“ யாதுமாகி “ மின்னூல் வெளியீட்டு மெய்நிகர் அரங்கில் ஞானம் இரத்தினம் அம்மையாருக்கு அஞ்சலி


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்  தமிழ் சேவையில் முன்னர்  மேலதிக பணிப்பாளராகவும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முதலாவது நிகழ்ச்சி பணிப்பாளராகவும் பணியாற்றிய திருமதி ஞானம் இரத்தினம் அம்மையார் கடந்த 26 ஆம் திகதி அவுஸ்திரேலியா சிட்னியில் தமது 92 வயதில் மறைந்தார். 

 அவர் 1983 இற்குப்பின்னர் புலம்பெயர்ந்து  அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு வந்தபின்னரும்,  தமிழ்சார்ந்த பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டவர்.  இங்கு  தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் பாட நூல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும்  செயல்பட்டவர்.

தமது இலங்கை வானொலி அனுபவங்களை The Green Light என்ற நூலிலும் விரிவாக பதிவுசெய்துள்ளார்.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்துள்ள ஞானம் இரத்தினம்


அம்மையார் பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி மின்னூலின் வெளியீடு மெய்நிகர் அரங்கில் கடந்த சனிக்கிழமை 26 ஆம் திகதி நடைபெற ஏற்பாடகியிருந்த தருணத்தில், அன்னாரின் மறைவுச்செய்தி வெளியானது.

அதனையடுத்து அமரத்துவம் எய்திய அம்மையாரின் ஆத்மசாந்திக்கு மௌன அஞ்சலி செலுத்திவிட்டே நிகழ்ச்சி ஆரம்பமானது.

முருகபூபதியின் யாதுமாகி மின்னூல் வெளியீட்டு அரங்கு யாழ். பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி கலையரசி சின்னையா தலைமையில் நடந்தது.

28 பெண் ஆளுமைகள் பற்றிய இந்நூலில் இடம்பெற்றுள்ள  திருமதி ஞானம் இரத்தினம் அம்மையார் பற்றிய பதிவு குறித்து, வீரகேசரி மற்றும் தமிழ்நாடு தினமணி ஆகிய பத்திரிகைகளின்  முன்னாள் மூத்த  ஊடகவியலாளர் ( அமரர் ) கார்மேகம்  அவர்களின் புதல்வி திருமதி கனகா கணேஷ் சிட்னியிலிருந்து இணைந்து உரையாற்றினார்.

 இலங்கையில் தொலைக்காட்சியின் வருகை 1979 ஏப்ரில் மாதம் ஆரம்பமானது. முதலில் அதனை சுயாதீன தொலைக்காட்சி சேவை என அழைத்தனர்.   (Independent Television Network - ITN)   தொடக்கத்தில்  தனியாருக்குச் சொந்தமான இச்சேவை பின்னர், 1982 ஆம் ஆண்டு முதல் ரூபவாஹினி என்ற பெயரைப்பெற்று, அரச தொலைக்காட்சியானது.

அக்காலப்பகுதியில்  அமைக்கப்பட்ட  தேசிய தொலைக்காட்சித் திட்டமிடல் குழுவில்   (National Television Planning Committee) இரண்டு பெண்கள் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

  ஒருவர் திருமதி பொன்மணி குலசிங்கம், மற்றவர் இலங்கை


ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில்  மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய  ஞானம் இரத்தினம்  அம்மையார்.

பொன்மணி குலசிங்கம் சில வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் மறைந்தார்.  தற்போது ஞானம் இரத்தினம் அம்மையாரும் விடைபெற்றுள்ளார்.

 

 

No comments: