ஸ்வீட் சிக்ஸ்டி 12 - ஆலயமணி - ச சுந்தரதாஸ்

 .


தமிழ் திரைப் படங்களில் கதாநாயகர்களில் கதா பாத்திரங்களின் குணாம்சங்களை,பண்புகளை உயத்திக் காட்டுவதே பொதுவான நியதியாகும்.விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களே கதாநாயகனை எதிர்மறையான பாத்திரங்களில் சித்தரித்துள்ளன.அதிலும் வக்கிரம்,பொறாமை,பழி எண்ணம் இவற்றை கொண்ட கதாநாயகர்களாக கமல்ஹாசன் சிவப்பு ரோஜாக்கள்,பிரதாப் போத்தன் மூடுபனி,ரகுவரன் புரியாத புதிர்,ரஜினிகாந்த் ஜானி ஆகிய படங்களில் எண்பதுகளில் நடித்திருந்தார்கள்.ஆனால் அதற்கு இருபது ஆண்டுகள் முன்பாகவே இத்தகைய நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.அந்தப் படம்தான் ஆலயமணி.பி எஸ் வி பிக்ச்சர்ஸ் சார்பில் படம் தயாரிக்கப் பட்டது.

ஆங்கிலப் படங்களின் பாணியில் கதாநாயகனின் பாத்திரம் இந்தப் படத்தில் அமைக்கப்பட்டிருந்தது.கதாநாயகன் தியாகு நல்லவன்,செல்வந்தன்,ஏழைகளுக்கு உதவக் கூடியவன் ஆனால் பொறாமை என்னும் தீ அவன் அடிமனதில் கனன்று கொண்டே இருக்கும்.தோல்வி என்பதை அவன் மனம் எக் காரணம் கொண்டும் ஏற்காது.இதனால் மனிதன் பாதி மிருகம் பாதி என்ற வகையிலேயே அவன் வாழ்கிறான்.எதிர்பாராத விதமாக சேகரின் நட்பு அவனுக்கு கிட்டுகிறது.அவன் மீது அன்பை காட்டுகிறான்.ஆனால் சேகர் காதலிக்கும் மீனாவையே தெரியாமல் தியாகுவும் காதலிக்கிறான்.நன்றிக்கடனாக சேகரும் மீனாவும் தங்கள் காதலை விட்டு கொடுக்க தியாகுவுக்கும் மீனாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது.ஆனால் சேகரும் மீனாவும் பழைய காதலர்கள் என்பதை அறிய வரும் தியாகு உள்ளத்தில் பொறாமை தலை தூக்குகிறது.மிருக மனம் விஸ்வரூபம் எடுக்கிறது.

இவ்வாறு அமைந்த ஆலயமணி படத்தின் மூலக் கதையை பிரபல கதாசிரியர் ஜி என் பாலசுப்ரமணியம் எழுதி இருந்தார்.அவருடைய கதைக்கு திரைக்கதை அமைத்து வசனங்களையும் எழுதியிருந்தார் ஜாவர் சீதாராமன்.எம் ஏ பட்டப் படிப்பு படித்து சட்டத்தரணியாகவும் தேர்ச்சி பெற்ற இவர் நடிகராகி,பின்னர் நாவலாசிரியராகி,கதாசிரியராகி வசனகர்த்தாவாகி பின்னர் ஒரு படத்தையும் இயக்கிய காலகட்டத்தில் திடீரென காலமானார்அந்த ஜாவர் தன் திறமையை முழுமையாக இப்படத்தின் திரைக்ககதையிலும் வசனங்களிலும் காட்டியிருந்தார்.கதா பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்றாற் போல் வசனங்கள் அளவுடன் , அர்த்தத்துடன் அமைந்திருந்தன.



எந்த கதாநாய நடிகரும் துணிந்து நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தை சிவாஜி தன் நடிப்பின் மீதுள்ள நம்பிக்கையினால் ஏற்று நடித்திருந்தார். கத்தி மேல் நடப்பது போன்ற வேடம் .அதனை பக்குவமாக கையாண்டிருந்தார் சிவாஜி. மேல் நாட்டு சாயல் கொண்ட ஜென்டில்மென்ட் கேரக்டர். அதனை அழகாக செய்திருந்தார்.முகபாவம்,குரல்,அங்க அசைவு என்று ஒன்றிலும் மீதி வைக்கவில்லை அவர்.அவருக்கு இணையாக எஸ் எஸ் ராஜேந்திரன் சற்றும் குறையாமல் நடித்திருந்தார்.இருவரும் காதலிக்கும் மீனாவாக சரோஜாதேவி மிகை இல்லாத நடிப்பை வழங்கி இருந்தார்.


இதிலும் வில்லன் வேடம்தான் எம் ஆர் ராதாவுக்கு!’பாவம் குறைய குறைய பணமும் குறையுமே’ என்று அவர் சொல்வது பன்ச். வில்லனாக படங்களில் வரும் வீரப்பா இதில் நல்லவராக வருகிறார். இவர்களுடன் விஜயகுமாரி,நாகையா,புஷ்பலதா,டி ஆர் ராமசந்திரன்,எம் வி ராஜம்மா ஆகியோரும் நடித்திருந்தனர்.

கவிஞர் கண்ணதாசன்,மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்,ராமமூர்த்தி வெற்றி கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்ந்தது.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா,தூக்கமும் கண்களை தழுவட்டுமே,கண்ணான கண்ணனுக்கு அவசரமா, மானாட்டம் தங்க மயிலாட்டம் பாடல்கள் லட்டு மாதிரி இன்றும் இனிக்கிறது.பொண்ணை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர்உயிரே பாடலில் சிவாஜியின் முகபாவத்தை ரசித்தால்,சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடலில் சிவாஜியின் நடக்கும் ஸ்டைலை ரசிக்கலாம்.டி எம் எஸ்,சுசிலா,ஜானகி,சீர்காழி கோவிந்தராஜன்,ஈஸ்வரி என்று பல குரல்கள் பாடல்களை இசைத்தன.



படத்தை இயக்கியவர் கே சங்கர்.ஏற்கனவே ஒரே வழி ,கைராசி என்ற இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இவருக்கு சிவாஜியின் நடிப்பில் இப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டியது.அதனை தவற விடாமல் படத்தை நேர்த்தியாக இயக்கி இருந்தார்.ஆலயமணியின் வெற்றி சங்கரை நட்சத்திர டைரக்டர் ஆக்கியது.அவர் படங்களுக்கு தொடர்ந்து ஒளிப்பதிவு செய்யும் தம்பு இப் படத்தையும் ஒளிப்பதிவு செய்தார்.

பிரபல நடிகர் வில்லன் வீரப்பா படத்தை தயாரித்திருந்தார்.அவர் தயாரித்த படங்களிலேயே மாபெரும் வெற்றியைத் தந்த படம் என்று ஆலயமணியை சொல்லலாம்.பின்னர் இப் படத்தை ஹிந்தியில் திலீப்குமார் நடிப்பில் ஆத்மி என்ற பெயரால் தயாரித்தார் வீரப்பா.ஆனால் தமிழில் சிவாஜி,எஸ் எஸ் ஆர் காட்டிய அழுத்தத்தை ஹிந்தியில் காட்ட முடியாததால் படம் தோல்வி கண்டது.ஆனால் தமிழைப் பொறுத்த வரை அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்றும் டாண் ,டாண் என்று ஆலயமணியின் வெற்றி மணி ஒலிக்கிறது.




No comments: