நெஞ்சை தொட்ட தமிழ் சினிமா ஜெய் பீம் - செ .பாஸ்கரன்

 .


நல்ல சினிமாக்களை தேடி அலைபவர்களுக்கு மீண்டும் தமிழ் சினிமா கைகொடுத்திருக்கிறது. சூரியா ஜோதிகா இணைந்து தயாரித்து வெளியிட்ட ஒரு திரைப்படம் தான் ஜெய் பீம். பெயரைக் கேட்டபோது ஏனோதானோவென்று இருந்தது ஆனால் எனக்கு பிடித்த நல்ல நடிகரான சூர்யா இதில் இருக்கிறார் என்ற காரணத்தினால் அந்த தலைப்பை பொருட்படுத்தாமல் திரைப்படத்தை பார்த்தேன் அங்காடித் தெரு, அசுரன், கர்ணன் அந்த வரிசையிலே ஜெய் பீம் இருக்கின்றது.


 வழமை போல அடிமட்ட மக்கள் படும் துயரத்தை சொல்லுகின்ற ஒரு கதைதான் இந்த கதை. ஹீரோக்களை முன்னிறுத்தி அவர்களால் அந்த மக்கள்

காப்பாற்றப்படுவதாக காட்டிவிடும் சினிமாவுக்கு மத்தியிலே இந்த சினிமா யதார்த்தத்தை முன்னிறுத்தி மனதை ஊடுருவி செல்கிறது. உண்மை கதை என்று ஆரம்பத்திலேயே குறிப்பிடுகின்றார்கள். 1995 என்று அதையும் குறிப்பிட்டு திரைப்படம் அசைந்து செல்கின்றது.


கள்ளர்கள், இருளர்கள் என்று சாதிப் பட்டியலிட்டு போலீசார் செய்கின்ற அக்கிரமங்களை எடுத்த எடுப்பிலேயே காட்டி எம்மை கோபத்துக்கு உள்ளாக்கி விடுகின்றது திரைக்கதை. ஒரு நாட்டை திருத்துவதற்கு, ஒரு டிபார்ட்மென்ட்டை திருத்துவதற்கு, ஒரு ஊரைத் திருத்துவதற்கு ஒரு மனிதன் போதும் என்று என்னுள் பலமுறை எண்ணிப் பார்த்து இருக்கின்றேன், அப்படி ஒருமனிதன் நம் நாட்டிட்கு கிடக்கமாட்டானா என ஏங்கி இருக்கிறேன். சிங்கப்பூரை எண்ணி பார்த்திருக்கின்றேன், ஒரு தனி மனிதனால் மாற்றப்பட்ட நாடு, ஜெமன் என்ற அரபு நாட்டை பார்த்திருக்கிறேன் நாசரால் மாற்றப்பட்ட ஒரு நாடு, கியூபாவைப் பார்த்திருக்கின்றேன் பெடல் காஸ்ரோ என்ற மனிதனால். சேகுவேரா என்ற மனிதனால் உலகிற்கே டாக்ட்டர்களைக் கொடுக்க முடிந்தது. இவை ஆழமாக மனதில் பதிந்தது .நம் நாட்டிற்கும் நடக்காதா என்று கற்பனை பண்ணிக் கொண்டே இருப்பேன்.




அதேபோல் இந்த திரைப்படத்தில் வருகின்ற வக்கீல்  சந்துரு பாத்திரத்தை சூர்யா எடுத்திருந்தார் திரைப்படத்திலும் சந்துரு என்ற பெயரே வைக்கப்பட்டிருந்தது. இந்த சந்துரு என்ற தனிமனிதன் எவ்வளவு தூரம் போலீசார் உடைய கொடுமைகளை கொடுமைகளுக்கு எதிராக போராடுகிறார் வெற்றி கண்டிருக்கிறார்.


இருளர் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறுகின்ற காட்சி அதற்கு பதிலாக சந்துரு எனக்கு நிம்மதியான தூக்கம் வருகிறது எனக்கு பணம் தேவையில்லை என்று கூறுகின்ற அந்த வார்த்தைகள். அதன்பின் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் சந்துருவோடு சேர்ந்து போலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்வது , மக்களை திரட்டி அரசுக்கு எதிராக குரல்களை எழுப்புவது என்று யதார்த்தமாகவே நகர்கின்றது. பொலிஸ் திணைக்களத்திலும் சில நல்ல மனிதர் ஆங்காங்கே இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு ஒரு கான்ஸ்டபிலளும் பிரகாஷ்ராஜ்யும் ஒரு அருமையான உதாரணமாக வந்து போகிறார்கள்.


போலீஸ் திணைக்களமே ஒன்று சேர்ந்து தங்களுடைய மானம், தங்களுடைய மரியாதை எல்லாமே போய்விடுகின்றது, அரசினுடைய மானம் போகின்றது என்று தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், பாதகம் புரிந்த, அட்டூழியம் புரிந்த, அராஜகம் புரிந்த அந்த போலீஸ்காரர்களுக்கு தண்டனை கொடுக்காமல் அவர்களை காப்பாற்ற நினைக்கிறது . தண்டனை கொடுத்தால் அது பொலிஸ் திணைக்களத்துக்கு அவமானம் என்று எண்ணுகின்ற டிஐஜியாக வருகின்றவர் பணத்தை வைத்து அந்த இருளர் சமூகத்து பெண்ணை மாற்றிவிடலாம் என்று பேரம் பேசுகின்ற காட்சி உண்மையில் ஆட்சி இயந்திரத்தை அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றது . அந்த அப்பாவி கர்ப்பிணிப் பெண்ணோ பிறக்கப்போகும் குழந்தைக்கு உன்னுடைய அப்பாவை கொன்ற போலீஸ்காரரை விடுவிக்க நான் வாங்கிய காசு என்று கூறினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்கின்ற கேள்வி, இப்படி அங்குலம் அங்குலமாக நெஞ்சை தட்டி செல்லும் போது ஒவ்வொரு மனிதனும் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆணித்தரமாக எடுத்து சொல்லுகின்றது திரைப்படம்.


ஓரிரு மனிதர்களால்கூட இந்த சமுதாயத்தை மாற்ற முடியும் என்பதற்கு அச்சொட்டாக வருகின்றது இந்த திரைப்படம். உண்மையாகவே அப்படி ஒரு வழக்கறிஞர் இருந்திருக்கிறார். அதன்பின்பு அவர் நீதிபதியாக வந்திருக்கின்றார் தொண்ணூற்றி ஒன்பது ஆயிரம் வழக்குகளை அவர் தீர்த்திருக்கிறார் என்றும் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல இந்த திரைப்படத்தில் ஒரு வக்கீலாக வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூரியா ஜோதிகா இணைந்து தயாரித்து இப்படி ஒரு படத்தை தந்திருக்கிறார்கள் என்று பார்க்கின்ற போது முதலில் அவர்களுக்கு பாராட்டுக்கள். நெறியாள்கை செய்திருக்கும் ஞானவேல் அவர்களுக்கு ஒரு சபாஷ் .





இசையமைப்பாளர் உடைய இசையை இலகுவில் கடந்து சென்று விட முடியாது யார் இந்த இசையமைப்பாளர் என்று தேடியபோது ஷான் ரோல்டன் என்று தெரியவருகின்றது. ஒரு சில தமிழ் படங்களிற்கு இசை அமைத்தவர். இந்த மனிதனால் எப்படி ஒரு இசையை இப்படி அழகாக கொடுக்க முடிந்தது என்று ஆச்சரியமாக இருக்கின்றது. என்ன தேவை என்று அறிந்து அதை செவ்வனே செய்திருக்கிறார். பிரகாஷ்ராஜ்யுடைய நடிப்பு என்பது நாங்கள் ஏற்கனவே பல படங்களில் பார்த்தோம், ஆனால் ஒரு மனிதனாக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக அவர் பேசுகின்ற அளவான பேச்சு எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் சமுதாயத்தின் மாற்றத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அளந்து வைத்தது போல் அருமையாக சொல்லிச் செல்கின்றார் பிரகாஷ்ராஜ் .


அதேபோல் இருளர் சமூகத்தைச் சேர்ந்த எலி பிடித்து, பாம்பு பிடித்து வாழ்க்கையை ஓட்டுகின்றவராக வருகின்ற ராஜாக்கண்ணு பாத்திரத்தில் மணிகண்டன் நடித்திருக்கிறார். மனிதனுடைய நடிப்பு உண்மையிலேயே ஒரு அப்பாவி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அவருடைய நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட காதல் பாடல் நெஞ்சை கசக்கி பிழிந்து விடும் படியாக உள்ளது. கர்ப்பிணியாக வந்து காவல் நிலையத்திலே படும் துன்பத்தில் நியமாகவே வாழ்ந்துவிட்டுப் போனவர் சிவப்பு மஞ்சள் பச்சையில் ஜிவி பிரகாஷ்சின் அக்காவாக வருகின்ற லிஜோ மோல் ஜோஸ் என்ன நடிப்பு, டிஜிபி சமரசம் செய்கின்ற போது அவர் பேசுகின்ற வார்த்தைகள் அவருடைய முகத்தில் எரிகின்ற நெருப்பு இவ்வளவு நடிப்பை எங்கே வைத்துக்கொண்டிருந்தார் என்று கேட்கத் தோன்றுகிறது.




சமுதாயத்திற்கு மிக முக்கியமாக தேவையானதை கொடுக்கின்ற ஒரு திரைப்படம்தான் இந்த ஜெய் பீம். ஜெய் என்ற வார்த்தையே வெற்றி என்ற ஒரு சொல்லாக இருக்கிறது அல்லவா ஆகவே அந்தப் பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் எடுத்தவுடனே இந்த பெயர் பெரிதாக கவந்துவிடவில்லை ஆனால் பார்த்தபின்பு மனதிலே ஒரு புறம் மகிழ்ச்சி, ஒரு புறம் வேதனை, ஒருபுறம் வீரம், ஒரு புறம் எழுச்சி எத்தனை எத்தனை விதமான உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கிறது. இந்த சந்துரு போன்ற ஒருவர் இருந்தாலே எல்லா நாடுகளும் எங்கோ சென்று விடும் வாழ்த்துக்கள் சூர்யா.

No comments: