தாயகத்தை விட்டு விடைபெற்றுவந்த 1987 ஆம் ஆண்டின் தொடக்க காலம் முதல், அவ்வாண்டு இறுதிவரையில் மனம் பதறிக்கொண்டேயிருந்தது. அந்த ஆண்டு ஏப்ரில் மாதம் தமிழ் – சிங்கள சித்திரை புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு, அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனா அரசு, ஏப்ரில் 11 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் போர் நிறுத்தத்தை அறிவித்தது.
அவ்வப்போது வீரகேசரி ஆசிரிய
பீடத்துடன் தொடர்புகொண்டு செய்திகளை கேட்டறிவேன்.
போர் நிறுத்தம் என்பது, போரை முற்றாக நிறுத்துவது அல்ல!?
அடுத்த கட்ட போருக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதையும், களத்தில் நிற்பவர்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுப்பதையுமே உள்நோக்கமாகக் கொண்டிருப்பது.
இலங்கையில் இந்த போர் நிறுத்தம்
என்பது இரண்டு தரப்புமே மக்களை ஏமாற்றுவதற்கு மேற்கொண்ட தந்திரோபாயம்தான்.
போர் நிறுத்த காலத்தில்
ஆயுதங்களையும் சேகரித்துக்கொள்ள முடியும்.
இதுபற்றி மெல்பனில் எனது
குடியிருப்பு அறை நண்பர்களுடன் விவாதிப்பேன்.
அந்த போர் நிறுத்த காலத்தில்தான்
ஏப்ரில் 15 ஆம் திகதி அதிகாலை திருகோணமலை – ஹபரணை வீதியில் சிங்கள பஸ் பயணிகளை புலிகள் இயக்கம் கொன்று
குவித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.
அதனையடுத்து, அதே மாதம்
21 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள அரசமரத்தின் கீழே இருந்த புத்தர் சிலைக்கு சமீபமாக பாரிய குண்டுவெடிப்பு
சம்பவமும் நடந்தது. இதில் நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் எதிர்வினையாக
வடக்கில் இராணுவத்தளபதி டென்ஸில் கொப்பேகடுவ தலைமையில் இராணுவத்தினர் கண்மூடித்தனமாக
தமிழ் மக்களை சுட்டுக்கொன்றனர்.
வீரகேசரி வாரவெளியீடு பொறுப்பாசிரியர்
பொன். ராஜகோபால், பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன், நண்பர்கள் தனபாலசிங்கம், அன்டன் எட்வர்ட் ஆகியோருடன்
அடிக்கடி தொடர்புகொண்டு செய்திகளை கேட்டறிந்தேன்.
புறக்கோட்டை அரசமரத்தடி குண்டுவெடிப்பு நடந்தன்று, வீரகேசரி ஊழியர்கள் வெளியே செல்லமுடியாமல் அங்கேயே தங்கவும் நேர்ந்தது.
ராஜகோபால் என்னுடன் பேசும்போது, பசிக்கு பிஸ்கட்
சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லிச்சிரித்தார்.
இந்தியாவை எவ்வாறாயினும்
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இழுத்துவிடவேண்டும் என்பதில் கவனம் செலுத்திய விடுதலைப்புலிகள்,
தங்கள் செயல்பாடுகளை அதற்கேற்ப நகர்த்துவதை
செய்திகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது.
அயல்நாட்டில் அமைதியை நிலைநாட்ட இந்தியா பிரவேசித்தால், அதற்கு ஏற்ற முன்னேற்பாடுகளையும்
கவனிக்கும். ஆனால், அதனை ஏற்கனவே இந்திய விஸ்தரிப்பு வாதம் என்று பேசிக்கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியும்,
சிங்கள கடும்போக்காளர்களும் விரும்பமாட்டார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்கள்
தலைமறைவாக இருந்த காலம் அது. அந்த 1987 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இற்றைவரையில் எனது நினைவுகளில் ஆழமாக பதிந்துள்ளன.
அந்த ஆண்டு நிகழ்ச்சிகளை
தனியாகவே தொகுத்து எழுதமுடியும். வடக்கில்
அத்துமீறிபிரவேசித்த இந்திய விமானங்கள் மூலம் வழங்கப்பட்ட உணவு – மருந்து மற்றும் பொருட்கள்,
இலங்கை - இந்திய ஒப்பந்தம், சுதுமலையில் பிரபாகரனின் உரை,
இந்திய அமைதிப்படையின் பிரவேசம், கொழும்பில் அணிவகுப்பு மரியாதையின்போது துப்பாக்கிச்சோங்கினால்
இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் முதுகில் தாக்கிய கடற்படையைச்சேர்ந்த விஜித ரோகண
விஜேமுனியின் அநாகரீகச் செயல், யாழ்ப்பாணம் நல்லூரில் திலீபனின் உண்ணாவிரதப்போராட்டம்,
அவரது மரணம், அதனையடுத்து இந்தியப்படையையும்
புலிகளையும் மோதவிட்டு, ஜே.ஆர். வேடிக்கை பார்த்த
செயல் அனைத்தும் அவ்வாண்டை கரிஆண்டாகவே வரலாற்றில்
பதிவுசெய்துள்ளன.
தற்போது 35 வருடங்களின் பின்னர் அதே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அவசிய மருந்துகளின் நெருக்கடியை தீர்ப்பதற்கு இந்தியாவும், தமிழகமும் முன்வந்திருக்கிறது.
நான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது,
இந்திய அரசு 15 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் பெறுமதியான
மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
இதனைத்தான் அன்று 35 வருடங்களுக்கு முன்னர் இந்தியா இலங்கை
அரசின் அனுமதியின்றி அத்துமீறிச்செய்தது. அன்று வடக்கின் தமிழ்மக்களுக்கு உதவுவதற்கு நேசக்கரம் நீட்டிய இந்தியா, இன்று முழு இலங்கைவாழ் மூவின மக்களுக்கும் உதவுவதற்கு நேசக்கரம் நீட்டியிருக்கிறது.
சரித்திரம் எவ்வாறு திரும்பியிருக்கிறது
என்பதை பாருங்கள் !
மெல்பனுக்கு 1987 தொடக்கத்தில் வந்து, நிரந்தர முகவரியை
நான் பெற்றுக்கொண்ட பின்னர் Brunswick – Victoria Street இல் அந்த
தொடர் மாடிக்குடியிருப்பில் என்னோடு இருந்தவர்
சுரேஷ் என்ற இளைஞர். இவர் மாதகலைச்சேர்ந்தவர். இவரது தாய் மாமனார் முன்னர் கொழும்பில்
பிரிட்டிஷ் கவுன்ஸிலில் பணியாற்றியவர். தற்போது
அவரது பெயர் உடனடியாக நினைவுக்கு வரவில்லை.
எனது அம்மாவின் தந்தையார்
பொலிஸ் சார்ஜன்ட் கார்த்திகேசு அவர்களது பூர்வீகமும் மாதகல்தான். நான் நீர்கொழும்பு என்று அடிக்கடி சொன்னாலும், அந்தக்
குடியிருப்பு அறை நண்பர், “ சும்மா
போங்கண்ணா…. நீங்கள் எங்கள் ஊரைத்தான் பூர்வீகமாகக்
கொண்டவர் “ என்று கிண்டலடிப்பார்.
ஒருநாள் மல்லிகை ( 1987 ஜனவரி – பெப்ரவரி ) இதழ் தபாலில்வந்தது. சுரேஷ் தபால் பெட்டியிலிருந்து எடுத்துவந்து காண்பித்தார். நான் சமைத்துக்கொண்டிருந்தேன்.
“ பூபதி அண்ணன், இந்த மெகஸீனை பார்க்கலாமா..? “ எனக்கேட்டார்.
நானும் தலையாட்டினேன். அதில் இலக்கிய நண்பர் ஆ. இரத்தினவேலோன் என்னைப்பற்றி
எழுதியிருந்த கட்டுரையை சுரேஷ் வாசித்தார்.
“ நீங்கள் பெரிய ஆள்தான் அண்ணன். இனிய நண்பர் முருகபூபதிக்கு
இதயத்தால் பிரியாவிடை என்ற தலைப்பில் கட்டுரையின்
இறுதியில் இரத்தினவேலோன், நீங்கள் வீரகேசரியிலிருந்து விலகி, ஏதோ வியாபார முயற்சியில் ஈடுபடப்போவதாகவும். குறிப்பிட்டிருக்கிறாரே…
! “ என்று சொன்ன சுரேஷுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“ அந்தப்பூபதி, இங்கே அவுஸ்திரேலியாவில் ஒரு டெக்ஸ்டைல்
பிரிண்டிங் கம்பனியில் இரவில் வேலைசெய்துகொண்டு, பகலில் படுத்துறங்கி, தானே தனக்கு சமைத்து சாப்பிடுகிறார்“ என்று மேலதிகமாக சில வரிகளையும் வாசித்து சிரித்து மகிழ்ந்தார்.
“ என்ன அண்ணன்…? உங்கள் நண்பர் மல்லிகையில் இப்படி
எழுதியிருக்கிறார். நீங்கள் இங்கே என்னசெய்துகொண்டிருக்கிறீர்கள்..? “ என்றார்.
நான் நாட்டை விட்டு வெளியேறியதற்கான
காரணங்களை அவரிடம் சொன்னேன்.
இந்தத் தகவலையும் இந்தத் தொடரில்
எழுதத்தூண்டியதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகின்றேன். எனது எழுத்தும்
வாழ்க்கையும் தொடரை படித்துவரும் மெல்பன் கலை , இலக்கிய நண்பர் ஓவியர் கிறிஸ்டி
நல்லரெத்தினம் குறிப்பிட்ட மல்லிகை இதழில் என்னைப்பற்றி இரத்தினவேலோன் எழுதியிருந்த
பக்கத்தின் நறுக்கை கண்டெடுத்து அண்மையில் எனக்கு அனுப்பியிருந்தார். அவருக்கும் எனது நன்றி.
அந்த ஆண்டு ( 1987 ) டிசம்பர்மாதம் வந்தது. எனது பணிமனையிலும் சுரேஷ் வேலைசெய்த இடத்திலும் ஒரு மாதகாலம் கோடை கால விடுமுறை தந்தார்கள்.
“ அண்ணன்…. சிட்னிக்குப் போவோமா..? “ என்றார் சுரேஷ்.
“ அதற்கென்ன போகலாம். அங்கேயும் ஒரு எழுத்தாளர் இருக்கிறார்.
அவர்பெயர் மாத்தளைசோமு. அவரது வீட்டிலேயே நாம் தங்கலாம். அவர் எனக்கு முன்பே இந்தக்கண்டத்தை
பார்த்தவர். அவருக்கும் விடுமுறை இருக்கும். அவருடன் சிட்னியை பார்த்துவிட்டு, திரும்பிவருகையில்
அவரையும் அழைத்துவந்து மெல்பனை காண்பிப்போம்
“ என்றேன்.
மாத்தளை சோமுவுக்கு தொலைபேசி
ஊடாக தகவல் அனுப்பினேன்.
எமது பணிமனையில் கோடைகால
விடுமுறைக்கான – கிறிஸ்மஸ் – புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. Australian Textile Printing Company இயக்குநர் சபையின் தலைவர் ( இவர் யூத இனத்தைச் சேர்ந்த செல்வந்தர். அபூர்வமாகத்தான் சிரிப்பார் ) எமக்கு பரிசுப்பொருட்களும்
தந்து, விடுமுறை காலத்தில் வாகனம் செலுத்தும்போது அவதானமாக இருக்கவேண்டும் என்றும்
எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னர் அங்கு நான் பணியாற்றிய ஏழு வருட காலத்திலும் அவரது
முகத்தில் சிரிப்பை அபூர்வமாகத்தான் பார்த்திருக்கின்றேன். ஆனால், ஒவ்வொரு கோடை விடுமுறைக்கான
ஒன்றுகூடல் நிகழ்விலும் அவர் அனைவரிடமும் வாகனம் செலுத்துவதில் அவதானமாக இருக்கவேண்டும்
எனச்சொல்வதை மாத்திரம் தவறவிடுவதில்லை.
குறிப்பிட்ட கோடைகால விடுமுறைகளில்
வாகன விபத்துகள் அதிகம் என்பதையும் அப்போதுதான் அறிந்தேன். பின்னாளில் எனக்கு நன்கு தெரிந்த சில தமிழ் அன்பர்கள்
இங்கே வாகனவிபத்துகளில் கொல்லப்பட்டனர்.
நானும் நண்பர் சுரேஷும்
டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி மாலை சிட்னிக்கு பயணமானோம். கிறிஸ்மஸ் தினத்தை மாத்தளை சோமுவுடன் கொண்டாடுவதுதான்
எங்கள் தீர்மானம். அதுவே எம்மிருவருக்குமான முதலாவது சிட்னி பயணம். இதர பயணிகளுடன் அந்தத் தனியார் துறை
Deluxe
Bus, மெல்பனிலிருந்து புறப்பட்டது.
இடையில் சில ஊர்களில் தரித்து
நின்று புறப்பட்டது. Goulburn என்ற இடத்தினை கடக்கும்போது நடுச்சாமம். அவ்விடத்தில் பஸ் தரித்தபோது நானும் சுரேஷும் வெளியே
வந்து அங்கிருந்த பிரம்மாண்டமான செம்மறி ஆட்டின் சிலையைப்பார்த்து வியந்தோம்.
அதுபற்றியும் இனிவரவிருக்கும் இந்தத் தொடரின்
அங்கங்களில் குறிப்பிடுவேன்.
அந்த டிசம்பர் மாதம் அன்றைய தினம் 23 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நிலையில் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஒரு தலைவரின் ஆத்மா உலகைவிட்டு
பிரிந்துகொண்டிருந்தது. ஆனால், எமக்கு அவ்வேளையில் தெரியாது. இன்றிருக்கும் நவீன தொடர்பாடல் வசதிகள் அன்று இருக்கவில்லை.
சிட்னியிலிருந்து மாத்தளை சோமு வசிக்கும் ஊருக்குச்செல்லும் ரயிலில்
சென்று இறங்கியபோது, அவரே வந்து வரவேற்றார்.
அவர் எம்மைக்கண்டதும் சொன்ன முதல் வார்த்தை “ எம்.ஜி.ஆர்.
போய்விட்டார் “
“
எங்கே..? “ என்றேன்.
அவர் கைகளை விரித்து மேலே காண்பித்தார்.
அன்று முழுவதும் எம். ஜி. ஆரின் பல பக்கங்களைப்பற்றி
பேசுவதிலேயே எமது பொழுதுகள் கரைந்தன.
இந்திரா காந்திக்குப்பிறகு ஈழத்தமிழ் மக்களின்
நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் எம். ஜி. ஆர். இவருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில்
நடந்த சந்திப்பு பற்றி பலரும் பலவிதமாக சொல்லியிருப்பதை கேள்விப்பட்டிருக்கின்றேன்.
எனினும், அக்காலப்பகுதிக்குப்பின்னர் அடெல் பாலசிங்கம் எழுதிய நூல் ( The
Will To Freedom ) சுதந்திர வேட்கை, அந்த சந்திப்பு பற்றி பல ஆதாரபூர்வமான செய்திகளையும் சொல்கிறது.
ஒருகாலத்தில் எமது மாணவப் பருவத்தில், எம்.ஜி.ஆர். தரப்பு சிவாஜி
தரப்பு கோஷ்டிகள் எமது வகுப்பில் இருந்தன. நான் நடிகர் திலகம் கோஷ்டி. எம்.ஜி. ஆர்.
கையை அடிக்கடி நீட்டி நீட்டித்தான் பாடுவார். அவ்வாறு வகுப்பில் மிமிக்கிரி செய்து
எம். ஜி. ஆர். ரசிகர்களை கேலி செய்வதும் நடந்திருக்கிறது. எங்கள் ஊர் கடற்றொழிலாளர்கள் அனைவரும் அவரது ரசிகர்கள்தான்.
அவரது திரைப்படங்கள் ஜனத்திரள் காட்சிகளாக பல வாரங்கள் ஓடும்.
அவருக்கு மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், என்பன மிகவும் பொருத்தமான பெயர்கள். ஆனால், அவரை
புரட்சி நடிகர் என்று சொல்வதைத்தான் ஏற்பதற்கு சிரமமாகவிருந்தது. அவர் தமிழ்த்திரையுலகில்
எந்தப் புரட்சியும் செய்யவில்லையே என்பது எனது வாதம்.
மாத்தளை சோமு, எம்.ஜி.ஆர்.
பற்றி தனக்குத் தெரிந்த செய்திகளையும், நான்
எனக்குத் தெரிந்த செய்திகளையும் சொல்லிக்கொண்டோம்.
மாத்தளைசோமு
என்னையும் சுரேஷையும் சிட்னியில் பல இடங்களுக்கும் அழைத்துச்சென்று காண்பித்தார். திருப்பதி
சிட்னி மிருகக்காட்சி சாலை, Helensburgh திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம், ஓப்ரா ஹவுஸ், எங்கும் அழைத்துச்சென்றார்.
வெங்கடாஜலபதி ஆலயத்தின் வளாகத்தில் சில தமிழ் இளம் தலைமுறையினர் ஒரு படப்பிடிப்பில் ஈடுபட்டதை
அவதானித்தேன். கலை ஆர்வம் மிக்க அவர்கள் ஒரு
தமிழ்த்திரைப்படம் எடுப்பதாகச்சொன்னார்கள். ஆனால், அந்தப்படம் வெளிவரவேயில்லை.
ஓப்ரா ஹவுஸை நாம் வந்தடைந்தபோது, அங்கே அதன்பின்னணியில் தமிழ்த்திரைப்படம் எடுத்தால் நன்றாயிருக்குமே என்று மாத்தளை சோமுவிடம்
சொன்னேன். உடனேயே அவர் ஒரு காதல்பாட்டுக்கான சரணத்தை சொன்னார்.
இந்தப்பாடலை ஹரிஹரனுடன் பாடிய ஹரிணி , பின்னாளில் மெல்பனில் எமது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்
என்பது மற்றும் ஒரு கிளைக்கதை.
நாம் எமது சிட்னி பயணத்தை முடித்துக்கொண்டு
மாத்தளைசோமுவுடன் மெல்பனுக்கு ரயிலில் திரும்பினோம். மெல்பனில் இலங்கைத் தமிழ்ச்சங்கம், மறைந்த எம்.ஜி.ஆருக்காக
வை. டபிள்யூ. சீ. ஏ. மண்டபத்தில் ஒரு இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
அதில் மாத்தளைசோமுவை பேசும்படி சொன்னதுடன்,
அவர்பற்றிய அறிமுகத்தை தலைவர் “ சோமா “ சோமசுந்தரம் அவர்களிடம் சொன்னேன்.
அவருக்கு ஒரு பேச்சாளர் கிடைத்ததில் பரமதிருப்தி.
‘
சோமா ‘ அண்ணர் தலைமையுரையாற்றும்போது, “ எனது
பெயர் சோமசுந்தரம், இன்று உங்கள் முன்னிலையில்
மற்றும் ஒரு சோமசுந்தரம் பேசவிருக்கிறார். அவர்தான் எழுத்தாளர் மாத்தளை சோமு “ என்றார்.
மாத்தளை சோமு மெல்பனில் முதல் முதலில் தமிழ் மக்கள் முன்னிலையில் மேடையில் தோன்றி பேசிய உரை எம்.ஜி. ஆரைப்பற்றியதுதான்.
அந்த நிகழ்ச்சிக்கு “ சாம்
“ ஆறுமுகசாமி எம்மை தமது காரில் அழைத்துச்சென்றார்.
நவரத்தினம் இளங்கோ எம். ஜி. ஆர். படம் ஒன்றை
கொண்டுவந்திருந்தார். மேடையின் சுவரில் அதனை பதித்து இரங்கல் உரைகள் நிகழ்த்தப்பட்டது
.
தில்லை ஜெயக்குமார் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியுடன்
வந்திருந்தார்.
எம். ஜி.ஆர் பற்றிய படம் ஏதாவது காண்பிக்கப்
போகிறார்கள் என்றுதான் நினைத்தேன்.
ஆனால், அந்தத் தொலைக்காட்சியை இயக்குவதற்கு முன்னர் மேடையில் தோன்றிய
ஜெயக்குமார், தற்போது ஒரு ஆவணத்தை காண்பிக்கவிருக்கின்றோம். குழந்தைகளுடன் வந்திருப்பவர்களும் அதிர்ச்சியான
காட்சிகளை பார்க்க விரும்பாதவர்களும் இதனை பார்க்காமல் தவிர்த்தால் நல்லது என்று ஒரு
புதிரையும் அவிழ்த்தார்.
குழந்தைகளுடன் வந்திருந்த சிலர் அந்த மண்டபத்தை
விட்டு வெளியே வந்தனர்.
காண்பிக்கப்பட்ட காட்சி கோரமானதுதான். இலங்கையில்
இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை சில தெருநாய்கள் இழுத்துச்செல்லும் கடித்துக்குதறும் காட்சிகள் அதில் காண்பிக்கப்பட்டன.
“
எம். ஜி. ஆர். இரங்கல் கூட்டத்தில் இது ஏன்..,? “ என்று
சாம் ஆறுமுகசாமியிடம் கேட்டேன்.
“
இதற்கென்று மற்றும் ஒரு கூட்டம் நடத்தி மக்களை அழைக்கமுடியுமா..? “ என்றார்
அவர்.
அந்தப்பதில் எனக்கு திருப்தியை தரவில்லை. மெல்பன் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் எத்திசையில் பயணிப்பார்கள்
என்பதையும் அந்த 1987 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியும் 1988 தொடக்கப்பகுதியும் எனக்கு உணர்த்தியது.
மாத்தளை சோமுவுடன் மெல்பனையும் பிலிப் ஐலண்டையும்
சுற்றிப்பார்த்தபோது நாம் இலங்கை அரசியலும் பேசினோம்.
அவர் சில நாட்கள் எம்முடன் இருந்துவிட்டு சிட்னிக்குப்புறப்பட்டார். இலக்கியத்தில் எமது கவனத்தை செலுத்துவோம் என்று
பரஸ்பரம் கூறிக்கொண்டோம்.
இலங்கையில் இந்தியப்படையின் அட்டகாசங்கள் தொடர்ந்தன.
எமது தமிழ் மக்கள் எண்ணெய்ச்சட்டியிலிருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாகிப்போனார்கள்!
( தொடரும் )
No comments:
Post a Comment