இலங்கை அரசியல் வரலாற்றில், இவ்வளவு தூரம் அவமானப்பட்ட ஒரு தலைவர் கோத்தபாய ராஜபக்ஷவை விட வேறு எவரும் இல்லை எனச்சொல்லும் அளவுக்கு அவருக்கு எதிரான போராட்டங்கள் வலுடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், அவர் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார்.
மக்கள் எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடிகளை
முன்வைத்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை தொடங்கியிருந்த நிலையில், தலைநகரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பாரிய ஆர்ப்பாட்டங்களை காலிமுகத்திடலில் நடத்தின. ஆனால், எழுச்சிகொண்ட மக்கள் திரள் ஜனாதிபதியின் வாசஸ்தலம் அமைந்த வீதிக்கே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இராணுவத்தினர் வந்திறங்கிய பஸ் வண்டியையும் தீயிட்டுக்கொளுத்தினர்.
அந்தப்போராட்டம் காலிமுகத்திடலை
நோக்கியும் நகர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கோத்த கோ கோஷம் உச்சஸ்தாயியில்
உயர்ந்தது.
தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பு
காலத்தில் காலிமுகத்திடல் போராட்டம் வேறு வடிவங்களையும் அடைந்தது. மக்கள் நடுவீதியில்
பால் பொங்கி, பாற்சோறும், வருடப்பிறப்பு பண்டிகை கால பலகார பட்சணங்களும் உண்டு குளிர்பானம்
அருந்தி, இசைக் கச்சேரிகள் சகிதம் , றபான் ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த
ஜனாதிபதி கோத்தபாய, எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை
கண்டுவிட்டு, “ நாடாளுமன்றில் 113 அங்கத்துவர்களை உங்கள் தரப்பில் காண்பியுங்கள். புதிய அரசுக்கு வழிசமைக்கின்றேன். “ என்றார்.
எது சாத்தியமில்லையோ, அதனையே
செய்து நாட்டில் எதிர்நோக்கப்படும் நெருக்கடிக்கு தீர்வு தாருங்கள் என்றார்.
எதிரணி, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவரும் தீர்மானத்தையும் நோக்கி நகரத்தொடங்கியது.
காலிமுகத்திடலில் இளையோர்கள் கோத்தா கோ கம என்ற நகரத்தை உருவாக்கியதுடன் நில்லாமல், அவரது செயலகம் அமைந்துள்ள கட்டிடத்தையும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அந்த பதாதையையும் ஒளிரச்செய்து ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் பரவ விட்டனர்.
வெளிநாடுகளில் வதியும்
இலங்கையர்களும் தமது பங்கிற்கு கோத்தா மீதான வெறுப்பினை ஆர்ப்பாட்டங்கள் மூலம் காண்பித்தனர்.
இலங்கை வரலாற்றில் முன்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களே
அரசியல் அதிகாரங்களுக்கு வந்தனர். டி. எஸ். சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர். ஜோன். கொத்தலாவல, பண்டாரநாயக்கா, தகநாயக்கா, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா,
ஜே.ஆர். ஜெயவர்தனா, ரணசிங்க பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிக்கா விஜயகுமராணதுங்க, மகிந்த ராஜபக்ஷ, ரணில்
விக்கிரமசிங்கா, மைத்திரிபால சிறிசேன முதலான சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவருக்கும்
அரசியல் கட்சிகளை நடத்திய அனுபவமும் தேர்தல்களில் நின்று வெற்றி – தோல்வி கண்ட முன் அனுபவமும் இருந்தது.
ஆனால், இலங்கை இராணுவத்தில்
ஒரு கேர்ணல் தரத்திலிருந்த கோத்தபாய ராஜபக்க்ஷவுக்கு இங்கு குறிப்பிடப்பட்ட தலைவர்களின்
எந்தவொரு அரசியல் அரிச்சுவடியையும் தெரிந்துகொள்ளாமல், தனது அண்ணன் மகிந்த ராஜபக்ஷவால், அமெரிக்காவிலிருந்து
முதலில் அவரது அரசின் பாதுகாப்பு செயலாளர் பதவிக்காக அழைத்துவரப்பட்டவர். இந்த அண்ணன் – தம்பியின் காலத்தில் இலங்கையில் நீடித்திருந்த
போரும் முடிவுக்கு வந்தது.
எனினும் 2015 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அண்ணன் மகிந்த, மைத்திரிபால சிறிசேனவிடம்
தோற்றதையடுத்து, தம்பி கோத்தபாய மீண்டும் அமெரிக்கா
சென்றார்.
மைத்திரி – ரணில் நல்லாட்சி
( ? ) காலம் முடிவுக்கு வந்தபோது, நடந்த அதிபர் தேர்தலுக்காக கோத்தபாய மீண்டும் அண்ணன் மகிந்தவால் அழைத்துவரப்பட்டார்.
அப்போது, அமெரிக்காவில்
இரட்டைக்குடியுரிமை பெற்றிருப்பவர், எவ்வாறு
இலங்கை தேர்தலில் போட்டியிடமுடியும் என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்தன.
அதனையடுத்து, அவர் அமெரிக்காவின் இரட்டைக்குடியுரிமையை துறந்துவிட்டார்
என்று சொல்லி, அந்த நெருக்கடியையும் ராஜபக்க்ஷ குடும்பத்தினர் சமாளித்தனர்.
நாட்கள் நகர்ந்த பின்னர், நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய பொது
ஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஜபக்ஷ குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் பிரதமர்
பதவியையும் அமைச்சுப்பதவியையும் பெற்றனர்.
இவையும் போதாதென்று மற்றும்
ஒருவர் வந்தார். அவர்தான் பஸில் ராஜபக்ஷ. இவருக்கும்
நிதியமைச்சர் பதவி தங்கத் தாம்பாளத்தில் வைத்து கொடுக்கப்பட்டது. இவரும் முன்னர்
சந்தித்த தோல்விகளையடுத்து அமெரிக்காவுக்கு சென்றவர்தான்.
“ போனமச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு “ என்ற
வரிகளை நினைவுபடுத்திய இவர், நிதியமைச்சர் பதவி ஏற்றபின்னர் தோன்றிய பாரிய பொருளாதார நெருக்கடியை யடுத்து, “ ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவருமே இலங்கை அரசியல்
அரங்கிலிருந்து வெளியேற வேண்டும் “ என்ற குரல்
ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
2019 ஆம் ஆண்டு இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் 69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர் மட்டுமல்ல, அதன் பின்னர்
நாடாளுமன்றத்திற்கு பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவான அனைவருமே வீட்டுக்குச் செல்லவேண்டும்
என்ற கோஷத்தின் உச்சம்தான் கோதா கோ ஹோம் ( Gotha Go Home )
காலிமுகத்திடலிலும் காலி முதலான நகரங்களிலும் கோத்தா கோ ஹோம் கம என்ற பெயரில் நகரம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
வேடிக்கை காண்பித்தார்கள்.
அதுமட்டுமன்றி,
குப்பைத் தொட்டிகளிலும் முக்கிய தலைவர்களின் உருவப்படங்களை ஒட்டியும் கொடும்பாவி எரித்தும்
மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப்பின்னணிகளுடன்தான் “ இலங்கை அரசியல் வரலாற்றில், இவ்வளவுதூரம்
அவமானப்பட்ட ஒரு தலைவர் கோத்தபாய ராஜபக்ஷவை விட வேறு எவரும் இல்லை. “ என்று
இந்தப்பத்தியின் தொடக்கத்தில் சொல்லியிருந்தோம்.
தனது வாழ்நாளில் என்றைக்குமே
தேர்தல் அரசியல் முன்அனுபவம் ஏதுமின்றி, இராணுவ
அறிவினை மாத்திரம் கொண்டிருந்த ராஜபக்ஷ குடும்பத்தைச்சேர்ந்த
ஒருவர் அதே குடும்பத்தினரால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்டவர், சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலிருந்தவாறு எவ்வாறு காய் நகர்த்தியிருக்கிறார்
என்பதை புதிய அமைச்சரவையை தெரிவுசெய்தபின்னர், அவர்கள் மத்தியில் அவர் நிகழ்த்தியிருக்கும் உரையின் மூலம் அவதானிக்கமுடிகிறது.
அவர் சொல்கிறார்
: தற்போதைய ஆட்சியின் தவறுகளை இந்த நாட்டை
உண்மையாகவே நேசிக்கும் இளைஞர்கள் சுட்டிக் காண்பித்திருக்கிறார்கள்.
கடந்த இரண்டரை வருடகாலத்தில்
எங்களாலும் சில தவறுகள் நேர்ந்துள்ளன. அவற்றை திருத்தி சரிசெய்துகொண்டே மக்களின் நம்பிக்கையை
பெறல் வேண்டும்.
இந்த வாக்குமூலத்தை அவதானித்து
, சாத்தானும் வேதம் ஓதும் எனக்கொள்வதா..? தனது ராஜபக்ஷ குடும்பத்தைச்சேர்ந்த ஒருவரைத்தவிர
( பிரதமர் மகிந்த ) வேறு எவருக்கும் அமைச்சுப் பதவியில்லை என்று காண்பித்து, மக்களின் எதிர்பார்ப்பிற்கு இசைந்துள்ளேன் என்று
செயல்படுத்தியிருக்கும் இராஜதந்திர நகர்வை ஏற்றுக்கொள்வதா..?
இறுதியில் அவர் மீண்டும்
தலையணை உறைகளை மாற்றி கண்துடைப்பு செய்துள்ளார். தலையணைகள் அப்படியேதான் இருக்கின்றன.
“அன்றும் இன்றும் தனது கைகள் சுத்தமாகவே இருக்கின்றன
“ எனவும் சொல்லி, தவறுகள் தனது பக்கத்தில் இல்லை, முன்னைய அமைச்சர்களின்
பக்கம்தான் இருக்கின்றன என்பதை பூடகமாகவே சொல்லி, முன்பு முக்கிய அமைச்சுப்பதவிகளிலிருந்த
அனைவரையும் நீக்கியிருக்கிறார்.
ஒரு முன்னாள் இராணுவ கேர்ணல்
, அரசியல் வாதியாக தோற்றம் பெற்று சாமர்த்தியமாக காய் நகர்த்தியிருக்கிறார்.
69 இலட்சம் மக்கள் தன்னை தெரிவுசெய்தார்கள் என்று மீண்டும்
மீண்டும் சொல்லிவரும் அவர், நாடாளுமன்றில் முடிந்தால், எதிரணியினர் தமது பக்கம் 113 ஆசனங்கள் இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தட்டும், அவ்வாறு உறுதிப்படுத்தினால்
அதனை சமாளிக்க அண்ணன் மகிந்தர் தனது காய் நகர்தலை தனது பாணியில் மேற்கொள்ளட்டும் எனவும்
பூடகமாக சொல்லிவிட்டார்.
இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகளிலிருந்து
மீளுவதற்கான காலம் வெகு தூரம் !
---0---
No comments:
Post a Comment