அணிநடை எருமை — ஆர். பாலகிருஷ்ணன்

 .

எத்தனை முறை தோண்டினாலும் சங்கச்சுரங்கத்தில் ஏதோ ஒன்று புதிதாகக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. எப்படித் தவறவிட்டோம் என்ற ஆதங்கம்; இப்போதாவது கவனித்தோமே என்ற ஆறுதல். ‘அண்ணல் ஏறு' என்றும் 'அணிநடை எருமை' என்றும் எருமைக்குப் பொன்னாடை போர்த்திய இலக்கியம் வேறெதுவும் இருக்கிறதா?   அண்ணல் என்பது எவ்வளவு பெரிய வார்த்தை. தலைமை. அரசன். பெருமையில் சிறந்தோன். முல்லைநிலத் தலைவன். கடவுள் என்று பொருள்விளக்கம் அளிக்கிறது தமிழ்க்களஞ்சியம். 2020 செப்டம்பர் 5-ம் தேதி அணிநடை எருமை பற்றி இணைய வழியில் இரண்டு மணி நேரம் கொட்டித்தீர்த்தேன். மனசு ஆறியது. 

பண்பாட்டிற்கும் மொழிக்குமான உறவு எத்தகையது? வார்த்தைகளைப் பண்பாடு செதுக்குகிறதா? அல்லது, பண்பாட்டு அசைவுகளை வார்த்தைகள் வழிநடத்துகின்றனவா?   சங்க இலக்கிய அணி நடை எருமைக்கும், 'எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கான்', 'எருமை மாட்ல மழை பேஞ்ச மாதிரி’, ‘சொரண கெட்ட எருமை', 'மேய்க்குறது எரும, அதுல என்ன பெரும' என்ற சமகாலச் சொல்லாடல்களுக்கும் எவ்வளவு தூரம்! அது நாம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சறுக்கிவிழுந்த தூரம். 
நீர் எருமை இந்தியாவின் பெருமை. 6300 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டு விலங்காகப் பழக்கப்பட்டது. சிந்துவெளி மக்கள் மெசபடோமியாவுக்கு எருமைகளை ஏற்றுமதி செய்தார்கள்.  சிந்துவெளி முத்திரைகளில் எருமையின் உருவம்: எருமைக்கொம்பைத் தலையில் சூடிய மனிதன்;  செம்பில் செய்த எருமை உருவ பொம்மை: மண்பாண்டங்களில் எருமை ஓவியங்கள்; வழிபாட்டு முறையில் எருமைப் பலி. 



 

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் காட்டெருமைக் கொம்புகளைத் தலையில் அணிந்து ஆடும் முரியா என்ற திராவிடப் பழங்குடிகளைப் பார்த்தேன். சிந்துவெளிப் பொறிப்பு நினைவுக்கு வந்தது. நீலகிரித் தோடர்களின் உலகம் எருமைகளால் ஆனது. எருமைகளே தோடர்களின் செல்வக்குறியீடு. எருமைப் பால்தொழுவம்தான் புனிதக் கோயில். ஈமச் சடங்குகளில் எருமைப்பலி. 




இதுவரை எனது புரிதல் இது தான். சிந்துவெளிப் பண்பாடு, சங்க இலக்கியம், பழங்குடிகளின் வாழ்வியல் ஆகிய மூன்று தளங்களில் ஒரு கருத்தியல் முன்னிலை பெறுகிறது என்றால் அது இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டின் தொப்புள்கொடிகளோடு தொடர்புடைய  அடித்தளங்களில் ஒன்று என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன். எருமை சார்ந்த பண்பாட்டு மரபும் அப்படிப்பட்ட ஓர் அடையாளம். 
எருமைக்கொம்புகள் சங்ககாலத் திருமணச் சடங்குகளில் வழிபாட்டுக்குரிய வளமைக்குறியீடு. இப்போது, எருமை எதிரே வந்தால் சகுனம் சரியில்லை என்று தெறித்து ஓடுகிறோம்.  எங்கள் வீட்டில் ஓர் எருமை வளர்த்தோம். பிறகு அந்த எருமையை விற்றுப் பசுமாடு வாங்கியது திடீரென்று நினைவுக்கு வந்தது. இவ்வளவு காலம் கழித்து, அண்மையில் தான் அம்மாவிடம் தொலைபேசியில் காரணம் கேட்டேன். "எருமை மாடு குடும்பத்திற்கு ராசி இல்லை" என்று ஜோசியர் சொன்னாராம். ஆனால் எனக்கு எருமையைப் பிடிக்கிறது. 
“கோடை விடுமுறையில் எருமைகளோடு குளித்த தாமரைக்குளம். 
‘நல்லது' என்று மிதித்த
யானை லத்திகள்"
என்று கவிதை எழுதினேன் ('அன்புள்ள அம்மா', 1991). 
1985-ல் ஒடிசாவில் கட்டாக் நூலகம் ஒன்றில் எதேச்சையாகக் கண்ணில்பட்டது நீலகிரி தோடர்கள் பற்றிய நூல். எருமைகள் பற்றிய எனது முதல் வாசிப்பு. 1988-ல் கோராபுட்டில் ஒரு பழங்குடி கிராமத்தில் பலி எருமையின் இறைச்சியைப் பங்கிடுவதைப் பார்த்தேன் 1989-ல் கதபா பழங்குடிகளின் நீத்தார் நினைவுச் சடங்கில் மொய்க்கொடையாகக் கைமாறும் உபரி எருமை சுழல் விநியோக முறையை ஆராய்ந்தேன். 1989-ல் ராஞ்சியில் இந்தியப் பழங்குடிகள் விழாவில் நீலகிரி பழங்குடிகளைச் சந்தித்துப்பேசினேன். 1990களில் நீலகிரி பழங்குடி கிராமங்களுக்குச் சிலமுறை சென்றேன். ஆனால் சிந்துவெளிக்கும் பழந்தமிழகத்திற்குமான தொடர்புகள் பற்றிய புரிதல் எனக்குள் துலங்கிய பிறகே தோடர்களின், எருமைகளின் புலப்பெயர்வு திசைகளை இடப்பெயர் சான்றுகளால் நிறுவ முடியுமா என்று தோண்டித் துருவினேன். தோடா எருமைகளின் மரபணு பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் இப்போது உதவுகின்றன. 
அணிநடை எருமைக்காகக் கணிப்பொறியில் எனது பழைய ஆவணங்களைத் துழாவினேன். குறிப்பேடுகளைப் புரட்டிப் பார்த்தேன். தோடர்கள், தோடா எருமைகள், துளு மொழிப்பகுதிகளின் கம்பலா என்ற எருமைப் பந்தயம், கேரளத்தின் எருமை ஓட்டம், ஒடிசாவின் சிலிகா எருமைகள் என்று எவ்வளவு தரவுகளைத் தேடித்தேடிக் குறிப்பெடுத்திருக்கிறேன், எத்தனை இரவுகள், விடுமுறைகள் இப்படிக் கழிந்தன. இவற்றையெல்லாம்  எப்போது எழுதப்போகிறேன்? தமிழ் நெடுஞ்சாலை மலரும் நினைவுகள் மட்டுமல்ல; வளரும் கனவுகளும்கூட. 




இந்தியாவில் 11 கோடி எருமைகள். எண்ணிக்கையில் உலகில் முதலிடம். இந்தியாவின் பால் உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு எருமைப்பால். பசுமாட்டுப்பால் உற்பத்தியில் சீமைப்பசு எனப்படும். கலப்பு மாட்டுப்பால்தான் அதிகம். ஆனால் எருமை வகைகளில் சீமை எருமை என்று ஏதுமில்லை. எருமை 100 விழுக்காடு இந்தியன்! பாக்கெட் பால் பெரும்பாலும் பசும்பால், எருமைப்பால் இரண்டும் சேர்ந்த கலவைதான் என்பது போன்ற தகவல்களை எனது ஆட்சிப்பணி நண்பர் தருண் ஸ்ரீதர் எழுதிய கட்டுரை மூலம் அறிகிறேன். ஒன்றிய அரசின் கால்நடை வளர்ப்புத்துறைச் செயலராக இருந்தவர். 'Don't allow it to be cowed down' என்ற இவரின் கட்டுரைத் தலைப்பே கவர்ந்திழுத்தது. 'மெரிட்' படி பார்த்தால் எருமைதான் அருமை என்று அடித்துச் சொல்கிறார் ஸ்ரீதர். 
2018-19-ம் ஆண்டு இந்தியாவி லிருந்து ஏற்றுமதியான எருமை இறைச்சியின் மதிப்பு 25,168.31 கோடி ரூபாய். "பசு மாடுகளை நேசிப்போர் எருமைகள்மீது காட்டும் பாராமுகத்தைக் கண்டு நான் அதிர்ச்சிஅடைகிறேன்" என்கிறார் மேனகா காந்தி. "எருமை இனப்படுகொலை உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 'பசு புனிதமானது என்றால் எருமையும் புனிதமானது' என்பது மேனகா காந்தியின் நிலைப்பாடு. இதில் எனது அக்கறை மாட்டிறைச்சி பற்றியது அல்ல. எருமைகளுக்கு எதிரான ஓரவஞ்சனையைப் புலன்விசாரிப்பது. 
சிந்துவெளியில் குதிரைகள் இல்லை. காளை பொறிப்பு இருப்பதால் கட்டாயம் பசு  இருந்திருக்கும். ஆனால் பொறிப்புகளில் பசுக்கள் இல்லை. 




எருமை, நல் ஆன், கருநாகு, இருள் நிறமை ஆன், நீல இரும்போத்து, கயவாய் எருமை என்று எருமைகளை விழுந்து விழுந்து வர்ணிக்கிறது சங்க இலக்கியம். நீரில் படகுபோல மிதக்கும் எருமை. எருமையின் முதுகில் சவாரி செய்யும் சிறுவன், பொதுத் தொழுவில் இருக்கும் மன்ற எருமைகள் என்று கூர்ந்த கவனிப்பு உள்ளது. சங்க இலக்கியங்களில் எருமை பற்றிய இழிவான குறிப்பு எதுவுமே இல்லை. 
எருமை கூடிவாழும் குடும்ப விலங்கு. எருமையைச் சிறுவர்கள்கூட எளிதில் கையாளலாம். ஐங்குறுநூற்றில் ஓரம்போகியார் எழுதிய 'எருமைப்பத்து' எருமைகளின் உளவியல், செயல்பாடுகளின் ஊடான காதல் வாழ்வியல். அஞ்சாமல் போரிடும் வீரன் பற்றிய புறப்பாடல் துறையின் பெயர் 'எருமை மறம்'. அகமும் புறமும்தானே தமிழ்! பாண்டிய மன்னனை எதிர்த்துப் போரிட்ட குறுநிலத்தலைவர்களில் ஒருவன் பெயர் எருமையூரன். எருமையூரான மைசூரில் (மஹிஷாசுர்) சாமுண்டி மலையில் நிற்கையில் நினைவில் சங்க இலக்கியம். 
பசு மாடுகளின் சமயம் சார்ந்த புனிதத்தன்மையை முன்னிறுத்தும் மரபு சங்க இலக்கிய காலத்திலேயே காலூன்றத் தொடங்கிவிட்டது. மதுரையை எரித்த கண்ணகியின் விதிவிலக்குப் பட்டியலில் பசு இருந்தது; எருமை உள்ளிட்ட பிற விலங்குகள் இல்லை, 
இந்தியாவில் சாலையில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை 50 லட்சத்திற்கும் மேல். ஆனால், அநாதையாகத் திரியும் எருமைகளைக் காண முடியாது. அதுவே எருமையின் பெருமைதான். தோடர்களில் அநாதை என்று எவருமில்லை என்று தோடர் பழங்குடிப்பெண் வாசமல்லி கூறும் காணொளி நினைவுக்கு வந்தது. பெருமைக்காக மேய்க்காவிட்டாலும் பொருளியல் அடிப்படையிலாவது எருமையின் அருமையைப் பேசலாம்.  'எப்பிடி இருந்த எருமை இப்பிடி ஆகிருச்சு' என்று உச்சுக்கொட்டி நகர்வதற்கு இல்லை இந்த அணிநடை எருமை. 'பசுக்கப்பட்ட' எருமை என்பது வேறொன்றுமில்லை. நசுக்கப்பட்ட மக்கள் வரலாற்றின் இன்னொரு முகம்தான். 
அறியப்படாத தமிழகம்' நூலில் தொ.பரமசிவன் சொல்கிறார். "இன்றைய நிலையில் 'கறுப்பு-சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சினையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசைமாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும். மேட்டிமையின் சிவந்த நிறம் அழகு நிறைந்ததாகக் காட்டப்படுகிறது" என்கிறார் அவர்.  'மணமகள் தேவை' விளம்பர வாசகங்கள் மனதில் தோன்றுகிறது. எனக்குள் சிரிக்கிறேன். 
அணிநடை எருமை எமனின் வாகனம் ஆனது எப்போது? எருமை அரசன் எப்போது மஹிஷாசுரன் ஆனான்? தாய்த்தெய்வமான கொற்றவை துர்க்கையாகி மஹிஷாசுரனை யாருக்காக வதைத்தாள்? சிந்துவெளியில் இல்லாத சிங்கத்தின் மீது ஏன் அமர்ந்து கொன்றாள் இந்திய எருமையை?" என்ற கேள்விகள் என்னைத் துரத்தின. 
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியர் உபேந்தர் ராவை ஒருமுறை சந்தித்தபோது சில புதிய தகவல்கள் கிடைத்தன இப்போதெல்லாம் சமஸ்கிருத ஆவணங்கள் இணையத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கிடைப்பதும் வசதியாகப் போய்விட்டது. வட மொழியில் 'அஷ்வரிபு' என்ற சொல்லுக்கு 'குதிரையின் எதிரி' 'எருமை' என்று இரண்டு பொருள். எருமையைத் தொடக்கத்தில் ஒரு காட்டு விலங்காகவே (ஆரண்யபக) ஆரியர்கள் கருதினர். வேதங்களில் எருமையைக் குறித்த 'உஷ்ட்ரா' என்ற வார்த்தைப் பின்வந்த இலக்கியங்களில் ஒட்டகத்தையும் ஓர் அசுரனையும் குறித்தது. 'கக்ஷஹ' என்றால் பாவமும் (sin) எருமையும். அழுக்கானது, துர்நாற்றம் என்ற பொருளில் வழங்கும் 'கலுஷா' எருமையையும் குறிக்கிறது. 'க்ரோடீ என்ற சொல் காண்டாமிருகத்தையும் எருமையையும் சுட்டுகிறது. 'கால வாகன' என்பதில் எருமை எமனின் வாகனம். மஹிஷத்வஜ, மஹிஷாக, மஹிஷவாஹன போன்ற பதங்கள் எமனைக் குறிக்கின்றன. பசு வதை செய்பவர்களைத் தண்டிப்பது, கொல்வது பற்றி ரிக், யஜூர், அதர்வண வேதங்கள் குறிப்பிடுகின்றன. 
சமஸ்கிருத மொழி பேசியவர்கள் தொடக்கத்தில் எருமை, காண்டா மிருகம், ஒட்டகம் போன்ற விலங்குகளை நெருக்கமாக அறிந்திருக்கவில்லை. சமஸ்கிருத மொழியினரால் எருமை ஒரு காட்டு விலங்காகக் கருதப்பட்டது. சிந்துவெளி மக்கள் எப்படி குதிரையை அறியாதவர்களோ அதுபோல சமஸ்கிருத மொழி பேசியோர் எருமையை ஒரு வீட்டு விலங்காக அறியாதவர்கள். எனவே அவர்கள் எருமையை  குதிரையின் எதிரியாகக் கருதியதில் வியப்பில்லை. 
எருமையோடு புழங்கி சிந்துவெளி முத்திரையில் எருமை உருவத்தை பொறித்து, வணிகப் பொருளாக ஏற்றுமதி செய்து, வழிபாட்டு முறைகளில் எருமைப்பலி நடத்திய சிந்துவெளிப் பண்பாட்டு மரபில் வந்த மக்களுக்கும், குதிரையை மிக முக்கியமாகக் கருதிய, அஸ்வமேத யாகங்கள் நடத்திய மக்களுக்கும் மோதல்கள் முரண்பாடுகள் இயல்பானதே. மொத்தத்தில் வாழ்வியலுக்கும் மொழிக்குமான உறவு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. 
கவிஞர் வெய்யில் எழுதியுள்ள 'ஞான எருமை' என்ற எதிர் ஆன்மிகக் கவிதைகளை (இன்னும் வெளியாகவில்லை!) படித்து அசைபோடுகிறேன். 
“தெய்வங்கள் 
வைக்கோல் படப்பைக் கொளுத்துகின்றன 
பேய்கள் 
மழையைப் பொழிவிக்கின்றன 
எருமை 
நனைந்தபடி 
எரியும் வைக்கோலைத் 
தின்கிறது". 
கல்வெட்டு, கட் அவுட், முண்டாசு, முதல் மரியாதை என்ற எந்தக் கவலையும் இல்லாமல் 'அணிநடை எருமை' நடந்துபோகிறது ஆதியின் அசைவாய். 
நான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எருமையின் மீது எதற்கு இந்த ஓரவஞ்சனை? யார் வைத்த எந்த நுழைவுத் தேர்வில் இந்த எருமை தேர்ச்சிபெறவில்லை?
(ஆனந்த விகடனில் வெளியான "தமிழ் நெடுஞ்சாலை" தொடரில் இடம்பெற்ற ஒரு கட்டுரை இது )




No comments: