எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -10 பேராசிரியர் எலியேஸரும் விஜயகுமாரணதுங்கவும் ! இலங்கை – இந்திய ஊடகங்கள் பிரசுரிக்கத் தயங்கிய “ ஆண்மை “ சிறுகதை ! ! முருகபூபதி

 மெல்பனில் பிரசித்தி பெற்ற மொனாஷ் பல்கலைக் கழகத்தின்


Robert Black Wood மண்டபத்தில்  1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் , அவுஸ்திரேலியாவில் பரத நாட்டியக்கலைக்கு மகத்தான சேவையாற்றிவரும் கலாநிதி சந்திரபானு அவர்களின் தனிநடிப்பு அரங்காற்றுகை நடந்தது.

இந்நிகழ்ச்சியே  1987 ஆம் ஆண்டு நான் இங்கு வந்த புதிதில் பார்த்த முதலாவது நடனநிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தகுந்தது.

பொதுவாக இந்து, வைணவ  சமயம் சார்ந்துதான்  பரத நாட்டிய  அரங்காற்றுகைகள், நடன அரங்கேற்றங்கள்  நடைபெறுவது வழக்கம்.  உதாரணமாக  சிவன்  -  சக்தி, கிருஷ்ணர் -  ராதை, பக்த மீரா, உள்ளடக்கமாக இருப்பார்கள்.

அன்று நான் பார்த்த நடன அரங்காற்றுகை வித்தியாசமானது. யேசுகிறிஸ்துவின் வரலாற்றின் முக்கிய நிகழ்வான  கல்வாரி காட்சியை பல்வேறு அபிநய முத்திரைகளுடன் நடனத்தில் சந்திரபானு பிரதிபலித்தார். சுமார் ஒன்றரை மணிநேர நிகழ்ச்சியில் அவரே தனித்து ஆடி அசத்தினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து  மெல்பனின் பிரபல தமிழ் மருத்துவர் செல்வேந்திரா அவர்களுடன் உரையாடியபோது, அவர் எனக்கு திருமதி ராணி எலியேஸர் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

மருத்துவர் செல்வேந்திரா அவர்களின் அக்கா, செல்வி புஷ்பா செல்வநாயகம் இலங்கையில் யாழ். இந்து மகளிர் கல்லூரியின் துணை அதிபராக பணியாற்றிய வேளையில் நான் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். 1987 ஜனவரி வரையில் அவருடன் தொலைபேசி தொடர்பிலும் இருந்திருக்கின்றேன். 1986 ஆம் ஆண்டு இறுதியில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் நடத்தப்பட்ட இனப்பிரச்சினை தீர்வுதொடர்பான மாநாடு யாழ். நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடந்தபோது  அதற்குச் சென்றிருந்த வேளையில்,  செல்வி புஷ்பா செல்வநாயகம் அவர்களின் இல்லத்திற்கும் சென்று உரையாடியிருக்கின்றேன்.

யாழ். குடாநாட்டின் போர்க்காலச்செய்திகளை வீரகேசரியில் நான் எழுதும்போது,  இவரையும் தொடர்புகொண்டு செய்தியை ஊர்ஜிதப்படுத்துவது எனது வழக்கம். பிரபல சித்தார் மேதை ரவிசங்கர் தென் அவுஸ்திரேலியா மாநிலத்தின் தலைநகர் அடிலைற்றில் ஸ்தாபித்த International Shruthi Centre என்ற இசைக்கல்லூரியுடன் தொடர்பிலிருந்தவர்தான் மருத்துவர் செல்வேந்திரா.

குறிப்பிட்ட சுருதி நிலையம் பற்றியும் வீரகேசரியில்


முன்பொருதடவை எழுதியிருக்கின்றேன்.

மருத்துவர் செல்வேந்திரா  எனக்கு அறிமுகப்படுத்திய   திருமதி ராணி எலியேஸர் அவர்களை அன்றுதான் முதல் முதலில் சந்தித்தேன். இவரது சகோதரி ரஞ்சி காதல் திருமணம் செய்தவர்தான் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவரும் மதவாச்சி தொகுதி எம்.பி.யும், முன்னாள் காணி நீர்ப்பாசன நெடுந்தெருக்கள் விவகார அமைச்சருமான மைத்திரிபால சேனநாயக்கா.  இந்தத் தம்பதியரை  கொழும்பில் ருஷ்யா தூதரகம் வழங்கிய விருந்துபசார நிகழ்ச்சியில் சந்தித்திருக்கின்றேன்.  தோழர் பீட்டர் கெனமனை, உரிமையுடன்  “ பீட்டர்  “ என அழைப்பவர் ரஞ்சி மைத்திரிபால.

ரஞ்சி ஒரு பத்திரிகையாளராவார். இலங்கையில் பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றியிருப்பவர்.

நானும் பத்திரிகையாளன், எழுத்தாளன் என்று செல்வேந்திரா, ராணி எலியேஸருக்கு அறிமுகப்படுத்தியதும், தனது கணவர் பேராசிரியர் எலியேஸர் நடத்தும் Melbourne 3 EA வானொலியின் தமிழ் ஒலிபரப்பிற்கு வந்து நிகழ்ச்சிகளில் பங்குபற்றுமாறு அவர் அழைத்தார்.

பிரதி திங்கட்கிழமை தோறும் நண்பகல் 11 மணியிலிருந்து 12 மணிவரையில் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது.

இந்த ஒலிபரப்பின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரான  புகழ்பெற்ற கணிதப் பேராசிரியர் எலியேஸர்  இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிய காலத்தில் இவரிடம் கற்றவர்தான் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா என்பதும் குறிப்பிடத்தக்கது.


திருமதி எலியேஸர் எனக்கு குறிப்பிட்ட வானொலி கலையகம் அமைந்துள்ள முகவரியையும் தமது வீட்டு தொலைபேசி இலக்கமும் தந்து அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு வருமாறு அழைத்தார்.

1987 காலப்பகுதியில் இலங்கையில் நான்கு மூத்த தமிழ் எழுத்தாளர்களின் மணிவிழாக்காலமாகும்.

டொமினிக் ஜீவா, இளங்கீரன், டானியல், எஸ். அகஸ்தியர் ஆகியோர் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டு குறிப்பிட்ட Melbourne 3 EA வானொலி கலையத்திற்குச் சென்றேன். எனது உரையை பேராசிரியர் எலியேஸர் ஒலிப்பதிசெய்து என்னைப்பற்றிய சிறிய அறிமுகத்துடன் மறுநாள் வான்அலைகளில் பரவச்செய்தார்.

அதுவே அவுஸ்திரேலியா வான் அலைகளில்  பரவிய  எனது முதலாவது குரலாகும். அன்றைய நிகழ்ச்சி முடிந்ததும் பேராசிரியரே என்னை,  எனது வாடகை குடியிருப்புக்கு தமது காரில் அழைத்துவந்தார்.

அதன்பின்னர் எனது நிகழ்ச்சி பற்றி தீர்மானித்ததும் அவரே ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து என்னை அழைத்துச்செல்வதும் வழக்கமாகியது.

அக்காலப்பகுதியில் இலங்கையில் கொழும்பில் சந்திரிக்காவின் கணவரும் மக்கள் கட்சியின் தலைவருமான விஜயகுமாரணதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் எனது இனிய நண்பர்.

1985 இல் மாஸ்கோவில் நடந்த அனைத்துலக மாணவர் இளைஞர்


விழாவுக்கு சென்றிருந்தபோது,  எமது பிரதிநிதிகள் குழுவில் அவரும் அங்கம் வகித்திருந்தார். தமிழ்மக்களின் அபிமானியாகவும் திகழ்ந்தவர்தான் விஜயகுமாரணதுங்கா.

நெருக்கடி மிக்க காலப்பகுதியில்  வடக்கிற்கு சமாதானத் தூதுவராகவும்  சென்றவர். விடுதலைப்புலிகளின் தளபதி கேர்ணல் கிட்டுவுடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தியிருப்பவர். தென்னிலங்கை இராணுவத்தினர் சிலர் பணயக்கைதிகளாக புலிகளிடத்தில் இருந்தபோது பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவிக்கவும் முயன்றவர்தான் விஜயகுமாரணதுங்க.

அவருடைய கட்சியிலிருந்து சிங்கள பத்திரிகையும் வெளியாகியது. அவருக்கு தமது கட்சியின் பிரசாரப் பத்திரிகையாக ஒரு தமிழ் இதழும் வெளியிடும் எண்ணம் இருந்தது. அவ்வாறு ஆரம்பிக்கும் பட்சத்தில் அதில் வந்து பணியாற்ற முடியுமா..? என்று  மாஸ்கோவில் சந்தித்தபோது அவர் கேட்டார். இலங்கை திரும்பிய பின்னரும் அவர்  தொலைபேசி உரையாடல்களின்போது கேட்டிருக்கிறார்.

ஏற்கனவே 1978 முதல் மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்ட செஞ்சக்தி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நான் இருந்தமையால் அவருடைய வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை. எனினும் விஜயகுமாரதுங்கவின் தமிழ்ப்பத்திரிகை வெளியிடும் எண்ணம் கனவாகவே முடிந்தது.

சந்திரிக்காவின் அக்கா சுனேத்திராவின் கணவர் குமார் ரூபசிங்க,  தமிழிலும் சிங்களத்திலும் ஜனவேகம், ஜனவேகய ஆகிய இரண்டு வார இதழ்களை மருதானையிலிருந்து வெளியிட்டுவந்தார்.


ஜனவேகம்
இதழின் ஆசிரியர் இளங்கீரன், ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளராவார். 

விஜயகுமாரணதுங்கவுக்கும் குமார் ரூபசிங்காவிற்கும் இடையில் கருத்துமுரண்பாடுகளும் இருந்தன. அதனாலும் தமது கட்சியின் சார்பிலும் ஒரு தமிழ்ப்பத்திரிகை நடத்தவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு வந்தது இயல்பானதே.

விஜயகுமராணதுங்க கொல்லப்பட்டது எனக்கும் அதிர்ச்சியானது. அவரது மறைவு பெரிய இழப்புத்தான். எங்கள் நீர்கொழும்புக்கு அருகில் சீதுவ என்ற ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர்,  கொழும்பு வீதியில் அமைந்திருந்த ஒரு தியேட்டரின் வாயிலில் அனுமதிச்சீட்டு கிழிக்கும் வேலையைத்தான் ஆரம்பத்தில் செய்துகொண்டிருந்தார். அவர் அழகான ஆடவர். பேச்சாற்றலும் மனிதநேயமும் மிக்கவர்.

அவருக்கு சிங்கள திரைப்படங்களில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்து,  சிங்கள திரையுலகில் பிரபலமானார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டார். 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் எமது ஊருக்கு அருகாமையிலிருக்கும் கட்டான தொகுதியில் போட்டியிட்டு மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். பின்னர் வேறும் சில தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களிலும்  போட்டியிட்ட அவர்  வெற்றியைக் காணவில்லை. ஆனால், மூவின மக்களின் மனதிலும் இடம்பெற்றிருந்தார்.

1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் யாழ். பொதுநூலகம் கயவர்களினால் எரிக்கப்பட்டபோது அதனைக்கண்டித்து தென்னிலங்கையில் நடந்த சில கூட்டங்களிலும் விஜயகுமாரணதுங்க கலந்துகொண்டு அன்றைய யூ.என். பி. அரசை கடும் தொனியில் விமர்சித்தார்.

இவ்வாறு தமிழ் மக்களின் நல்ல நண்பராக விளங்கிய விஜயகுமாரணதுங்கவின் திடீர் மறைவு என்னை பெரிதும் பாதித்தது.

அவரது வாழ்வும் பணிகளும் பற்றிய கட்டுரை ஒன்றை பேராசிரியர் எலியேஸரின் Melbourne 3 EA வானொலியில் வாசித்தேன்.

அக்கட்டுரை பேராசிரியருக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. அதனால் அதனை தமது தென்துருவ தமிழ்ச்சங்கத்தின் செய்தி ஏட்டிற்கும் அனுப்புமாறு அவர் சொன்னார்.

 அவ்வேளையில் மெல்பனில் எனக்கு அறிமுகமான சில நண்பர்கள் இணைந்து மக்கள் குரல் என்ற கையெழுத்து பத்திரிகையை ஆரம்பித்திருந்தனர். அவர்களுக்கும் விஜயகுமராணதுங்க பற்றி நான் வானொலியில் ஆற்றிய உரை பிடித்துக்கொண்டது. அவர்களும் அதனை தங்களது மக்கள் குரல் இதழுக்கு கேட்டனர்.

இரண்டுக்கும் அனுப்பினேன். ஆனால், அக்கட்டுரை மக்கள் குரலில் மாத்திரமே வெளியானது.

தொடர்ந்தும் எனது சிறுகதைகள், கட்டுரைகளுக்கு பேராசிரியர் எலியேஸர் தமது Melbourne 3 EA வானொலியில் களம் வழங்கினார்.

எனது  புதர்க்காடுகள்,  ஆண்மை முதலான  சிறுகதைகளும் இந்த வானொலியில் ஒலிபரப்பானது. நானே நிலைய கலையகத்திற்குச் சென்று வாசித்தேன்.

வடக்கிலிருக்கும் ஒரு தாயார் அவுஸ்திரேலியாவிலிருக்கும் தனது மகனுக்கு எழுதும் கடிதம்தான்  ஆண்மை சிறுகதை.  இந்தியப்படை வடக்கில் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட  தமது உறவுப்பெண்ணான  ஒரு யுவதிக்கு,  தனது மகன்தான் வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் எழுதப்பட்ட கடிதமே அக்கதை.  அதில் மகாத்மா காந்தியும் வருகிறார்.

அச்சிறுகதையை தமிழக – இலங்கை இதழ்கள் வெளியிட தயங்கின.  என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகையும் தயங்கியது. அப்போது இந்தியப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்தது.

எனினும் 1989 இல் வெளியான எனது சமாந்தரங்கள் தொகுதியில் அக்கதை இடம்பெற்றது. 

அதன்வெளியீட்டு விழா மெல்பன் Y. W. C.  A. மண்டபத்தில்     25-06-1989 ஆம் திகதி   கலாநிதி காசிநாதர் தலைமையில் நடந்தபோது பேராசிரியர் இலியேஸர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். அவரது வீட்டிற்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி அழைத்தேன்.  மருத்துவர் செல்வேந்திரா அச்சமயம் விக்ரோரியா இந்து சங்கத்தின் தலைவராக இருந்தார். அவரும் வருகை தந்து உரையாற்றினார்.

அந்த விழா பற்றிய விரிவான தகவல்கள் இனிவரும் அங்கங்களில் எழுதப்படும். 

வடக்கு – கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கும்  இந்தியப்படைகளுக்கும் மத்தியில் போர் மூண்டமையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக செல்லத் தொடங்கிய காலம் அது.

அவ்வாறு அகதியாகச்சென்ற ஒரு இளம் குடும்பப்பெண் அவுஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்திருக்கும் தனது கணவனுக்கு எழுதும் கடிதத்தின் பாங்கிலும் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். அதனை பேராசிரியர் எலியேஸர் நடத்திய அந்த வானொலியில் நானே வாசித்தேன்.

எனினும் அதனைக்கேட்ட விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு அக்கதை உவப்பானதாக அமையவில்லை.

இந்தியப் படைகளை விமர்சித்து எழுதிய ஆண்மை சிறுகதை, தமிழக இதழ்களுக்கு உவப்பானதாக அமையவில்லை. அக்கதை வெளியான சமாந்தரங்கள் தொகுதியை தமிழ்நாடு தீக்கதிர் ( மாக்ஸீய  இதழ் ) இதழ் என்னை கடுமையாக விமர்சித்திருந்தது.

இவர்களுக்கெல்லாம் உவப்பான கதைகளை எழுதுவதாயின் நானும் ஒரு கழைக்கூத்தாடி ஆகவேண்டும். ஆனால், அது என்னால் முடியாது.

இலக்கிய , ஊடக உலகில் நாம் கடந்து வந்த பாதை இத்தகையதுதான் என்பதை சமகால இளம் எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கவேண்டியதும் எனது கடமை.

பின்னாளில் பேராசிரியர் எலியேஸர் அவர்களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் மாமனிதர் விருதும் வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மருத்துவர் செல்வேந்திரா அவர்கள் இசை ஆர்வலர். மருத்துவம் மற்றும் பல்கலாசார அமைப்புகளில்   இவரது பங்களிப்பினை பாராட்டி அவுஸ்திரேலிய அரசு Order of Australia Honours விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இவர்கள் இருவரையும் எனது புகலிட வாழ்வில் மறக்கமுடியாது. அத்துடன் எனது குரலை வான் அலைகளில் பரவச்செய்த திருமதி ராணி எலியேஸரையும் மறக்க முடியாது.

(தொடரும்)

 

 

 

No comments: