உலகச் செய்திகள்

 அமெரிக்க திட்டத்தினால் எண்ணெய் விலை வீழ்ச்சி

தாக்குதலைக் குறைக்க ரஷ்யா முடிவு: நடுநிலை வகிக்க உக்ரைன் உத்தேசம் 

பாகிஸ்தான் ஜனாதிபதியினால் அந்நாட்டு பாராளுமன்றம் கலைப்பு


அமெரிக்க திட்டத்தினால் எண்ணெய் விலை வீழ்ச்சி 

எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க திட்டமிட்ட நிலையில் எண்ணெய் விலை வேகமான சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்கா தனது மூலோபாய எண்ணெய் கையிருப்பில் இருந்து எதிர்வரும் மாதங்களில் 180 மில்லியன் பீப்பாய் வரை எண்ணெயை விடுவிக்க ஆலோசித்திருப்பதாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.

இது உறுதி செய்யப்பட்டால், 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கையிருப்பில் இருந்து மிகப்பெரிய விடுவிப்பாக இது அமையும.

உக்ரைனில் நீடிக்கும் போர் காரணமாக விநியோகத்தில் தடங்கல் ஏற்படும் என்ற அச்சத்தில் கடந்த சில வாரங்களில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உச்சம் தொட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் புதிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசியாவில் நேற்றுக் காலை வர்த்தகத்தில் அமெரிக்க எண்ணெய் குறியீடான மேற்கு டெக்சாஸ் இடைநிலை 5.6 வீதமும், பிரென்ட் மசகு எண்ணெய் 4.8 வீதமும் வீழ்ச்சி கண்டுள்ளது.   நன்றி தினகரன் தாக்குதலைக் குறைக்க ரஷ்யா முடிவு: நடுநிலை வகிக்க உக்ரைன் உத்தேசம் 


அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பு நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் உக்ரைனின் இரண்டு முக்கிய பகுதிகளில் தமது இராணுவ நடவடிக்கைகளை கணிசமாக குறைத்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதன்படி தலைநகர் கியேவ் மற்றும் வடக்கு நகரான செர்னிஹிவை சூழ தமது செயற்பாடுகளில் இருந்து ரஷ்யா பின்வாங்க தீர்மானித்துள்ளது. இது துருக்கியில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

எனினும் இராணுவ செயற்பாடுகள் எந்த அளவு குறைக்கப்படும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கும் சூழலில் இந்த அறிவிப்புப் பற்றி உக்ரைன் தரப்பு சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை அவதானத்துடனேயே பார்ப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குறிப்பிட்டுள்ளன.

ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் பொமின் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கியேவ் மற்றும் செர்னிஹிவை சூழ இராணுவ செயற்பாட்டை தீவிரமாக பல மடங்கு குறைக்கப்படும் என்றார்.

ரஷ்யா கவலை அடையும் முக்கிய இரு விடயங்களான உக்ரைனின் நடுநிலை மற்றும் அணு ஆயுதமற்ற நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

எனினும் படைகளை வாபஸ் பெறும் ரஷ்யாவின் உறுதிப்பாட்டை சந்தேகத்துடனேயே பார்ப்பதாகவும் “உக்ரைனிய மக்கள் அப்பாவிகள் அல்ல” என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

“இந்த சமிக்ஞை சாதகமானது என்று எம்மால் கூற முடியாது. ஆனால் இந்த சமிக்ஞைகள் வெடிப்புகள் மற்றும் ரஷ்ய ஷெல் குண்டுகளை முடிவுக்குக் கொண்டுவராது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கியேவில் இருந்து சிறு எண்ணிக்கையான அளவு விலகிச் செல்வதை மாத்திரமே எம்மால் பார்க்க முடிகிறது” என்று பெண்டகன் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார். “உக்ரைனின் ஏனைய பகுதிகள் மீது பாரிய தாக்குதல் ஒன்றை பார்ப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

மறுபுறம் ரஷ்யா தனது போர் சக்தியை வடக்கில் இருந்து கிழக்கில் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.

ரஷ்யா ஏற்கனவே உக்ரைனின் கிழக்கு பிராந்தியங்களில் தமது போர் நடவடிக்கைகளை மீளமைத்துள்ளது. தலைநகர் கியேவின் வடக்கில் ரஷ்யா பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதோடு தெற்கு கடற்கரை தொடக்கம் ரஷ்ய எல்லை வரை நீண்ட நிலப் பகுதியை கைப்பற்றுவதற்கு ரஷ்யா முயன்று வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு பகரமாக நடுநிலையை ஏற்க உக்ரைன் முன்மொழிந்தது. உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைவதை தடுப்பதே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தை ஒரு நடைமுறை கட்டத்திற்கு நகர்ந்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது நடுநிலையை வழங்க முன்வந்ததாக உக்ரைன் பேச்சுவார்த்தையாளர் ஒலெக்சாண்டர் சாலி செய்தியார்களிடம் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அந்த நாடு ஏனைய தரப்புகளோடு இராணுவ ரீதியில் கூட்டணி சேராது என்பதோடு இராஜதந்திர மற்றும் அரசியல் வழியில் உக்ரைனின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு மீண்டும் நிறுவப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

செர்னிஹிவ் நகரை ரஷ்யப் படை சுற்றிவளைத்திருக்கும் சூழலில் அங்கு 400 பேர் கொல்லப்பட்டு 130,000 பேர் வரை மின்சாரம், குடிநீர் விநியோகம் மற்றும் சூடேற்றும் வசதி இன்றி இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை அர்த்தபூர்வமானதாக இருப்பதாகவும் நடுநிலை பற்றி உக்ரைனின் முன்மொழிவுகள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கொண்டுசெல்லப்படும் என்றும் ரஷ்யாவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் பிளாடிமிர் மெடின்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி மட்டத்திலான உச்சிமாநாடு ஒன்று நடத்தப்படுவதற்கு முன் ஒப்பந்தம் ஒன்று வரையப்பட்டு, பேச்சுவார்த்தையாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர் வெளியுறவு அமைச்சர்களால் கைச்சாத்திடப்பட வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“இது ஒரு போர் நிறுத்தம் அல்ல. என்றபோதும் குறைந்தது இந்த போர் முனைகளிலாவது படிப்படியாக மோதலை குறைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்” என்று மெடின்ஸ் ரஷ்ய அரச செய்தி நிறுவனமான டாஸ் இடம் தெரிவித்தார்.

ஸ்தான்பூலில் இடம்பெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்கள் நடுநிலை ஏற்பது மற்றும் இந்த மோதலுக்கு காரணமான முக்கிய விடயங்களை உள்ளடங்கிய விரிவான முன்மொழிவுகளை ரஷ்யாவிடம் கையளித்தனர். இதில் கூறப்பட்டிருப்பதாவது,

  • உக்ரைன் வெளிநாட்டு இராணுவ முகாம்கள் அல்லது தமது ஆட்புலத்தில் குழுக்களற்ற, அணி சேராத மற்றும் அணு ஆயுதமற்ற நாடாக இருக்கும்.
  • தாக்குதல் நிகழ்வு ஒன்றில் உக்ரைனின் நடுநிலையை பாதுகாப்பதற்கு பிரிட்டன், சீனா, அமெரிக்கா, துருக்கி, பிரான்ஸ், கனடா, இத்தாலி, போலந்து மற்றும் இஸ்ரேல் உட்பட நாடுகளிடம் இருந்து சட்ட உத்தரவாதம் அளிக்கப்பட்ட கண்டிப்பானதாக இருக்கும்.
  • உக்ரைன் இராணுவ–அரசியல் கூட்டணிகளில் இணையாது மற்றும் அதன் எந்த ஒரு சர்வதேச செயற்பாட்டுக்கும் உத்தரவாதம் அளிக்கும் நாடுகளின் ஒப்புதல் தேவைப்படும்.
  • 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரிமியாவின் எதிர்கால நிலை பற்றி 15 ஆண்டுகள் ஆலோசனைக்குப் பின் தீர்மானிக்கப்படும்.
  • ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு பிராந்தியங்களின் எதிர்காலம் பற்றி இரு ஜனாதிபதிகளும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இந்த கட்டமைப்பு கிரிமியா மற்றும் கிழக்கு பிராந்தியங்களின் பிரச்சினை தீர்க்கப்படும் முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு உதவும் என்று உக்ரைன் பேச்சுவார்த்தையாளர் டேவிட் அர்காமியா தெரிவித்தார்.

இந்த முன்மொழிவுகளின்படி உக்ரைனுக்கு நோட்டோ இராணுவக் கூட்டணியில் மாத்திரமன்றி அதனால் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய முடியாத நிலை ஏற்படும்.   நன்றி  தினகரன் 
பாகிஸ்தான் ஜனாதிபதியினால் அந்நாட்டு பாராளுமன்றம் கலைப்பு

- 90 நாட்களுக்குள் தேர்தல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆலோசனையின் பேரில் அந்நாட்டு ஜனாதிபதியினால் பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, இன்று (03) பிரதி சபாநாயகர் காசிம் கான் சூரி வாக்கெடுப்பை நடத்தாது, இது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும், இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து பிரேரணையை நிராகரித்திருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதியிடம் இம்ரான் கான் கோரிக்கை விடுத்திருந்தார்.

இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் அண்மையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட குறித்த தீர்மானத்திற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் அரசாங்கத்தின் மீது வைக்கின்ற ஒரு சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே தற்பொழுது பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 90 நாட்களுக்குள் அங்கு தேர்தல் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமருக்கு ஆதரவாக, பாகிஸ்தான் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   நன்றி  தினகரன் No comments: