ஈழத்துத் திரைப்பட ஆவணக் களஞ்சியம் திரு. தம்பிஐயா தேவதாஸ் பேசுகிறார்



என் பதின்மப் பருவத்தில் 1987 ஆம் ஆண்டு கடும் போர்ச்சூழலில் அம்மாவின் சக ஆசிரியை ஒருவரின் வீட்டில் இடம்பெயந்து வாழும் சூழல் அமைகின்றது. அப்போது அவர்களின் வீட்டின் ஒரு அறையின் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தக அடுக்கின் மேல் என் கவனம் செல்கின்றது. அந்தப் போர்க்காலச் சூழல் முழுவதும் அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றாக வெறியோடு படித்தேன். அவை அனைத்துமே வீரகேசரி பிரசுரங்கள். அந்தக் காலகட்டத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைப் படிக்க ஆரம்பித்த எனக்கு ஒரு நாவலின் ஓட்டமும் கதைப் பின்னணியும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அதுதான், திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களின் மொழிபெயர்ப்பு நாவலான “நெஞ்சில் ஒரு இரகசியம்".



சிங்களத்தின் மகோன்னத எழுத்தாளர் கருணாசேன ஜயலத் அவர்களுடைய “Golu Hadawath” என்ற புகழ்பூத்த நாவலின் தமிழ் வடிவம் தான் “நெஞ்சில் ஒரு இரகசியம்". பள்ளிக்கூடக் காலத்துக் காதல் வாழ்வை வெகு யதார்த்தமாகச் சித்தரித்த அந்தப் படைப்பை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் தன்னுடைய பள்ளி வாழ்வோடு ஒப்பிட்டுக் கண்கள் பூப்பான்.

இந்த நாவல் பின்னர் சிங்களத் திரைப்படமாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது.  அவுஸ்திரேலியாவுக்கு வந்த காலத்தில் மெல்பர்னில் சிங்களவர் கடைகளுக்குப் போய் இந்தப் படத்தின் வீடியோ இருக்கிறதா என்று 95 களில் நான் தேடியதை நினைத்துச் சிரிப்பேன் இப்போது.

இப்படியாக 1987 இல் திரு. தம்பிஐயா தேவதாஸ் என்ற ஆளுமையை அறிந்து கொண்ட எனக்கு அவரின் இன்னொரு முகமும் தெரிந்தது 1995 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன் தினம் தான். அப்போது கற்பகம் என்ற பனைவள உற்பத்திப் பொருள் விற்பனைக் கூடத்துக்குச் சென்ற என்னை “இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை” என்ற நூல் ஈர்த்தது. என் பயணப் பொதிக்குள் அதையும் அடக்கி வைத்தேன். இலங்கையில் தயாராகி வெளிவந்த திரைப்படங்களின் (ஈழத்துப் போர்க்காலப் படங்கள் நீங்கலாக) ஆவணச் சுவடி அது. படங்கள், தகவல்களோடு அது ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்.

தொடர்ந்து தாயகத்துக்குப் பயணப்படும் போதெல்லாம் பூபாலசிங்கம் புத்தகசாலையில் திரு. தம்பிஐயா தேவதாஸின் ஏதாவது ஒரு புத்தகம் கண்ணிற்பட்டால் வாங்கி வந்து விடுவேன். அப்படித்தான் “குத்துவிளக்கு” படத்தின் மீள் வாசிப்பு, பொன் விழாக் கண்ட சிங்கள சினிமா, இலங்கைத் திரையுலக முன்னோடிகள், இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் உள்ளிட்ட நூல்களை வாங்கி வைத்திருக்கிறேன்.

திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் ஃபேஸ்புக் நட்பில் இணைந்த போது எனக்குக் கிடைத்த பெறுமதியான நட்பாகப் போற்றி வருகிறேன். தொடர்ந்து என் பகிர்வுகளை வாசித்துச் சிலாகித்துப் பேசும் போது கிடைத்தற்கரிய கொடுப்பினையாக நினைப்பேன்.

அதனால் தான் அவரை “SPB பாடகன் சங்கதி” என்ற எனது நூலுக்கு அணிந்துரை எழுத வைத்த போது அவர் கொடுத்த பகிர்வால் நெகிழ்ந்தேன்.

திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் ஆசிரியராகவும் கடமையாற்றி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் இயங்குகின்றார். அத்தோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட ஆளுமை.

இலங்கைத் தமிழ், சிங்கள சினிமா சார்ந்த நூல்கள் மட்டுமன்றி, கல்வி, வரலாறு, பண்பாடு சார்ந்த நூல்களையும் எழுதியிருக்கின்றார்.

இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் “காதம்பரி” நிகழ்ச்சி வழியாகப் பல ஆளுமைகளைப் பேட்டி எடுத்திருக்கிறார். அவரின் YouTube பக்கத்தில் சில ஆவணங்களைக் காணலாம்.

திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களைப் பேட்டி எடுக்க வேண்டும் என்ற என் வாழ்நாள் கனவு பலித்தது பெருத்த மன நிறைவு.

அந்தப் பேட்டியின் வழியாகத் தனது இலக்கியச் செயற்பாட்டை விரிவாகப் பகிர்ந்திருக்கின்றார்

இங்கே


இன்று பிறந்த நாட் காணும் எங்கள் அன்புக்குரிய திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் நோய், நொடியின்றிப் பல்லாண்டு காலம் வாழ அவரின் ரசிகர்களில் ஒருவனாக வாழ்த்தி மகிழ்கின்றேன்.

கானா பிரபா

24.04.2022


No comments: