இலங்கைச் செய்திகள்

சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டம்

பாகிஸ்தானில் இன்று விசேட கண்டன தினம்

கவிஞர் அஹ்னாபின் பிணைக்கு எதிர்ப்பில்லை

அரசுக்கு எதிராக நேற்று கொழும்பில் போராட்டம்

நாட்டில் இதுவரை 458 Gas வெடிப்பு சம்பவங்கள்

பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று; யாழில் சிலை திறந்து வைப்பு


சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டம்

 Friday, December 10, 2021 - 3:18pm

யாழ்ப்பாணத்தில்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை வேண்டி யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, அண்மையில் பாகிஸ்தானுக்கு 30 ஆயிரம் கண்கள் தானம் செய்யப்பட்டது தொடர்பாக வெளியான தகவலையும், வடபகுதி கரையோரங்களில் மிதக்கும் சடலங்கள் தொடர்பாகவும் கேள்வியெழுப்பினர்.

போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதன் போது பங்கேற்றார்.

போராட்டநிறைவில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

(பருத்தித்துறை விசேட நிருபர்)

வவுனியா

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வவுனியா வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (10) காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகிய குறித்த பேரணி மணிக்கூட்டுக் கோபுர சந்தியினை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக பழைய பேருந்து நிலையப்பகுதியை அடைந்து நிறைவுற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், நீதி கிடைக்கும்வரை போரோடுவோம், நீதியில்லாத நாட்டில் நீதிமன்றம் எதற்கு? போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(ஓமந்தை விஷேட நிருபர்)

முல்லைத்தீவில்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  யுத்தம் முடிவடைந்த நாள் முதல் இன்று வரை  12 வருடங்களாக தமது உறவுகளைத் தேடி போராடிவருகின்ற நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம்  எட்டாம் திகதி முதல் வீதியில் அமர்ந்து தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் இன்று 1737 ஆவது நாளாகவும் போராடி வருகின்றனர். இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்திடம் கையளித்து காணாமலாக்கப்பட்ட  தமது உறவுகளையும், யுத்த காலங்களில் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளையும், வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு   காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளையும் எனப்  பல்வேறு வழிகளில் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியே இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக போராடிவரும் மக்கள் இலங்கை தமக்கு எந்தத் தீர்வையும் தராது எனவும், சர்வதேசமே தமக்கான தீர்வைத் தர வேண்டுமெனவும், தமது உறவுகளின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் கோரி சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்புப் போராட்டமொன்றை  முன்னெடுத்துள்ளனர்.

(மாங்குளம் குறூப் நிருபர்)

கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தினர்

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தினர் இன்று(10) கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இப் போராட்டம் கிளிநொச்சி ஏ9 வீதியில் ஆரம்பித்து, பெண்கள் வாழ்வுரிமைச் சங்கக் கட்டடத்தில் முடிவடைந்தது. இதன்போது எல்லா மனிதர்களும் சுதந்திரமாகவும் கண்ணியத்திலும், உரிமைகளிலும் சமமாகப் பிறந்தவர்கள் எனும் தொனிப்பொருள்களில் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் பெண் குலத்தை மதித்து பெண்ணியம் காத்திடு, வேண்டாம் வேண்டாம் பாலியல் துஷ்பிரயோகம் வேண்டாம், பெண்கள் மீதான வன்முறைகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், ஆண் பெண் ஊதிய பாகுபாடு வேண்டாம் என்று சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு தங்களின் விழிப்புணர்வை மேற்கொண்டிருந்தார்கள்.

(கிளிநொச்சி குறூப் நிருபர்)

கிளிநொச்சி காணாமலாக்கப்பட்ட உறவினர்கள்

கிளிநொச்சியில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி வேண்டி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு  காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று(10) காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக ஆரம்பித்து டிப்போ சந்தி வரை முன்னெடுத்தார்கள்.

இதன் போது சர்வதேச மனித உரிமை ஆணையாளருக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பவுள்ள மகஜரும் ஊடகங்களிடம் கையளிக்கப்பட்டது.

(கிளிநொச்சி குறூப் நிருபர்)

மன்னாரில்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று  (10) வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்  மன்னார் பேருந்து தரிப்பிட்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதையச் சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், அருட்தந்தையர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், மன்னார் நகர சபையின் தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?, மனிதம் பாதுகாக்கப்படுகிறதா?, அரசே காணாமலாக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?,  காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவீர்களா? உள்ளடங்களாக  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப்  நிருபர்)

திருகோணமலையில்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (10) சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து நடைபவனியாகச் சென்று திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாகச் சென்று அங்கும் சுலோகங்களை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தமது உறவுகளை மீட்டுத்தர ஐ.நா. சபையும், அரசாங்கமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மகஜர் ஒன்றிணையும் கையளித்திருந்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்- அப்துல்சலாம் யாசீம்)

நன்றி தினகரன் 



பாகிஸ்தானில் இன்று விசேட கண்டன தினம்

பிரியந்த குமார தியவதனவை நினைவுகூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் விசேட கண்டன தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை விசேட கண்டன தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 08 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 140 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 34 பேர் பிரதான சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்களும் பாகிஸ்தானிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.   நன்றி தினகரன் 



கவிஞர் அஹ்னாபின் பிணைக்கு எதிர்ப்பில்லை

நீதிமன்றுக்கு சட்ட மாஅதிபர் அறிவிப்பு

நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு பிணையளிக்க எதிர்ப்புக்களை முன்வைக்கப் போவதில்லையென உயர் நீதிமன்றத்துக்கு சட்ட மாஅதிபர் நேற்று முன்தினம் (08)அறிவித்தார்.

அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்டவிரோதமானதெனக் கூறி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு (8) பரிசீலனைக்கு வந்தபோது, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே குறிப்பிட்டார்.

மனு மீதான பரிசீலனைகள்(08) உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துறைராஜா தலைமையிலான குமுதினி விக்ரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, மனுதாரரான அஹ்னாப் ஜஸீம் சார்பில் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.எம். இல்யாஸ், சட்டத்தரணிகளான சஞ்சய வில்சன் ஜயசேகர, லக்ஷ்மனன் ஜயகுமார்,ஸ்வஸ்திகா அருலிங்கம், தரிந்து ரத்நாயக்க ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கணக. ஈஸ்வரன் ஆஜரானார்.

இதன்போது மனுவின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே, அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு முன் வைக்கப்பட்டுள்ள பிணை கோரிக்கைக்கு சட்ட மாஅதிபர் எதிர்ப்புகளை முன் வைக்க போவதில்லையென தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார். அந்த வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி அங்கு விசாரணைக்கு வருவதாகவும் அவர் கூறினார்.   நன்றி தினகரன் 




அரசுக்கு எதிராக நேற்று கொழும்பில் போராட்டம்

நாட்டின் தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்து கொழும்பில் நேற்றுபோராட்டப் பேரணியொன்று கொழும்பு,கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நடத்தப்பட்டது. யுகதனவி மின் நிலையத்தின் பங்குகள்   அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி இந்த போராட்டத்தை முன்னெடுத்தது.   நன்றி தினகரன் 




நாட்டில் இதுவரை 458 Gas வெடிப்பு சம்பவங்கள்

 

ஆய்வுக் குழு அறிக்கையில் தெரிவிப்பு

எரிவாயு கசிவை நுகர்வோர் கண்டறிய, ஒரு தனித்துவமான வாசனையுடன் கூடிய இரசாயன திரவமான எத்தில் மெர்காப்டானைச் சேர்க்குமாறு விநியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு எரிவாயு வெடிப்புகளை ஆய்வு செய்த நிபுணர்கள் குழு கூறியுள்ளது. அந்தக் குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறித்து  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 28ஆம் திகதி வரை 458 எரிவாயு தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் 244 முறைப்பாடுகள் கசிவுகள் தொடர்பான முறைப்பாடுகள் எனவும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயன்முறைப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சாந்த வல்போலகே தெரிவித்தார்.

கசிவுகளை மக்கள் அடையாளம் காண துர்நாற்றத்துடன் கூடிய இரசாயனப் பொருள் இல்லாதது கவலைக்குரிய ஒரு முக்கிய விடயமென குழு அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் காலாவதியான மற்றும் தாழ்வான ரெகுலேட்டர்கள், hoses மற்றும் hose clips பயன்படுத்துவது கவலைக்குரிய மற்றொரு விடயம் என்றும் இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அக்குழு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற உள்நாட்டு விபத்துகளுக்கு வழிவகுக்கும் வீட்டு எரிவாயு கலவை மாற்றப்பட்டதா? என்பதை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. எனவே, எரிவாயு நிரப்பப்பட்ட மற்றும் சிறப்பு முத்திரை கொண்ட சிலிண்டர்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அந்தக் குழு மேலும் கூறியுள்ளது.   நன்றி தினகரன் 





பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று; யாழில் சிலை திறந்து வைப்பு

பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று; யாழில் சிலை திறந்து வைப்பு!-Bharathiyar Birthday-Statue Opening

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழில் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில் அமைத்து பாரதியாரின் திருவுருவ சிலைக்கு இந்திய துணைத்தூதரக , துணைத்தூதுவர் ராகேஷ்  நட்ராஜ் மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் , ஆணையாளர் ஜெயசீலன் , யாழ்.தமிழ் சங்க தலைவர் லலீசன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினர்.

பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று; யாழில் சிலை திறந்து வைப்பு!-Bharathiyar Birthday-Statue Opening

அதேவேளை, மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்தநாளான இன்று யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் வட்டுக்கோட்டை குக் வீதி முதலாம் ஒழுங்கையில் யாழ்.இந்திய நட்புறவுப் பேரவையின் தலைவர் சிதம்பரம் மோகனினால் நிர்மாணிக்கப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலையை மறவன்புலவு சச்சிதானந்தன் திறந்து வைத்தார்.

பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று; யாழில் சிலை திறந்து வைப்பு!-Bharathiyar Birthday-Statue Opening

நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், இந்து சமய மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

நன்றி தினகரன் 




No comments: