“ சமகாலத்தில் பாரதி, பாரெங்கும் பேசப்படுகிறார். தொடர்ந்தும்
பேசப்படுவார். எனினும் அவர் மறைந்த 1921 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும், அதன்பின்னர் பல வருடங்களும் இவ்வாறு பேசப்படவில்லை என்பது பாரதி இயல் ஆய்வாளர்களின் முடிவாக இருக்கிறது. பாரதி மறைந்து கால் நூற்றாண்டுக்குப் பின்னரே இந்தியா சுதந்திரமடைகிறது. குறிப்பிட்ட கால் நூற்றாண்டு காலத்திலும் பாரதி பெரிதாக பேசப்படாதமைக்கு அன்றிருந்த பிரித்தானிய ஆட்சி அதிகார சூழல் முக்கிய காரணமாகவும் இருந்திருக்கலாம்.
ஆனால், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, அதாவது ஏறக்குறைய இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பே,
“ எங்கும் சுதந்திரம் என்பதே
பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்குகொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத் தரணிக்கெல்லாமெடுத்து
ஓதுவோமே “ என்று கிடைக்கவிருக்கும்
சுதந்திரம் குறித்து தீர்க்கதரிசனத்துடன் பாரதி பாடிவிட்டார். “
இவ்வாறு நேற்று முன்தினம் 11
ஆம் திகதி பாரதியார் பிறந்த தினத்தை
முன்னிட்டு, மதுரை தமிழ்ச்சங்கம் ஆரம்பித்திருக்கும் மகாகவி பாரதி பன்னாட்டு கருத்தரங்கத்தின் தொடக்க நாள் அரங்கில் உரையாற்றிய
அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. லெ. முருகபூபதி
கருத்துரை வழங்கும்போது தெரிவித்தார்.
மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் முனைவர் லலிதா தலைமையில் மெய்நிகரில் நடந்த இந்த தொடக்கவிழாவில் பாரதியாரின் கொள்ளுப்பேத்தி உமா பாரதி, பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் முனைவர் மன்னர் மன்னர் கோ. பாரதி ஆகியோரும் உரையாற்றினர்.
இலங்கை பேராசிரியர் அ. சண்முகதாஸ், மற்றும் அவரது
துணைவியார் இலக்கிய ஆர்வலர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் உட்பட இலங்கை, இந்தியா, மற்றும் பல நாடுகளிலிருந்தும் இலக்கியவாதிகள், தமிழ் அறிஞர்கள் இந்த தொடக்க விழாவில் இணைந்துகொண்டனர்.
முனைவர் சுகு. சோமசுந்தரி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
இந்தத்
தொடர் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கும் தமிழ்நாடு அரசுக்கும், குறிப்பாக பாரதியார் நினைவு நாளை
மகாகவி நாளாக
பிரகடனப்படுத்தியிருக்கும்
மாண்புமிகு தமிழக முதல்வருக்கும்
முருகபூபதி நன்றி தெரிவித்தார்.
எழுத்தாளர் முருகபூபதி, தொடர்ந்தும் உரையாற்றுகையில் பாரதியின்
தாக்கம் இலங்கையில் எவ்வாறு படிப்படியாக விகசித்தது என்பது பற்றியும் விளக்கினார்.
அவர் தமது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
பாரதிக்குப்பின்னர் பல
வருடங்கள் கடந்து வந்த ஒரு புதுக்கவிதைக் கவிஞன், சுதந்திரம் என்ற தலைப்பில்,
இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவேயில்லை என்று ஒரு வரிக்கவிதை சொல்லிவிட்டுக்
கடந்தான்.
ஆனால், பாரதி வருகின்ற பாரதத்தை வரவேற்றுப் பாடி மகிழ்ந்தார். அத்தகைய ஞானப் புலவனைப்பற்றி பாரத நாடு மட்டுமன்றி , முழு உலகமும் பேசத்
தொடங்கியது, குறிப்பிட்ட சுதந்திரம் கிடைத்த
1947 ஆம் ஆண்டிற்குப்பின்னர்தான் என்ற முடிவுக்கு நாம் வருவதற்கான அரசியல் பின்னணி
முக்கிய காரணமாகிறது.
எனினும், அண்டை நாடான இலங்கையில், பாரதி சென்னையில் வாழ்ந்த காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் பேசப்பட்டார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இன்றைய மனோகரா
தியேட்டர் அமைந்திருக்கும் இடத்தில் 1920 காலப்பகுதியில் ஒரு மண்டபம் இருந்தது.
அதற்குப்பெயர்: புத்துவாட்டி வீட்டு மண்டபம்.
அன்று அவ்விடத்திலிருந்த தகரக்கொட்டகையில்
நாடகங்கள் கூத்துக்கள் மேடையேறியிருக்கின்றன.
தமிழகக் கலைஞர்கள் சிலர் மேடையேற்றிய
நாடகங்களில் பாரதியின் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். பாரதி உயிருடன் வாழ்ந்த
காலத்திலேயே இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழகக்கலைஞர்கள் வந்து பாடியிருப்பதை தாம் நேரில்
பார்த்திருப்பதாக ஒரேற்றர் சுப்பிரமணியம் என்ற கல்விமான் தெரிவித்துள்ளார் என்று இலங்கைப்
பேராசிரியர் சி. தில்லைநாதன் - பாரதி பன்முகப்பார்வை
என்ற தொகுப்பு நூலில் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதியிடத்தில் தீவிர பற்றுக்கொண்டிருந்த தலைவர் தோழர் ஜீவானந்தம் அவர்கள்,
தனது தலைமறைவு காலத்தில் இலங்கை வந்து, பாரதியின் புகழை பரப்பினார். அவர் மட்டுமன்றி பாரதியின் ஆத்ம நண்பர் வ.ராமசாமி
அவர்கள் இலங்கை வந்து வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியபோது பாரதியின் சிந்தனைகளை
இலங்கையில் செய்தி ஊடகத்தின் ஊடாக பரப்பினார்.
இந்த வரலாற்றையெல்லாம் கடந்த 2019 ஆம் ஆண்டு நான் வெளியிட்ட இலங்கையில் பாரதி
நூலில் விரிவாகச்சொல்லியிருக்கின்றேன்.
1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழர்
திருநாள் தைப்பொங்கலன்று ஏவிமெய்யப்பச்செட்டியாரின் நாம் இருவர் திரைப்படம்
வெளியாகிறது.
அதாவது இந்திய சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர்.
'அச்சமில்லை அச்சமில்லை, விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே,
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம், சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான், வெண்ணிலவு
நீ எனக்கு மேவு கடல் நானுக்கு, வெற்றி எட்டுத்திக்குமெட்டக் கொட்டு முரசே' ஆகிய பாடல்கள்
படத்தில் இடம்பெற்றிருந்தன.
அதன்பின்னர், ஏறக்குறைய 75 வருடகாலத்தில் பாரதியின்
கவிதைகள் பெரும்பாலான தமிழ்த்திரைப்படங்களில் காதுக்கினிய இசையுடன் பலராலும் பாடப்பட்டு பார் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், அவற்றைக்கேட்டு களிப்புறுவதற்கு பாரதிதான்
நம்மத்தியில் இல்லை.
தற்போது, பாரதி பிறந்த நூற்றாண்டு காலத்தில் மதுரை
தமிழ்ச்சங்கம் இந்த பன்னாட்டு கருத்தரங்கினையும் கவியரங்கையும் முன்னெடுத்திருக்கிறது.
குறிப்பாக உலகெங்கும் சென்று வாழும் தமிழ் மக்களிடம் இந்த நூற்றாண்டை முடிந்தவரையில் முன்னெடுத்துச்செல்வதற்கு முனைப்போடு
செயலாற்றி வருகிறது.
அவ்வாறு அரும்பணியை மதுரை தமிழ்ச்சங்கம் மேற்கொள்வதற்கும்
பாரதிதான் அன்றே ஊக்கமளித்திருக்கிறார் என்றும்
சொல்லத்தோன்றுகிறது.
பாரதியார், தான் வாழ்ந்த 1921 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட
காலத்திலேயே,
" தமிழா பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களை
அமைத்து , ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்."
என்று சொன்னவர். தமிழருக்காக அவர் எழுதிய கட்டுரையில்
இவ்வாறும், தமிழச்சாதி என்ற தலைப்பிலான கவிதையில் பின்வருமாறும் பதிவுசெய்துள்ளார்.
நாம் எதிர்நோக்கக்கூடிய
துன்பங்களையும் சொல்லி, இறுதியில் "பெருமையும் இன்பமும் பெறுவார்" எனவும்
முடிக்கிறார்.
இலங்கை இந்தியத்தமிழர்கள்
அந்நிய தேசங்களுக்கு புலம்பெயர்ந்தமை எதிர்பாராதது.
இந்தியாவிலிருந்து
தமிழர்கள் இலங்கை உட்பட எந்தெந்த தேசங்களுக்கு புலம்பெயர்ந்தார்கள் என்பதை அறிவீர்கள்.
பாரதி வாழ்ந்த
காலத்தில் இந்தியத்தமிழர்கள், பிஜித்தீவிற்கும்
இலங்கைத்தீவிற்கும் வந்தார்கள். பாரதி, பிஜித்தீவில் அவர்களுக்கு நேர்ந்த அவலம்
பற்றி வருந்தினார்.
எனினும், மேலும்
மேலும் தமிழர்கள் (எங்கு வாழநேரிட்டாலும்) அந்நியதேசங்களுக்கு புலம்பெயர்வார்கள் என்ற
தீர்க்கதரிசனம் பாரதிக்கு இருந்திருக்கிறது. அதனால்தான், தமிழச்சாதி என்ற கவிதையையும்,
தமிழருக்கு என்ற கட்டுரையையும் அவர் எழுதினார்.
தமிழினம் குறித்து
பாரதிக்கிருந்த தீர்க்கதரிசனம் எத்தகையது என்பதை
புரிந்துகொண்டவர்கள் நாம்.
இலங்கையிலிருந்து
தமிழ்மக்கள் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து
உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலான நாடுகளுக்கும்
சென்றமைக்கு இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரும் முக்கிய காரணம்.
அவ்வாறு இந்தத்தேசங்களுக்குச்சென்றவர்களில் பலருக்கு உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றலும் ஊடகத்துறை அனுபவமும்
இருந்தமையால் அவர்களினால் தமிழுக்கும் தமிழ்க்கலை இலக்கியங்களுக்கும் கனதியான சேவையாற்ற
முடிந்திருக்கிறது.
பாரதியின் கனவுகள் அவரது தமிழ் என்ற கவிதையில் விரவிக்கிடக்கிறது.
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும், தெருவெல்லாம் தமிழ்
முழக்கம் செழிக்கச்செய்வீர், பிறநாட்டு நல்லறிஞர்
சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் " முதலான வரிகளிலிருந்து பாரதியின்
எதிர்பார்ப்பு அவரது தீர்க்கதரிசனத்துடன் முன்மொழியப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
1970 இற்கு முன்னரே இந்தியத்தமிழர்கள் அந்நியதேசங்களுக்கு
புலம்பெயர்ந்திருந்தாலும், ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வுக்குப்பின்னர் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற சொற்பதம் பேசுபொருளானது.
இந்த மாற்றங்களையெல்லாம் நாம் பாரதியின் வெளிச்சத்திலேயே
பார்க்கின்றோம்.
“ ஒருவரின்
நூற்றாண்டு, சரி நுட்பமான, நேர்மையான மதிப்பீடுகளுக்கு மறு மதிப்பீடுகளுக்கு வழிகோலுவதாய்
அமைதல்வேண்டும். ஏலவே தமிழறிஞர் சிலரின் நூற்றாண்டு நிறைவு விழாக்கள் ஆக்கபூர்வமான
ஆய்வுகளுக்கும் வெளியீடுகளுக்கும் ஏதுக்களாய் இருந்தன. அதுபோல பாரதி நூற்றாண்டு விழாவும்
பயனுள்ள புது முயற்சிகளுக்கு உந்துதல் அளிக்கவேண்டும். அவ்வாறு அமைந்தாலன்றி பாரதி
பாரம்பரியத்தை பக்குவமாக முன்னெடுத்துச்செல்ல முடியாது “
என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது
1981 ஆம் ஆண்டில் இலங்கைப்பேராசிரியர் , பாரதி இயல் ஆய்வாளர் கைலாசபதி அவர்கள் சொன்னதை
இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டுகின்றேன்.
மதுரை தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டுக்கருத்தரங்கமும்
கவியரங்கமும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகின்றேன்.
---0---
No comments:
Post a Comment