மகாபாரதக் கதையை வியாசர் முதல் ஜெயமோகன் வரையில் பலரும் எழுதியிருக்கின்றனர். ஜெயமோகன் வெண்முரசு என்னும் தலைப்பில் ஆயிரக்கணக்கான பக்கங்களில் தொடர்ந்து எழுதினார்.
2014 ஆம் ஆண்டில்
விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து வீடு திரும்பியதும், தனது குழந்தைகளுக்கு மகாபாரதக் கதையைச் சொல்லி,
அதில் வரும் பாத்திரங்களின் இயல்புகளையும் விபரித்திருக்கிறார்.
அவர் கதைசொல்லும்
பாங்கினால் உற்சாகமடைந்த அவரது குழந்தைகள், " அப்பா, இந்தக்கதையையே இனி எழுதுங்கள்."
என்று வேண்டுகோள் விடுத்ததும், அவர் அன்றைய
தினமே மகாபாரதக்கதைக்கு வெண்முரசு என்று
தலைப்பிட்டு ஒவ்வொரு பாகமும் சுமார் 500 பக்கங்கள்
கொண்டிருக்கத்தக்கதாக எழுதினார்.
குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரையில் விரும்பிய காவியம்தான் மகா பாரதம்.
இலங்கையில் ஒரு காலகட்டத்தில் மாணவர்களுக்கும்
குழந்தைகளுக்கும் மகா பாரதக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்த இரத்தினம் சிவலிங்கம் என்ற இயற்பெயர்கொண்ட மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் நேற்று முன்தினம் 11 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி எம்மை வந்தடைந்தபோது மகாபாரதம்தான் மனக்கண்ணில் தோன்றியது.
இறுதியாக அவரை
கடந்த 2019 ஆம் ஆண்டு எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன்
சென்று பார்த்தேன். அச்சமயம் அவர் சிறுநீரக உபாதையினால் சிகிச்சைக்குட்பட்டிருந்தார்.
தொடர்ந்தும்
அவரை வருத்த விரும்பாத காலன் தற்போது அவரை கவர்ந்து சென்று, நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டான்.
கிழக்கு மாகாணத்தின் கலை இலக்கியப் பாரம்பரியத்திற்கு
நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. யாழ்நூல் தந்த சுவாமி விபுலாநந்தருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே
அந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
இசை, கூத்து,
கல்வி, நாடகம், இலக்கியம், இதழியல் உட்பட பல்வேறு
துறைகளில் சாதனைகள் புரிந்தவர்கள் தோன்றிய மட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாயில் 1933 இல் பிறந்திருக்கும்
மாஸ்டர் சிவலிங்கம் தமது 89 வயதில் வயது
மூப்பின் காரணமாக மறைந்துள்ளார்.
ஏறக்குறைய அரைநூற்றாண்டு
காலமாக சிறுவர்களுக்கு கதைசொல்லும் கலைஞராகத் திகழ்ந்தவர். கவிதை, நாடகம், சிறுவர்
இலக்கியம், வில்லுப்பாட்டு, நகைச்சுவை உரைச்சித்திரம் முதலான துறைகளில் பிரகாசித்தவர்.
அதற்காக பல விருதுகளும் பெற்றவர். சென்னைக் கலைக்கல்லூரியில் கேலிச்சித்திரத் துறையிலும்
பயின்றிருப்பவர்.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை,
பண்டிதமணி வீ. சீ. கந்தையா, கிருபானந்த வாரியார், செல்லையா இராசதுரை ஆகியோரிடத்திலும்
கொழும்பு தமிழ்ச்சங்கம், மட்டக்களப்பு இந்து சமய அபிவிருத்திச்சங்கம் ஆகிய அமைப்புகளிடத்திலும் பாராட்டுப் பட்டங்கள் பெற்றவர். இலங்கை கலாசார அமைச்சின்
விருது, வடகிழக்கு மாகாண அரசின் சாகித்திய
விருது, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருது என்பவற்றையும்
பெற்றவர்.
ஒருகாலத்தில் இவரது ஆற்றல்களை நன்கு இனங்கண்டுகொண்ட புலவர் மணி
பெரியதம்பிப்பிள்ளை, இவரை இலங்கை வானொலி கலையகத்திற்கு
அழைத்துச்சென்று சிறுவர் மலர் நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் வானொலி மாமா சரவணமுத்துவிடம்
அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
"
சிறுவர்களுக்கு நேரில் கதை சொல்லமுடியும். ஆனால், வானொலி ஊடாக சிறுவர்களுக்கு எவ்வாறு
கதை சொல்வீர்...?" என்று அந்த மாமா இவரிடம் கேட்டதும், அங்கிருந்த மாமாவின் பெரிய டயறியை கையில் எடுத்திருக்கிறார் சிவலிங்கம்.
"
அதனை எதற்கு எடுக்கிறீர்....?" மாமா கேட்கிறார்.
" இதிலும் கதை இருக்கிறது" எனச்சொல்லிவிட்டு, டயறியை கையில் வைத்து விரல்களினால் அதில் வெவ்வேறு ஒலி எழும்வகையில் தட்டியிருக்கிறார்.
குதிரை வேகமாக ஓடுகிறது என்று சொல்லி டயறியில் தட்டி குதிரை ஓடும் ஓலியை எழுப்பியிருக்கிறார். பின்னர் இப்பொழுது குதிரை நடக்கிறது எனச்சொல்லி குதிரையின் மெதுவான நடையையும் அந்த டயறியிலேயே மெதுவாகத் தட்டித்தட்டி காண்பித்திருக்கிறார். குதிரையின் கதையையும் சொல்கிறார்.
பல
வருடங்களுக்கு முன்னர் இலங்கை வானொலி கலையகத்தில் வானொலி மாமா இவருக்கு நடத்திய நேர்முகத்தேர்வில்
தான் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டேன் என்பதை இந்த கதைசொல்லிக்கலைஞர் அன்று 2019 இல்
நினைவு மறதியின்றி எம்முன்னே அபிநயத்துடன் ஒரு டயறியில் தட்டி குதிரை ஓடும், நடக்கும்
ஒலியலைகளை எழுப்பி வியப்பில் ஆழ்த்தினார்.
மாஸ்டர்
சிவலிங்கம், வீரகேசரி வாரவெளியீட்டின் சிறுவர்
பகுதியில் மாணவர்களுக்காக மஹா பாரதக்கதையை 57 வாரங்கள்
தொடர்ந்து எழுதியவர். அந்தத்தொடரை பின்னர் மாணவர்கள் விரும்பிப்படிக்கும் வகையில் தனி
நூலாக அழகிய வண்ணப்படங்களுடனும் வெளியிட்டிருக்கிறார். இதுவரையில் இந்த நூல் மூன்று
பதிப்புகளைக்கண்டுவிட்டது.
" தனித்துவத்துக் கொரு
உருவம் மாஸ்டர். நல்ல
தங்குபுகழ்க்கொரு உருவம் மாஸ்டர்.
வல்ல
இனித்தகதைக் கொருஉருவம் மாஸ்டர்.
நீங்கா
எளிமைக்கும் பண்புக்கும் மாஸ்டர்.
நனிபுனைந்த கதைகளெலாம் நூல்களாக
நாம் கண்டு சுவைக்கின்ற நற்பேறுற்றோம்.
இனியென்ன, நீங்களும்தான் வாங்கி
வாங்கி
இனித்தினித்துப் படிப்பதற்கும்
இடையூறுண்டோ...? "
என்று
இந்த நூலை வாழ்த்தி வரவேற்றுள்ளார் கவிஞர்
திமிலைத்துமிலன். மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கதைசொல்லும் ஆற்றல் கைவரப்பெற்று
விளங்கிய மாஸ்டர் சிவலிங்கம், பயங்கர இரவு, அன்பு தந்த பரிசு, உறைபனித் தாத்தா, சிறுவர் கதை மலர்
முதலான நூல்களையும் வரவாக்கியவர்.
ஊடகத்துறையிலும் ஈடுபட்டிருக்கும்
மாஸ்டர் சிவலிங்கம் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகவும்
பணியாற்றியவர். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நேற்றைய தினம் 12 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
அன்னாரின் ஆத்மாவுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.
---0---
No comments:
Post a Comment