உலகச் செய்திகள்

மரியுபோல் நகரம் ரஷ்யா வசமானது

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புது தடை

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதம் வழங்க பிரிட்டன், அமெரிக்கா உறுதி 

காசா மீது இஸ்ரேலிய படை வான் தாக்குதல்



மரியுபோல் நகரம் ரஷ்யா வசமானது

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மரியுபோலில் உள்ள உருக்காலையைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம் என்று ரஷ்யப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அறிவித்திருப்பதை அடுத்து, மரியுபோல் நகருக்கு ஒரு புதிய சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

மரியுபோலை கைப்பற்றியதற்காக ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி புடின் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

மரியுபோல் நகரில் உள்ள இரும்பு உருக்காலை மீது தாக்குதல் நடத்தாமல், அதனை கைப்பற்றுமாறு ரஷ்ய படைகளுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.   நன்றி தினகரன் 





ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புது தடை

ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தவிர்க்க முயல்வோரைக் குறிவைத்து இம்முறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கள் 40 பேர் மீதும் நிறுவனங்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதித்துறை கூறியது.

மின்னிலக்க நாணய நிறுவனத்தைக் குறிவைத்தும் முதன்முறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தனிநபர்களின் அமெரிக்காவில் உள்ள சொத்துகள் முடக்கப்படும். அமெரிக்கர்கள் அவர்களோடு வர்த்தகம் செய்யவும் தடை விதிக்கப்படும்.

ரஷ்யாவின் ட்ரான்ஸ்–கெப்பிட்டல் வர்த்தக வங்கி, ரஷ்யச் செல்வந்தர் கான்ஸ்டண்டீன் மலோபேயர், மின்னிலக்க நாணயத்தில் உலகின் மூன்றாவது பெரிய நிறுவனமான பிட்ரிவர் உள்ளிட்டவையும் தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேற்கத்திய நாடுகள் விதிக்கும் தடைகள் சட்டவிரோதம் என்று கண்டித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உலக வர்த்தக அமைப்பிடம் அது பற்றிப் பேசவிருப்பதாக குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 






உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதம் வழங்க பிரிட்டன், அமெரிக்கா உறுதி 

அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகியவை உக்ரைனுக்கு இன்னும் கூடுதலான ஆயுதங்களை வழங்க உறுதி அளித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் நட்பு நாடுகளைச் சேர்ந்த ஏனைய தலைவர்களும் வீடியோ தொழில்நுட்பம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரஷ்யப் படையெடுப்பு புதிய கட்டத்தை அடைந்துள்ளதாக அவர்கள் கூறினர்.

கடந்த வாரம் அறிவித்ததுபோன்று, அமெரிக்கா உக்ரைனுக்கு மீண்டும் 800 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ நிவாரண உதவித் திட்டத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தத் திட்டம் கைகூடினால், இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா 3 பில்லியன் டொலருக்கு மேல் உதவி வழங்கியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் ஜோன்சன், உக்ரைனுக்குக் கூடுதல் இராணுவ ஆயுதங்கள் தேவைப்படுவதாகக் கூறினார். கனடியத் தரப்பிலிருந்து, கனரகப் போர் வாகனங்கள் அனுப்பப்படும் என்று ட்ரூடோ தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




காசா மீது இஸ்ரேலிய படை வான் தாக்குதல்

இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று காசா பகுதி மீது தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுத உற்பத்தித் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் பாதிப்புகள் பற்றி உறுதி செய்யப்படவில்லை என்று பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.

முற்றுகையில் இருக்கும் காசாவில் இருந்து கடந்த திங்கட்கிழமை தெற்கு இஸ்ரேல் மீது வீசப்பட்ட ரொக்கெட் குண்டு ஒன்று இடைமறிக்கப்பட்ட நிலையிலேயே இஸ்ரேலின் இந்த வான் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.நிலத்தில் இருந்து வானைத் தாக்கும் ஏவுகணை மூலம் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு மத்தியில் கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற முதல் தாக்குதலாக இது உள்ளது.    நன்றி தினகரன் 








No comments: