பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - குமரிக்கோட்டம் - ச. சுந்தரதாஸ் - பகுதி 23

 .

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னணிப் பிரமுகர்களாகத் திகழ்ந்தவர்கள் புரட்சி நடிகர் எம் ஜீ ஆர் , கோவை செழியன் ,கே சொர்ணம், அமிர்தம் போன்றவர்கள். இவர்களில் கோவை செழியன் கட்சியின் தொழில் சங்கத் தலைவராகவும் அதே சமயம் படத் தயாரிப்பாளராகவும் விளங்கினார். இவரின் தயாரிப்பில் வெளிவந்த சுமைதாங்கி,ஊட்டி வரை உறவு படங்கள் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து எம் ஜீ ஆரின் நடிப்பில் ஒரு படத்தை தன் பட நிறுவனமான கே சி பிலிம்ஸ் சார்பில் 1971ல் தயாரித்தார்.அந்தப் படம் குமரிக்கோட்டம் என்ற பெயரில் தயாரானது.


தமிழக முதல்வராக அன்று பதவியில் இருந்த கலைஞர் கருணாநிதியின் உறவினரான சொர்ணம் படத்தின் வசனங்களை எழுதினார்.கருணாநிதியின் மற்றுமொரு உறவினரான அமிர்தம் ஒளிப்பதிவை மேற்கொண்டார் இப்படி தி மு ககாரர்கள் இணைந்து உருவாக்கிய படத்தின் கதையை யாழ்ப்பாணம் புங்குடூத் தீவைச் சேர்ந்த குகநாதன் எழுதினார்.ஏற்கனவே எம் ஜீ ஆரின் புதிய பூமி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த குகநாதனுக்கு தனது இந்த படத்துக்கும் கதையை எழுதும் வாய்ப்பை வழங்கினார் எம் ஜீ ஆர்.சென்னை பச்சயப்பா கல்லூரி மாணவனாக இருந்த குகநாதனை கல்லூரிக்கே சென்று சந்தித்து கதையைக் கேட்டார் கோவை செழியன்.




வண்ணப் படமாக உருவான குமரிக்கோட்டத்தில் எம் ஜீ ஆர் இரண்டு விதமான கெட் அப்புகளில் வருகிறார்.முதல் பாதியில் கல்லூரி மாணவனாகவும் ,வீட்டுத் தோட்டக்காரனாகவும்,வீடுவீடாகச் சென்று பேப்பர் போடுபவராகவும்,ஹோட்டலில் சர்வராகவும் பல வேடங்களில் வரும் அவர் படத்தின் பின் பாதியில் செல்வந்தராகவும் வருகிறார்.அவர் தான் அப்படி என்றால் கதாநாயகியாக வரும் ஜெயலலிதாவுக்கும் படத்தில் இரட்டை வேடம் . அவரின் தந்தையாக வி கே ராமசாமியும் எம் ஜீ ஆரின் தந்தையாக டி எஸ் முத்தய்யாவும் நடித்தார்கள்.இருவரும் தங்களின் பாத்திரத்துக்கு நன்கு பொருந்தினார்கள்.எம் ஜீ ஆரின் தோழன் சோ.அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் அவருக்கு ஜோடி சச்சு.

ஆரம்ப காலத்தில் ஏழ்மையில் வாழும் சோமுவும் முத்தய்யாவும் தங்கள் குழந்தைகளான குமரி ,கோபால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கிறார்கள்.செல்வந்தராகி விடும் சோமு பணத் திமிரில் எல்லோர் முன்னிலையிலும் முத்தையாவை எடுத்தெறிந்து பேசி விடுகிறரார் .இதனால் மனமுடையும் முத்தையா தற்கொலைக்குத் துணிய அதை தடுக்கும் கோபால் சோமுவை பதிலுக்கு மனபங்கப் படுத்துவதாக சபதம் செய்கிறான்.ஏற்க்கெனவே தன்னோடு படித்த ஆணவக்காரியான குமாரியையும் அடக்க திட்டமிடுகிறான்.இவற்றுக்கு எதிர்பாராத விதமாக சீதாபதியும் அவர் மகள் உமாவும் உதவுகிறார்கள்.



படத்தில் விதவிதமான ஆடைகளில் வரும் எம் ஜீ ஆர் அழகாக தோற்ற்றம் அளிக்கிறார்.பாடல் காட்சிகளிலும் சண்டைக்கு காட்சிகளிலும் புகுந்து விளையாடுகிறார்.ஜெஸ்டினோடும் மனோகரோடும் அவர் மோதும் காட்சிகள் பிரமாதம் .ஸ்டண்ட் மாஸ்டர் ஷியாம்சுந்தருக்கு சபாஷ்.படத்தின் அனைத்துப் பாடல்களும் பிரபலமடைந்தன.கண்ணதாசன்,வாலி,ஆலங்குடி சோமு,புலமைப்பித்தன் ஆகியோரின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இனிமையாக இசை வழங்கியிருந்தார். எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா ,நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்,என்னம்மா ராணி பொன்னான மேனி , ஆகியபாடல்கள் வரவேற்பை பெற்றன.

படத்தில் இரட்டை வேடங்களில் வரும் ஜெயலலிதா தெருவில் ஆடும் நடனக்காரி மாயவாதி பாத்திரத்தை திறமையாக செய்திருந்தார்.குடிகாரராக வரும் அசோகனின் மேக் அப்பும், முகபாவமும் அருமை. லட்சுமி படத்தில் இருந்தும் வீணடிக்கப் பட்டுள்ளார். சொர்ணத்தின் வசனங்கள் காட்சிகளுக்கு வலு சேர்த்தன.எம் ஜீ ஆரின் வெற்றி படங்களில் ஒன்றான குமரிக்கோட்டம் 100 நாட்கள் ஓடி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.பின்னர் சிங்களத்திலும் காமினி பொன்சேகா மாலினி பொன்சேகா நடிப்பில் வெளி வந்து வெற்றி பெற்றது.









No comments: