கலை, இலக்கிய, சமூக நேசர் மருத்துவர் வாமதேவன் விடைபெற்றார் முருகபூபதி

“ சொர்க்கமே என்றாலும்

அது நம் ஊரைப் போல வருமா…?

அட என்னாடு என்றாலும்

அது நம் நாட்டுக் கீடாகுமா…?

பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்

தமிழ் போல் இனித்திடுமா…? 

இந்தப்பாடலை கேட்டிருப்பீர்கள்.   கடந்த 28 ஆம் திகதி வடபுலத்தில்


தெல்லிப்பழையில் தமது 99 வயதில் மறைந்த எமது கலை, இலக்கிய சமூக நேசர் மருத்துவர் தம்பிப்பிள்ளை வாமதேவன் அவர்களின் இறுதிநிகழ்வையும் அவரது இறுதி யாத்திரையையும் அவுஸ்திரேலியாவிலிருந்து காணொளி ஊடாக பார்த்துக்கொண்டிருந்தபோது, கண்ணீர் மல்க குறிப்பிட்ட அந்தப்பாடலைத்தான் நினைத்துக்கொண்டேன்.

அன்பர் வாமதேவன் எனது நீண்ட கால நண்பர். எனக்கு மட்டுமல்ல, இலங்கையில் கலை, இலக்கியம், ஊடகம் சார்ந்து இயங்கிய பலருக்கும் அவர் நல்ல நண்பராகவே திகழ்ந்தவர்.

மருத்துவர் வாமதேவன் மறைந்தார் என்ற துயரச்செய்தியை எமக்கு


முதலில்  தெரிவித்த கலை, இலக்கிய ஆர்வலர் நவரத்தினம் இளங்கோ அவர்களும் அன்னாரின் நெருங்கிய நண்பர்தான்.

வாமதேவன்   தமது இளமைக்காலத்தில் மருத்துவம் படித்து மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று M R C P பட்டத்துடன் திரும்பியவர்.

அவர் நினைத்திருந்தால், இங்கிலாந்திலோ அல்லது வேறு மேலைத்தேய நாடுகளிலோ தமது மருத்துவத்துறையில் பணிகளை மேற்கொண்டு, தமது குடும்பத்தினரையும் அழைத்து வாழ்ந்திருக்கலாம்.

ஆனால், அவர் தமது ஊரான தெல்லிப்பழையிலிருந்து மருத்துவம் படிக்கச்சென்றபோது, அவரது தாயார் கூறிய அறிவுரையை கேட்டு, அதன்பிரகாரம் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.

தான் கற்கும் மருத்துவம் மக்களின் சேவைக்குத்தானேயன்றி, தனியார் துறை மருத்துவமனைகளுக்கு  அல்ல, என்ற மனிதநேயச்சிந்தனையுடன் அரச பொது மருத்துவமனைகளிலேயே இறுதிவரையில்  நலிவுற்ற மக்களுக்காக பணியாற்றினார்.

அவரது புதல்விகள் இருவர் அவுஸ்திரேலியாவில் இரண்டு மாநிலங்களில் வசிக்கின்றனர்.  இறுதியாக அவர்களிடம் கடந்த ஆண்டு வந்தவர்,  தனது எஞ்சியிருக்கும் காலத்தில் ஊரோடு சென்று வாழவே விரும்புவதாக கூறி விடைபெற்றுச்சென்றார்.

இப்போது அவரது விருப்பத்தோடு, 99 ஆண்டுகாலம்  நிறைவான வாழ்க்கை வாழ்ந்து நினைவுகளை எமக்கு தந்துவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.

மருத்துவர் வாமதேவன் அவர்கள் கொழும்பு – நீர்கொழும்பு மார்க்கத்தில் வரும் வெலிசர என்ற இடத்தில் அமைந்துள்ள அரச மார்பு நோய் மருத்துவமனையில் பிரதம மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய 1970 காலப்பகுதியிலேயே எனக்கு அறிமுகமானார்.

மல்லிகை ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரம் , கவிஞர் அம்பி, ராஜஶ்ரீகாந்தன், சோமகாந்தன்  உட்பட பல இலக்கியவாதிகளின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்த வாமதேவன் அவர்கள்,  எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிகளுக்கும் பக்கபலமாக இணைந்திருந்தவர்.

மல்லிகை ஜீவாவுக்கு பலவழிகளிலும் உறுதுணையாக விளங்கினார்.  பழகுவதற்கு இனியவரான வாமதேவனின் எளிமை எம்மை சிலிர்க்கவைக்கும்.

யாழ்ப்பாணத்தில் மல்லிகை  காரியாலயம் இயங்கியபோது அங்கே செல்லும் வாமதேவன், அங்கு புத்தக ஷெல்ப் ஒன்றையும்  தானே அமைத்து இதழ்கள், புத்தகங்களை அடுக்கிவைத்தாராம்.  இதுபற்றி ஜீவா மல்லிகையிலும் எழுதியிருக்கிறார். மல்லிகை கொடிக்கால்களின் வரிசையில் வாமதேவனின் பெயரும் இணைந்துள்ளது.

வாமதேவன் தேர்ந்த வாசகர். அவ்வப்போது மல்லிகையில் வெளியான சில சிறந்த கதைகளை படித்து வாசகர் கடிதங்களும் எழுதியவர்.

மல்லிகை ஜீவாவின் மூத்த புதல்வி சுவர்ணலதாவுக்கு இதயத்தில் துவாரம்.  அவரது சிகிச்சை தொடர்பான பல தேவைகளை கவனித்தவர் வாமதேவன்.  கொழும்பு மருத்துவமனையில்  அந்தப்பிள்ளையை சத்திரசிகிச்சைக்காக அனுமதித்தபோது, வாமதேவனே நேரில் வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

எனது உறவினர் ஒருவர் வெலிசறை  காசநோய்  சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையிலும் இவர் செய்த உதவிகளை மறக்க இயலாது.

இவரது மூத்த புதல்வி சட்டத்தரணி திருமதி ஜெயந்தி விநோதனும் இவரைப்போன்றே கலை, இலக்கிய, சமூக நேசர்தான்.  மல்லிகை அவுஸ்திரேலிய சிறப்பிதழை வெளியிட்டபோது,  ஜெயந்தி விநோதனின் ஏற்றுமதி – இறக்குமதி நிறுவனமே அதன் பிரதிகளை எமக்கு அனுப்பிவைத்தது. நாம் மெல்பனில் 2001 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்திய முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவிலும் வாமதேவன் கலந்து சிறப்பித்தார்.

அச்சமயம் வாமதேவனும் கவிஞர் அம்பியும்  சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தே எழுத்தாளர் விழாவின் இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர், சிட்னியில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஐந்தாவது எழுத்தாளர் விழாவிலும் கலந்துகொண்டார்.  ஜெயந்தி விநோதனும் மெல்பன் – சிட்னி விழாக்களில் உரையாற்றினார்.

தாய்நாட்டின் மீதும் பிறந்த ஊரின் மீதும்  மருத்துவர் வாமதேவனுக்கிருந்த பற்றுதல் எமக்கெல்லாம் முன்மாதிரியானது.  சமகால கொவிட் பெருந்தொற்றுக்கால நெருக்கடிக்கு மத்தியில்  கடந்த ஆண்டு சிட்னியிலிருந்து அவர் தாயகம் திரும்பியபோது, எஞ்சியிருக்கும் காலத்தில் ஊரோடு வாழவே விரும்புகின்றேன் என்று கவிஞர் அம்பியிடம் சொன்னாராம்.

அவ்வாறு சென்ற அவர் தனது வீட்டைச்சுற்றி வளர்த்திருத்திருந்த மா, கமுகு, வாழை முதலான மரங்களையும் தனது சொந்தப்பிள்ளைகளாக  போற்றியவர் என்பதை அவரது இறுதி நிகழ்வில் இரங்கல் உரையாற்றியவர்களின் உரைகளிலிருந்து அறியமுடிகிறது.

வாமதேவன் அவர்கள் மருத்துவத்துறையில் ஈடுபடும் ஏனையோருக்கும் முன்மாதிரியாக  வாழ்ந்த உதாரண புருஷர்.

சிரம்தாழ்த்தி அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகின்றேன்.

---0---

 

 

 

No comments: