ஜெமினியை அணுகினார்கள்.ஆனால் படத்தின் கதையைக் கேட்ட ஜெமினி அதில் நடிப்பதற்கு மறுத்து விட்டார்.

ராஜு,கோபால் இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள்.ஆனால் ஒருவர் மீது ஒருவர் பாசத்தை பொழிபவர்கள்.ராஜு படித்த பட்டதாரி.கோபாலோ படிக்காதவன்.திருமணத்துக்காக கோபாலுக்கு பார்த்திருக்கும் படிக்காத பெண் சீதாவை ராஜுவும்,அவனுக்காக பார்த்திருக்கும் படித்த பெண்ணான மீனாவை கோபாலும் பார்க்கப் போகிறார்கள்.சீதாவின் குடும்பப் பாங்கைப் பார்க்கும் ராஜு அவளையே மணக்க விரும்புகிறான்.தன் எண்ணத்தை நிறைவேற்ற விபரீத காரியம் ஒன்றில் ஈடுபடுகிறான்.தன்னைப் பற்றியே மோசமாக ஒரு மொட்டைக் கடிதத்தை எழுதி மீனாவின் தந்தைக்கு அனுப்புகிறான்.அதனைப் பார்த்து நம்பிவிடும் மீனாவின் தந்தை,மீனாவை பெண் பார்க்க வந்த கோபாலுக்கே அவளை மணம் முடித்து வைக்க முடிவு செய்கிறார்.கோபால் படித்தவன் என்று எண்ணும் மீனாவும் அதற்கு சம்மதிக்கிறாள்.அமைதியே உருவான சீதா ராஜூவை மணக்க உடன்படுகிறாள்.கல்யாணத்துக்கு பின் கோபால்,மீனா உறவில் கல்வித் தகமை காரணமாக விரிசல் ஏற்படுகிறது.எல்லாவற்றிக்கும் காரணம் படிக்காத கோபால் தான் என்று அனைவரும் நம்புகிறார்கள்.கோபாலோ வேதனையில் துடிக்கிறான்.கடிதத்தை எழுதியவன் தன் பாசத்துக்குரிய அண்ணன் என்று அறிய வரும் போது குமுறுகிறான்.

இப்படி அமைந்த படத்தின் கதை வங்காள நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.அதற்க்கான வசனங்களை ஆரூர்தாஸ் எழுதினார்.பல இடங்களில் அவரின் திறமை வெளிப்பட்டது.அந்த வசனங்களை அருமையாக பேசி சிவாஜி,கண்ணாம்பா,சகஸ்ரநாமம்,சாவித்ரி ஆகியோர் பல இடங்களில் ஸ்கோர் பண்ணினார்கள்.இவர்களுடன் பாலாஜியும் இணைந்திருந்தார்.எம் ஆர் ராதா இல்லாதப் படமே இல்லை என்பது போல் இந்தப் படத்திலும் அவர் இருக்கிறார்.கல்யாண புரோக்கர் கைலாசம் என்ற நல்லவர் வேடம் அவருக்கு!இவர்களுடன் ரங்காராவ்,எம் வீ ராஜம்மா,ஏ கருணாநிதி,மனோரமா,சி கே சரஸ்வதி,ஆகியோரும் நடித்தனர்.




படத்தில் எல்லோரும் நடித்த போதும் சிவாஜியின் நடிப்பே படம் முழுவதும் வியாபித்திருந்தது.அண்ணனிடம் பாசத்தை காட்டும் போதும்,தந்தையிடம் சுடு சொற்களை கேட்கும் போதும்,மனைவியிடம் அவமானப்படும் போதும்,இறுதியில் உண்மை தெரிந்து வெடிக்கும் போதும் தன் நடிப்பால் உயர்கிறார் நடிகர் திலகம்.நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை பாடலில் அவர் காட்டும் பாவனை அருமை.சாவித்திரி அமைதியாக வருகிறார் என்றால் படித்த பெண்ணாக வரும் ராஜசுலோச்சனா தன் ஏமாற்றத்தை,ஆத்திரத்தை நன்கு காட்டுகிறார்.

விஸ்வநாதன் ,ராமமூர்த்தி , கண்ணதாசன் வெற்றி இணைவு இந்தப் படத்திலும் தொடர்ந்தது.பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை பாடல் டி எம் எஸ்,பி பி ஸ்ரீனிவாஸ் குரலில் ரசிகர்களை வசியம் செய்தது.அதே போல் நல்லவன் எனக்கு நானே நல்லவன்,ஓஓ ஓஒ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்,காலம் செய்த கோமாளித்தனத்தில் உலகம் பிறந்தது பாடல்கள் இனிமையாக ஒலித்தன.அண்ணன் காட்டிய வழி அம்மா இது அன்பால் விளைந்த பழி அம்மா பாடல் ரசிகர்களை உருக்கியது.கவிஞர் மாயவனாதன் இயற்றிய தன் நிலவு தேன் இரைக்க பாடல் சுசிலாவின் குரலில் மனதை வருடியது.



ஜி விட்டல்ராவ் படத்தை ஒளிப்பதிவு செய்ய,பால் துரைசிங்கம் படத் தொகுப்பை கவனித்துக் கொண்டார்.

படத்தின் முடிவில் நீதிமன்ற காட்சியில் சாட்சி சொல்லும் சீதா தன் கணவனை கொன்றது கோபால் என்று சொல்ல நினைத்து,பின்னர் மீனாவும் அதனால் விதவை ஆகக் கூடும் என்று ஒரு கணம் மனதில் எண்ணி தன் சாட்சியத்தை கூறும் காட்சியில் பீம்சிங்கின் டைரக்க்ஷன்
திறமை பளிச்சிட்டது.

படத்தில் நடிக்க ஜெமினி ஏன் மறுத்தார்!கதையின் படி சீதாவாக நடிக்கும் சாவித்திரியை மொட்டை கடிதம் எழுதி ஏமாற்றி தான் மணப்பதாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற அச்சத்தினாலேயே அவர் நடிக்க மறுத்தார்.அனால் தனக்கு பதில் அவ் வேடத்தில் நடிக்க பாலாஜியை அவரே ரெகமெண்ட் செய்தார் . இந்த படத்தில் நடித்ததன் மூலம் பாலாஜிக்கு ஒரு திருப்புமுனை கிடைத்தது.படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.



No comments: