எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 71 யாழ். பல்கலைக்கழகமும் இனவிடுதலைப்போரும் ? ! பல்கலைக்கழக மாணவர் கடத்தலிலும் முரண்நகை ! செய்திகள் எழுதி செய்தியாகிப்போனவர்கள் ! முருகபூபதி


எனது எழுத்துலக வாழ்வு பற்றிய இந்தத் தொடரை எழுதும்போது, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தை பற்றிச்சொல்லாமல் கடந்து செல்லமுடியாது.

நான் பல்கலைக்கழகங்களில் படித்தவனல்ல. ஆனால், அவற்றின் படிகளில் ஏறி இறங்கியிருக்கின்றேன். சிலவற்றில் மாணவர் மத்தியில் இலக்கிய உரையாற்றியிருக்கின்றேன்.

எனது பல நண்பர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து  பட்டதாரிகளாக வெளியேறி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களாகவும் மிளிர்ந்தார்கள்.

மேலும் பல நண்பர்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும்


பணியாற்றினார்கள். தற்போதும் அவ்வாறு பணியாற்றுபவர்களுடன் நெருக்கமான நட்பையும்  உறவையும் பேணுகின்றேன்.

ஒரு காலத்தில் சேர். பொன். இராமநாதன் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட யாழ். பரமேஸ்வராக் கல்லூரிக்கு 1964 ஆம் ஆண்டு முதல் தடவையாக சென்றிருக்கின்றேன்.

அப்போது எனக்கு 13 வயது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த எனக்கும் எனது தாய் மாமனார் மகன் முருகானந்தனுக்கும் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியில்தான் அனுமதி கிடைத்தது. அச்சமயம் மாமாவின் மூத்த மகன் ஶ்ரீஸ்கந்தராஜா யாழ். இந்துக்கல்லூரியிலும், எங்கள் குடும்ப நண்பர் நடராஜா என்பவரது மகன் சண்முகநாதன் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் ஆண்கள் விடுதிகளில் தங்கிப்படித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவரும் விடுமுறைக்கு வந்து திரும்பியவேளையில் நானும் முருகானந்தனும் யாழ். ஸ்ரான்லிக்கல்லூரிக்கு செல்லத்தயாராகியிருந்தோம்.

எங்கள் அப்பா லெட்சுமணன் ஒரு கம்பனியின் பிரதேச விற்பனை பிரதிநிதி       ( Sales Representative ) . அவர் எங்கள் நால்வரையும் தனது வாகனத்தில் அழைத்துச்சென்றார்.

 அப்போதுதான் நான் பனைமரத்தையே நேரில் பார்த்தேன். அதன்பிறகுதான் அங்கிருந்த சாதிப் பாகுபாடுகளையும் அறிந்தேன். 


அப்பா, முதலில் சண்முகநாதனை யாழ். பரமேஸ்வராவில் இறக்கிவிட்டார். அதன்பிறகு மாமாவின் மூத்த மகன் ஶ்ரீஸ்கந்தராஜாவை யாழ். இந்துவில் இறக்கிவிட்டார்.

இக்கல்லூரிகளை நான் அப்போது வியப்போடு பார்த்து ரசித்தேன். அதன்பிறகு நானும் முருகானந்தனும் யாழ். ஸ்ரான்லிக்கல்லூரியில் சேர்க்கப்பட்டோம்.

இக்கல்லூரியின் பெயர்  நாம் அங்கே இணைந்த காலப்பகுதியில் கனகரத்தினம் மத்திய கல்லூரி என  மாற்றப்பட்டது.

அங்கிருந்த ஆண்கள் விடுதியின் சார்பாக நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில்தான் முதல் முதலாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை பார்த்தேன். அவர் அப்போது மல்லிகை இதழை ஆரம்பித்திருக்கவில்லை. அவ்விதழின் முதல் பிரதி 1966 ஆம் ஆண்டில்தான் வெளியானது.

யாழ். பரமேஸ்வராக் கல்லூரியை எனது வாழ்நாளில் பல காரணங்களுக்காக என்னால் மறக்கவே முடியாது.

யாழ். பிரதேச கல்லூரிகள், பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டி ஒரு தடவை பரமேஸ்வராக்கல்லூரி மைதானத்தில்  நடந்தது.

அந்த விளையாட்டுப் போட்டியில் நடந்த ஈட்டி எறிதல்  போட்டியில்


ஒரு விபரீதம் நடந்தது. மைதானத்தில் ஈட்டி எவ்வளவு தூரம் வந்து பாய்ந்து நிலத்தில் குத்துகிறது என்பதை அளந்து கணித்து பதிவுசெய்து சொல்லவேண்டிய மத்தியஸ்தரான ஒரு ஆசிரியரின் வயிற்றில் அந்த ஈட்டி பாய்ந்து குத்தியதனால் அவர் மரணமடைந்தார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து நாம் அக்காலப்பகுதியில் மீள்வதற்கு பல மாதங்கள் சென்றன. பாடசாலைகள் துக்கம் அனுட்டித்தன.

பின்னாளில் குறிப்பிட்ட பரமேஸ்வராக்கல்லூரி  1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகமாக மாறியபோது , அதனை கடுமையாக எதிர்த்தவர்கள் தமிழரசுக்கட்சியினரும் தமிழ் இளைஞர் பேரவையினரும்தான்  என்பது குறிப்பிடத்தகுந்தது.

எதிர்ப்பு அரசியல் தமிழர் தரப்பில் தொடங்கப்பட்ட அக்காலப்பகுதியிலேயே நானும் இலக்கிய – ஊடகப்பிரவேசம் செய்திருந்தேன்.

குறிப்பிட்ட 1974 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து,  அதன் தேசிய சபை உறுப்பினராகியிருந்தேன். கோவை மகேசன் சுதந்திரன் பத்திரிகையில் எமது சங்கத்திற்கு எதிராகவும் முற்போக்கு எழுத்தாளர்களை சீண்டியும் விஷம் கக்கிக்கொண்டிருந்தார்.


யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்று மல்லிகையில் , ஜீவா தொடர்ந்து வலியுறுத்தி எழுதிவந்தார். அதேசமயம் என்றைக்குமே தன்னை முதனிலைப்படுத்தாத சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்,  யாழ். பல்கலைக்கழக வளாக உருவாக்கத்திற்கும்  பேராசிரியர் கைலாசபதியை அதன் தலைவராக நியமிப்பதற்கும் மௌனமாக  அரச மட்டத்தில் காய் நகர்த்திக்கொண்டிருந்தார்.

இதுவிடயம் தெரிந்தோ தெரியாமலோ தமிழரசுக்கட்சியினரும் தமிழ்இளைஞர் பேரவையினரும் கோவை மகேசன் ஆசிரியராகவிருந்த சுதந்திரனும் எமது சங்கத்தையும் விமர்சித்தவாறு யாழ். பல்கலைக்கழக வளாகமாக பரமேஸ்வரா மாறுவதை கடுமையாக எதிர்த்தனர்.

அவ்வேளையில், சங்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருந்தோம்.  எங்கள் ஊரில் பிரசாரக்கூட்டத்தை ஏற்பாடு செய்துவிட்டு, பேராசிரியர் கைலாசபதி, நண்பர் மு. நித்தியானந்தன், சிங்கள எழுத்தாளர் குணசேன விதான ஆகியோரை அழைத்திருந்தேன்.

முதல் நாள் இரவு இக்கூட்டத்திற்கு எதிராக சில உள்ளுர் தீவிர தமிழ்க்கொழுந்துகள் சுவரொட்டிகளை எமது நிகழ்ச்சி நடைபெறவிருந்த இந்து இளைஞர் மண்டபத்திற்கு முன்பாக சுவர்களில் ஒட்டியிருந்தன.

அவற்றை கிழித்தெறிந்துவிட்டு அந்தக்கூட்டத்தை நடத்தினேன்.


கைலாசபதி பேசிக்கொண்டிருக்கும்போது கற்கள் மண்டபத்தின் கூரையை பதம் பார்த்தன.

அதேசமயம் அந்த  இரவில் கொழும்பு பத்திரிகைகளில்  மறுநாளுக்கான தலைப்புசெய்திகளில் யாழ். வளாகத்தின் தலைவர் பேராசிரியர் கைலாசபதி என்ற செய்தி அச்சாகிக்கொண்டிருந்தது.

ஆனால், மறுநாள் அத்தகைய செய்தி வெளிவரப்போகிறது என்பது எனக்குத் தெரியாது.  கூட்டம் முடிந்ததும் பேச்சாளர்களை நானே நீர்கொழும்பு பஸ் நிலையம் வரையில் அழைத்துச்சென்று பஸ் ஏற்றிவிட்டேன்.

நல்லவேளை அன்று அந்தப்பேச்சாளர்கள் மீது எந்தவொரு தீவிர  தமிழ்க்கொழுந்தும் தங்கள் கைவரிசையை காண்பிக்கவில்லை. அவ்வாறு காண்பித்திருந்தால், நானும் விஸ்வரூபம் எடுக்க நேர்ந்திருக்கும். எனது வாழ்வும் திசை மாறிப்போயிருக்கும்.

செய்தி வெளியானதும் நீர்கொழும்பு தபால் நிலையம் சென்று தொலைபேசி அழைப்பு எடுத்து கைலாசபதி அவர்களுக்கு வாழ்த்துக்கூறினேன்.

மற்றும் ஒரு தடவை எங்கள் ஊர்மன்றத்தில்  ஒரு  இலக்கியக் கூட்டத்தில் பேசிய மல்லிகைஜீவா, கைலாஸ் வந்து சென்றதை நினைவுபடுத்தி எமது ஊரின் மண்ணின் மகிமையை விதந்து சொன்னார்.

கைலாசபதி சிறந்த நிருவாகி.  அவரால் யாழ். பல்கலைக்கழகம் பெருமை பெற்றது. எனது இனிய நண்பர்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பி, நுஃமான்,  மௌனகுரு,  சுப்பிரமணிய அய்யர், ஏ. ஜே. கனகரட்ணா, மௌனகுரு, சித்திரலேகா, நித்தியானந்தன், ஆ. சிவநேசச்செல்வன், நிர்மலா, சண்முகதாஸ், கிருஷ்ணராஜா, ரஞ்சனா பரமேஸ்வரன் , துரை . மனோகரன்  ஆகியோரெல்லாம் யாழ். பல்கலைக்கழகத்தில் படிப்படியாக நியமனம் பெற்றனர்.

1976 ஆம் ஆண்டு நாவல் நூற்றாண்டு வந்தபோது, கைலாசபதி அங்கே இரண்டு நாட்கள் ஆய்வரங்கும் நடத்தினார்.  அதற்கும் சென்றிருந்தேன்.  அவர் 1982 ஆம் ஆண்டு  டிசம்பரில் மறைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் கொழும்பு பொது மருத்துவமனையில் அவரைப்பார்த்துவிட்டு வந்து,  பேராசிரியர் தேறிவருகிறார் என்ற தலைப்பிலும்  ஒரு சிறிய செய்திக்குறிப்பினை வீரகேசரியில் எழுதினேன்.

ஆனால், அவர்  டிசம்பர் 06 ஆம் திகதி மறைந்தார். அந்தச்செய்தியையும் எழுதினேன்.

பின்னர் 1983 ஆம் ஆண்டு  தொடக்கத்தில் எமது சங்கம் பாரதி நூற்றாண்டை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் விழாக்களையும் கருத்தரங்குகளையும் நடத்தியபோது தமிழகப்பேச்சாளர்கள் பாரதி இயல் ஆய்வாளர்கள் பேராசிரியர் இராமகிருஷ்ணன், தொ. மு. சி.  ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரையும் அழைத்திருந்தது.

இவர்களை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தபோது யாழ்.வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அப்போது துணைவேந்தராக பதவியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் இருந்தார். அவரது தலைமையில் தமிழக பேச்சாளர்கள் உரையாற்றினர்.

இவ்வாறு யாழ். பல்கலைக்கழகத்துடன் ஏதோ ஒரு வகையில் எனக்கு நேசமும் உறவும் நீடித்திருந்தது.

ஆனால், காலம் பல்வேறு கோலங்களை உருவாக்கிவிடும் அல்லவா.

எவ்வாறோ பல சவால்களை சந்தித்து உருவான யாழ். பல்கலைக்கழகமும்  1983 இற்குப்பின்னர் பல்வேறு சோதனைகளை சந்திக்கத்தொடங்கியது.

தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைவதற்கும் விதிவசத்தால் யாழ். பல்கலைக்கழகமும் ஒரு காரணமாக சிக்கிவிட்டது என்பதுதான் வரலாறு.

குறிப்பிட்ட 1983 – 1984 காலத்திலிருந்து இன்று வரையில் யாழ். பல்கலைக்கழகம் ஏதாவது ஒரு காரணத்தினால் ஊடகங்களில் பேசுபொருளாகிவிடுகிறது.

1974 களில் அதன் வருகையை எதிர்த்த தீவிர தமிழ்க்கொழுந்துகளின் வாரிசுகள், பின்னாளில் அங்குதான் எழுக தமிழ் – பொங்கு தமிழ் -  என்று உணர்ச்சியை தூண்டத்தொடங்கின.

1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைப்பொங்கல் காலத்தில் அங்கு பயின்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலர்  இலங்கை அரசுக்கு,  குறிப்பாக கல்வி அமைச்சிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தே  உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.   அவ்வாறு நடந்த அந்த சாகும்வரையிலான அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம்  கவனத்திற்குரியது.

அந்த  ஆண்டு ஜனவரி தமிழர் திருநாள் தைப்பொங்கலுடன் விடிந்த யாழ்ப்பாணத்தில்  15 ஆம் திகதி  மாட்டுப்பொங்கல்.  அதனையடுத்து  16 ஆம் திகதி கன்னிப்பொங்கல். இலங்கையில் கன்னிப்பொங்கல் விசேடமாகக் கொண்டாடப்படுவதில்லை.

ஆனால், எதிர்பாராத வேளையில்  இரவோடு இரவாக ஒரு வாகனத்தில்  அந்த மாணவர்கள்  அன்றைய தினம் கடத்தப்பட்டனர்.  அதில் மொத்தம் ஒன்பது பேர். 

ஐந்து ஆண்கள். நான்கு பெண்கள். எட்டாவது நாளாக அவர்களின் உண்ணாவிரதம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் கடத்தப்பட்டனர்.

ஆனால், அந்த காந்தீய வழி அறப்போராட்டத்தை ஆயுதம் ஏந்திய  தீவிரவாத இயக்கம் விரும்பவில்லை. 

அவர்கள் கடத்தப்படுவதற்கு முன்னர் கூட்டணித்தலைவர்கள் அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், மாவை சேனாதிராஜா ஆகியோர் நேரில் வந்து சந்தித்துமிருந்தனர்.  அத்துடன் செஞ்சிலுவைச்சங்கத்தை சேர்ந்த சில தாதிமாரும் உடனிருந்து அம்மாணவர்களின் உடல் நிலையை கவனித்துக்கொண்டிருந்தனர்.

மக்களும் அங்கு திரளாக குழுமினர். இவ்வளவும் நடந்துகொண்டிருந்தபோது, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா, மாணவர் ஒன்றிய தலைவர்களுடன் காலம் தாழ்த்தி கொழும்பில் பேசுவதற்கு சம்மதித்திருந்தார்.

ஆனால், அதற்கிடையில் அம்மாணவர்கள் கடத்தப்பட்டனர். இறுதியில் என்ன நடந்தது..?  என்பதை வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன.

அவ்வாறு கடத்தப்பட்ட ஒரு மாணவி பின்னாளில் கடத்திய அந்த இயக்கத்தின் மேதகு தலைவரின் இல்லத்தரசியானார் என்பதையும் நாம் மறந்துவிடமுடியாது. இறுதியில் 2009  மேமாதம் அனைத்தும் முடிந்த கதையாகிவிட்டது.

பின்னாளில்  1987 இல் இந்தியப்படை பிரவேசித்த காலப்பகுதியிலும் மற்றும் ஒரு உண்ணாவிரதம் நடந்தது. அதில்தான் திலீபன் உயிரிழந்தார். 

அவ்வேளையில் நான் அந்த சோகச்செய்தியை அவுஸ்திரேலியாவிலிருந்து  ஊடகங்களில் படித்தபோது, அவரையும் யாராவது கடத்திச்சென்றிருந்தால், உயிர் தப்பியிருப்பாரே, அவரும் யாரையாவது மணம் முடித்திருப்பாரே என்றும்  யோசித்தேன்.

உண்ணாவிரதங்களுக்கான  காரணங்கள் வேறு வேறு !

சரிபோகட்டும்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த பகிடி வதையில் சம்பந்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக  கடத்தப்பட்ட விஜிதரன் என்ற மாணவர் பற்றிய செய்தி வந்தது. அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் அதனைக்கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திய செய்தி வந்தது.  அதன் பின்னணிகளை அப்போது அங்கே படித்துக்கொண்டிருந்த மஹாகவி உருத்திரமூர்த்தியின் மகள் ஔவையை தொடர்புகொண்டு செய்திகளை கேட்டு எழுதினேன்.

அவரை, 1986 இறுதியில் எமது சங்கம் யாழ். நாவலர் மண்டபத்தில் நடத்திய மாநாடுக்கு சென்றிருந்தவேளையில் அளவெட்டி இல்லம் சென்றபோது சந்தித்திருக்கின்றேன்.

ஔவை  ஆளுமை மிக்க  மாணவி. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செய்திகளை தந்தார்.  அந்தச்செய்தியை ஆசிரியர் சிவநேசச்செல்வனின் அறையிலிருந்து எழுதினேன். அவரும் அளவெட்டியைச்சேர்ந்தவர். அவருக்கும் மஹாகவியின் பிள்ளைகள் பாண்டியன், சேரன், சோழன், ஒளவை, இனியாளை நன்கு தெரியும். 1986 இற்கு முன்னர் 1985 இல் மாஸ்கோவில் பாண்டியனையும் அவரது உக்ரேய்ன் மனைவியையும் அவர்களின் குழந்தை எல்லாளனையும் சந்தித்து திரும்பியிருந்தேன்.

அதனால், ஒளைவையிடமிருந்து யாழ். பல்கலைக்கழக செய்திகளை பெறுவதும் எளிதாகவிருந்தது.

தென்னிலங்கையில் 1971 ஏப்ரில் மாதம் கிளர்ச்சியை தொடக்கிய சிங்கள இளைஞர்களுக்கு பேராதனைப் பல்கலைக்கழகம் முக்கிய தளமாக விளங்கியது.  தமிழின விடுதலைப்போராட்டம் உச்சம் பெறுவதற்கு யாழ். பல்கலைக்கழகமும் ஏதோ ஒரு வழியில் முரண் நகையுடன் காரணமாகவே விளங்கியது எனலாம்.

மாணவர்கள் விஜிதரனையும் அதன்பின்னர் விமலேஸ்வரனையும் கடத்தினார்கள். ஆனால், அவர்கள் அதன்பின்னர் உயிரோடு திரும்பவில்லை.

1984 ஆம் ஆண்டு தைப்பொங்கல் காலத்தில் கடத்தப்பட்டவர்கள் பின்னாளில் உயிரோடு வாழ்ந்தார்கள். கடத்தியவர்களின் தலைவருக்கே அதில் ஒரு மாணவி வாழ்க்கைப்பட்டார்.

தற்போது அவர் பற்றிய செய்தியும் இல்லை. ஆனால், கடத்தப்பட்ட செய்திகள் யாவும்  ஊடகங்களுக்கு செய்திகள்தான்.  எழுதிய எம்மைப்போன்ற ஊடகவியலாளர்களுக்கும் அவை  செய்திகள்தான்.

ஆனால், அவற்றிலிருக்கும் முரண்நகைதான் யோசிக்கவைக்கிறது.

இலங்கை அரசின் புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்ட பலரும், 2009 இல் சரணடைந்தவர்கள் பலரும் இன்னமும் திரும்பிவரவில்லை.

இவையும் செய்திகள்தான்.

அத்தகைய செய்திகளை எழுதியவர்கள் பலரும் இறுதியில் செய்தியாகிப்போயிருக்கிறார்கள்.

ஒருநாள் என்னைத்தேடி ஒரு தோழர் வந்தார்.  நான் வீரகேசரியிலிருந்து விலகப்போகின்றேன் என்ற செய்தி கசிந்துதான் அவர் என்னைத்தேடி வந்தார்.

அவர் சொன்ன செய்தி என்ன..?  என்பது பற்றி அடுத்த அங்கத்தில் எழுதுகின்றேன்.

( தொடரும் )

 

 


No comments: