ஜெய் பீம் - கானா பிரபா

 


நேற்றுப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தவன் பாதி வழியில் நிறுத்தி விட்டேன். அதற்கு மேல் பார்க்கும் மன வலிமையும் இருக்கவில்லை. மனித உரிமை மீறல்களைக் கண்டும், அதை அனுபவித்த சக மனிதர்களோடு வாழ்ந்து பழகியும் இந்தப் படைப்பு ஏதோ புண்ணைக் கிண்டிக் கிளறுமாற் போலொரு உணர்வு.


ஆனால் படுக்கைக்குப் போகு முன் இந்தச் செய்தி கண்ணில் பட்டது

மதுபுட்டிகளை பொறுக்கும் குழந்தைகள்.. பள்ளிக்கு அனுப்பி வைத்த சமூக ஆர்வலர்.. பழங்குடியின இருளர் மக்களுடன் தீபாவளி!


என்னடா இதுவென்று மனதின் ஓரத்திலேயே ஒட்டிக் கொண்டிருந்தது.

இன்னொரு காரியமும் நடந்தது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு இதன் தாக்கத்தை கன்னடர், ஹிந்திக்காரர் என்று வேற்று மொழிக்காரர்கள் பகிர்ந்தவைகளைப் பார்த்த போது வெட்கமாகிப் போய் விட்டது. நம் சமூகத்தில் நடந்ததைக் கண் கொண்டு பார்க்க முடியாதா என்ன?

இன்று வேலை முடிந்து முதல் வேலையாக மேற்கொண்டு விட்ட இடத்தில் இருந்து பார்க்கத் தொடங்கினேன்.
அடித் தொண்டையில் ஈரம் வற்றி ஒரு இனம் புரியாத வலி எழுமே அந்த வலியோடே மிடறு குடிக்கும் மருந்து போல முழுதையும் பார்த்து முடித்து விட்டேன்.

எனக்குக் கிட்டிய இதே அனுபவம் போல இந்தப் படைப்பைப் பார்க்கும் மனத் திராணி இல்லை என்று விலக்காமல் பாருங்கள் கண்ணுக்கு முன் சக மனிதர்கள் வேட்டையாடப்படும் அவலத்தை அந்தந்தச் சூழலோடு பொருத்திப் பார்க்க முடியும்.சதா மாற்று மொழிக்காரரின் யதார்த்த சினிமாவைப் பெருமை பேசிக் கொண்டிருக்கும் எங்களுக்கு இதைப் பெருமையான படைப்பு என்பதை விடப் “பெருமிதமான” படைப்பு என்பேன்.

இருளர் சமூகத்தின் பின்புலம் தொடங்கி நேர்த்தியானதொரு வரைபடமாக நீண்டு, அவர்கள் மீதான மனித உரிமை மீறலை
“கடலூர் கம்மாபுரம் ராஜாகண்ணு” என்ற சக மனிதனுக்கு நிகழ்ந்த கோரத்தை வைத்துக் கொண்டே ஒட்டு மொத்த சமூக அடக்குமுறைகளின் கோவையாகத் தொடுக்கப்பட்டிருக்கின்றது.

எல்லோருமே வாழ்ந்திருக்கிறார்கள். சாதித் திமிர், சமுதாய ஏற்றத் தாழ்வைச் சின்னச் சின்ன இடைவெளிகளில் கூடப் பதிந்து கொண்டே கடக்கின்றது மோட்டார் சைக்கிளில் அனிச்சையாகப் பட்ட கையை முறைத்துப் பார்த்துப் பயணிக்கும் அந்த ராஜாகண்ணுவை ஏற்றி வருபவனின் சவாரி போல.

ஷான் ரால்டனின் இசையின் பங்கு பெரும் பங்கு, அநியாயத்துக்கு வாத்தியங்களை வாரி இறைக்காமல் ஒவ்வொரு காட்சிக் களனுக்குமான இசை மொழியாகவே இருக்கின்றார்.

செங்கண்ணியாகத் தோன்றிய லிஜோமோல் ஜோஸ் ஐப் பார்த்தால் பாதிக்கப்பட்ட அபலையே நேரில் வந்தாற் போல.

சூர்யா, பிரகாஷ் ராஜ் போன்ற தெரிந்த முகங்கள் கூட இந்தக் கூட்டத்தில் கலந்து வரலாற்றின் மாந்தர்களாக.

கூட்டத்தில் ஒருவராக இருந்த இயக்குநர் த.செ.ஞானவேல் ஐ நம்மில் ஒருவராக்கி நேசம் கொண்டாடுகிறார்கள் இந்த நேர்மையான படைப்பைக் கொடுத்ததற்காக.

காலாகாலமாக, ஏன் இன்றும் தொடரும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீதான இம்மாதிரியான வரலாறுகள் தேடலும் பதித்தலுமாக இருக்க வேண்டும்.

பார்த்து முடிந்ததும் பரபரத்து அந்த வரலாற்றைத் தேடிக் கைகள் தேடலில் ஓடுகின்றதோ அங்கே தான் இந்தப் படைப்பின் நேர்மையும், வரலாற்றைப் பதித்ததன் தாக்கத்தையும் பிரதிபலிக்க முடியும். அதைத் தான் இந்தப் படைப்புச் செய்து கொண்டே இருக்கின்றது. இதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் விடுபட முடியாத தாக்கம்.

விசாரணை விதை போட்டது.
ஜெய் பீம் விரூட்சமாகி இருக்கிறது.

கானா பிரபா
03.11.2021

No comments: