உலகச் செய்திகள்

பீஜிங் ஒலிம்பிக்: புறக்கணிப்பு நாடுகளுக்கு சீனா கண்டனம்

ஹொங்கொங் ஜனநாயக ஆர்வலர் மூவர் குற்றவாளிகளாகத் தீர்ப்பு

அடுத்த தலைமுறையினருக்கு நியூசிலாந்தில் சிகரெட் தடை

பீஜிங் ஒலிம்பிக்: அவுஸ்திரேலியாவும் இராஜதந்திர புறக்கணிப்பு

பங்களாதேஷில் 20 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மரண தண்டனை

தென்னாபிரிக்காவில் ஒமிக்ரோன் உச்சம்

தஹ்ரீக்கே லப்பைக்கின் செல்வாக்கு அதிகரிப்பு

சூக்கியின் தண்டனை பாதியாக குறைப்பு

முப்படை தளபதி பிபின் ராவத் மரணம்! நடந்தது என்ன? புறப்பட்டது முதல் விபத்தில் சிக்கிய வரை


பீஜிங் ஒலிம்பிக்: புறக்கணிப்பு நாடுகளுக்கு சீனா கண்டனம்

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இராஜதந்திர ரீதியில் புறக்கணிக்க தீர்மானித்திருக்கும் நாடுகளுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள போட்டிகளில் தனது அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று கனடா அண்மையில் தெரிவித்தது. அதுபோன்ற அறிவிப்பை அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்கனவே வெளியிட்டிருந்தன.

அரசாங்கப் பிரதிநிதிகளை அனுப்பாமல் இருப்பது அரசியல் ரீதியாக தனக்கு அவப்பெயர் விளைவிக்கும் நடவடிக்கை என்று லண்டனில் உள்ள சீனத் தூதரகம் சாடியது.

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அரசியல் சூழ்ச்சிக்கான ஒரு கருவி அல்ல என்றும் அது எச்சரித்தது.

அரசாங்கப் பிரதிநிதிகளை அனுப்பாமல் இருப்பதற்குச் சீனாவின் மனித உரிமை மீறல் குற்றங்களே காரணம் என்று கனடா, அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூறியுள்ளன.

இந்நிலையில் விளையாட்டுகளுக்குள் அரசியலைப் புகுத்தக்கூடாது என்று ரஷ்யா கண்டித்துள்ளது.   நன்றி தினகரன் 




ஹொங்கொங் ஜனநாயக ஆர்வலர் மூவர் குற்றவாளிகளாகத் தீர்ப்பு

ஹொங்கொங் ஊடகப் பிரமுகர் ஜிம்மி லாய் உள்ளிட்ட ஜனநாயக ஆதரவாளர்கள் மூவர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீது சட்டவிரோத ஒன்றுகூடல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. தியனான்மென் சதுக்கத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூரச் சென்ற ஆண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்பில் அவர் மீது குற்றங்கள் பதிவாயின.

லாய், மனித உரிமை வழக்கறிஞர் சாவ் ஹாங் -துங், ஆர்வலர் குவென்னத் ஹோ ஆகியோர் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர். அதனால் அவர்களின் தீர்ப்பு இறுதியாக வழங்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து, ஹொங்கொங்கின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே பலர் சிறையில் உள்ளனர்.   நன்றி தினகரன் 




அடுத்த தலைமுறையினருக்கு நியூசிலாந்தில் சிகரெட் தடை

நியூசிலாந்து புகையிலையை முழுமையாக ஒழிக்கும் வகையில் அடுத்த தலைமுறையினருக்கு புகையிலை விற்பதை முழுமையாக தடை செய்யவுள்ளது.

இதன்படி 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் சிகரெட் அல்லது புகையிலை உற்பத்திகளை வாங்க முடியாத வகையில் புதிய தடை கொண்டுவரப்படவுள்ளது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்ப்படுகிறது.

“இளைஞர்கள் புகைப்பழக்கத்தை ஆரம்பிக்காதிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டி உள்ளது” என்று சுகாதார அமைச்சர் டொக்டர் அயேஷா வெரல் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு நாட்டின் புகைப்பிடிப்போர் எண்ணிக்கையை 5 வீதமாக குறைக்கும் தேசிய இலக்கை நியூசிலாந்து கொண்டிருப்பதோடு, இதன்மூலம் அதனை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு அது திட்டதிட்டுள்ளது.

தற்போது அந்த நாட்டில் 13 வீதமான பெரியவர்கள் புகைப்பிடிப்பதோடு அது ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்த 18 வீதத்தில் இருந்து வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

புதிய சட்டம் நடப்பிற்கு வந்தால் பூட்டானுக்குப் பின்னர் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் இரண்டாவது நாடாக நியூசிலாந்து இருக்கும்.     நன்றி தினகரன் 




பீஜிங் ஒலிம்பிக்: அவுஸ்திரேலியாவும் இராஜதந்திர புறக்கணிப்பு

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அவுஸ்திரேலியாவும் இராஜதந்திர ரீதியாகப் புறக்கணிக்கவுள்ளது.

அவ்வாறு செய்வதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அது பற்றி அறிவித்துள்ளார்.

போட்டிகளில் அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவுஸ்திரேலிய விளையாட்டாளர்கள் போட்டியில் பங்கேற்பர்.

அவுஸ்திரேலியாவை மிரட்டும் விதமாகச் சீனா விதித்திருக்கும் வர்த்தக நடைமுறைகளும், சீனாவில் நேர்வதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்களும் அவுஸ்திரேலியாவின் முடிவுக்கான காரணங்கள் என பிரதமர் மொரிசன் கூறினார்.

அந்த விவகாரங்கள் குறித்து கருத்துரைக்க சீனா இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதால், போட்டிகளைப் புறக்கணிக்க அவுஸ்திரேலியா எடுத்துள்ள முடிவு அதற்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்காது என அவர் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 


 



பங்களாதேஷில் 20 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மரண தண்டனை

சமூக ஊடகத்தில் அரசாங்கத்தை விமர்சித்த இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேருக்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட 21 வயதான அப்ரார் பஹாத்தின் உடல் அவரது அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்ளும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பிரதமர் ஷெய்க் ஹசீனாவை அவர் பேஸ்புக்கில் கடுமையாக சாடி இருந்தார்.

இதனை அடுத்து ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்த 25 சக மாணவர்கள் அவரை கிரிக்கெட் மட்டை மற்றும் ஏனைய பொருட்களால் ஆறு மணி நேரம் தாக்கிக் கொன்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் ஐந்து குற்றவாளிகளுக்கு அயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்கள் 20க்கும் 22க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள்.   நன்றி தினகரன் 





தென்னாபிரிக்காவில் ஒமிக்ரோன் உச்சம்

தென்னாபிரிக்காவில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபினால் நோய் பரவல் சம்பவங்கள் கணிசமாக அதிகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அன்றாடம் பதிவாகும் வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் ஒரே வாரத்தில் 5 மடங்கு அதிகரித்து 16,000ஐத் தாண்டியுள்ளது.

நோய்த்தொற்றுப் பரிசோதனைகளில் கால்வாசி, வைரஸ் தொற்றியிருப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன், அந்த எண்ணிக்கை 2 வீதம் மட்டுமே இருந்தது.

'வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் இதுவரை காணாத விதத்தில் அதிகரிக்கின்றன' என்று தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா கூறினார். இந்நிலையில், அனைவரும் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவர் கோரினார்.   நன்றி தினகரன் 





தஹ்ரீக்கே லப்பைக்கின் செல்வாக்கு அதிகரிப்பு

பாகிஸ்தானின் தடை செய்யப்பட்டிருந்த தஹ்ரீக்கே லப்பைக் பாகிஸ்தான் அமைப்பின் தடையை இம்ரான் கான் அரசு நீக்கி அதன் தலைவரையும் விடுதலை செய்ததை அடுத்து அந்த அமைப்பு எழுச்சி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த அமைப்பின் புதிய ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி அரசுடன் இரகசிய உடன்படிக்கை இடம்பெற்றதாக உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கான சர்வதேச பேரவை தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாத நிலையில், நவம்பர் 7 ஆம் திகதி அமைச்சரவை தஹ்ரீக்கே லப்பைக்கின் தடையை அகற்றும் அறிவிப்பை வெளியிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் அரசு மற்றும் இராணுவத்தின் செல்வாக்குக் கொண்ட அரச பிரிவுகளில் தஹ்ரீக்கே லப்பைக் அனுகூலங்களை பெற்றதாக மேற்படி பேரவை குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 




சூக்கியின் தண்டனை பாதியாக குறைப்பு

மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூக்கியிற்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுச் சிறைத்தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மியன்மாரின் அதிகாரபூர்வத் தொலைகாட்சி நிறுவனம் அதனை அறிவித்தது.

சூக்கியையும் முன்னாள் ஜனாதிபதி வின் மிண்ட்டையும் மன்னித்து தண்டனைக் காலத்தைக் குறைத்ததாக மியன்மார் இராணுவத் தலைவர் மின் ஆங் லைன் தெரிவித்தார்.

சூக்கியிற்கும் வின் மிண்ட்டுக்கும் இராணுவத்திற்கு எதிராகக் கருத்து வேறுபாட்டைத் தூண்டிவிட்டதற்காகவும் கொவிட்–19 விதிமுறைகளை மீறியதற்காகவும் தண்டனை விதிக்கப்பட்டது.   நன்றி தினகரன் 





முப்படை தளபதி பிபின் ராவத் மரணம்! நடந்தது என்ன? புறப்பட்டது முதல் விபத்தில் சிக்கிய வரை

09/12/2021 தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், ஹெலிகாப்டர் புறப்பட்டது முதல் விபத்துக்குள்ளானது வரை தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் இராணுவ மையத்தில் நடைபெறவிருந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் திட்டமிட்டிருந்தார்.


இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து, காலை 8.30 மணியளவில், விமான படைக்கு சொந்தமான K-3602 ரக விமானத்தில், தனது மனைவி உட்பட, பாதுகாப்பு வீரர்கள் என மொத்தம் 9 பேருடன் பிபின் ராவத் புறப்பட்டார்.

இதையடுத்து, கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு வந்த இந்த குழுவினர், அதன் பின் இங்கிருந்து காலை 11.27 மணிக்கு MI-17V5 ரக இராணுவ ஹெலிகாப்டரில், வெலிங்டன் இராணுவ மையத்திற்கு புறப்பட்டனர்.


இந்த விமானத்தில், பிபின் ராவத் குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்தனர். இதைத் தொடர்ந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கடுமையான பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் நஞ்சப்பன் சத்திரம் என்ற பகுதியில், கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.


இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் தற்போது வரை அதில் பயணித்த 9 பேரின் விபரம் வெளியாகியுள்ளது.

விமானத்தில் பயணித்தவர்கள் விபரம்

  • முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்

  • மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி)

  • பிரிகேடியர் லிடர்

  • லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
  • குர்சேவர் சிங்

  • ஜிஜேந்தர் குமார்

  • விவேக் குமார்

  • சார் தேஜா

  • கவில்தார் சத்பால்         

நன்றி IBC Tamil





No comments: