கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபது ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

    காரோட்டும் சாரதிக்குக் இருப்பிடமாகிக் கைகொடுக்கும் நார் 
இருந்து களைப்பாற நாற்காலியில்சாய்மானைக் கதிரையில் இடம் பெறும் நார்;  சந்தைக்குக் கொண்டு செல்லும் கூடையாய்உல்லாச இருக்கைகளாய்மாறியிருக்கும் பனை நார் - குப்பைகளைத் தாங்கும் கூடைக ளாயும் வந்து நிற்கிறது. அது மட்டுல்ல சைக்கிள் கூடையாகவும் வருகிறது.அழகிய கைப்பைகளாகவும் அமைந்து நிற்கிறது பனை நார். 

இப்படிப் பயன்பட்டு நிற்பதுதான் முதல் நிலையில் எடுக்கப்படுகின்ற அகணிநாராகும்.

  அடுத்த நிலையில் இருப்பதுதான் புறணிநார்.புறணிநாரும் பயனு டையதாகவே இருக்கிறது. பெட்டிகளின் விளிம்பு கட்டுவதற்கு இந்த நார் உதவி நிற்கிறது. சுளகு பெட்டிகளுக்கு வாய்கட்ட இந்தநார் பயனாகி நிற் கிறது.கடகங்கள் கூடைகள் பொத்தவும் புறணிநார் வந்து நிற்கிறது.

  அகணிநார்புறணிநார் எடுத்தபின் வந்து அமைவதுதான் சோத்தி நார். இந்த நாரை தட்டி எடுத்து அதனைக் கொண்டு கயிறும் திரிக்கப்படுகிறது.இப்படி வரும் கயிற்றினால் மாடுகளைக் கட்டலாம். ஊஞ்சல் ஆடு வதற்கும் பயன்படுத்தலாம்.

  பனை ஓலையுடன் இணையும் மட்டையையும் சேர்த்து வேலி


அடை க்கப் பயன்படுகிறது. ஓலை இல்லாமலிருக்கும் பனை மட்டையினைப் பயனாக்கியும் வேலி அடைக்கப்படுகிறது. இரண்டு வகையான வேலிகளையும் அடைக்கும் பொழுது - பனை நார் அங்கும் வந்து கைகொடுத்து நிற்கிறது.வீடு வேயும் பொழுதும்
வரிச்சுகள் கட்டும் பொழுதும் பனை நார் கூடவே வந்து நிற்கிறது. இருக்கவும் இறுக்கமாய் பிணைக்கவும்அழகாய் பொருட்களாய் அமையவும்என்று பல நிலைகளில் பனை நார் பயனாகியே நிற்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய கருத்தெனலாம்.

  பனை மட்டையானது வேலியாக அமைந்து பாதுகாப்பு அரணாகி நிற்கிறது. அதனுடன் இணைந்த ஓலையும் வேலியிலும், வீட்டின் கூரையில் வந்து பயனாகி நிற்கிறது. பனை ஓலையின் பயன்பாடு மிகவும் காத்திரமானது என்பதைப் பார்த்தோம்.அந்த ஓலையில்  இருக்கும் ஈர்க்கும் - தன்னாலும் உதவிட முடியும் என்று காட்டுவதில் முன்வந்து நிற்கிறது என்பதையும் கவனிப்பது முக்கியமாகும்.பனை ஈர்க்கும் கைத்தொழிலில் நுழைகிறது.

   பனை ஈர்க்கு என்பதை சாதாரணமாக எண்ணிவிடல் கூடாது.


தமிழரது வாழ்வில் ஒன்றிப்பிணைந்த ஒரு பொருளை உருவாக்குவதில் முன்னிற்கிறது பனை ஈர்க்கு.அந்தப் பொருளை அறிய ஆவல் எழு கிறதா. அதுதான்.
   " திருகணை " . இதனைத் திருகணி என்றும் சொல்லுவார்கள்,இந்தத் திருகணைகளின் இருப்பிடம் பெரும்பாலும் சமையல் அறைகளாகவே இருக்கும்.சமைக்கும் பாத்திரங்கள் மண்ணினால் ஆக்கப்பட்டே இருந்தன. மண்ணினால் ஆக்கப்பட்ட  பானையினையோசட்டியினையோ அல்லது மண்ணிலாகிய தாச்சியையோ அடுப்பில் வைத்துச் சமையல் செய்யும் பொழுது அப்பாத்திரத்தின் அடிப்பகுதி கரியாக மாறிவிடும். அந்த நாட்களில் விறகுதான் அடுப்பெரிக்கப் பயன்பட்டது. விறகடுப்பில் கரிவருவது என்பது தவிர்க்க முடியாததாகும்.மண் தாச்சியின் பயன்பாடு மாறி அலுமினியம் தாச்சி வந்தாலும் அதன் அடிப்பாகம் கரியாவதும் தவிர்க்க முடியாததேயாகும்அடுப்பிலிருந்து இறக்கி நிலத்தில் வைத்தால் நிலம் கரியயாக வந்துவிடும். இதனை தடுப்பதற்கும்இறக்கியவுடன் இருக்கும் வெப்பத்தால் பாதிப்பு வராமல் இருப்பதற்கும் கைகொடுத்ததுதான்  திருகணை.

  

இந்தத் திருகணையின் பயன்பாடு என்பது இன்றும் கிராமப் புறங்களில் இருக்கிறது என்பதும் நோக்கத் தக்கதாகும்.மண்பாத்திரங்களை வைக்கும் பொழுது அதற்குப் பாதுகாப்பாக அமைகிறது திருகணை. பானைகளோ சட்டிகளோ தட்டையாக இருப்பதில்லை. அவற்றின் அடிப்பாகம் வளைவானதாகாவேதான் அமைந்திருக்கும். அப்படியானவற்றை நிலத்திலே பக்குவமாய் வைப்பதற்கு திருகணைகளே உகந்ததாக அமைகிறதுதிருகணைகளைத் தலையில் வைத்து அதன்மேல் சுமக்கும் பொருட்களை வைத்துச் சுமந்து செல்லும் பழக்கமும் இருந்திருக்கிறது. கோவில்களில் கற்பூரச் சட்டியினை எடுப்பவவர்களுக்குத் திருகணை கைகொடுக்கிறது. திருகணையில் மூன்று பனை நார்க் கயிற்றினை மூன்று பக்கங்களில் இணைத்தால் வருவதுதான் உறி. உறி என்றதும் கண்ணன் நினைவு நிச்சயம் வந்தே தீரும்.  உறியில் இருந்த வெண்ணைப் பானையில் கைவிட்டு களவாய் வெண்ணையினைத் திருடி உண்ட சம்பவம் கதையாகவே சொல்லப்படுகிறது. உறியில் மண்பானையினை வைத்து அதில் வெண்ணையைதயிரை வைப்பது என்பது அக்காலத்தில் வீட்டில் நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்திட வேண்டும்.மூன்று கயிறுகளால் இணைக்கப்படும் உறியில் பல பொருட்களை பாதுகாப்பாக அந்த நாட்களில் வைத்தார்கள் என்பதும் நோக்கத்தக்கது.

  சமையல் அறையில் மட்டுமல்ல கலைப் பயணத்திலும் பனை ஈர்க்கினால் ஆக்கப்பட்ட திருகணை பயனாகி இருந்திருக்கிறது என்பதும் முக்கிய செய்தி எனலாம். கிராமியக் கலைகளில் கரகாட்டம் என்பது மிகவும் முக்கியமானது. அந்தக் கரகாட்டத்தின் பொழுது தலையிலே மூன்று தொடக்கம் ஐந்து வரையான பானைகளைத் தலையில் வைத்து ஒரு நடனம் ஆடுவார்கள். இதனைக் கரகாட்டம் என்று அழைப்பர். அடுக்கிய பானைகளைத் தலையில் தாங்குவதற்குக் கைகொடுத்து நிற்கிறது பனை நார் திருகணை என்பதுதான் இங்கு முக்கியமாகும்.

  பனை ஈர்க்கினால் கூடைகள் செய்யப்பட்டன. இந்தக் கூடைகள் பழங்களைப் பொதி செய்ய உதவியாக இருந்தன. யாழ்ப்பாணத்தில் வெங்காயச் செய்கை பிரபல்யமானது. விளையும் வெங்காயம்  வேறு பகுதி களுக்கு அனுப்பி வைப்பதற்கு பனை ஈர்க்கினால் ஆகிய கூடைகள் பெருதும் உதவியே நின்றன எனலாம்நெடுந்தீவில் பனை ஈர்க்கீனாலாகிய கூடைகள் செய்வது என்பது தொழிலாகவே இடம் பெற்றது என்பதும் கருத்திருத்த வேண்டிய விடயமாகும். காற்றுப்புகும் வகையில் பனை ஈர்க்குக் கூடைகள் அமை ந்திருப்ப துதான் மிகவும் முக்கிய அம்சமெனலாம்.

    ஏடாகியது. இருக்கையாகியது. படுக்கப் பாயாகியது.சுமக்கும் சும்மாடாகியது.கயிறாகியது. மெத்தை ஆகியது.கட்டிலுக்கு ஆதாரமும் ஆகியது. பட்டை ஆகியது. பெட்டி ஆகியது.  குட்டானும் ஆகியது. செருப்பா கியது. திருகணையாகியது.கோவிலுக்குக் கொண்டு செல்லும் அரிச்சனைப் பெட்டியாகியும் நின்றது.இப்படி யெல்லாம் ஆகி உதவிக் கரங்கொடுத்த பனை என்னும் கற்பகதரு - பெரியவரும் சிறியவரும் ஆனந்தமாய் சுவைத்து மகிழ்ந்திட அருமையான ஒன்றையும் அளித்திருக்கிறது. அதுதான் “ நுங்கு “. நுங்கு என்று சொன்னவுடனேயே அதன் சுவை உணர்வுடன் கலந்தே விடும். எந்தவொரு சுவையிலும் அடங்காத் தனிச் சுவையினைக் கொடுப்பதாக நுங்கு இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது

      தென்னை இளநீரைக் கொடுக்கிறது. அதுவும் சுவைதான். ஆனால் பனையின் நுங்கின் சுவை வேறா கும். பனையோடு போட்டிக்குத் தென்னையும். வந்துதான் நிற்கிறது. தென்னையும் முக்கிய மானதுதான். ஆனால் பனைக்கு முன்னால் தென்னையானது சற்று தயங்கித்தான் வரவேண்டி இருக்கிறது. அதற்குக் காரணம் ,  பனையின் அளவுக்குத் தென்னையால் ஈடு கொடுத்து விடும் நிலை இல்லை என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.

    தென்னையின் இளநீரை கத்தியால் வெட்டினால் அதனுள் வெறும் நீரே இருக்கும்.இது தாகத்தைத் தீர்க்கிறது. சுவையாயும் இருக்கிறது. உள்ளே இருக்கும் வழு வழுப்பான பகுதியையையும் எடுத்துச் சுவை க்கலாம். இளநீருடன் கலக்கியும் சுவைப்பதும் உண்டு. நுங்கு அப்படியாய் இருக்காது. நுங்கினைத் தாங்கி நிற்கும் பனங்குரும்பையின் மேற் பகுதியைக் கத்தியால் கவனமாகச் சீவி யெடுத்தால் மூன்று கண்கள் விழித்தபடி இருக்கும். அந்தக் கண்களை மூடியபடி ஒரு மேல்தோலும் கவசமாகப் பாதுகாப்பாகவே இருக் கும்.நுங்கினைத் தோண்டி வெளியே எடுத்தும் சுவைப்பார்கள். பனங்குரும்பையை விட்டு எடுக்காமலும் விரலினால் தோண்டியும் சுவைத்தும் மகிழுவார்கள்.அப்படிச் சுவைக்கும் பொழுது ஏற்படும் உணர்வினைச் சொல்லினால் சொல்லிவிட முடியாது. சொன்னாலும் விளங்காது. சுவைத்துத்தான் அனுபவிக்க வேண் டும்.அப்படி நுங்கினைச் சுவைப்பது தனி அனுபவமாகும். அப்படிச் சுவைத்தவர்களுக்கே அதன் அருமை தெரியும்.

 

   “ தளரா வளர் தெங்கு தான் உண்ட நீரைத்

      தலையாலே தான் தருதலால் 

 

தென்னைக்கு நீர் தேவை. தென்னையினை வளர்ப்பதற்கு அதன் அடியில் நீரினை ஊற்றுதல் மிகவும் முக்கியமாகும். தொடர்ந்து ஊற்றப்படும் நீரினை உள்வாங்கியே தென்னையானது நன்றிக் கடனாய் நிறை வில் இளநீராய் தருகிறது என்பதைத் தமிழ் மூதாட்டி சொல்லுவது நோக்கத்தக்கது.ஆனால் எவரின் கவனி ப்புமே இல்லாமல் வளருகின்ற பனையானது எந்தவித எதிர்பார்ப்புமின்றி - சுவையான நுங்கினைத் தருவது என்பது பனையின் பெருங்குணத்தையே பறைசாற்றி நிற்கிற தென்றுதான் எடுக்க வேண்டும் அல்லவா !

   பெண் என்னும் சொல்லே பெருமை உடைய சொல்லாகும். பெண் என்றாலே சக்தி என்றும் இயக்கும் வல்லமை உடையது என்றும் எண்ணும் வழக்கம் இருக்கிறது. மனித வாழ்வில் பெண்ணுக்கு பெரும் முக்கியத்துவம் இருப்பதை யாவரும் அறிவோம். யாவருமே ஏற்றும் கொள்ளுவோம். பனை பற்றிச் சொல்ல வந்துவிட்டு வாழ்க்கைபெண் என்றெல்லாம் பொருத்தமே இல்லாமல் சொல்லுவதாய் எண்ணி விடாதீர்கள். வாழ்வினில் பெண்ணின் நிலை வித்தியாசமானது. அந்தப் பெண்ணுக்குத்தான் கருப்பையும்கருவினைத் தாங்கும் வல்லமையையும் இயற்கை வழங்கி இருக்கிறது. கருவாகி,உருவாகிநிறைவில் குழந்தையாய் மலர்வதற்கு பெண்தான் முக்கியம்.இதனை ஆணால் செய்யவே முடியாது என்று இயற் கையே தீர்மானைத்து விட்டது. கற்பகதருவாம் பனையிலும் ஆணும் இருக்கிறது. பெண்ணும் இருக்கிறது. பெண் பனைதான் சுவையான நுங்கினை எமக்களிக்கும் பெருமையினைப் பெற்றிருக்கிறது என்பதுதான் இங்கு முக்கிய கருத்தாகும்.

  பெண்பனையின் பாளையில்த்தான் குரும்பைகள் வருகின்றன.அப்படி வருகின்ற குரும்பைகள்தான் எமக்கெல்லாம் அருமையான சுவையினை அளிக்கும் நுங்காக " வருகிறது.தென்னையின் காய்கள் இள மையாய் இருக்கும் பொழுது இளநீராகிறது. அதே காய்கள் முற்றினால் அதனை " தேங்காய் " என்றுதான் அழைக்கிறோம். எப்படித்தான் முற்றினாலும் தென்னம்பழம் என்று அழைப்பதே இல்லை. ஆனால் பனை யின் நிலை அப்படி அல்ல. பனையின் பாளையில் தோன்றும் குரும்பைகள் முற்றும் பொழுது நுங்கென அழைக்கிறோம். அந்த நுங்கு முற்றிய பின்னர் பனங்காய் என்று அழைக்கிறோம். அந்தப் பனங்காய்கள் நிறைவில் " பனம்பழம் " என்றுதான் அழைக்கின்றோம்.. இதுதான் பனையின் விசேடம் எனலாம். இந்த நிலையினை எப்பொழுதும் தென்னையினால் அடையவே முடியாது. இதனால் பனையுடன் தென்னை போட்டி போடுவ தென்பது சற்றுக் கடினமாகவே தெரிகிறதல்லவா !

    பாளையிலிருந்து வருகின்ற குரும்பைகள் முற்றினால் வருகின்ற நுங்கானது இரண்டு நிலையில் அமை கிறது. இளம் நுங்கு என்றும் கல் நுங்கு என்றும் இந்த நிலை இரண்டாக இருக்கிறது என்பது முக்கியமா கும்.நுங்கானது இளமையாய் இருக்கும் பொழுது அதனைச் சீவிச் சுவைக்கலாம்.இளமையான பருவத் தைக் கடந்து வரும் பொழுது நுங்கின் மென்மைத் தன்மை அகன்று அங்கு கடினமான தன்மை ஏற்பட்டு விடுகிறது. இப்படிக் கடினமாய் அமையும் பொழுதுதான் அந்த நுங்கு " கல் நுங்கு " என்று அழைக்கப்படு கிறது. இளநீரின் உட்பகுதியில் வழு வழுப்பாய் இருக்கும் பகுதியும் முற்றும் பொழுது வழு வழுப் பான நிலையினை விட்டு இறுக்கமாய் ஆகிவிடுவதைக் காண்கிறோம் அல்லவாஅதுபோலத்தான் கல்நுங்கும் காணப்படுகிறது.

  சுவையினை அளிக்கும் நுங்குதானே என்றுமட்டும் எடுத்து விடக் கூடாது. நுங்கின் பயன் பாடுகளைப் பார்த்தால் வியந்தே போய் விடுவோம். அந்தளவுக்கு நுங்கானது சிறப்பானதாகவே விளங்குகிறது என்பது கருத்திருத்த வேண்டிய விடயமெனலாம்


No comments: