உலகச் செய்திகள்

 ஆங் சான் சூக்கியின் மொத்த சிறை காலம் 11 வருடங்கள்

பிரான்ஸ் ஜனாதிபதியாக மக்ரோன் மீண்டும் வெற்றி

உக்ரைனிய தலைநகரில் ஐ.நா தலைவர் இருக்கும் நிலையில் அங்கு தாக்குதல்

நாகேந்திரன் தர்மலிங்கம் மீது மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் கடுமையாகும் கொவிட் தொற்று பாதிப்பு

நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து, சுவீடன் விருப்பம்ஆங் சான் சூக்கியின் மொத்த சிறை காலம் 11 வருடங்கள்

இராணுவ ஆட்சியின் கீழ் மியன்மாரின் முன்னாள் தலைவி ஆங் சான் சூக்கி மீது நீதிமன்றம் ஒன்று ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதன்மூலம் அவரின் மொத்த சிறை தண்டனை காலம் 11 வருடங்களாக அதிகரித்துள்ளது.

மியன்மாரில் 2021 பெப்ரவரியில் ஜனநாயக முறையில் தேர்வான அரசுக்கு எதிராக இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி தொடக்கம் சூக்கி வீட்டுக்காவலில் இருந்து வருகிறார்.

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்திருப்பதோடு இந்த வழக்கு வெட்ககரமானது என்று உரிமைக் குழுக்கள் கண்டித்துள்ளன.நோபல் பரிசு வென்ற 76 வயதான சூக்கி மீது வாக்கு மோசடி உட்பட குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தலைநகர் நாய் பியி டவ்வில் மூடிய அறையில் கடந்த புதனன்று இடம்பெற்ற இந்த வழக்குத் தொடர்பில் ஊடகங்களுக்கு பேசுவதிலிருந்து சூக்கியின் வழக்கறிஞர்கள் தடுக்கப்பட்டனர்.

யாங்கோனின் முன்னாள் தலைவரிடம் 600,000 டொலர் லஞ்சம் பெற்றதாகவே சூக்கி குற்றங்காணப்பட்டுள்ளார்.   நன்றி தினகரன் 
பிரான்ஸ் ஜனாதிபதியாக மக்ரோன் மீண்டும் வெற்றி

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் எமானுவேல் மக்ரோன் வெற்றியீட்டி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பதவியை கைப்பற்றியுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மரின் லே பென் மீண்டும் தோல்வியை சந்தித்தபோதும், நாட்டில் தீவிர வலதுசாரியின் அதிக வாக்குகளை பதிவு செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மக்ரோன் 58.55 வீத வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டியதோடு, லே பென் 41.45 வீத வாக்குகளை வென்றார். இதன்மூலம் மக்ரோன் எதிர்பார்த்ததை விடவும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார்.

ஈபிள் கோபுரத்திற்கு அருகில் கூடிய தனது ஆதரவாளர்களிடம் பேசிய மையவாதத் தலைவராக 44 வயது மக்ரோன், தற்போது தேர்தல் முடிந்துவிட்டதாகவும் தாம் அனைவருக்குமான ஜனாதிபதி என்றும் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது தவணைக்கு வெற்றியீட்டிய முதல் ஜனாதிபதியாகவும் மக்ரோன் பதிவாகி உள்ளார்.

இதில் 53 வயதான லே பென் தோல்வியை சந்தித்தபோதும் கணிசமான வாக்குகளை வென்றிருப்பதும் அவரின் பெரும் முன்னேற்றத்தை காட்டுவதாக உள்ளது. தேர்தலில் தோல்வியுற்றாலும், தான் பெற்ற வாக்குகள் வெற்றியை குறிப்பதாக லே பென் தெரிவித்தார்.

இதுவரை இல்லாத அளவுக்கு வலதுசாரிகள் அதிக வாக்குகளை வென்றிருப்பது பிரான்ஸ் அரசியல் ரீதியாக ஆழமாகப் பிளவுபட்டிருப்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் லே பென், மெக்ரோனிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் வலதுசாரி தேசியவாதக் கொள்கைகளை எதிர்ப்போர் மக்ரோனுக்கு வாக்களித்துள்ளதை லே பென் ஒப்புக்கொண்டார்.

நாட்டை மீண்டும் இணைக்கவும் தமக்கு எதிராக வாக்களித்தோரின் சினத்தைத் தணிக்கவும் மக்ரோன் உறுதியளித்தார்.

மக்ரோனின் வெற்றிக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தனது “உண்மையான நண்பர்” என மக்ரோனை குறிப்பிட்டு, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் அவருடைய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அணுவாயுதச் சக்தி கொண்ட ஒரே நாடாக பிரான்ஸ் உள்ளது. எனவே, மக்ரோனின் வெற்றி, ஒன்றியத்தின் தலைமைத்துவ நிலைத்தன்மையை மீண்டும் உறுதி செய்வதாக உள்ளது.

இந்தத் தேர்தலில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 72 வீதத்திற்கும் குறைவாக உள்ளது. இது 1969க்குப் பின்னரான தேர்தல்களில் பதிவான குறைவான வாக்கு எண்ணிக்கையாகும்.

மேலும், 30 இலட்சத்துக்கும் அதிகமானோர் செல்லாத வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத மக்ரோனுக்கு எதிரான போராட்டக்காரர்கள், பல்வேறு நகரங்களில் குறிப்பாக பாரிஸ், ரென்ஸ், டெளலெளஸ் மற்றும் நான்டெஸ் ஆகிய நகரங்களில் பேரணிகளை நடத்தினர்.   நன்றி தினகரன் உக்ரைனிய தலைநகரில் ஐ.நா தலைவர் இருக்கும் நிலையில் அங்கு தாக்குதல்


தோல்வியை ஒப்புக்கொண்டார் குட்டரஸ்

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டொனி குட்டரஸ் உக்ரைன் தலைநகர் கியேவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றுள்ளதை அடுத்து அவர் தனது அமைப்பைச் சேர்ந்த பாதுகாப்புச் சபையை கண்டித்துள்ளார்.

பாதுகாப்புச் சபை உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர தவறியுள்ளது என்று குட்டரஸ் தெரிவித்துள்ளார். இது ஏமாற்றம், கோபம் மற்றும் வேதனைக்குக் காரணமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

‘இந்தப் போரைத் தடுப்பது மற்றும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதன் அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளது என்பதை நான் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்’ என்றார் அவர்.

15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச் சபை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொறுப்பாக உள்ளது.

ஆனால் கடந்த பெப்வரியில் இருந்து இடம்பெற்றுவரும் போரை தடுப்பதற்கு தவறியது குறித்து உக்ரைனிய அரசு உட்பட பாதுகாப்புச் சபை கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

ரஷ்யா பாதுகாப்புச் சபையின் நிரந்தரக அங்கத்துவத்தை பெற்றிருப்பதோடு அது இந்த போர் தொடர்பில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் இணைந்து கடந்த வியாழக்கிழமை நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் குட்டரஸ் பேசினார். எனினும் இந்த சந்திப்புக்கு முன்னதாகவே பாதுகாப்பு சபையை விமர்சித்தார்.

‘உக்ரைன் ஜனாதிபதி மற்றும் மக்களை நாம் கைவிடமாட்டோம் என்பதை கூறவே நான் இங்கு வந்துள்ளேன்’ என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபையை பாதுகாத்து பேசிய குட்டரஸ், பாதுகாப்புச் சபை முடங்கியபோதும் ஐ.நா வேறு நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்தார்.

‘ஐ.நாவின் 1,400 உறுப்பினர்கள் உக்ரைனில் உள்ளனர். அவர்கள் உதவிகள், உணவுகள், பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி வருகின்றனர்’ என்றார்.

ஐ.நா தலைவரின் வருகையின்போது கியேவின் மத்திய செவ்சன்கோ மாவட்டத்தில் மூன்று வெடிப்புகள் இடம்பெற்றன. இதில் மூவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நரக மேயர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையை அவமானப்படுத்த இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாய் உக்ரைனிய ஜனாதிபதி செலென்ஸ்கி கூறினார்.

ரஷ்யா போர் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் பல இடங்களையும் குட்டரஸ் பார்வையிட்டார். எனினும் உக்ரைனின் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது.

அங்கு புச்சா நகரில் ரஷ்ய படைகள் ஏராளமானோரை கொன்று புதைத்துள்ள புதைகுழிகளை பார்வையிட்டு வேதனை தெரிவித்த அவர், இது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், ரஷ்யா இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி முயற்சியாகவே குட்டரஸ் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அவர் ரஷ்யா சென்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உக்ரைனின் தெற்குத் துறைமுக நகரான மரியுபோலின் நிலைமை குறித்து குட்டரஸும் உக்ரைனிய ஜனாதிபதி செலென்ஸ்கியும் பேசியுள்ளனர்.

போர் ஆரம்பித்ததில் இருந்து கடுமையாகத் தாக்கப்படும் மரியுபோலில் உள்ள உருக்கு ஆலையில் ஆயிரக்கணக்கான படை வீரர்களும் பொதுமக்களும் சிக்கியுள்ளனர். அவர்களை அங்கிருந்து மீட்க ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என்று செலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

குட்டரஸ் அது குறித்து இவ்வார ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேசினார்.

உருக்கு ஆலையில் இருப்பவர்களை மீட்க ஐ.நாவுக்கும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் புட்டின் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ரஷ்யப் படையினர் அந்த ஆலையைத் தொடர்ந்து தாக்குவதால் உக்ரைனிய உள்ளூர்த் தளபதி ஒருவர் உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த ஆலைக்குள் வீரர்கள், பொது மக்களோடு காயமுற்ற சுமார் அறுநூறு பேரும் இருப்பதாக அந்தத் தளபதி கூறுகிறார்.      நன்றி தினகரன் நாகேந்திரன் தர்மலிங்கம் மீது மரண தண்டனை நிறைவேற்றம்

போதைக்கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அறிவாற்றல் குறைபாடுடைய நாகேந்திரன் தர்மலிங்கம் மீது சிங்கப்பூர் சாங்கி சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

42.7 கிராம் ஹெரொயின் போதைப்பொருளுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நாகேந்திரன் நேற்று புதன்கிழமை சூரியோதயத்துக்கு முன்னர் தூக்கில் இடப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது உடல் மலேசியாவுக்கு அனுப்பப்படவிருப்பதாகவும் இபோ நகரில் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என்றும் நாகேந்திரனின் சகோதரர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.34 வயதான தனது மகன் மீதான மரண தண்டனையை நிறுத்தும்படி அவரது தாய் நீதிமன்றத்தில் மேற்கொண்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கடைசி நிமிட மேன்முறையீடு “தொந்தரவு” தருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாகேந்திரனின் நுண்ணறிவு அளவு குறைவாக இருப்பதால் அவர் அறிவாற்றல் குறைபாடு உடையவர் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.    நன்றி தினகரன் 


சீனாவில் கடுமையாகும் கொவிட் தொற்று பாதிப்பு

சீனாவில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருகிறது. சீனத் தலைநகர் பீஜிங்கில் முதல்முறையாகப் 11 முக்கிய வட்டாரங்களில் கட்டாயப் பரிசோதனை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைநகரில் புதிதாக முப்பது பேருக்கு வைரஸ் தொற்று பதிவானதைத் தொடர்ந்து மத்தியில் இருக்கும் சோயங் வட்டாரத்தில் ஏற்கனவே பெரிய அளவில் வைரஸ் பரிசோதனை நடப்பில் உள்ளது. 

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. 

பீஜிங்கின் மிகப்பெரிய வட்டாரம் சாவ்யாங்கில் மூன்றரை மில்லியன் பேர் வசிக்கின்றனர். பெரும்பகுதி புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அந்தப் பகுதியில் இருந்தே வந்துள்ளன. 

எந்நேரத்திலும் முடக்கநிலை அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டனர்.  

நிதி மையமான ஷங்ஹாயில் திடீர் முடக்கநிலை ஏற்பட்டபோது உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதை மறந்துவிட வேண்டாம் என்று தலைநகர் பீஜிங்கில் வசிக்கும் மக்களுக்கு சமூக ஊடகத்தினர் நினைவுறுத்தி வருகின்றனர்.

ஷங்ஹாய் நகரம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக முடக்கநிலையில் உள்ளது. கடந்த திங்களன்று அங்கு புதிதாக இருபதாயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. அங்கு முடக்கநிலை இப்போதைக்கு முடிவுக்கு வரும் சாத்தியம் குறைவாகவே உள்ளது.    நன்றி தினகரன் 


நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து, சுவீடன் விருப்பம்

பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ கூட்டணியில் இணைவதற்குக் கூட்டாக விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

அவை இரண்டும் அடுத்த மாதம் நேட்டோவில் சேர விரும்புவதாக அந்நாடுகளின் ஊடகங்கள் கூறின.

ரஷ்யா 2014ஆம் ஆண்டு கிரைமியா வட்டாரத்தைக் கைப்பற்றிய பின்னர் அவ்விரு நாடுகளும் நேட்டோ கூட்டணியுடன் நெருக்கமாகச் செயல்பட ஆரம்பித்தன.  ஆயினும் நேட்டோவில் சேர விரும்பவில்லை என்று கூறி வந்தன.

தற்போது ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து சுவீடனும் பின்லாந்தும் ஒன்றாக  நேட்டோவில் சேர விரும்புவதாகச் செய்தி வெளிவந்துள்ளது.  

இருநாட்டுப் பத்திரிகைகளிலும் ஒரே நேரத்தில் வெளிவந்துள்ள அந்தச் செய்தி குறித்து இருநாட்டு வெளியுறவு அமைச்சுகளும் கருத்துரைக்க மறுத்துவிட்டன. 

இந்த இரு நாடுகளும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொடக்கம் இராணுவ அணிசேரா கொள்கையையே பின்பற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

No comments: