இலங்கைச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

"ஜனாதிபதி என்னை ஒருபோதும் பதவி விலகச் சொல்லவும் இல்லை; சொல்லவும் மாட்டார் என்று நான் நம்புகிறேன்"

தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அணுஷ்டிப்பு

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்; மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரல்

தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு; நடைமுறைப்படுத்த 5 பேர்

இலங்கைக்கு 123 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவி



காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க பிரதிநிதிகளை  நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை  அமெரிக்கத் தூதுவர் ஐுலி சுங் சந்தித்து கலந்துரையாடினர்.

கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்புக்கு பின்னர் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா கருத்து தெரிவிக்கையில்,

எமது உறவுகள் காணாமலாக்கப்பட்ட விதம், எமது போராட்டங்கள், எமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க தூதுவரிடம் நாம் விளக்கிக் கூறியிருந்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் எமது எதிர்ப்பையும் மீறி உருவாக்கப்பட்டது என்பதை அவருக்கு தெளிவாக கூறியதுடன் அந்த அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட சில விவரங்களுக்கு இதுவரை நடவடிக்கையை எடுக்கப்படாமை  தொடர்பாகவும் கூறியிருந்தோம்.

அத்துடன் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை நம்புமாறு எம் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டாம் என தெரிவித்திருந்தோம்.

நாம் இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை எனவும் சர்வதேச நீதிப் பொறிமுறையே எமக்கு வேண்டும் எனத் தெரிவித்தோம் என்றார்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 




"ஜனாதிபதி என்னை ஒருபோதும் பதவி விலகச் சொல்லவும் இல்லை; சொல்லவும் மாட்டார் என்று நான் நம்புகிறேன்"

- வெளிநாட்டு உதவிகளை பெற்றேனும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்
- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளூராட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் உரை

ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறமாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதேச சபைத் தவிசாளர்கள், மேயர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் இன்று (27) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு உதவிகளை பெற்றேனும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் மேயர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

குறித்த சந்திப்பின் போது பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

கடந்த காலங்களில் சந்தித்து பேசுவதற்கு எங்களுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இன்று நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தீர்வு காண்பதற்கான செயற்பாடுகள் குறித்து பேச சிலர் தமது ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

எனினும் இன்று நாட்டின் நிலைமை முற்றிலும் மாறுபட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருபுறம் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.

வரலாற்றில் தொடங்கி பல்வேறு காரணங்களுக்காக இந்த நிலைமை உருவாக்கப்பட்டது. இந்த நெருக்கடியிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தற்போது எமக்கு உள்ளது. எனவே அதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இந்த அரசாங்கத்தை நாம் பொறுப்பேற்கும் போது அனைத்து வகையிலும் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். அப்போது பொருளாதாரத்தில் மட்டுமல்ல தேசிய பாதுகாப்பிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தீவிரவாதிகளோ, பயங்கரவாதிகளோ இல்லாத நாட்டை உருவாக்கித் தருமாறு பெரும்பாலான மக்கள் கோரிக்கை வைத்தனர். இன்று நாம் அந்த கோரிக்கையை சரியாக நிறைவேற்றிவிட்டோம் என்று நினைக்கிறேன்.

தரிசு நிலமாக காணப்பட்ட நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் பெரும் முயற்சி செய்துள்ளோம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

இவற்றுக்கு மத்தியில்தான் நாம் சமீபத்தில் கொவிட் தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது போன்ற ஒரு தொற்றுநோய் பற்றி முழு உலகமும் இதற்கு முன் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். இந்தச் சவால் நமக்குப் புதிது. ஆனால் உங்கள் அனைவரின் ஆதரவோடு நாங்கள் அதை வெற்றிகரமாக எதிர்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அபிவிருத்தியடைந்த நாடுகளில் இலட்சக் கணக்கானோர் இறக்கும்போது, நம் நாட்டின் மரண விகிதத்தை பிறநாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாக பேண முடிந்தது.

மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவப் பணியாளர்கள், இராணுவம், பாதுகாப்புப் படையினர் போன்றோர் இதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மக்களும் அதற்கு ஆதரவளித்தனர். இது நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படாவிட்டாலும், ஒரு அரசாங்கமாக எங்களால் இந்த கொவிட் தொற்றுநோயிலிருந்து முழு நாட்டையும் பாதுகாக்க முடிந்தது.

ஆனால் மக்களை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கான சவாலை நாங்கள் வெற்றி கொண்டோம். இன்று அவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையனோரே காலிமுகத்திடல் மைதானத்திற்கு வந்துள்ளனர். அங்கு வந்து எம்மை வெளியேறுமாறு கூறுகின்றனர். நாம் அனைவரும் மக்களின் ஆணையாலேயே இந்த இடங்களுக்கு வந்துள்ளோம். அந்த மரியாதை இன்றும் மக்களுக்கு உள்ளது. மக்கள் இறையாண்மை என்பது நாட்டின் அரசியலமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நிலையில் நாட்டை விட்டு வெளியேற மக்கள் எம்மை நியமிக்கவில்லை.

வேண்டியளவு குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆனால் அவை நிரூபிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக இந்த நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்ல முடியாது.

நாம் வரலாற்றின் சவால்களில் இருந்து தப்பித்து ஓடியவர்கள் அல்ல என்பதை கூறத் தேவையில்லை. இந்த பொருளாதார சவாலில் இருந்து தப்பித்து ஓடமாட்டோம். எங்களிடம் குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார முகாமைத்துவ கொள்கை உள்ளது. அதற்கமைய இந்த சவாலை சமாளிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மத்திய வங்கி உட்பட பொது நிதி நிறுவனங்களுக்கு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களை கடந்த காலங்களில் எமக்கு நியமிக்க முடிந்தது. அண்மையில் சீனப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினேன். சீனாவின் ஆதரவை எமக்கு பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்தார். பல நட்பு நாடுகளுடனும் கலந்துரையாடினேன். இதன் விளைவாக, அவர்கள் ஏற்கனவே எங்களுக்கு உதவத் தொடங்கியுள்ளனர்.

நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று இலங்கையின் நிலைமையை சுட்டிக்காட்டிய போது, தற்போது எமக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நமது நிதியமைச்சர் அலி சப்ரி சென்று அதைச் செய்தார். சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்ற அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடினேன். எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவர்களின் சில கோரிக்கைகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அவற்றை பின்பற்றி நாம் முன்னேற வேண்டும். நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். வெளிநாட்டு உதவியை பெற்றேனும் நாட்டை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

அந்த சமயங்களில்தான் சிலர் இங்கும் அங்கும் சென்று பேயாட்டம் ஆடுவது. அந்த பேய்களுக்கு பயந்தால் கல்லறையில் வீடு கட்ட மாட்டார்கள் என்பார்கள்.  அப்படிப்பட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன். எனவே அவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதைப் பார்க்க காத்திருக்கிறோம். எனவே, உங்கள் பலத்தால் அவர்கள் விரும்பியவாறு நாட்டைக் கட்டியெழுப்பவோ, நாட்டைக் கைப்பற்றவோ, எம்மை ஆட்டி படைக்கவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை நினைவூட்டுகிறேன்.

நீங்கள் எம் மீது கொண்ட நம்பிக்கை வைத்து பணியாற்றுவது குறித்து நாம் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோன்று இன்னொரு விடயத்தை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஜனாதிபதி ஒருபோதும் என்னை செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறமாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.    

நன்றி தினகரன் 




தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அணுஷ்டிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த  தினம் மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்றது. தமிழ் இனத்தின் அடையாளமாக திகழ்ந்தவரும், தமிழ்தேசிய  பற்றாளருமான தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் இலங்கைத் தமிழரசுக்  கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. நேற்று செவ்வாய்க்கிழமை (26) காலை 09.00மணிக்கு மட்டக்களப்பு  தந்தை செல்வா நினைவு முற்றத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னாரின் திருவுருவ  சிலைக்கு முன்பாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான பொன்.செல்வராசா தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு அதிதிகளினால்  மலர் மாலை அணிவித்து, ஒளித்தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம்  செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), இரா.சாணாக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், முன்னாள்  மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராஜா, இந்திரகுமார் -பிரசன்னா, மட்டக்களப்பு  மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன், முன்னாள்  அரசாங்க அதிபர் மா.உதயகுமார், உள்ளூராட்சி மன்ற  தவிசாளர்கள், மதப்பெரியார்கள், பெண்கள், மகளிர்கள், தமிழ்தேசிய பற்றாளர்கள், ஆதரவாளர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.

(வெல்லாவெளி தினகரன்,                         மட்டக்களப்பு விசேட நிருபர்கள்)-   நன்றி தினகரன் 

 




மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்; மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரல்

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றத்தில் மூன்று வாரகால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை மேற்கொள்ள தேவையான காலம் தொடர்பிலும், ஏற்கனவே மீட்கப்பட்ட எச்சங்களை பிரித்தெடுத்து அறிக்கை தயார் செய்வதற்கான காலம் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கமைய, இவ்விடயம் தொடர்பான மேலதிக அறிக்கைகளை தயார் செய்ய மூன்று வாரங்கள் அவசியமாகும் என நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைக்கு அமைய, மனிதப் புதைகுழி வழக்கை எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

இதனிடையே, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வவுனியா மேல் நீதிமன்றத்தில், மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் குறூப்  நிருபர் - நன்றி தினகரன் 




தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யாழில் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங்கை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் கொக்குவிலிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு இச்சந்திப்பு இடம்பெற்றது. 

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோரே சந்திப்பில் பங்கேற்றனர். 

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 






சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு; நடைமுறைப்படுத்த 5 பேர்

- சுயாதீன கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் முடிவு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய, தற்போது சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று, (29) முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக, தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதன் முதற்கட்டமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்களிப்புடன் தேசிய சபையொன்றை நியமிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

கட்சிப் பிரதிநிதிகள் முன்வைக்கும் பொதுத் தீர்மானத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தால் தாம் அதற்கு இணங்குவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதிநிதிகளில் ஐந்து பேரை பெயரிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பொதுஜன பெரமுன உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற்றதன் பின்னர், முறையான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, வாசுதேவ நாணாயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா, விஜேதாச ராஜபக்ஷ, திஸ்ஸ விதாரண, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, தயாசிறி ஜயசேகர, வண.அத்துரலியே ரத்தன தேரர், லசந்த அழகியவன்ன, நிமல் லன்சா, ஜயந்த

சமரவீர, ஜயரத்ன ஹேரத், டிரான் அலஸ், ஜகத் புஷ்பகுமார, நளின் பெர்னாண்டோ, எம்.எம். அதாவுல்லா, கெவிந்து குமாரதுங்க, வீரசுமன வீரசிங்ஹ மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.     நன்றி தினகரன் 






இலங்கைக்கு 123 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவி

- ரூ. 80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் தொன் அரிசி; 28 கோடி ரூபா மருந்துகள்; 15 கோடி ரூபா பால் மா
- தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஏக மனதாக நிறைவேற்றம்

இலங்கை மக்களுக்கு உதவ 80 கோடி இந்திய ரூபாய்  மதிப்பில் 40 ஆயிரம் தொன் அரிசி, 28 கோடி ரூபா மதிப்பில் மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பில் பால் மா வழங்க தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் அனுமதி கோரி, அரசினர் தீர்மானத்தை முதல்வர் பேரவையில் முன் வைத்து பேசினார். இந்த தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரும் அரசினர் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கடல் சூழ்ந்த இலங்கை நாடு, இன்று கண்ணீரால் சூழப்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களுக்காகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆற்றிய பணிகளை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். 

‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதைப் போல, (மேசையைத் தட்டும் ஒலி) நம்முடைய இரத்தத்தில், உணர்வில், வாழ்வில் கலந்த ஒரு பிரச்சினையாக இலங்கைப் பிரச்சினை இருந்து வருகிறது.  இலங்கையில் வாழக்கூடிய ஈழத் தமிழர் நலன் கருதி அரசியல்ரீதியாகப் பல்வேறு முழக்கங்களை வெவ்வேறு காலக்கட்டங்களில் நாம் முன்வைத்திருக்கிறோம்.  காலச்சக்கரம் இலங்கை மக்களை அலைக்கழித்து எங்கோ கொண்டு போய் நிறுத்திவிட்டது. இருப்பினும், இன்றைய நாள் மனிதாபிமான அடிப்படையில் நாம் கைகொடுக்க வேண்டும் என்பதே இந்த அரசினுடைய நிலைப்பாடு ஆகும். 
தற்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான காரண, காரியத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை.  அதேநேரத்தில், அங்குள்ள மக்கள் படக்கூடிய துன்பங்கள், துயரங்கள் நம் அனைவருடைய மனதிலும் சோகத்தை உருவாக்கியிருக்கிறது.  இலங்கை முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருக்கிறது.  பெட்ரோல், டீசலுக்காக வாகனங்கள் பல மணி நேரம் வரிசையிலே காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மண்ணெண்ணெய் வாங்க பொது மக்கள் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய ஒரு அவல நிலையும் ஏற்பட்டிருக்கிறது. 

எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடும் இருக்கிறது.
இதனால் சமையல் செய்வதே சிக்கலுக்குரியதாக மாறியிருக்கிறது என்று செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.  நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது.  அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றன.  பல அத்தியாவசியப் பொருட்களுடைய விலை பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது.  பேருந்துகள், இரயில்கள் ஆகிய போக்குவரத்துச் சேவைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன; பல இடங்களில் அவை நிறுத்தப்பட்டிருக்கின்றன. 

இரசாயன உரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால், மலையகப் பகுதிகளில் தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் நமக்கு வருகிறது.   இதனால், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியக்கூடிய மலையகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை நாடு முழுவதும் உயிர்காக்கும் பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. 

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இரசாயன உரம் கிடைக்காதது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சாதாரணமாக 1200 ரூபாய்க்குக் கிடைத்த உர மூட்டை தற்போது 32,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  பால் விலை, பால் பவுடர் விலை, உணவுப் பொருள்கள் விலை என அனைத்தும் பல நூறு மடங்கு உயர்ந்துவிட்ட காரணத்தால் பச்சிளம் குழந்தைகளும் கூட துன்பத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.  மொத்தத்தில் இலங்கை மக்களின் வாழ்க்கை என்பது மிகமிக மோசமான நிலையை அடைந்துள்ளது.
அண்டை நாட்டுப் பிரச்னையாக இதை நாம் பார்க்க முடியாது. அங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள்; அவர்கள் எத்தகையவர்கள் எனப் பார்க்க இயலாது.  அந்த நாட்டு மக்களுக்கு நம்மால் ஆன உதவியை நாம் செய்தாக வேண்டும் என்பதைத் தெரிவிக்க நான் விரும்புகிறேன்.

இலங்கையில் இருந்து இத்தகைய செய்திகள் வந்ததுமே, ஈழத் தமிழ் மக்களுக்கு நம்மால் ஆன அனைத்தையும் வழங்குவோம் என்று நான் அறிவித்தேன். பிரதமர் அவர்களை 31-3-2022 அன்று நான் நேரிலே சந்தித்து வலியுறுத்தினேன்.  அப்போது அதனை அறிந்து இலங்கைத் தமிழர் தலைவர்களும், சில தமிழ் அமைப்புகளும் எனக்கு வைத்த கோரிக்கை, தனியாகத் தமிழர்களுக்கு மட்டும் உதவி என்று அனுப்ப வேண்டாம்; இலங்கை மக்களுக்கு என்று பொதுவாக அனுப்புங்கள்; மக்களைப் பிரித்துப் பார்க்க வேண்டாம்; அனைத்து இன மக்களும் சேர்ந்துதான் இந்த நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். 

அதைக் கேட்டபோது நான் நெகிழ்ந்து போனேன். என்னால் உணர்ச்சிப் பெருக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  இதுதான் தமிழர் பண்பாடு. பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்பதைப் போல, இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.  இந்த நிலையில், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும்.  அந்த வகையில் பின்வரும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. முக்கியமாக, 40 ஆயிரம் தொன் அரிசி; இதனுடைய ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய்;  அதேபோல், உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள்; இதன் மதிப்பு 28 கோடி ரூபாய்; குழந்தைகளுக்கு வழங்க 500 தொன் பால்பவுடர்; இதன் மதிப்பு 15 கோடி ரூபாய். 

இவற்றையெல்லாம் இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம்.  இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. ஒன்றிய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும்.  இலங்கையில் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டதுமே, இந்திய அரசிடம் இதுகுறித்த கோரிக்கையை நான் முன்வைத்தேன்.  31-3-2022 அன்று டெல்லி சென்று மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்தபோதும் இதனை நான் வலியுறுத்தியிருக்கிறேன். அதனைத் தொடர்ந்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டும் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன்.  அவருக்கும் 15-4-2022 அன்று கடிதம் எழுதி நினைவூட்டியிருக்கிறேன்.
இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை.  ஆனால் அங்கு நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது. 

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்கிறார் வள்ளுவர்.  உதவி என்பதும் மனிதாபிமான அடிப்படையில் உடனடி உதவியாக இருக்க வேண்டும். காலத்தே செய்தால்தான் அது உதவி. (மேசையைத் தட்டும் ஒலி) இதனைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.  இந்த எண்ணத்தை ஒன்றிய அரசுக்குச் சொல்லக்கூடிய வகையில் ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவது காலத்தினுடைய கட்டளை என்று அரசு கருதுகிறது.  அதனடிப்படையில், கீழ்க்காணும் தீர்மானத்தை நான் இங்கே முன்மொழியக் கடமைப்பட்டிருக்கிறேன். 

“இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது என்றும்; இதற்கு ஒன்றிய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசிற்கு ஏற்கெனவே மாநில அரசு கடிதம் எழுதியிருக்கிறது.  எனினும், இதுகுறித்து ஒன்றிய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய வகையில், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.”இந்தத் தீர்மானத்தை கட்சி எல்லைகளைக் கடந்து, கருணை உள்ளத்தோடு அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டுமென்று கேட்டு, அமைகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பேசினார்கள். அதன் பிறகு அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது   -   நன்றி தினகரன் 






No comments: