இலங்கைச் செய்திகள்

 ஊடக புலமைப்பரிசில் பெற்று அருண் பிரித்தானியா பயணம்

தொடர்ந்தும் நானே பிரதமர் ஓய்வு பெறப் போவதில்லை

இலங்கை வந்துள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை

இந்திய வௌியுறவு அமைச்சருடன் இ,தொ,கா பிரதிநிதிகள் சந்திப்பு

இந்திய ஒத்துழைப்புகள் குறித்து ரணிலுக்கு, ஜெய்சங்கர் விளக்கம்

மிரிஹான ஆர்ப்பாட்டம்

இன்று (02/04/2022) மாலை 6.00 மணி முதல் 36 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு!

பேராதனை மாணவர்களை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்



ஊடக புலமைப்பரிசில் பெற்று அருண் பிரித்தானியா பயணம்

பிரித்தானிய அரசாங்கத்தின் ஊடகத்துறை சார்ந்த  உயர் புலமைப் பரிசில் கற்கை நெறிக்கு சுயாதீன ஊடகவியலாளர் அருண் ஆரோக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கற்கை நெறியை தொடர  அவர் பிரித்தானியா பயணமானார். 

சிவினிங் புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தினால் இந்த  கற்கை நெறி நடத்தப்படுகிறது.  தெற்காசிய ஊடகவியல் புலமைப் பரிசில்  என்ற இந்த கற்கை நெறிக்கு தெற்காசிய நாடுகளில் இருந்து ஊடகவியலாளர்கள் பங்குபற்றுவார்கள். 

ஊடகவியலாளர் அருண் ஆரோக்கியநாதன்  உட்பட இலங்கையிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள் அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனையும் சந்தித்து கலந்துரையாடினர்.  அருண் ஆரோக்கிய நாதன்  இலங்கையில் பல ஊடகங்களிலும் பணியாற்றியுள்ளதுடன் சர்வதேச ஊடக நிறுவனங்களுடனும்  இணைந்து பணியாற்றிவருகிறார்.   இம்முறை 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 ஊடகவியலாளர்கள் ஒருங்கே பங்கேற்கின்றனர்.  கடந்தாண்டில் கீர்த்தி மிக்க ஆசிய ஊடக புலமைப் பரிசில் அருணுக்கு வழங்கப்பட்டது. அருண் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்.   நன்றி தினகரன் 




தொடர்ந்தும் நானே பிரதமர் ஓய்வு பெறப் போவதில்லை

வதந்திகளுக்கு பிரதமர் முற்றுப்புள்ளி

பிரதமர் பதவியிலிருந்து தான் விலகி ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியிடப்படும் கூற்றுக்களை முற்றாக நிராகரிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இது உண்மைக்குப் புறம்பான தகவலென்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமது பதவிக்காலம் முடியும் வரை தாமே இலங்கையின் பிரதமராக தொடர்ந்தும் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும்  பாராளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன பெரும் வெற்றியீட்டுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அது தொடரபில் மேலும் தெரிவித்துள்ள பிரதமர்;

நாட்டில் நெருக்கடி நிலைமைகள் காணப்பட்டாலும் அதற்கு விரைவான தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கம்தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை குறைவடையவில்லை. அடுத்துவரும் தேர்தல்களிலும் நாம் வெற்றிபெறுவோம். நான் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருப்பேன். அவரசமாக ஓய்வுபெறப் போவதில்லை.

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் வெளியிடப்படும் கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. எமக்கு ரணிலுடனோ அல்லது சஜித்துடனோ எவ்வித தொடர்புகளும் கிடையாது. அவை பொய்யான கூற்றுக்கள்.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பிரதமரிடம் கேள்வியெழுப்பிய போது; அரசாங்கம் வெகு விரைவில் அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கப் போவதாகவும்கடந்த சில தினங்களாக பரப்பப்படும் பொய்ப்பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  - நன்றி தினகரன் 



இலங்கை வந்துள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை

இலங்கை வந்துள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைக்கல் நெஸ்பி (Michael Naseby), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை நேற்று சந்தித்தபோது பிடிக்கப்பட்ட படம். நெஸ்பி பிரபுவால் எழுதப்பட்ட “Paradise Lost : Paradise Regined” என்ற நூலையும் ஜனாதிபதிக்கு அவர் வழங்கினார்.   நன்றி தினகரன் 



இந்திய வௌியுறவு அமைச்சருடன் இ,தொ,கா பிரதிநிதிகள் சந்திப்பு   

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவின் பிரதிநிதிகள், அண்மையில் இந்திய  வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் மேலும்   மலையகத்துக்கான இந்தியாவின் உதவிகள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.

இக்கலந்துரையாடலில் தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மலையகத்தில் அமைக்கப்படவுள்ள பல்கலைகழகத்திற்கு இந்திய அரசின் பங்களிப்பின் அவசியத்தையும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் விரிவாக விளக்கினார். இச்சந்திப்பில், இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோரும்  பங்கேற்றிருந்தனர்.

(தலவாக்கலை குறூப் நிருபர்) நன்றி தினகரன் 

   



இந்திய ஒத்துழைப்புகள் குறித்து ரணிலுக்கு, ஜெய்சங்கர் விளக்கம்   

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியா வழங்கியுள்ள உதவிகள் சாதாரணமானவையல்ல என்றும் , இந்தியா இவ்வாறு வேறு எந்த நாடுகளுக்கும் தொடர் உதவிகளை வழங்கவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 




மிரிஹான ஆர்ப்பாட்டம்

படங்கள்: சுலோச்சன கமகே

நன்றி தினகரன் 



இன்று (02/04/2022) மாலை 6.00 மணி முதல் 36 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு!

இன்று மாலை 6.00 மணி முதல் 36 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு!-CURFEW-April 02 6pm to April 4 6am

இன்று (02) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (04) காலை 6.00 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (31) நுகேகொடை ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து, கடந்த இரு நாட்களாக இரவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, நாளையதினம் (03) நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஜனாதிபதியினால் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




பேராதனை மாணவர்களை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க, பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நன்றி தினகரன்

No comments: