வாழ்த்தியே நிற்பதுதான் மாண்புடைய வாழ்வாகும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



வாழுகின்ற காலமோ யாருக்கும் தெரியாது
வீழுகின்ற காலமோ யாருக்கும் தெரியாது
வாழுகின்ற காலமதை வரமாக மனமெண்ணி
வாழ்த்தியே நிற்பதுதான் மாண்புடைய வாழ்வாகும் !

மனமுடைய வைப்பதற்கு வாழ்வெமக்கு வரவில்லை
மற்றவரைக் குழப்பதற்கும் வாழ்வெமக்குச் சொல்லவில்லை
குறைபார்த்து குழப்புதற்கும் வாழ்வெமக்கு புகட்டவில்லை
குறைகாணா நிறைகாண வாழ்வெமக்கு வாய்த்துளது  !

மற்றவரின் கண்ணீரால் வாழ்வெமக்கு வாய்க்காது
வம்புதும்பு பெருகிவிடும் வாழ்வெமக்குச் சுவைக்காது
உற்றநட்பை உருக்குலைக்க வாழ்வெமக்குச் சொன்னதில்லை
உண்மையுடன் வாழ்வென்று உணர்த்துவதே வாழ்வாகும் !

ஆசானை அவமதிக்க வாழ்வெமக்கு சொல்லவில்லை
அறமிழந்து அவதிப்பட வாழ்வெமக்கு வாய்க்கவில்லை
பேசாத மொழிபேசி பெருங்கலக்கம் உருவாக்க 
வாழ்வெமக்குச் சொல்லவில்லை மனமிருத்தல் அவசியமே ! 

கற்றலினைப் பெரிதென்று வாழ்வெமக்குச் சொல்கிறது
கற்றபடி நிற்பதுதான் கண்ணியமே என்கிறது 
கற்பவற்றைக் கசடறவே கற்கும்படி சொல்கிறது
கற்றவரைக் காலமெலாம் கரம்பிடிக்க நினைக்கிறது ! 

பெற்றவரைக் காலமெலாம் பேணும்படி சொல்கிறது
பெரியவரை நோகாது காக்கும்படி சொல்கிறது
வறியவரின் பசிபோக்க மனமெண்ணி இருப்பதுவே
வாழ்வினுக்கு பெருமையென வாழ்வெமக்குப் புகல்கிறது ! 

ஆணவத்தில் ஏறிவிட்டால் அழிவரும் என்கிறது
ஆசையுடன் ஒட்டிவிட்டால் அனைத்தும் போமென்கிறது 
அடக்கமுடன் இருந்திட்டால் அனைத்தும் வருமென்கிறது
அழகான வாழ்வதனை அகமெண்ணி வாழ்ந்திடுவோம்  ! 

No comments: