நனவிடை தோய்தல்: பக்கத்து வீட்டு தாத்தா கனகா கணேஷ் – சிட்னி


சிறு வயது பள்ளி நாட்களை இப்போது நினைத்தாலும் கடுப்பாகத்தான் இருக்கும். பள்ளியில் ஆசிரியைகள் தொல்லைகள் போதாதென்று வீட்டிலும் எப்போ பார்த்தாலும் படி படி என்று உயிரை வாங்குவார்கள். இது தவிர எல்லா ஆசிரியைகளும் நாங்கள் இருந்த வீட்டை சுற்றிலும் தான். வகுப்பில் என்ன செய்தாலும் உடனுக்குடன் அம்மாவிடம் ஒப்புவித்து விடுவார்கள். பிறகு என்ன, தினமும் ஆயுத பூஜை தான்.  படிப்பு ,தேர்வு, வீட்டுப்பாடங்கள், டியூசன்ஸ் என்று வாழ்க்கையே வெறுத்து போன காலகட்டங்கள் அவை.

அது மட்டுமின்றி வகுப்பில் பாடம் நடத்துகையில் அவ்வப்போது


எழுப்பி கேள்விகள் வேறு கேட்பார்கள். அப்படி கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்லி விட்டாலோ அல்லது தெரியாமல் விழித்தாலோ தண்டனை என்ற பேரில் ஒவ்வொரு சரியான விடையையும் குறைந்தது பத்து  முறைகளாவது எழுதிக் கொண்டு போக வேண்டும். தற்கொலை செய்து கொள்ளலாமா  என்று கூட அடிக்கடி நினைத்திருக்கிறேன். ஆனால்,  அப்படி ஏதேனும் செய்து ஒரு வேளை  இறந்து விட்டால்,  மறுபடியும் பிறந்து மறுபடியும் பாலர் வகுப்பிலிருந்து படிக்க வேண்டுமே என நினைத்து அந்த யோசனையையும் கைவிட்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த தாத்தா மேல் தான் கண் எல்லாம். சுமார் ஆறடி உயரத்தில் இந்தியன் பட தாத்தா சாயலில் சற்று பருமனாக  கம்பீரமாக இருப்பார். அவரைப் பார்க்கையில் ரொம்ப பொறாமையாக இருக்கும். நானே அந்த தாத்தாவாக மாறி விடக் கூடாதா என்று  எத்தனையோ முறை ஏங்கியிருக்கிறேன். கடவுளிடம் கூட என்னை அந்த தாத்தாவாக மாற்றும்படி கடுமையாக வேண்டிக் கொண்டும் இருந்திருக்கிறேன்.

காரணம், எனக்கு தெரிந்த வரையில் தாத்தாவுக்கென்று பிரத்யேகமாக எந்த வேலையும் இருந்ததில்லை. குறிப்பாக பள்ளி செல்லவோ பாடம் படிக்கவோ எந்த அவசியமும் இருந்ததில்லை. காலையில் 6.30. மணி போல்தான் எழும்புவார். எழும்பியதும் நேராக எங்கள் வீட்டுக்குத்தான் வருவார். நாங்கள் எல்லாம் ஒழுங்காக படித்துக் கொண்டிருக்கிறோமா என்று நோட்டம் விடுவார். நாங்கள் யாரேனும் படிக்காமல் விளையாடிக்கொண்டிருந்தாலோ அல்லது சண்டைபோட்டு ஒருவருக்கொருவர் அடிபிடிபட்டுக் கொண்டிருந்தாலோ  அவ்வளவுதான் மிரட்டுவதோடு, காய்ச்சியும் எடுத்து விடுவார். அதோடுமட்டுமல்லாமல் எங்கள் மூவரையும்  கைப்பற்றலாக அவர் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போய், அங்கே சுவற்றில் அவர் சிறு வயதில் அலுவலக நண்பர்களுடன் ( இரயில்வே அதிகாரியாக வேலை பார்த்தவராம் ) எடுத்த இரசம் போன கறுப்பு வெள்ளை புகைப்படத்தை காட்டி, தான் சிறு வயதில் எங்களைப் போல அல்லாமல் பொறுப்பாக படித்ததனால்தான்  அரசு அதிகாரியாக பணியிலிருந்ததாகவும் நாங்கள் அவர் பேச்சைக்கேட்காமல், படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் உருப்படவே போவதில்லை என்றும் பயமுறுத்துவார்.  கிட்டத்தட்ட பத்தாயிரம் முறைகளுக்கும் மேல் எங்களுக்கு இதைச் சொல்லியிருப்பார்.

எங்கள் அப்பா அப்போது வெளியூரில் இருந்தபடியால் எங்களை நல் வழிப்படுத்துகின்ற ????  முழு பொறுப்பும் அவரிடம்தான் இருந்தது..

அவர் வீட்டில்  Analog tv size ல் ஒரு பழைய ரேடியோ இருந்தது. அதன் அருகில் நிற்பதற்கோ அதனைத் தொடுவதற்கோ எங்களை ஒரு போதும் அவர் அனுமதித்ததில்லை. பழுதாக்கி விடுவோமாம். அதில் தினமும் கிட்டத்தட்ட இருபது நிமிடத்திற்கு மேல் மெனக்கெடுவார் மீட்டர் பிடிக்க. அதற்குள் 6.45 மணி செய்தி பாதி ஓடி விடும்.  பின்பு 8 மணிக்கு முன்பாக  அவரது காலைக்கடன்களையெல்லாம் முடித்து விட்டு, பளிச்சிடும் வெண்மை நிறத்தில் வேட்டி, சட்டை உடுத்திக்கொள்வார். அவரிடம் புலி நகம் போட்ட தடிமனான தங்கச் சங்கிலியும் இருந்தது. அதனையும் வெளியில் தெரியும் படி பார்த்துக்கொள்வார். முகம் கழுத்து எல்லாம் குட்டிகுரா பௌடரை அள்ளித் தெளித்து  8.30 க்கு சாப்பிட உட்கார்ந்து விடுவார். பாட்டி அவசர அவசரமாக பயபக்தியுடன் சாப்பாடு கொண்டு வந்து வைப்பார்கள். இட்லி அல்லது தோசை மட்டுமே அவரது காலை உணவு.

 அதன் பிறகு அவரது ஆஜானுபாகுவான உருவத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத அவரது Push bikeல் ஏறி  பறந்து விடுவார். அவ்வளவு அவசரமாக சாப்பிட்டும் சாப்பிடாமல் அவர் போவது எங்கே தெரியுமா? அவரைப்  போலவே  வெட்டியாக உள்ள அவரது நண்பர்களை சந்திக்கத்தான். ஊருக்கு சற்று ஒதுக்குபுறத்தில் இருந்த  நூலகம்தான் அவர்களின் Meeting point.  அங்கு தன் நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி முடிந்து 12 மணி போல்தான் வீட்டுக்கு வருவார். 12.30 க்கு சுடச்சுட மதிய உணவு, பிறகு 3 மணி வரை தூக்கம்.

பின்பு மாலை சிற்றுண்டியுடன் தேநீர்.

மறுபடியும், வெள்ளை வேட்டி சட்டை, புலி நக சங்கிலி, குட்டிகுரா பௌடர், Push bike நண்பர்கள் ,அரட்டை.... இரவு 7.30 க்கு நேராக எங்கள் வீடு, மறுபடியும் எங்களை மிரட்டல்.

பின்பு  இரவு உணவு. .9 க்கு படுக்கை..

மீண்டும் மறுநாள் காலை 6.30 க்கு முழிப்பு , நேராக எங்கள் வீடு, மிரட்டல், ரேடியோ, 6.45 க்கு செய்தி, வேட்டி, சட்டை, புலிநக சங்கிலி......

இப்போது சொல்லுங்கள் நான் தாத்தாவாக ஆசைப்பட்டதில் என்ன தவறு என்று.

காலங்கள் உருண்டோடி கடைசியில் யார் செய்த புண்ணியமோ நானும் ஒரு வழியாக உருப்பட்டு, ஒரு புண்ணியவானும் வாழ்க்கை தர முன்வந்த நிலையில் திருமண அழைப்பிதழை முதன் முதலில் தாத்தாவுக்குத் தான் கொடுக்க வேண்டும்  அதுவும் நானே நேரில் சென்று கொடுக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசைக்கு மதிப்பளித்து அம்மாவும் அப்பாவும் என்னைக் கூட்டிப் போனார்கள்.

தள்ளாத வயதில் படுத்த படுக்கையாக... பாட்டியையும் இழந்து, பிள்ளைகள் இல்லாதபடியால் உறவினர்கள் கட்டுப்பாட்டில் எல்லாம் இழந்த நிலையில்...

வெள்ளை வேட்டி சட்டை, புலிநக சங்கிலி,குட்டிகுரா பௌடர் இல்லாத தாத்தா தன் நடுங்கும் கைகளால் என் தலையை தடவி என் கைகளை அழுத்தமாக பற்றி ஆசி வழங்கிய போது,

கடவுளிடம் நானும் கேட்டு கொண்டேன் என்  ஆயுளிலும் ஆரோக்கியத்திலும் பாதியையாவது தாத்தாவுக்கு கிடைக்கும் படி செய்ய வேண்டுமென்று !

---0---

2 comments:

Unknown said...

Very nice narration.

Janani said...


Very nice. Same thing happen to me also.