1957ம் ஆண்டு.... மாஸ்கோ நகரமே தூங்கிக் கொண்டிருந்த நடுநிசி வேளை! ஒரு கறுப்பு நிற வாகனம் அந்த சந்தில் நுழைந்து அமைதியடைந்தது. அதன் இருபுறமும் கொட்டை எழுத்துக்களில் "ரஷ்ய விண்வெளி நிறுவனம் " என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதில் இருந்து இறங்கிய மூன்று உருவங்கள் காலத்தை வீணாக்கவில்லை. அவர்கள் தேடி வந்தது அவர்கள் கண் முன்னே வாலை ஆட்டியபடி நின்ற ஒரு தெரு நாய்தான். மூவரும் அந் நாயை சுற்றிவளைக்க ஒருவன் நாயின் மேல் ஒரு கோணிப்பையை வீசி 'லபக்' என அதை பிடித்து வாகனத்தினுள் வீசுகிறான். வாகனம் சந்தை விட்டு வெளியேறி நகருக்குள் சென்று மறைகிறது! தான் ஒரு உலக சாதனையை படைக்கப் போகிறோம் என்ற உணர்வு இல்லாமல் அந்தப் பிராணி உரக்கக் குலைத்து அமைதியடைகிறது!
இப்படித்தான் ஆரம்பித்தது எமது நாயகி லைக்கவின் கதை!
சோவியத் ஒன்றியம் எனும் கட்டமைப்பின் கீழ் ருஷ்ய நாடுகள் கூட்டுக்குடும்பம் நடத்திய ஐம்பதுகள்.
விண்வெளியில் முதல் மானுடனை யார் அனுப்புவது எனும் பனிப்போர் உக்கிரமடைந்திருந்தது. 83 கிலோ எடையுள்ள ஸ்புட்னிக் 1 எனும் விண்கோளை அக்டோபர் 1957ல் சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு அனுப்பியிருந்தது. அது உலகை மூன்று வாரங்களுக்கு வெற்றிகரமாக வலம் வந்து மின்கலங்கள் சக்தியிழந்தததினால் 'சும்மா' பூமியை சுற்றித்திரிந்து ஜனவரி மாதம் 4ம் திகதி 1958ல் பூமியின் வான்வெளி எல்லைக்குள் நுழைந்து எரிந்து மறைந்தது.
ஸ்புட்னிக் 1 இன் இந்த வெற்றி அமெரிக்காவின் விஞ்ஞான சமூகத்தில் ஒரு பீதியை கிளப்பிற்று.
மனித சரித்திரத்தில் முதல் தடவையாக ஒரு உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமே அது! இந்த திட்டம் அவசர அவசரமாய் தீட்டப்பட்டது. அதன் காரணம்: நவம்பர் 7, 1957 ரஷ்யாவின் போல்ஷிவிக் புரட்சியின் (Bolshevik Revolution) 40வது ஆண்டு நிறைவு தினம். இதை கொண்டாட சோவியத் ஒன்றியத்திற்கு ஒரு சாதனைச் சின்னம் தேவைப்பட்டது.
அச் சாதனையைப் படைத்த உயிரினம் லைக்கா எனும் நாய். 6 கிலோ எடையுள்ள ஹஸ்கி இனத்தை சேர்ந்த லைக்கா!
அந்த மூவரும் மாஸ்கோ தெருவில் இருந்தே கண்டெடுத்த அதே நாய்தான் இது! ஏன் தெரு நாய் ? இதற்கு ஒரு காரணம் இல்லாமல் இல்லை. தெரு நாய்கள் வாழ்வில் பல இன்னல்களில் சிக்குண்டு பல நாட்கள் போதிய உணவின்றி தப்பிப்பிழைத்து போராடி வாழ்வன. என்றும் விண்வெளிப் பயணம் சொகுசுப் பயணம் அல்லவே. எனவே இந்த Rambo வாழ்க்கையே இந்நாய்களுக்கு எதற்கும் துணிந்த மனப்பான்மை வளர்த்து விடுகின்றன. மேலும் எந்த சோதனைகளையும் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முகம் கெடுக்கும் திறமை பெண் விலங்கினத்திற்கு இருந்ததால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எல்லா நாய்களும் பெண் நாய்களே.
பூமியில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள கர்மன் கோடு (Karman line) எனும் மாய எல்லையே புவியின் வளிமண்டலத்தையும் விண்வெளியையும் கூறு போடுகின்றது. சுமார் 120 கி.மீ உயரத்தில் ஒரு விண்கலம் விண்வெளியில் இருந்து வளிமண்டலத்தினுள் மீண்டும் நுழையும் போதே வளிமண்டல உரசலால் அபரிமித வெப்பத்தை வெளிக்கொணரும். விஞ்ஞானிகள் வளிமண்டலத்தை நான்கு அடுக்குகளாக வகைப்படுத்தி பெயரிட்டுள்ளனர். உதாரணமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புவியில் இருந்து 330- 410 கி.மீ தொலைவில் மிதந்த படி உள்ளது.
சரி, மீண்டும் இந்த விண்நாய்களைப் பற்றி பார்ப்போமா?
1951ல் அனுப்பப்பட்ட Dezik, Tsygan எனும் இரு நாய்களும் வெற்றிகரமாக பூமியை வலம் வந்தது ஊர் திரும்பின. ஆனால் அதே ஆண்டு Dezik மீண்டும் Lisa எனும் நாயுடன் பூமியை வலம் வந்து தரையிறங்கும் போது பாராசூட் விரியாததால் விபத்தில் மாட்டி மரித்தன.
பூமியில் இருந்து, ஆகக் கூடியது, 1,659 கி.மீட்டர்கள் தூரத்திற்கு லைக்கா பயணிக்க வேண்டுமானதால் அதற்கு மற்ற நாய்களை விட கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதாயிற்று. தொடர்ந்து 15 - 20 நாட்கள் வரை சிறு காற்றமுக்கமுள்ள பெட்டியில் வாழ்தல், விசேட விண்வெளி உடையை அணிந்திருத்தல், ஓடாமல் ஒரே இடத்தில் நீண்டநேரம் நிற்றல், குழாய்களில் இருந்து திரவ உணவை சிந்தாமல் உண்ணுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தையும் வெற்றிகரமாக பயின்று சித்தியடைந்தது லைக்கா.
லைக்காவுடன் அல்பீனா என்ற நாயும் பயிற்றப்பட்டது. இருவரின் கால்களிலும் சத்திர சிகிச்சை மூலம் இதயத் துடிப்பு, சுவாச கணிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை அளவிடும் கருவிகள் பதிக்கப்பட்டன. லைக்கா பயிற்சிகளில் தேறாவிடில் அல்பீனாவை பாவிப்பதே திட்டம். அது மட்டுமல்ல லைக்காவுடன் பத்து நாய்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் லைக்காவே எல்லா பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்து முன்னணியில் நின்றது.
லைக்கா பயிற்சி ஆரம்பத்தில் இடைவிடாமல் குலைத்ததனால் 'குலைத்தல்' என்பதின் ரஷ்ய மொழி பொருள்பட 'லைக்கா' என்று பெயரிட்டதாய் ஒரு துணுக்குச் செய்தியும் உண்டு.
தன்னுடன் 12 உபகரணங்களையும் தனது இதயத் துடிப்பு, கதிரியக்க செறிவு காட்டி, பூமிக்கு சமிக்கைகள் அனுப்பும் உபகரணங்கள், லைக்காவை படமாக்க ஒரு தொலைக்காட்சி காமரா போன்றவற்றை எடுத்துச்சென்றது.
மணி மதியம் 2.30 . ஸ்புட்னிக் 2 இன் ராக்கெட்டுகள் சீறிக்கொண்டு வானை நோக்கி உந்திப் பாய்ந்தன. எங்கும் ஒரே வெப்பம்,
90 நிமிடங்களுக்கு ஒரு முறை விண்கலம் பூமிக்கு சமிக்கைகளை அனுப்பிக் கொண்டு இருந்தது.
திட்டமிட்டபடியே விண்கலம் பூமியை மூன்று முறை வலம் வந்தது. எல்லோருக்கும் மகிழ்ச்சி! நான்காவது சுற்றில் வந்தது வினை. விண்கலத்தினுள் வெப்பதிலை 43 C பாகையாக உயர்ந்தது. லைக்காவின் இதயத்துடிப்பு மூன்று மடங்காகவும் சுவாசம் நான்கு
மடங்காகவும் அதிகரிக்கத் தொடங்கின. காதைப் பிளக்கும் ராக்கட் ஒலி வேறு. இவ்வேளையில் கரியமில வாயுவும் லைக்கா இருந்த கலத்தினுள் கசியத் தொடங்கியது.
மடங்காகவும் அதிகரிக்கத் தொடங்கின. காதைப் பிளக்கும் ராக்கட் ஒலி வேறு. இவ்வேளையில் கரியமில வாயுவும் லைக்கா இருந்த கலத்தினுள் கசியத் தொடங்கியது.
எங்கும் அமைதி..... துடித்த இதயம் அமைதியானது.
சோவியத் ஒன்றியம் இந்த அனர்த்தம் பற்றி உலகுக்கு அறிவிக்காமல் நான்கு வாரங்களுக்கு லைக்கா சுகமாக பயணிப்பதாக உலகின் காதில் பூச்சொருகியது.
நான்கு வாரத்தின் பின் லைக்கா மரித்த செய்தி வெளியிடப்பட்டது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
வாஷிங்டனில் உள்ள தேசிய விண்வெளி அருங்காட்சியகத்தில் (Smithsonian National Air and Space Museum, Washington) லைக்காவின் இதயத்துடிப்பு / சுவாசத்தை பதிவு செய்த தரவுகளின் பிரதிகளை இன்றும் காணலாம்.
45 ஆண்டுகளின் பின், 2002ல் ஸ்புட்னிக் திட்டத்தில் முன்னின்று உழைத்த விஞ்ஞானி டிமிட்ரி மலாஷென்கோவ் லைக்கா ஸ்புட்னிக் தன் நான்காவது சுழற்சியை மேற்கொள்ளும் போது, நன்கு மணி நேரத்திலேயே, வெப்பம் தாங்காமல் மரித்தது என்ற துயரச் செய்தியை வெளியிட்டார்.
முழு உலகமே சோகத்தில் மூழ்ந்தது. பல நாடுகள் லைக்காவை கௌரவிக்கும் வண்ணம் தபால் தலைகளை வெளியிட்டன.
1957களில் சோவியத் ஒன்றியத்தினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட விலங்குகளை பாதுகாப்பாக உயிருடன் பூமிக்கு கொண்டு வரும் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை என்பது உண்மை. மேலும், இன்று போல், விலங்குகள் மீதான வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வும் அன்றில்லை.
இன்றய காலங்களைப் போல் விண்வெளி பயணங்களில் மனிதனுக்கு ஏற்படும் இராசாயண, பெளதீக, உடல் மாற்றங்களை துல்லியமாய் கணக்கிடும் கணணிகள் அன்று இருந்திருந்தால் இது போன்ற உயர் பலிகளை தவிர்த்திருக்கலாம் என்பது உண்மை.
விண்வெளி ஆசாய்ச்சிக்காய் தம் உயிரை அர்ப்பணித்த பல உயிரினங்களின் நினைவுச் சின்னமாகவே 1997ம் ஆண்டு மொஸ்கோவின் 'ஸ்டார் சி.ட்டியில்' நம் நாயகி லைக்காவிற்காய் ஒரு சிலை எழுப்பப்பட்டது.
கம்பீரமாய் எழுந்து நின்று எம் கண்களை உற்று நோக்கி லைக்கா எமக்கு சொல்லும் செய்தி "உங்கள் மேன்மைக்காய் உயிர் துறந்தேன். சமாதானத்துடன் வாழுங்கள்!"
(முற்றும்)
No comments:
Post a Comment