ஏன்மூட நம்பிக்கை எண்ணங்கள் மாறாதோ?











நிறைவாகத் திருமுறையைப் பெருளுணர்ந்து ஓதவேண்டும்!

நெஞ்சிருக்கும் பரம்பொருளை நினைந்துருகித் தொழவேண்டும்!

முறையாக உன்னைநீயாரென்று அறியவேண்டும்!

முன்கோபம் காமத்தொடு குரோதமும் மறக்கவேண்டும்!


துறைபோன விழுமியங்கள் தவறாது ஓம்பவேண்டும்!

சொன்னதிவை செய்யாது கோயிலிலோர் தூதரொடு

இறைவனிடம் வேண்டிவிட்டால்  எல்லாமும் சாத்தியமோ?

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

அகத்தூய்மை யுடனொருவர் அர்ப்பணிப்புட னியற்றிவரும்

அன்பான அகப்பூசை ஆண்டவனும் ஏற்பரன்றோ?

இகத்தினிலே பரம்பொருளை இவ்வண்ணம் வழிபட்டு

இறைவனவன் திருவடியில் இணைந்தோரும் பலரன்றோ?.

 

காதலிக்கு முத்தமிடக் கண்முன்னே செல்லாது

காகிதங்கள் கொண்டுசெலும் ஊழியரைக் கும்பிட்டுத்

தூதனாகச் சென்றுஇதுஎன்  முத்தமென்றுசொல்லியவள்

சொக்கையையுஞ் சிவப்பேற முத்தமிடச் சொல்வாரோ?.

 

இதுபோலே இறைவனிடம் இறைஞ்சுவதற் கொருதரகர்

இடையினிலே தேவையென்று சைவமென்றுஞ் சொன்னதில்லை!

கதிநீயே என்றாராக் காதலுடன் மெய்யுருகிக்

கண்ணீரும் பெருகிடவே கும்பிடுதல் வழிபாடு!

 

சைவநூல்கள் எவையேனும் இச்செயலை இயம்பவில்லை

சாத்திரங்கள் கூறவில்லை! சடங்குகளாய் வகுத்திட்டோர்

கைவண்ணம் தொடருதையா! கடவுளிடம் நேரடியாய்க்

கசிந்துருகி வேண்டிநின்று கழல்கலந்தோர் பலரன்றோ?.

 


விடையேறிப் பெருமானின் அருள்வேண்டி வேண்டுதலைத்

தடையின்றி அவனிடமே தமிழ்கொண்டு  கேட்டிடுவீர்!

இடையிலொரு தெரியாத வடமொழிதான் வேண்டுமென்று

எடைபோட முடியாத  திருமுறைகள் சொல்லவில்லை!

               


 








தெரியாத மொழியாலே மந்திரங்கள் செப்பாது

தேன்தமிழில் மெய்யுருகித் திருப்பாவால் அர்ச்சித்துப்

புரியாத மொழிபேசும் இடைத்தரகர் நாடாது

பொன்னொளிசேர்  திருவடியை அடைந்தவர்கள் நாயன்மார்!

 

 

 



 




……………’சிவஞானச் சுடர்பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

 

No comments: