ஒரு தாய் மக்கள் நாமென்போம் - சமரசம் எங்கள் வாழ்வென்போம் ! அவதானி

இந்தப் பதிவை ஒரு குறுங்கதையுடன் தொடங்குவோம்.


ஒரு வீட்டில்  அண்ணன் – தம்பி இரண்டுபேர் தினமும் வாய்த்தர்க்கம் செய்து  சண்டை  பிடித்துக்கொண்டே இருந்தார்கள்.  அவர்களின் தந்தை இருவரையும் அழைத்து அறிவுரை சொல்லிப்பார்த்தார். ஆனால், பயன் இல்லை.  அந்த சகோதரர்களின் சண்டை நாளுக்கு நாள் உச்சம் பெற்றது. அடி தடியிலும் இறங்கினார்கள். அதனால் வீட்டுக்கும், வீட்டு உடமைகளுக்கும் சேதம் வந்தது.

சண்டை தீரவில்லை. அண்ணனும் தம்பியும் தந்தையிடம் தனித்தனியாக முறையிட்டார்கள். தந்தையும் அவர்கள் இருவரிடத்திலும் தனித்தனியாக புத்திமதிகள் சொல்லிப்பார்த்தார். ஆனால்,  சமாதானம்தான் தோன்றவில்லை.

அதனால், நிம்மதி இழந்த அந்த மகன்மாரின் தாயார், ஒரு நாள்


இருவரையும் அழைத்து,  உங்கள் பிரச்சினைகளை என்னிடமோ அப்பாவிடமோ எடுத்து வந்து முறையிடவேண்டாம்.  நீங்கள் இருவருமே ஒருவருடன் ஒருவர் பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்.  எந்தெந்த விடயங்களில் இணைந்து பேசி இயங்கமுடியுமோ, அந்தந்த விடயங்களில் முதலில் பேசுங்கள். பின்னர், அதிலிருந்து ஏனைய விடயங்களையும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் இருவரையும் நான்தான் எனது வயிற்றில் சுமந்து பெற்றேன்.  நீங்கள் இருவரும் ஒருதாய்மக்கள். உங்கள் உடலில் எனது உதிரமும் கலந்திருக்கிறது.

நாளை உங்களுக்கும் திருமணமாகும். நீங்களும் பெற்றவர்களாவீர்கள். அப்போது உங்கள் பிள்ளைகளும் சண்டை பிடித்தால் என்ன செய்வீர்கள்… ? அதனால், வருங்காலத்தில் பிறக்கவிருக்கும் உங்கள் பிள்ளைகளுக்காகவாவது முன்மாதிரியாக இருங்கள்.  நீங்கள் தொடர்ந்து சண்டை பிடித்தால், உங்கள் எதிரிகள்தான் ஆதாயம் பெறுவார்கள். 

தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் பேசுங்கள். தீர்வுகளை காண்பீர்கள்  “ என்றார் தீர்க்கதரிசனம் மிக்க அந்தத் தாயார்.

இந்த குறுங்கதையின் உறைபொருளையும் மறைபொருளையும் அண்மையில் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில்,  இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் . ஜெய்சங்கர் தெரிவித்துள்ள கருத்துக்களை  அவதானிக்கலாம்.

காலம் காலமாக இந்தியாவை தாய் நாடாகவும் இலங்கையை சேய் நாடாகவும் வர்ணித்து வருபவர்கள், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியத் தலையீடு குறித்து அடிக்கடி பேசுவார்கள்.

இந்திய இவ்வாறு நேரு காலத்திலிருந்தே இலங்கை விவகாரத்தில் ஈடுபட்டு வருகிறது.  1983 இனக்கலவரத்தையடுத்து  நேருவின் புதல்வி இந்திரா காந்தியால் இலங்கை விவகாரத்தில் தீவிர ஈடுபாடு காண்பிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் இலங்கைப் பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் இந்திய வம்சாவளித்தமிழர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திட்டனர்.

பின்னர் இந்திராகாந்தியும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் கச்சதீவு விவகாரத்தில் ஒரு உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.

1987 இற்குப்பின்னர் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனாவும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியும்  13 ஆவது திருத்தச் சட்டத்தை உட்படுத்திய இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டனர்.

இதற்கெல்லாம் முன்னர், சுதந்திர இலங்கையின் வெளியுறவுக்கொள்கை எப்படி இருக்கவேண்டும்..?  என்று நாடு சுதந்திரம் பெறுமுன்னரே பண்டிதர் நேரு 1939 ஆம் ஆண்டில் இலங்கை வந்த சமயத்தில், கொழும்பு காலிமுகத்திடலிலும் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்திலும் தெளிவுபடுத்திப்பேசியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது:   “ இந்தியா விரைவில் சுதந்திரம் அடைந்துவிடும். அதனைத் தொடர்ந்து இலங்கை முதலான அண்டை நாடுகள் சுதந்திரம் அடைந்துவிடும். அவ்வாறு சுதந்திரம் அடையும் நாடுகள் தங்கள் வெளியுறவுக் கொள்கைவிடயத்தில்  இந்தியாவுக்கு இணக்கமானதாக இருக்கத்தக்கதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின்னர் இந்தியா முதலில் சுதந்திரம் அடைந்ததும்,                         “ இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒரு கேந்திர ஸ்தானமாக உள்ளது. அந்த நாடு எதிரிபக்கம் சேர்ந்தாலும், நடுநிலை வகித்தாலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாகவே அமையும்  “ என்றார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு எத்தகைய தீர்க்கதரிசி என்பதை அன்றே அவர் கூறிய கூற்றுக்களிலிருந்து அவதானிக்க முடிகிறது.

1983 இற்குப்பின்னர் இலங்கை – இந்திய உறவு அடிக்கடி சீர்குலைந்தமைக்கு இலங்கையில் தோன்றிய இனநெருக்கடியும் முக்கிய காரணம்.

1971 ஏப்ரில் மாதம் தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் கிளர்ச்சியை தொடங்கியபோது, இந்திரா காந்தி  இலங்கை இந்து சமுத்திர பரப்பில் இந்திய கடற்படையை நிலைகொள்ள வைத்தார்.

ராஜீவ் காந்தி,  தமது பதவிக்காலத்தில் இந்திய அமைதிப்படையை ( ? ) அனுப்பினார்.

நரசிம்மராவ், ஜி. பார்த்தசாரதி, ரொமேஷ் பண்டாரி முதல் பல தூதுவர்கள் வந்து வந்து சென்றார்கள்.  இந்தத்  தொடர்கதையின் மற்றும் ஒரு அங்கத்தில் அண்மையில் இலங்கை அதிபருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினருக்கும் மத்தியில் நடக்கும் பேச்சுவார்த்தை காலத்திலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்து, தமிழ்த்தலைவர்களுடனும் அதிபருடனும் பேசுகிறார்.

நடந்திருக்கும் பேச்சுவார்த்தையில் திருப்பதி காண்கின்றார்.

இலங்கை தொடர்ந்தும் இனப்பிரச்சினை விவகாரத்தில் இத்தனை அழிவுகளுக்கும் பின்னரும்,  கொதி நிலையிலிருப்பதை இந்தியா விரும்பவில்லை.  விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையில்  மோதல் நடந்தமையால் இந்தியாவும் நிறைய இழப்புகளை சந்தித்துள்ளது. அத்துடன் முதலாவது  இந்தியப் பிரதமர் நேருவின் வாரிசையும் பலிகொடுத்திருக்கிறது.

தமிழர் தரப்புக்கும் இன்றைய அரசின் தரப்புக்குமிடையே பேச்சுவார்த்தை தொடங்கியதுமே சிங்கள கடும்போக்காளர் பக்கமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

அன்று ஜே.ஆர், காலத்தில் இதுபோன்ற பேச்சு வார்த்தைகள் நடந்தபோது,  சிறில் மத்தியூ போன்ற கடும்போக்காளர்கள் துள்ளிக்குதித்தனர். இறுதியில் அந்த சிறில் மத்தியூ தனது விஞ்ஞான கைத்தொழில் அமைச்சுப் பதவியை இழந்தார்.

தற்போது, எரிபொருள் அமைச்சுப்பதவியை இழந்துள்ள பிவித்துரு ஹெல உருமய  கட்சியின் தலைவர் உதயகம்மன் பில,   “ தான் தமிழ் மக்களின் எதிரி அல்ல, தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத்தான் தனது எதிரி   என்று பேசத் தொடங்கியிருக்கிறார்.

காலத்துக்கு காலம் இவர் போன்றவர்கள் தோன்றிக்கொண்டிருப்பதும் இலங்கை வரலாறுதான்.

அரசு தரப்பு, சமகால பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தனது பொது ஜன பெரமுனை இயக்கத்தை விட்டு, ஒவ்வொரு துணைக்கட்சிகளும் விலகி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் நடத்தும் இந்த பேச்சுவார்த்தைகள்  அர்த்தமுள்ள தீர்வை நோக்கி நகரவேண்டுமேயன்றி,  தனது அரசை தக்கவைத்துக்கொள்வதற்கான தந்திரோபாயமாக்கிக்கொள்ளல் ஆகாது.

அவதந்திரம் இறுதியில் தனக்கந்தரமாகத்தான் போய்விடும்.

அர்த்தமுள்ள தீர்வில் இந்தியாவின் நலனும் முக்கியமாகவிருக்கிறது. 

தாய் நாடு தனது சேய்நாட்டில் அக்கறை காண்பிக்கும்போது,  பொது எதிரிகள் யார்…?  என்பதை சேய்நாட்டின் பிள்ளைகளான ஒருதாய் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

No comments: