ஸ்வீட் சிக்ஸ்டி 11 - ராணி சம்யுக்தா- - - ச சுந்தரதாஸ்

 .

இந்தியாவில் பிரபமான காதல் கதைகளில் ஒன்று பிரிதிப்பிராஜன்,சம்யுக்தை கதை.ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த இவர்களின் வரலாற்று சம்பவங்களை 1962ம் ஆண்டு சரஸ்வதி பிக்சஸார் ராணி சம்யுக்தா என்ற பெயரில் படமாகத் தயாரித்தார்கள்.நடிகை பத்மினியின் உறவினரான ஏ சி பிள்ளை என்பவர் படத்தை பத்மினியின் தாயான சரஸ்வதியின் பேரில் சரஸ்வதி பிக்சர்ஸ் என்ற என்ற நிறுவனத்தைத் தொடங்கி படமாகத் தயாரித்தார்.இதன் காரணமாக படத்தின் கதாநாயகியாக பத்மினி நடித்தார்.அவருடன் அவரின் தங்கையான ராகினியும் படத்தில் இடம்பெற்றார்.பத்மினி கதாநாயகியாக முதல் முதலில் நடித்த மணமகள் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் எஸ் வி சகஸ்ரநாமம்.இந்தப் படத்தில் பத்மினியின் தந்தையாக அவர் நடித்தார்.

படத்தின் கதாநாயகனாக,பிரிதிவிராஜன் மன்னனாக நடித்தவர் புரட்சி நடிகர் எம் ஜி ஆர்.சமூகப் படங்களில் தீவிரமாக நடிக்க தொடங்கி விட்ட எம் ஜீ ஆரின் மீதமிருந்த ஒரு சில சரித்திர படங்களில் ஒன்றாக இது வெளியானது.படத்தில் அவரின் அண்ணனான எம் ஜீ சக்கரபாணியும் நடித்திருந்தார்.இப் படத்திற்கு பிறகு அவர் பல ஆண்டுகள் படங்களில் நடிக்கவே இல்லை.இவர்களுடன் நம்பியார்,எம் கே முஸ்தபா,தங்கவேலு,எம் என் ராஜம்,ஆகியோரும் நடித்திருந்தனர்.

இவர்கள் எல்லோரும் நடித்த இப் படத்தின் சிறப்பு அதில் இடம் பெற்ற வசனங்களினாலும்,பாடல்களினாலுமே அடையாளம் காணப்பட்டது.இரண்டையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.வசனங்கள் எழுதுவதில் தனக்கிருந்த திறமையை இதில் வெளிப்படுத்தி இருந்தார் அவர்.காதல் காட்சிகளில் மட்டுமன்றி,அரசியல் காட்சிகளிலும் அவரின் வசனங்கள் அருமையாக அமைந்திருந்தன.அரசியலில் காணப்படும் கபடத்தனம்,சூழ்ச்சி,போட்டி ,பொறாமை எல்லாவற்றையம் மன்னன் ஜெயசந்திரனாக நடிக்கும் சகஸ்ரநாமம் மூலமும் மந்திரியாக நடிக்கும் சக்கரபாணி மூலமாகவும் புட்டு புட்டு வைத்திருந்தார் கண்ணதாசன்.இன்றைய கால அரசியலுக்கும் பொருந்தும் படி அவர் வசனங்கள் அமைந்தது ஆச்சரியம் தான்!



தேடித் தேடி அலைந்தாலும் ஓடிவர வேண்டிய ராஜ்யம் உங்களிடம் தானே,கை போக முடியாத இடத்திலும் கணை போகும் அல்லவா பொறுப்பை பகிர்ந்து அளித்து விட்டு தாங்கள் டெல்லியிலே இருக்கலாம் என்ற வசனம் அன்று அண்ணா டெல்லி மத்திய அரசிடம் மாநில சுயாட்சி கேட்பதை வரவேற்கும் விதமாக எழுதப் பட்டிருந்தது.

நண்பர்களை பகைவர்கள் ஆக்குவதும்,பகைவர்களை நண்பர்கள் ஆக்குவதும் பதவி தான் நெஞ்சை திடப்படுத்திக் கொள்,அரசியலில் வெற்றி முக்கியமே தவிர கையாளும் வழிகளில் உள்ள கண்ணியம் பெரிதல்ல,காட்டிக் கொடுப்பதல்ல கைக் கொள்வது மண்டலத்தையே கட்டி ஆள்வது அதனை மகளா தடுப்பது,வானத்து நட்சத்திரம் கைக்கு வரும் என்று நம்பி மாட புறாவை பலியிட்டு விடாதீர்கள்,பிணங்களுக்கு மேல் நடந்து சென்று தான் அரசுரிமை அடையமுடியும் என்றால் அதில் சொந்தபப் பிணம் எது என்று தேடிக் கொண்டிருக்க மாட்டான் சங்கரராய்,உங்கள் எல்லோருக்கு சேர்த்து நான் ஒருவனே சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தனியாக உங்களுக்கு என்று சிந்தனை தேவை இல்லை .செத்த பிறகு தானே வரலாறு இருக்கும் போதே நான் எழுதுகிறேன் என்பன போன்ற பல அரசியல் வசனங்கள் படம் முழுதும் விரவிக் கிடந்தன .
அதே போல் காதல் வசனங்களும் ரசனையாக அமைந்தன.



நிலவென்ன பேசும்,ஓ ஓ வெண்ணிலா வா வெண்ணிலா வண்ண பூச்சூட வா வெண்ணிலா ,பாவை உனக்கு சேதி தெரியுமா அலை கடல் போல் பாயும் எனது உள்ளம் தெரியுமா,மன்னவர் முகம் பாரம்மா,சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மாநிலமே ஜீவனுள்ள பெண் இனத்தை வாழ விட மாட்டாயா போன்ற பாடல்கள் திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் இசையில் இனிமையாக இசைத்தன.டீ எம் எஸ்,சுசிலா,ஜமுனாராணி,டீ எஸ் பகவதி,ஏ பி கோமளா ஆகியோரின் குரல்கள் பாடல்களை மெருகு ஊட்டின.

சம்யுக்தாவாக வரும் பத்மினி காதல் காட்சிகளிலும் சோக காட்சிகளிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.காதலிப்பதுடன் மொஹமத் கோரியாக வரும் நம்பியாருடன் மோதும் வேடம் எம் ஜி ஆருக்கு.இரண்டையும் அவர் விட்டு வைக்கவில்லை.!நிதானமான நடிப்பு மந்திரியாக வரும் எம் ஜீ சக்கரபாணிக்கு.சபாஷ் !கன்னோசியின் மன்னன் ஜெயசந்திரன் வேடம் சகஸ்ரநாமத்துக்கு நன்றாக அமைத்தது.தங்கவேலு ராகினி ஜோடியின் நகைச்சுவை ரசிகர்களை சிரிக்க வைத்தது.



கண்ணதாசன் எம் ஜீ ஆருக்கு கதை வசனம் எழுதிய கடைசிப் படம் ராணி சம்யுக்தா.படத்தின் முடிவில் எம் ஜீ ஆர் இறப்பதை அவரின் ரசிகர்களினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இது படத்தின் வெற்றியை பாதித்தது.

படத்தை இயக்கியவர் டி யோகானந்த்.1922ம் ஆண்டு ஏப்ரல் 16ல் பிறந்த இவருக்கு இது நூற்றாண்டாகும்.மருமகள்,மதுரை வீரன்,பார்த்திபன் கனவு,நான் வாழ வைப்பேன்,வளர்பிறை,பரிசு என்று பல படங்களை இயக்கிய யோகானந்த் தெலுங்கில் மட்டும் என் டீ ராமராவ் நடித்த 17 படங்களை டைரக்ட் செய்து சாதனை புரிந்துள்ளார்.


No comments: