அஞ்சலிக்குறிப்பு : இரக்கத்தின் ஊற்றாக விளங்கிய மகாதேவி ஜெயமணி முருகையா அம்மையார் முருகபூபதி


யாழ்ப்பாணத்தில் பிரபல சட்டத்தரணியாக விளங்கிய  சோமசுந்தரம்  அவர்களுக்கும்   திருமதி நவமணி சோமசுந்தரம் அவர்களுக்கும் செல்வப் புதல்வியாக 1939 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி  பிறந்திருக்கும் எமது மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய  அம்மா திருமதி மகாதேவி ஜெயமணி அவர்கள்  உள்ளத்தளவிலும் மகா தேவியாகவே வாழ்ந்து எம்மனைவரிடமிருந்தும்  இம்மாதம் 20 ஆம் திகதி  விடைபெற்றுவிட்டார்.

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னர்,  1967 ஆம் ஆண்டில்  எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய உயர் திரு முருகையா அய்யா அவர்களை வாழ்க்கைத்துணைவராக கரம் பிடித்த அம்மா, துளசி, ரொகான் வள்ளுவன் ஆகிய இரண்டு செல்வப்புதல்வி, புதல்வனை எமது சமூகத்திற்கு வழங்கி,  அவர்களுக்கும் உரிய வாழ்க்கைத் துணைகளை தேடித்தந்துவிட்டு, இரண்டு பேரக்குழந்தைகளுக்கும் பேத்தியாராகி, நிறைவான  வாழ்க்கையையே வாழ்ந்து விடைபெற்றிருக்கிறார்.

ஏறக்குறைய 83 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்திருக்கும் அம்மா,


இனிவாழப்போவது விண்ணுலகில் என்ற குருட்டு நம்பிக்கையுடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை பதிவுசெய்கின்றேன்.

அம்மாவின் வாழ்க்கைப்பாதை நெடியது. அதில் அவர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்திருப்பவர்.  அவர் பற்றி சொல்வதற்கு  எனக்கு மட்டுமல்ல அவரை நன்கு தெரிந்த பலருக்கும்   பல சுவாரசியமான கதைகள் இருக்கும்.

என்னைப்பொறுத்தவரையில் அவர் ஒரு சிறந்த கதை சொல்லி.

நீண்டகாலமாக  வோர்க்கரின் துணையுடன் வீட்டினுள் வலம்வந்தவர். அவரைச் சந்திக்கச்செல்லும் சமயங்களில்,  அவர் சமையலறையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து காய், கனி, கீரை நறுக்கியவாறே தனது வாழ்வியல் அனுபவங்களை சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார்.

அவர்  தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தெய்வ பக்தியுடன் வளர்ந்தவர்.  உயர் கல்வியை முடித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில், கலைப்பீடத்தில் அவர் பயின்றபோது, அவரது பேராசிரியர்களாக  விளங்கிய சிலர் மார்க்ஸீய, லெனினிஸ,  ஸ்டாலினிஸ, சோஷலிஸ, கம்யூனிஸ சிந்தனை கொண்டிருந்தவர்கள்.

அவர்களிடம் கற்ற பல மாணவர்களுக்கும் அந்த இஸங்களின் மீதுதான்  ஆர்வம் இருந்தது. அம்மாவையும் அவர்கள் தங்கள் இஸத்தின் பாதையில் அழைத்தபோது, தனக்குத் தெரிந்தது ஆன்மீக இஸமும், அம்மன் இஸமும்தான். நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள், நான் எனது பாதையில் செல்கின்றேன் என்று தனது இளமைக்காலம் முதல் ஆன்மீகப்பாதையிலேயே  வளர்ந்தவர்.


அதனால், அவருக்கு மிகவும் பிடித்தமான இஸமாகியிருந்தது மனிதநேயமும், கருணை உள்ளமும் இறை நம்பிக்கையும்தான்.

அவருடன் பழகியிருக்கும் பலருக்கு அவரது உள்ளத்துணர்வுகள் நன்கு தெரியும்.

அவர் எந்தவொரு மேலைத்தேய  சிந்தனைகளுக்கும் செல்லாமல், தனது இளமைக்காலம்   முதல்  தான் பெற்ற கீழைத்தேய சிந்தனைகளையே  தனது வாழ்வியல் இஸமாக பற்றிக்கொண்டிருந்தவர்.

அம்மாவின் பெயர்,  ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற  பிரபல்யமான ஒரு பெரிய நூலிலும் இடம்பெற்றுள்ளது.

அதனை எழுதியவர் பிரான்ஸில் புகலிடம் பெற்று சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த தோழர் புஷ்பராஜா.  அந்த நூலில் அம்மாவின் பெயர் கிளியக்கா என்றுதான் இருக்கும்.  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை  முன்னணியின் செயல் அதிபர் தோழர் பத்மநாபாவின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரிதான் அம்மா அவர்கள்.

அம்மாவால் லண்டனுக்கு படிக்க அனுப்பிய பத்மநாபா,   தாயகம்


திரும்பி இனவிடுதலைப்போரில்  ஈடுபட்டவர்.    எதிர்பாராதவகையில்  1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  பத்மநாபாவும் மேலும் சிலரும் சென்னையில் கொல்லப்பட்டபோது,  அம்மா மிகுந்த வேதனையில் துடித்தார்.

சென்னைக்குச்செல்லும் சமயங்களில் சகோதரன் பத்மநாபாவுக்காக அம்மா பரிசுப்பொருட்கள் ,  உணவுப்பண்டங்கள் எடுத்துச்செல்வதும் வழக்கம்.

அவற்றை கொடுத்தால்,   “ கும்பகோணத்திலிருக்கும் சகதோழர்களுக்கும் கொடுத்து பகிர்ந்துகொள்வேன் அக்கா  “ என்பாராம்.

அம்மா அவர் பற்றி சொல்லியிருக்கும் கதைகளும் அரசியல் செய்திகள்தான்.

எனினும் அம்மா, நீடித்த போரில் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் உதவும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுக்கு தன்னாலியன்ற உதவிகளையே  வழங்கி வந்தவர்.

அத்துடன் ஆலயப்பணிகள், ஆன்மீகப்பணிகளுக்கும் உதவுவதில் முன்னிற்பவர்.

நாம் இங்கிருக்கும் கருணை உள்ளம் கொண்ட அன்பர்களுடன்  33 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியை எமது தாயகத்தில் பெற்றுவரும் மாணவர்களுக்கும் வழங்கி வந்தவர்.

அம்மாவின் அருமைக்கணவர் முருகையா அய்யா அவர்கள் எமது கல்வி நிதியத்தின் தொடக்க  காலத்தில் தலைவராக இருந்ததுடன், இற்றைவரையில் அதன் கணக்காய்வாளராகவும் விளங்குகிறார்.  அவர்களின் அருமைப்பிள்ளைகள் துளசியும், ரொகானும் இவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் அம்மாணவர்களுக்கு இற்றைவரையில் உதவி வருகின்றனர். அவ்வாறு உதவிபெற்ற பல மாணவர்கள் தற்போது நல்ல நிலையில் இருக்கின்றனர்.

எமது கல்வி நிதியம், இலங்கையில் வடக்கு – கிழக்கில் வருடாந்தம்  மாணவர் ஒன்றுகூடல் நடத்தும்போது,  அந்த சந்திப்புகளுக்கு வரும் தாய்மார் மற்றும் மாணவச்செல்வங்களுக்கு நாம் மதிய விருந்துபசாரம் வழங்குவோம். அவர்கள் யாழ். குடாநாட்டிலும், முல்லைத்தீவிலும் கிழக்கு மாகாணத்தில் பல ஊர்களிலுமிருந்து வருபவர்கள்.

அதற்கான செலவுகளை நாம் மாணவரின் கல்வித்தேவைக்காக சேகரிக்கும் நிதியிலிருந்து பெறுவதில்லை என்பது எழுதாத விதி.

அதனால், அந்தச் செலவுகளை சமாளிப்பதற்கு உதவிய அன்பர்களின் வரிசையில் அம்மா முதலிடத்திலிருந்தார் என்பதற்கு  நானும் ஒரு சாட்சி.

அந்த உதவிகளை அம்மா தனது ஓய்வூதியத்திலிருந்துதான் வழங்கினார்.

இறுதியாக,  சமகாலத்தில் தீவிரமடைந்த கொரோனோ பெருந்தொற்று நெருக்கடியினால்,  எமது தாயகத்தில் மூவின மக்களும் பாதிக்கப்பட்டபோது, இங்கு வாழும் மூவினத்தவர்களும் இணைந்து உருவாக்கிய Sri lanka Covid Aid Australia அமைப்பின் ஊடாகவும்  அம்மா உதவிகளை வழங்கினார்.

இதுதான் அம்மா தனது வாழ்வில் கற்றுக்கொண்ட மனிதநேய இஸம். அரசியல்  தத்துவார்த்தங்களை விட்டுவிட்டு, மனிதநேயமே சிறந்த தத்துவார்த்தம் என்பதை தனது பேச்சிலும் செயலிலும் காண்பித்து எமது மனங்களில் உயர்ந்து நின்றவர் எங்கள் அனைவராலும்  ஆழ்ந்து நேசிக்கப்பட்ட  அம்மா.

அம்மா அவர்கள்  இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் அதன்பின்னர் சாம்பியாவிலும் வாழ நேர்ந்த பின்னர், அவுஸ்திரேலியாவுக்கு குடும்பத்தினருடன் 1982 இல் புலம்பெயர்ந்தார்.

இங்கு அரசாங்க பரீட்சையில்  தோற்றி, அதில் தேர்வுபெற்றதும் அம்மா தெரிவுசெய்துகொண்ட தொழிலும் பொதுமக்கள் தொடர்போடு சம்பந்தப்பட்டதாக அமைந்தது அம்மாவின் நல்லியல்புகளுடன் பொருந்தியிருந்தது.

அம்மா Centre Link எனப்படும்  சமூகப்பாதுகாப்பு நிறுவனத்தில்  ( Social Security ) இணைந்திருந்தவர்.  தனது வாழ்நாளில் கல்விப் பின்புலத்திலும் சமூக பின்புலத்திலும் தொழில் பின்னணியிலும் அம்மா பொதுமக்களுடன்  இணைந்திருந்தவர். அதிலும் கருணை உள்ளத்துடனும் மனிதநேயப்பணிகளுடனுடன் வாழ்ந்தவர்.

மெல்பன் சிவா – விஷ்ணு ஆலயம், ரொக்பேங் குன்றத்துக்கு குமரன் ஆலயம் என்பனவும் அம்மாவின் சேவைகளை பெற்றிருக்கின்றன. 

அம்மா , அம்மன் மீதும் சத்திய சாயிபாபா மீதும் அளவுகடந்த பற்றுக்கொண்டிருந்தவர் என்பதையும் அனைவரும் நன்கு அறிவோம்.

கடந்த 24 ஆம் திகதி அம்மா தினமும் வணங்கிய பகவான் சத்திய சாயிபாபா சமாதியடைந்த தினமன்றே இறுதிப்பயணத்தை மேற்கொண்டதும் தற்செயலானது.

இனி எஞ்சிருக்கும் காலத்தில் அம்மாவின் நினைவுகள் பசுமையாக எம் மத்தியில்  படர்ந்திருக்கும். அம்மாவின் நினைவுகளுக்கு மரணமில்லை.

---0---

No comments: