இலங்கைச் செய்திகள்

ரணில் தலைமையிலான அமைச்சரவைக்கு ஜனாதிபதியினால் 4 அமைச்சர்கள் நியமனம்

பிரதமர் ரணில் தலைமையிலான அரசின் பங்காளிகளாகமாட்டோம்

அரசில் எந்தவொரு பதவியையும் நான் ஏற்கப்போவதில்லை

மாஸ்டர் சிவலிங்கம் இயற்கை எய்தினார்

தமிழகத்திலிருந்து நிவாரண பொருட்கள் 16இல் வருகிறதுரணில் தலைமையிலான அமைச்சரவைக்கு ஜனாதிபதியினால் 4 அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (14) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார்.

முழுமையான அமைச்சரவையை நியமிக்கும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக முதற் கட்டமாக நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

1. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்: வெளிவிவகாரம்

2. தினேஷ் குணவர்தன: பொது நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள்


3. பிரசன்ன ரணதுங்க: நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

4. கஞ்சன விஜேசேகர: மின்சக்தி மற்றும் வலுசக்தி

நன்றி தினகரன் 

பிரதமர் ரணில் தலைமையிலான அரசின் பங்காளிகளாகமாட்டோம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்காதிருக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானத்துள்ளது.

இது தொடர்பில் இன்று (13) அக்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

தங்களது கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து மேற்கொண்ட கலந்துரையாடலில் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதற்கமைய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்க ஒருபோதும் தயாரில்லை எனவும்,

இதற்கு காரணம், சுமார் 3 மாதங்களாக தாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சர்வ கட்சி அரசாங்கமொன்றையே கோரியதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்,

இதேவேளை, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ள 10 கட்சிகள் குழுவானது எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நியமனமானது ஜனநாயகத்திற்கு முரணான செயலாக இருந்த போதிலும், இலங்கை முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள தங்களால் இயலுமான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆயினும் இந்த அரசாங்கத்தில் எந்தவொரு பதவிகளிலும் தாங்கள் வகிக்கப் போவதில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP), தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (TNA), மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகியன அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிப்பதில்லையென முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 

அரசில் எந்தவொரு பதவியையும் நான் ஏற்கப்போவதில்லை

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்படும் அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாரில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அமைதிப் போராட்டம் நடத்துபவர்களுடன் எந்தவித நிபந்தையுமில்லாமல் தமது ஆதரவை வழங்க தயாராகவுள்ளதாக போராட்டக்காரர்களுடனான பேச்சுவார்த்தை தவிர்ந்த ராஜபக்‌ஷக்களின் நெருக்கடி நிலையை நிவர்த்திசெய்வதற்கு பங்காளியாக செயற்பட தாம் ஒருபோதும் தயாரில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தற்போது பரப்பப்பட்டுவரும் வதந்திகள் மற்றும் விமர்சனங்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் தமது டுவிட்டர் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)  -   நன்றி தினகரன் 

மாஸ்டர் சிவலிங்கம் இயற்கை எய்தினார்

நேற்று அக்கினியுடன் சங்கமம்

மட்டக்களப்பின் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் நேற்று முன்தினம்(11) இயற்கை எய்தினார்.

‘வானொலி மாமா’ என்று பிரபலமாகப் பேசப்படும் மாஸ்டர் இ.சிவலிங்கம், வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சிறுவர்களுக்கான கதை கூறுதலை ஓயாது முன்னெடுத்து வந்துகொண்டிருந்த கலை ஆளுமையாவார்.

இலங்கையில் சிறுவர்களுக்கு கதைகூறுவதில் விசேட தன்மையினைக்கொண்டிருந்தவரும் மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் மாஸ்டர் சிவலிங்கம் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லடியை சேர்ந்த இவர் சிறுவர்களுக்கு கதைகள் கூறுவதில் பிரபல்யம்பெற்றவராகவும் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பல்திறமைக்கலைஞராகவும் திகழ்ந்துவந்தார்.

காலமான மாஸ்டர் சிவலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் கல்லடியில் உள்ள இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்று கல்லடி உப்போடை இந்து மயானத்தில் மாலை 4.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.    நன்றி தினகரன் 

 தமிழகத்திலிருந்து நிவாரண பொருட்கள் 16இல் வருகிறது

முதற்கட்டமாக அரிசி மற்றும் மருந்து வகைகள்

இலங்கைக்கு தமிழகத்திலிருந்து எதிர்வரும் 16ஆம் திகதி அரிசி மற்றும் மருந்து வகைகள் அனுப்பப்படவுள்ளன. தற்போது இவை பொதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவியாக தமிழகத்திலிருந்து அனுப்பப்படவுள்ள நிவாரணப் பொருட்கள் முதல் கட்டமாக எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை தமிழகத்தில் இருந்து இலங்கை வருகின்றன. சென்னை துறைமுகத்திலிருந்து கப்பலில் அரிசி மற்றும் மருந்து வகைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இலங்கையில் தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதா சீரழிவு ஏற்பட்டுள்ளது. இங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வந்தார். இலங்கை மக்களுக்கு ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 தொன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 தொன் பால் மா ஆகியவை வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க 04 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் எஸ்.பிரபாகர், ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன், மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜோசப் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இந்த குழு இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது நிவாரணப் பொருட்களை பொதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பார்சலில் 'தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்' என்று அச்சிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 16 ஆம் திகதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் இலங்கை வருகிறது.

முதல் கட்டமாக 10 ஆயிரம் தொன் அரிசி மற்றும் பால் மா, மருந்து வகைகள் உள்ளன. அதன் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி 02ஆவது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

திருச்சி ஷாஹுல் ஹமீட்    -  நன்றி தினகரன்

No comments: