இலங்கைச் செய்திகள்

 யாழ்., மன்னாரிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இந்திய 400 மில்லியன் டொலர் பரிமாற்ற வசதி கால எல்லை நீடிப்பு

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியா மேலும் 500 மில். டொலர்

புலிகளின் ஆயுதங்களைத் தேடி முல்லைத்தீவில் STF வேட்டை யாழ்., மன்னாரிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இது வரை 60 பேர் அகதிகளாக சென்றுள்ளனர்

இலங்கையிலிருந்து மேலும் 04 குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரும் தனி நபர் ஒருவர் உட்பட 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.  மன்னாரைச் சேர்ந்த 03 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும்,யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத் தைச் சேர்ந்த 04 பேரும், தனி நபர் ஒருவரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகக் கூறி இவர்கள் இவ்வாறு தஞ்சம டைந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர் இலங்கையிலிருந்து புறப்பட்டு தனுஷ்கோடி வழியாக தமிழகத்துக்கு அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளதுடன் தற்போது நான்கு மாத கர்ப்பிணி ஒருவரும் ஒன்றரை வயது குழந்தை யொன்றும் உட்பட 04 குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 18 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமேஸ்வரம், தனுஷ்கோடி இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் இலங்கையில் ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கை தமிழர் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்துக்கு வந்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கினர்.

அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கை தமிழர் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையிலுள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையிலிருந்து இரண்டு படகுகளில் மன்னார், அடம்பன் மற்றும் உயிலங்குளம் பகுதிகளைச் சேர்ந்த பிரதீப், கஸ்தூரி, சுமித்ரா, நகுஷன்,பியோனா, நகுலேஸ்வரன் என நான்கு மாத கர்ப்பிணி பெண் ஒன்றரை வயது சிறுவன் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 இலங்கை தமிழர் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து இறங்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற இராமேஸ்வரம் கரையோர போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் கரையோர போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 04 பேரும் அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 05 பேர் (22) வெள்ளிக்கிழமை அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.

இலங்கையில் மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தனது நான்கு மாத கர்ப்பிணி மனைவிக்கு பாதுகாப்பாக குழந்தை பிறப்பதற்காக தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இளம் குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.

தற்போது பால் மா மற்றும் கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தனது ஒன்றரை வயது குழந்தையை வைத்து இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் தமிழகத்திற்கு குடும்பத்துடன் அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்குப் பின் இந்த 18 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை 60 இலங்கை தமிழர்ள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப், யாழ். விசேட, பருத்தித்துறை விசேட நிருபர்கள்

நன்றி தினகரன் 
இந்திய 400 மில்லியன் டொலர் பரிமாற்ற வசதி கால எல்லை நீடிப்பு

டொலர் கையிருப்பு உதவியின் அடிப்படையில், இந்திய ரிசேர்வ் வங்கியினால் (RBI) கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த, இலங்கைக்கு வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பரிமாற்ற வசதி தொடர்பான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்ட உதவியைத் தொடர்ந்தும் வழங்குவதாக தெரிவித்துள்ள, இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

 

நன்றி தினகரன் 
எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியா மேலும் 500 மில். டொலர்

இலங்கைக்கு நிதியுதவியாக வழங்க இணக்கம்

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதியை இந்தியா வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அமைச்சர் ஜீ எல் பிரிஸ் இவ்விடயத்தை கூறியுள்ளார்.அதேவேளை பங்களாதேஷுக்கு வழங்க வேண்டிய 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கான மேலதிக கால அவகாசம் வழங்க அந்த நாடு இணக்கம் தெரிவித்துள்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தமக்கு கிடைக்கப்பெற 06 மாதகாலங்கள் செல்லும் எனவும், அந்த நிதியும் பகுதி பகுதியாகவே நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எனவும் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் கூறியுள்ளார்.    நன்றி தினகரன் 
புலிகளின் ஆயுதங்களைத் தேடி முல்லைத்தீவில் STF வேட்டை

நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரின் தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், முக்கிய பொருட்கள் தேடப்பட்டுள்ளன. இப்பகுதியில், புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தை நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டும் நடவடிக்கை நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குரவில் பகுதியில் இக்காணியின் உரிமையாளர் வெளிநாடொன்றில் வசித்து வருவதால் யுத்தத்துக்கு முன்னர் இக் காணியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது வேறு ஒரு நபரினால் காணி பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இக் காணியில் தோண்டும் நடவடிக்கைக்கான அனுமதியை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழங்கியதையடுத்து கிராம அலுவலகர், மருத்துவ பிரிவினர், பொலிஸார், படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் முன்னிலையில் தோண்டும் பணிகள் நடைபெற்றன.

காணியில் மூன்று வெவ்வேறு இடங்களில் தோண்டப்பட்டபோதும் எதுவித பொருட்களும் கிடைக்கவில்லை. அகழ்வுப்பணி மாலை 4.30 மணியவில் முடிவுக்கு வந்தது.

நன்றி தினகரன் 

No comments: