ஸ்வீட் சிக்ஸ்டி 8 -பந்தபாசம் - - - ச சுந்தரதாஸ்

 .

பெரியண்ணா,இவர் சிவாஜி கணேசனின் பெரியண்ணா இல்லை. ஆனால் அவரின் நெருங்கிய குடும்ப நண்பர்.இந்த பெரியண்ணாவை படத் தயாரிப்பாளர் ஆக்கி ஒரு படத்தை தயாரிக்க சிவாஜி ஆதரவு கரம் நீட்டினார்.பட நிறுவனத்திற்கு தனது மகள் சாந்தியின் பெயரையும் சூட்டி அழகு பார்த்தார்.அந்த சாந்தி பிலிம்ஸ் தயாரித்த முதல் படம்தான் பந்தபாசம்.பானாவில் தொடங்கும் படம் என்றவுடனே அதனை இயக்கியவர் பீம்சிங் என்று ஊகித்திருக்கலாம்.பீம்சிங்கின் திரைக்கதை டைரக்ட்ஷனில் படம் உருவானது.

மிகவும் பிசி இயக்குனராக பீம்சிங் இயங்கிக்கொண்டு இருந்த நேரம்.ஆகவே வழக்கமாக அவர் படங்களுக்கு வசனம் எழுதும் ஆரூர்தாஸ்,எம் எஸ் சோலைமலை இருவரும் பீம்சிங் போலவே பிசியாக இருந்ததால் அவர்களை தவிர்த்து வலம்புரி சோமநாதன் கதை வசனத்தில் படம் தயாரானது.இந்த வலம்புரி நீண்ட காலமாக படத்துறையில் இருந்தவர். பீம்சிங் இயக்கத்தில் திருமணம் என்ற படத்தை தாயாரித்தவர்.அதற்கு பிரதிபலனாகவோ என்னவோ இந்தப் படத்திற்கு எழுதும் வாய்ப்பை வழங்கினார் பீம்சிங்.

பீம்சிங் படம் என்றால் பாடல்களை கண்ணதாசன்தான் எழுதுவார் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம்.ஆனால் அதிலும் ஒரு மாற்றம்.இந்தப் படத்தின் பாடல்களை கவிஞர் மாயவனாதன் இயற்றினார்.பாடல்கள் அனைத்தும் அருமையாக அமைந்தன.குறிப்பாக நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்தது தான் எத்தனையோ என்ற பாடல் கருத்தாழம் மிக்க தத்துவப் பாடலாக அமைத்தது.அதே போல் கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு பாடலும் தத்துவப் பாடலாக ஒலித்தது.இது தவிர பந்தல் இருந்தால் கொடி படரும்,பாடலும் இனிமையாக இசைத்து.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இப் படத்திலும் சோடை போகவில்லை.

படத்தின் பெயருக்கு ஏற்றாற் போல் குடும்பத்தில்
ஏற்படும் பாசப் போராட்டத்தை அடிப்படையாய் கொண்டு படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது.இலட்சாதிபதியான வேதாசலம் வங்கி திவாலாகப் போனதால் தான் அதில் வைப்பில் இட்ட பணம் அனைத்தையும் இழந்து கடனாளியாகி தெருவுக்கு வருகிறார்.அவரின் மகன்களான பார்த்திபன்,சரவணன் இருவரும் குடும்பத்தை காப்பாற்ற தங்கள் காதலை துறந்து வீண் பழிகளையும் சுமக்கிறார்கள்.வாழ்ந்து கெட்ட
குடும்பமாக விளங்கும் இவர்கள் எவ்வாறு மீண்டும் தலை தூங்குகிறார்கள் என்பதை படம் விளக்குகிறது

அண்ணண் தம்பியாக சிவாஜியும் ஜெமினியும் நடிக்க அவர்கள் காதலியாக தேவிகா,சாவித்ரி இருவரும் நடித்தனர்.வேதசாலமாக எஸ் வீ ரங்காராவ் அவர் மனைவியாக எம் வி ராஜம்மா நடித்தனர்.நகைச்சுவைக்கு சந்திரபாபு அவரின் ஜோடியாக சுகுமாரி (இவர் பீம்சிங்கின் துணைவி) நடித்தனர்.இவர்களுடன் சந்திரகாந்தா,வி கே ராமசாமி,எம் ஆர் சந்தானம்,நம்பிராஜன்,லக்ஷ்மிப்ரபா,கொட்டப்புளி ஜெயராமன் ,குண்டு கருப்பையா ஆகியோரும் நடித்தனர்.உணர்ச்சிகரமான காட்சிகளை கொண்ட படமானதால் சிவாஜி,ஜெமினி,ரங்காராவ்,ராஜம்மா ஆகியோர் உருக்கமாக நடித்திருந்தனர்.சாவித்திரி முன் கோபியாகவே வருகிறார்.தேவிகா வழக்கம் போல்!சந்திரபாபுவிடம் ரசிகர்கள் இதை விட மேலும் எதிர்பார்த்தனர். குடும்பத்துக்குள்ளும்,உறவுகளுக்குள்ளும் நிலவ வேண்டிய பந்தபாசத்தை வலியுறுத்தும் கதையாக இருந்த போதும் படத்தின் பிரதானப் பாத்திரங்கள் உடனுக்கு உடன் உணர்ச்சிவசப் படுகிறார்கள்,முடிவெடுக்கிறார்கள்.இது கதையில் உள்ள ஒரு குறைபாடாகும்.

பீம்சிங்கின் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளரான ஜி விட்டல்ராவ் ஒளிப்பதிவு பண்ண, ஆஸ்தான படத்தொகுப்பாளரான பால் துரைசிங்கம் படத் தொகுப்பை கவனிக்க 1962ல் வெளியான பந்தபாசம் ரசிகர்களை மோசம் செய்யவில்லை!

No comments: