கற்கண்டு - Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்

 .அம்மம்மா மறிச்சுக் கேட்டதுக்கு “ இப்பிடியே நேர போய் இடது பக்கம் திரும்பினா வரும், 20 ம் வாட்டு எண்டு கேட்டாக் காட்டுவினம்“ எண்டு ஒரு வெள்ளை உடுப்புக்காரர் சொல்ல , நான் இவரும் டொக்டரோ எண்டு கேட்டன். 

“பறையாம வா அது ஓடலி” எண்ட படி அம்மம்மா இழுத்துக்கொண்டு போனா. ஆஸ்பத்திரியில வெள்ளை உடுப்போட திரியிற பொம்பிளை எண்டால் நேர்ஸ் , ஆம்பிளை எண்டால் டொக்டர் எண்டு தான் நான் நெச்சிருந்தனான். 

முந்தி மூண்டு தலைமுறைக்கு Dr.கங்கம்மா தான் இணுவிலில பிள்ளைப் பெறு பாத்தவ எண்டு சொல்லிறவை. எழுவதுகளில தான் பெரியாசுபத்திரிக்கு பிள்ளைப்பெறுக்கு கூட ஆக்கள் வாறது. ஊரில அப்ப பொலீஸ் ஸ்டேசன் போனாலும் பெரியாசுப்பத்திரிக்குப் போனாலும் ஏதோ கதை முடிஞ்சிது எண்டு மாதிரித்தான் சனம் பயப்பிடிறது. அப்பப்ப நான் சண்டை பிடிச்சால் அம்மா கொண்ணனை பெத்தது , உன்னை வாங்கினது எண்டு பேசேக்க , ஆஸ்பத்தரீல பிள்ளை விக்கறதோ எண்ட சந்தேகம் வந்து போனது . 

“தண்ணியைப் பாத்து நட “ எண்டு சொன்ன அம்மம்மாவை நிமிந்து பாத்தன் ஏனெண்டால் நடக்கிற எல்லா இடமும் தண்ணியாத்தான் இருந்தது. ஒவ்வொரு வாட்டையும் தாண்டி நடக்க ஏதோ மூக்குக்க துளைக்கும் , பாத்துரூம் நாத்தம் கிட்டப்போகாமலே மணக்கும். 


இதை எல்லாம் தாண்டிப் போக, 20 ம் வாட் விறாந்தையில வயித்தையும் நாரியையும் பிடிச்சுக்கொண்டு கொஞ்சப்பேர் நடக்காமல் முக்கி முனகி சுவருகளை பிடிச்சபடி நிண்டிச்சினம். “ நல்லா நடவுங்கோ இல்லாட்டி வெட்டித்தான் எடுக்க வேணும்” எண்டு midwife சொல்லி வெருட்ட, பயத்தில மூக்கால நடக்கிற (முக்கிற) அம்மாக்களையும் தாண்டிப் போய் மாமியைத் தேடினம். 

நடக்கிற மகள்மாருக்கு பின்னால நடந்தும் நடக்காமலும் அலையிற அம்மா மாரையும் விலத்திப் போய்த் தேட 

“பிள்ளை பிறந்தா அந்தப் பக்கம் மாத்தீடுவினம் எண்டு “ ஒரு ஆச்சி சொல்லவும் , மாமா எங்களைக் கண்டிட்டு கையைக் காட்ட நாங்கள் உள்ள போனம். 

உள்ள போனால் ,இளம் மஞ்சள் paint விட்டு விட்டு அடிச்சு மாதிரி பாதிப் paint உரிஞ்ச இரும்புக் கட்டில் , அதின்டை நுனியில net ஆல மூடின தொட்டில் , அதுக்குப் பக்கத்தில ஒரு சின்ன அலுமாரி. உள்ள இருக்கிற எல்லா கட்டிலும் அதில இருக்கிற அம்மா மாரும் ஒரே மாதிரித்தான் Bed Jacket ம் லுங்கியும் போட்டு கொண்டு இருந்திச்சினம் . 

எது எங்கடை அலுமாரி எண்டு கேட்டு , அதில Thermos பிளாஸ்க்கை எடுத்து இதுக்க கோப்பி இருக்கு , இது இடியப்பமும் அரைச்ச மீன் தீயலும் , இது சொதிப் போத்தில் எண்டு அடுக்கி வைச்சா அம்மம்மா. அப்ப ஆஸ்பத்திரீல இருக்கிற எல்லாருக்கும் , Thermos flask இல வேர்க்கொம்புக் கோப்பி, காலமை இரவு இடியப்பம், சோறுக்கு மீன் தீயல் , சொதி . இது தான் standard சாப்பாடு . வருத்தம் பாக்க வாறாக்கள் horlicksம் , வீட்டை போறவை சிலர் விறாத்து கோழிக்குஞ்சும் கொண்டு போறவை.

அவருக்கும் ஒரு கோப்பியைக் குடுங்கோ காலமை முழுக்க வெளீல தான் நிண்டவர் எண்டு சொன்னபடி மாமாவைப் பாத்தா மாமி. நான் அம்மாவைத் தேட , ஊசி போட பிள்ளையக் கொண்டு போக பிள்ளையோட body guard ஆப் போட்டு வந்தா அம்மா. 

போன கிழமை பேப்பரில யன்னலுக்கால பிள்ளையைத்தூக்கி குடுத்து பிள்ளை காணாமப் போனது எண்டு பெரிய கதை ஒண்டு இருந்தபடியால் midwife ஐ நம்பாமல் அம்மாவும் போட்டு வந்தவ. அம்மா “ இந்தா தூக்கப்போறியே மச்சானை “ எண்டு கேக்க விருப்பம் இருந்தாலும் பயத்தில வேணாம் எண்டு சொன்னன். 

பிள்ளை பிறந்தா ஆஸ்பத்திரீல போய் பாக்கிறது தான் முறை எண்டு எல்லாரும் படை எடுத்து வந்திச்சினம். நீயா நானா கோபிநாத் இல்லாமல் பிள்ளை அம்மா மாதிரியா அப்பா மாதிரியா தலைப்பு விவாதம் ஜெயாராஜ் அண்ணையின்டை தலைமை debate மாதிரி முடிவு தெரியாம முடிஞ்சுது. 

பாக்க வந்த ரதி மாமி எத்தினை மணிக்குப் பிறந்தது எண்டு தொடங்கினா. 2.35 எண்டு தான் சொன்னவை எண்டு கதை தொடங்க , வடிவாக் கேள் 2.20 க்கு முதல் அச்சுவினி பிறகு எண்டா பரணி, “ பரணி பார் ஆழும்” எண்டு ரதி மாமி சொல்ல ,நேர்ஸ் சரியா பதிஞ்சருக்க வேண்டும் எண்டு நம்பிக்கையில் பார் ஆழப்போகும் மகனின் நேரம் பாக்க மாமா போனார். 

ந, ம, மு வில பேர் வந்தா நல்லம் , முருகன்டை பேர் எண்டாத் திறம் எண்ட சொல்ல , பேர் பாக்கும் படலம் தொடங்கிச்சுது. முருகனே நல்ல பேர் தானே எண்டு நான் நெக்க , போன வருசம் லண்டனில இருந்து வந்த மாமீன்டை தங்கச்சி சொன்னவவாம் இப்ப “ ஸ் “ இல முடியிறதான் style எண்டு மாமீ முதலே தான் பேர் முடிவெடுத்திட்டன் எண்டதை சொல்லாமல் சொன்னா. 

எல்லாரும் கொண்டந்த Horlicks போத்தில் , Johnson & Johnson பேபி செட்டை எல்லாம் மாமா கூடைக்க அடுக்கி வைச்சார். அப்ப வெள்ளை, நீலம் , மஞ்சள், pink எண்டு கன கலரில வாறது baby set எண்டாலும் பிள்ளை பிறந்தா pink colour set தான். அனேமான ஆம்பிளைப்பிள்ளைகள் கூட pink சட்டை தான் போடிறவை. Baby pink , அது எப்படி பொம்பிளைப்பிள்ளைக்கு மட்டும் சொந்தமானது எண்டு தெரியேல்லை. அம்மம்மா பழைய பேப்பரில சுத்தி அம்மா தந்த ரத்தம் படிஞ்ச பார்சலை கவனமா வைச்சிட்டு , தோய்க்க வேற ஏதும் இருக்கே எண்டு கேட்டு வாங்கிக் கொண்டு வெளிக்கிட்டா. இந்தா கற்கண்டு வீட்டையும் கொண்டே குடு எண்டு மாமா ஒரு சுருளில ஆம்பிளை பிள்ளையை பெத்த பெருமையோட சுத்தித் தந்தார் .

அம்மாமாருக்கு மூத்த பிள்ளை அதிலேயும் ஆம்பிளைப்பிள்ளை எண்டா கொஞ்சம் extra பாசம், கலியாணத்துக்கு பிறகு அது தான் தனக்கு சபை சந்தீல நிக்க promotion தந்த படியால் தான் அப்பிடி எண்டு sigmund Freud சொல்லுவார் எண்டு நெக்கிறன். அதே போல் தன் இளமைக்கும் திறமைக்கு சான்றாக பிறந்த கடைசிப்பிள்ளை அப்பான்டை செல்லமா இருக்கும் . ஆனா இதுக்குள்ள பிறக்கிற ரெண்டு மூண்டு தானாப்பிறந்து தானா வளர்ந்திருக்கும். 

“ வெளீல சனம் கதைக்கிற மாதிரி இல்லை , இங்க நல்ல நேர்ஸ் மார் ஒருத்தரும் பேசேல்லை அவைக்கு போகேக்க ஏதாவது வாங்கிக் குடுக்கோணும் “ எண்டு மாமி சொல்ல , மாமாவும் தலையை ஆட்டினார்.

பிள்ளைப்பெறு பாத்திட்டு வந்தா துடக்கு போய் தோய் எண்டு வீட்டை வரச் சொல்லிச்சினம். துடக்கில்லாத கற்கண்டை எடுத்து வைச்சிட்டு நான் மட்டும் தோஞ்சிட்டு வந்தன் .

Nantri: https://yarl.com/forum3

No comments: