இலங்கைச் செய்திகள்

 சி.வியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

சீரற்ற காலநிலையால் இதுவரை ஐவர் மரணம்

பண்டாரவளை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 51 பேருக்கு கொரோனா

வடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இராணுவத்தினரின் பங்களிப்பு

தொடரும் மண்சரிவு அச்சுறுத்தல்

நகரங்களுக்கிடையேயான கடுகதி சேவை திங்கள் முதல்



சி.வியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான்,

பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், எமது குடும்பத்துடன் நெருக்கமாக உறவு உள்ள ஒருவர். அவரை நீண்டகாலமாக எனக்கு தெரியும். அதன் அடிப்படையில் ஒரு சிநேகபூர்வமான சந்திப்பாகவே அவரை சந்தித்துள்ளேன். அரசியல் ரீதியாக எந்த விடயமும் நாம் பேசிக் கொள்ளவில்லை ஒரு சினேக பூர்வமாகத்தான் நான் அவருடன் கலந்துரையாடினேன் என தெரிவித்தார்

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், எமது நீண்டகால நண்பருடன் சிநேகபூர்வமான சந்திப்பினை மேற்கொண்டேன். நான் அரசாங்கத்துடன் சேர்ந்து விட்டேன் என சிலர் நினைப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு ஒன்றும் பேசவில்லை நாங்கள் சினேகபூர்வமாக சில விஷயங்களை பேசினோம் என்றார்.

யாழ். விசேட நிருபர்   -   நன்றி தினகரன் 




சீரற்ற காலநிலையால் இதுவரை ஐவர் மரணம்



ஒருவரை காணவில்லை: இருவருக்கு காயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ​நேற்றுவரை ஐவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்தனர்.

அத்தோடு ஒருவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ  மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகில் காணப்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவியது. இந்த நிலையில், சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் 1136 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 364 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த அனர்த்தத்தினால் 5 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் இருவர் வெள்ளத்தில் சிக்கியும் இருவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 12 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.     நன்றி தினகரன் 






பண்டாரவளை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 51 பேருக்கு கொரோனா


பண்டாரவளை பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 51 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 11 பேர் சிறுவர்கள் என்றும் ஏனையோர் அங்கு பணிபுரிபவர்கள் என்றும் பண்டாரவளை சுகாதார மருத்துவ அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பண்டாரவளை 'சுஜாதா செவன' சிறுவர் பராமரிப்பு இல்லத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். முதலில் அங்கு பணிபுரிபவர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் உட்பட ஏனையோருக்கு மேற்கொண்ட என்ரிஜன் பரிசோதனை மூலமே அவர்களுக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

11 சிறுவர்கள் ,06 பராமரிப்பு சேவையாளர்கள், ஆசிரியர்கள், சிற்றுண்டிச் சாலை ஊழியர்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் ஆகியோரும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 





வடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இராணுவத்தினரின் பங்களிப்பு

பூரண ஆதரவு வழங்குவதாக ஆளுநரிடம் தளபதி தெரிவிப்பு

வடமாகாண மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு வலு சேர்க்க தமது பூரண ஆதரவை இராணுவம் வழங்கும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்று முன்தினம் (04) வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது, வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடிய போது, வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும் என இராணுவ தளபதி உறுதி வழங்கினார்.      நன்றி தினகரன் 




தொடரும் மண்சரிவு அச்சுறுத்தல்

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் பல பகுதிகளில் மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பலர் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். அதுமட்டுமின்றி மேலும் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அக்கரப்பத்தனை பசுமலை அப்பர்கிரேன்லி தோட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக இரண்டு வீடுகளின் பின்பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்து மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இரண்டு வீடுகளிலுள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளது. அத்தோடு குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்த 8 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மேலும், இப்பகுதியிலுள்ள 15 வீடுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களுக்கு மாற்று நடவடிக்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

பசறை பிரதேச கனவரல்ல மவுசாகல தோட்டத்தைச் சேர்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் மண்சரிவு அனர்த்தம் காரணமாக கனவரல்ல கொட்டுஹாதன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மவுசாகல தோட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் பாரியளவு மண்சரிவினால் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதை காணமுடிகிறது. இதன்காரணமாக மக்கள் கொட்டுஹாதன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கும் நடவடிக்கைகளை பசறை பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த இரு வாரங்களாக பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவுகின்ற மழையுடனான காலநிலையால் மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கடும் மழையினால் பசறை பகுதியின் பிபிலேகமை பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக பசறை பிரதேச பொலிஸார் தெரிவித்தனர். இந்த வீதியின் வழியே செல்லும் பரப்பாவ, பிபிலேகமை, எத்ப்பட்டிய போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடுகள் சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் இருப்பின் எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உரிய பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 




நகரங்களுக்கிடையேயான கடுகதி சேவை திங்கள் முதல்

ரயில்வே பொது முகாமையாளர் தெரிவிப்பு

நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.   

இரவுநேர அஞ்சல் ரயில் மற்றும்  வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் ரயில் சேவைகளுடன், குறுந்தூர ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டன. இருப்பினும் தற்போது வரையில் இரவு 7 மணிக்கு பின்னரான தூரப் பிரதேசங்களுக்கான புகையிரத சேவைகளும், குறுந்தூர புகையிரத சேவைகளும் வழமை போன்று இடம்பெறுவதில்லை.

நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் பயணிகளின் அவசியத்தன்மை கருதி மாத்திரம் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.    நன்றி தினகரன் 



No comments: