சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் வடபகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி எழுதிய கவிதை தற்போது நினைவுக்கு வருகிறது.
அதனை இங்கே முழுமையாகத்
தருகின்றோம்:
எங்கள் தாத்தா
குரக்கன் மா பிட்டு சாப்பிட்டார்.
எங்கள் அப்பா
அரிசி மா பிட்டு சாப்பிட்டார்.
நாங்கள் பாண் – ரொட்டி சாப்பிடுகிறோம்.
எங்கள் தம்பிப்
பாப்பா என்ன சாப்பிடுவான்…?
எங்கள் தாத்தா
கடவுளுக்குப் பயந்தார்.
எங்கள் அப்பா,
தாத்தாவுக்குப் பயந்தார்.
நாங்கள் ஆர்மி,
நேவிக்கு பயப்படுகிறோம்.
எங்கள் தம்பிப்
பாப்பா எவருக்கும் பயப்பட மாட்டான் !
இலங்கையில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும்
அரசியல் குழப்பங்களுக்கும், ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆட்சி முறைமையே பிரதான காரணம் எனவும், அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை விட்டு மாத்திரமல்ல, அதிகாரங்களையும் விட்டு விலகி வீட்டுக்கே சென்றுவிடவேண்டும் எனவும் தலைநகரில் காலிமுகத்திடல் தொடக்கம், ஜனாதிபதி – பிரதமர் – மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு முன்னாலிருந்து போராட்டம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் உரத்து குரல் எழுப்பிக்கொண்டிருப்பவர்கள் இளம் தலைமுறையினரே !
அவர்களில் பெரும்பாலானவர்கள்
35 வயதிற்குட்பட்டவர்கள்தான். இவர்கள்
பிறந்தபோது அரசியலுக்கு வந்து மக்களை சுரண்டிக்கொழுத்தவர்கள் அனைவரும், சுரண்டியதை
மக்களிடமே திருப்பிக்கொடுத்துவிட்டுத்தான் செல்லவேண்டும் எனவும், நாடாளுமன்றில் ஆசனங்களை
சூடாக்கிக்கொண்டிருக்கும் 225 பேருமே பதவி விலகவேண்டும் என்றும் இந்த இளம் ஆர்ப்பாட்டக்காரர்களினால்
தொடர்ந்து சொல்லப்படுகிறது.
இவர்கள் முற்றுகையிட்டிருந்த
ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சர்களின் வீடுகளை பாதுகாப்பதற்காக பொலிஸாரும், இராணுவத்தினரும்
குவிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பு வேலிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் முட்கள் பொருத்தப்பட்ட மரக்கட்டைகள் போடப்பட்டுள்ளன.
அவ்வாறு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் சீருடையினரையும் பார்த்து, அந்த இளம் தலைமுறையினர், “ நாம் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துப்பிள்ளைகளுக்காகவும்தான் போராடுகின்றோம் “ எனவும் சொல்லி வருகின்றனர்.
அத்துடன் அவர்களுக்கு பூச்செண்டும்,
பூவும் கொடுக்கின்றனர். இந்தப்பதிவில் ஒரு
யுவதி, பொலிஸாருக்கு பூ வழங்கும் படத்தை வாசகர்கள் பார்க்கலாம் !
இவற்றையெல்லாம் தனதும்,
தனது தாய் – தந்தையரதும் தேர்தல் தொகுதியான
அத்தனகல்லையில்
கொரகொல்லையில் அமைந்துள்ள தமது வாசஸ்தலத்திலிருந்து அவதானித்துக்கொண்டிருக்கும் முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க பண்டாரநாயக்கா,
ஒரு பிரபல சிங்கள ஊடகவியலாளரிடம் பல்லாண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸில்
நடந்த மக்கள் எழுச்சிப்போராட்டம்தான் ( 1789
- 1799 )
தற்போது
தனது நினைவுக்கு வருவதாகச் சொல்கிறார்.
இளம் தலைமுறையினர் தன்னெழுச்சியாக நடத்தும் இந்தப்போராட்டத்திற்கு
ஊற்றுக்கண்ணாக ஒரு காலகட்டத்தில் திகழ்ந்திருக்கும் ( 1970 களில்
) தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்களின் ஆயுதப்போராட்டத்தையும் வட இலங்கையில்
( 1980 களில் ) ஆரம்பித்த ஆயுதப்போராட்டத்தையும் ஒப்பிட முடியாது.
அவை நடந்தபோது பிறந்திராத புதிய தலைமுறைதான் தற்போது ராஜபக்ஷ
குடும்பத்தினர் அனைவரும் அரசியல் அரங்கிலிருந்து
கூண்டோடு வெளியேறவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இறம்புக்கணையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு இளைஞர் சுடப்பட்டு
கொல்லப்பட்டார். ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது
பலர் தடியடிப்பிரயோகத்திற்கு ஆளாகி காயமடைந்துள்ளனர்.
இந்த இளம்தலைமுறையினரின் தன்னெழுச்சிப்போராட்டத்தின் பக்கம்
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்வதற்கு தயங்குகின்றனர்.
இளம் தலைமுறையினர் இன,
மத, மொழி வேறுபாடின்றி ஒன்றிணைந்திருக்கின்றனர். இலங்கையின் தேசிய கீதத்தை சிங்களத்தில்
மாத்திரமல்ல, தமிழிலும் பாட முடியும் என்று
பாடிக்காண்பிக்கின்றனர்.
மக்களை இன, மத, மொழி வேறுபாட்டை
முன்னிறுத்தி பிரிக்கவேண்டாம் எனவும் சொல்கின்றனர். இவர்களின் இந்தக்குரலை இதுவரையில் நாடாளுமன்றிலிருந்த
மூவின அரசியல் தலைவர்களும் எழுப்பவில்லை. தங்களது நாடாளுமன்ற ஆசனங்களை நோக்கியே அவர்கள்
காய்நகர்த்தும் கைங்கரியங்களை இதுவரையில் செய்து வந்திருக்கின்றனர் என்பதை இடித்துரைப்பதற்காகவே
225 பேரும் வெளியேறவேண்டும் எனவும் உரத்துப்பேசுகின்றனர்.
இது இவ்விதமிருக்க, வழக்கம்போன்று நாட்டின் ஜனாதிபதி அமைச்சரவையை மாற்றுகின்றார்.
ஆளுங்கட்சியைச்சேர்ந்த
ஒரு தரப்பு நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கவிருப்பதாக
அறிவிக்கின்றது. மற்றும் ஒரு தரப்பு கூட்டணி
சேர்கிறது. இவர்களில் சிலர் பிரதமர் மகிந்த
ராஜபக்ஷவும் பதவி விலகவேண்டும் என்கின்றனர்.
ஊடகங்களில் வெளியாகும்
செய்திகளைப் பார்க்கும்போது, ஜனாதிபதி – பிரதமர்களான தம்பிக்கும் அண்ணனுக்கும் இடையில்
நிழல் யுத்தம் நடப்பதாகவே தெரிகிறது.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு
தாம் காரணமல்ல என்று ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பமுயன்றாலும்,
போராட்டத்தில் இணைந்திருக்கும் மூவினத்தையும்
சேர்ந்த இளம் தலைமுறையினர் தெளிவாகவே இருக்கின்றனர்.
அனைத்தும் ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்தான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டனர்
!
எனினும் நாடு எதிர்நோக்கியுள்ள
பாரிய நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது, அதனை அர்த்தமுள்ள நிரந்தர தீர்வாக எவ்வாறு மாற்றுவது என்பதில் ஏகமனதான
முடிவுக்கு அவர்களாலும் வரமுடியவில்லை.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு.
காலத்துக்கு காலம் பண நாயகமும் உள்ளே புகுந்து விளையாடியிருக்கிறது. நாடாளுமன்றில் வரவு – செலவு ( பட்ஜட் ) விவாதம்
வரும்போது குறைநிரப்பு பிரேரணை என்று ஏதோ வரும்.
அடுத்த சில மாதங்களுக்காக அரசாங்கம்
முன்வைத்துள்ள குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் 2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமானது. இதுபற்றிய செய்திகளை ஊடகங்களில் அப்போது படித்திருப்பீர்கள். அச்சமயம் நிதியமைச்சராகவும் இருந்தவர்தான் மகிந்த ராஜபக்ஷ.
2020 செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து
டிசம்பர் 31 ஆம் திகதி வரையான அரசாங்கத்தின் செலவுகளுக்காக இந்த குறைநிரப்பு
பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து டிசம்பர்
வரையான நான்கு மாதங்களுக்கான செலவுகளுக்காக 1900 பில்லியனை ஒதுக்குவதற்கும், 1300
பில்லியன் கடன் வரையறைக்கு அனுமதி பெற்றுக் கொள்வதற்கும் இந்த குறைநிரப்புப்
பிரேரணையை சமர்ப்பிப்பதாக அன்று பிரதமர்
குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரச வருமானம் 910 பில்லியனாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும்
முதல் எட்டு மாதங்களில் அரசாங்க
ஊழியர்களின் சம்பளத்திற்காக 521
பில்லியன் செலவாகியுள்ளதாகவும், அதில்
வட்டி செலுத்துவதற்காக 675 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன்,
அரசாங்கத்தின் நிவாரணங்கள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக 390 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் அன்று குறிப்பிட்டார்.
ஒன்பது பில்லியனுக்கு நெருங்கிய அனைத்து
கடன்களையும் மீண்டும் மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தச்செய்திகள் பழையதாக இருந்தபோதிலும், அவருக்குப்பின்னர் எத்தனை நிதியமைச்சர்கள்
வந்தார்கள்..?
தற்போது குறைநிரப்பு பிரேரணையில் கவனம்
செலுத்துவதை விட, தங்களை விட்டு விலகிச்செல்பவர்களின் இடத்திற்கு யார் யாரை
நிரப்பி தமது தரப்பு எண்ணிக்கையை நேர் செய்யலாம் என்பதில்தான் அண்ணனான மகிந்தர்
யோசித்து காய் நகர்த்துகிறார்.
தம்பி ஜனாதிபதியோ வேறு திசையில் காய்
நகர்த்துகிறார்.
இளம் தலைமுறை வெளியே நின்று மழை – வெய்யில்
பாராமல் போராடிக்கொண்டிருக்கிறது.
இந்தக்காட்சிகள் மாறும் காலமும் வெகு
தூரத்தில் இல்லை.
---0---
No comments:
Post a Comment